என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல.
    • சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது.

    லூபா எனப்படும் பஞ்சு போன்ற மென்மை தன்மை கொண்ட இழையை குளியலுக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள். உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்துவதற்கு உதவும் இந்த பொருள் குளியல் அறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும். லூபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பயன்படுத்துவதற்கு பலரும் பழகிவிட்டார்கள்.

    ஆனால் ஒவ்வொரு முறையும் குளிக்கும்போது லூபா பயன்படுத்துவது நல்லதல்ல என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. உடலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை துடைத்து எடுப்பதற்கு லூபா பயன்படும் என்றாலும் பாக்டீரியா, பூஞ்சை பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

    லூபாவின் இழை பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்துவிடும். ஒவ்வொருமுறையும் குளிக்கும்போது லூபாவை சரியாக உலர வைக்காவிட்டால் அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதாக வளர தொடங்கி விடும். பின்பு குளிக்கும்போது அவை உடலில் ஊடுருவி சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    சிலருடைய சரும வகைக்கு லூபா ஒத்துக்கொள்ளாது. அதனை பயன்படுத்தும்போது சருமம் சிவத்தல், எரிச்சல் உணர்வு போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுவதே சிறந்தது. இப்போது லூபாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

    அவற்றை பயன்படுத்தும்போது நாளடைவில் சருமத்திற்கு சேதம் ஏற்படலாம். குளியல் அறை என்பது ஈரப்பதமான பகுதி. குளித்து முடித்ததும் லூபாவை அங்கேயே வைத்திருந்தால் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடனே இருக்கும். மறுநாள் பயன்படுத்தும்போது உலர்வடைந்திருப்பது போல் தெரிந்தாலும் பாக்டீரியாக்களின் புகலிடமாக மாறிக்கொண்டிருக்கும்.

    லூபாவை பயன்படுத்தி முடித்ததும் வெயிலில் உலர்த்துவதுதான் சரியானது. தினமும் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

    • முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, சந்தனத்தைத் தடவினால் எரிச்சல் உடனே நீங்கும்.
    • வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தனத்துடன் பால் கலந்து பயன்படுத்தலாம்.

    பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது.

    சந்தன சோப்புகள், சந்தன எண்ணெய், சந்தன வாசனைத் திரவியங்கள் என பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் சருமம், வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம், உணர்திறன் சருமம் என எந்தவகை சருமத்திற்கும் ஏற்ற வகையில், சந்தனம் சிறந்த பராமரிப்புப் பொருளாக விளங்குகிறது. ஒவ்வொரு சருமத்துக்கும் ஏற்றாற்போல, சந்தனத்துடன் மற்ற பொருட்களைக் கலந்து பயன்படுத்தலாம். கடைகளில் வாங்கும்போது, சந்தனத்தின் தரத்தை கவனித்து வாங்க வேண்டும்.

    சந்தனக் கட்டைகளை வாங்கி அரைத்து அதனுடன் ரோஜா பன்னீர் ஊற்றி குழைத்து, பயன்படுத்துவது பாதுகாப்பானது. எல்லா விதமான சருமத்தினரும் இந்த முறையை பின்பற்றலாம். இது சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும். சருமத்தில் சுருக்கங்கள் இருந்தால், சந்தனத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.

    முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தனத்துடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் நீங்கும். வெயிலில் சென்று வந்த பிறகு சருமத்தில் எரிச்சல் இருக்கும். அதைப் போக்க சந்தனம் சிறந்த தீர்வாகும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, சந்தனத்தைத் தடவினால் எரிச்சல் உடனே நீங்கும்.

    முகம் பளபளப்பாக இருப்பதற்கான ஆலோசனைகள்:

    வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தனத்துடன் பால் கலந்து பயன்படுத்தலாம். பாலுக்கு பதிலாக பாதாம் எண்ணெய் கலந்தும் முகத்திற்கு 'பேஸ் பேக்' போடலாம். உங்கள் சருமம் எண்ணெய்ப் பசை கொண்டதாக இருந்தால், சந்தனத்துடன் தக்காளிச் சாறு மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசலாம்.

    சந்தனத்துடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து 'பேஸ் பேக்' போடலாம். சருமத்தில் சுருக்கம் அதிகமாக இருந்தால் சந்தனத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மெட்டி கலந்து பூசலாம். முகப்பரு வடுக்கள் நீங்குவதற்கு சந்தனத்துடன் தேன் கலந்து 'பேஸ் பேக்' போடலாம். சருமம் பொலிவற்று இருந்தால் சந்தனத்துடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் கலந்து 'பேஸ் பேக்' போடலாம். சந்தனத்துடன் தயிர் மற்றும் தேன் கலந்தும் பயன்படுத்தலாம்.

    • பப்பாளி மாஸ்க்கை போட்டால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.
    • பப்பாளி பேக் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

    நோய்களைத் தீர்க்க, கூந்தல் பிரச்சனைகளை நீக்க, சரும பராமரிப்பு என பல்வேறு வகைகளில் பப்பாளி நமக்கு பயன்படுகிறது. இனி சரும பராமரிப்பிற்கு பப்பாளியைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

    பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் (Beta carotin) ஆகியவை நிறைந்துள்ளன. எனவே பப்பாளி பழத்தின் சிறுதுண்டை நன்கு மசித்து, அதனுடன் தயிர் சேர்ந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெண் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும்.

    பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.

    பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

    இதேபோல் நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் (Citric Acid) முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் அளிக்கும்.

    மசித்த பப்பாளியுடன் ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider Vinegar) மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் ஹேர் பேக்காக (Hair pack) போடவும். ஆப்பிள் சைடர் வினிகர், ஸ்கேல்ப்பின் (Scalp) பிஎச் (pH) அளவை சமன் செய்து, பொடுகுத் தொல்லையைப் போக்குகிறது. தேங்காய் எண்ணெய் பொடுகால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க உதவுகிறது.

    பப்பாளி, வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டக் கலவையை கூந்தலின் ஸ்கேல்ப்பில் மாஸ்க்காகப் போடவும். இந்த மாஸ்க், கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

    • எப்சம் உப்பு முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.
    • எப்சம் உப்பு பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்த உப்பு.

    முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு. எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும். கரும்புள்ளிகளுடன் சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற சரும பாதிப்பை அனுபவிப்பவர்கள் எப்சம் உப்பை பயன்படுத்துவது நல்லது.

    ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

    நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாமல் அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.

    ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்துகொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும். சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்க்கவேண்டும். இதை இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், முடியில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும்.

    • தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு.
    • முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன.

    முடி அழகு முக்கால் அழகு என கிராமப்புறங்களில் கூற கேட்டிருப்போம். நம்மில் பலருக்கும் முடி கொட்டுவது, வழுக்கை ஏற்படுவது ஆகியவை தீராத பிரச்சனையாக இருக்கும்.

    இது பலரிடம் மனதளவில் பாதிப்பு கூட ஏற்படுத்தி விடும். இதற்காக, வழுக்கை உள்ளவர்கள் புத்திசாலி என கூறி தங்களை தாங்களே சமரசப்படுத்தி கொள்வதும் உண்டு. இதற்கு தீர்வு காண பல்வேறு சிகிச்சை முறைகளை தேடி போவதும் நடக்கும்.

    ஆனால், முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. போதிய ஊட்டச்சத்து இன்மை, வைட்டமின் குறைவு உள்ளிட்டவை பொதுவான காரணிகளாக உள்ளன. இவற்றை நல்ல சத்துள்ள ஆகாரங்களை உண்டு தீர்வு காணலாம். சிலருக்கு முன்னோரின் மரபணு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் பாதிப்பு ஏற்படுவதுண்டு.

    தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு. ஆனால், அதிக அழுத்தம் கொடுப்பது தேவையில்லை. நாளடைவில், முடியின் வேர்க்கால்களின் பலம் குறைந்து கொட்ட தொடங்கி விடும்.

    நம்மில் பலர் வாசனைக்காகவும், தலைமுடியின் பிசுபிசுப்பு தன்மை போக வேண்டும் என்பதற்காகவும் ஷாம்பூ, கண்டிசனர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். எனினும், இவற்றில் சேர்மபொருட்களாக கலக்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை கூட ஏற்படுத்தி விடும்.

    இது தெரியாமல், அவற்றை பயன்படுத்துவதும் காலப்போக்கில் முடியின் பலவீனத்திற்கு வழிவகுத்து விடும். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். முடி கொட்டுவதற்கு நிக் கோயெட்ஜீ என்ற நபர் அவருக்கு தெரிந்த தீர்வு ஒன்றை டிக்-டாக்கில் வெளியிட்டு உள்ளார்.

    அதற்கு முன் அவருக்கு உள்ள பிரச்சனை என்னவெனில், படிக்கும் காலத்தில் சக மாணவர்களுடன் வகுப்புக்கு போகும்போது, தன்னுடன் கூடுதலாக சட்டை ஒன்றை எடுத்து செல்வார்.

    ஏனெனில், முதல் பாடவேளை முடிந்தவுடன், அவரது உடைகள் முழுவதும் முடியால் நிரம்பி இருக்கும் என அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவருக்கு தலைமுடி கொட்டியுள்ளது.

    அவர் ஒவ்வொரு நாளும் ஷாம்பூ, கண்டிசனர் என மாறி, மாறி உபயோகித்து வந்துள்ளார். அவற்றில் உள்ள அனைத்து ரசாயன பொருட்களும் சேர்ந்து முடி உதிர்தலை ஏற்படுத்தி மோசமடைய செய்து உள்ளது என நினைத்துள்ளார்.

    அதனால், ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இனிமேல் தலைக்கு குளிக்க கூடாது என்பதே அந்த முடிவு. இதற்காக 6 ஆண்டுகளாக ஷாம்பூ, கண்டிசனர்கள் என எதனையும் அவர் பயன்படுத்தவில்லை. தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் எதனையும் அவர் உபயோகிக்கவில்லை.

    இதுபற்றி நிக் கூறும்போது, ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய முடி பலம் அடைந்து உள்ளது. நன்றாக தலை முழுவதும் முடி அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது என கூறியுள்ளார்.

    இதற்கு பெயர் no poo movement என்றும் இதற்காக #nopoomovement என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனை பின்பற்றும் நபர்களும் பெருகி வருகின்றனர். அவர்கள் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் அனைத்தும் போலியானவை என நம்புகின்றனர். சமீப காலங்களாக இந்த டிரெண்டானது பெருகி வருகிறது. ஷாம்பூ பாட்டில்கள் மற்றும் ரசாயன பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு எந்தளவுக்கு ஏற்படுகிறது என மக்கள் அறிய தொடங்கி உள்ளனர் என அவர் கூறுகிறார்.

    எனினும், மக்கள் தலைமுடியை அலசாமல் விட்டு விடுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நமது பணம் சேமிக்கப்படுகிறது. நம்முடைய தலைமுடி ஆரோக்கியமுடனேயே இருக்கிறது என்ற எண்ணம் ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகின்றன.

    நிக் அளித்துள்ள விளக்கத்தில், உங்களது தலைமுடியை அலசாமல் விட்டு விட்டால், அது எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பு ஏற்பட்டு விடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது 2 அல்லது 3 வாரங்களுக்கே நீடிக்கும்.

    அதற்கு பின்னர், உங்களுடைய இயற்கை எண்ணெய் வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், அனைத்து ரசாயனங்களும் வெளியேறி, உங்களுடைய தலைமுடி முற்றிலும் வளம்பெற்று விடும். அதற்கு பின்னர் அதனை அலச வேண்டிய அவசியமும் இல்லை. என்ன இந்த முயற்சியை நீங்களும் செய்து பார்க்க விரும்புகிறீர்களா? என அதில் அவர் கேட்டுள்ளார்.

    • சருமத்துக்கு குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது.
    • பழங்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதும் சரும அழகை மெருகேற்றும்.

    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர் சருமம் போன்ற கோடை கால சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். கோடை கால சரும பிரச்சினைகளை தீர்க்கவும், சருமத்தை குளிர்ச்சியாக உணர வைக்கவும் சில காய்கறிகள், பழங்களை கொண்டு பேஷியல் மற்றும் மசாஜ் மேற்கொள்ளலாம்.

    பழ பேஸ்பேக்:

    பழங்கள் சாப்பிடுவது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். அதுபோல் பழங்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதும் சரும அழகை மெருகேற்றும். பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை பயன்படுத்தி பேஷியல் மேற்கொள்ளலாம். பப்பாளியில் என்சைம்கள் அதிகமாக உள்ளன. அவை இறந்த செல்களை அகற்ற உதவும். வாழைப்பழம் சரும செல்களை இறுக்கமாக வைத்திருக்க உதவும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின் சருமத்தை சுத்தப்படுத்த துணை புரியும். ஆரஞ்சு பழம் சருமத்தின் அமில-கார சம நிலையை மீட்டெடுக்க உதவும்.

    செய்முறை: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஒன்றாக சிறு துண்டு களாக நறுக்கி விழுதாக அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். கோடை காலத்தில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு இடம் கொடுக்காமல் முகத்திற்கு புத்துணர்வு அளிக்க இந்த 'பழ பேஸ்பேக்' உதவும்.

    ரோஸ் வாட்டர் - சந்தனம்:

    சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டும் குளிர்ச்சி தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த இரண்டு இயற்கை பொருட்களும் நீண்ட காலமாக சரும பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை குளிர்ச்சியான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற உதவும். அதிலும் ரோஸ் வாட்டர் புத்துணர்ச்சியை உணர வைக்கும்.

    செய்முறை: இரண்டு தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பசை போல் குழைக்கவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு உடனடியாக குளிர்ச்சியை வழங்கும்.

    தயிர்-கற்றாழை:

    இவை இரண்டும் குளிர்ச்சி தரும் பொருட் களாகும். அவை கோடை காலத்திற்கு ஏற்றவை. கற்றாழை சருமத்தை புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியுடனும் உணர வைக்கும். தயிர் பல்வேறு சரும பிரச்சினைகளை தடுப்பதோடு, உடனடியாக குளிர்ச்சியாக உணர வைக்கும்.

    செய்முறை: கற்றாழையில் இருந்து ஜெல் பகுதியை தனியாக பிரித்தெடுக்கவும். பின்பு ஒரு கப் தயிருடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும். அதனை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.

    தர்பூசணி - வெள்ளரி:

    வெள்ளரி மற்றும் தர்பூசணி இரண்டு பழங் களையும் கோடை காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டும். இவை இரண்டிலும் அதிக நீர்ச்சத்து உள்ளது. சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதில் இவை இரண்டுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

    செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கூழாகவோ, சாறாகவோ தயாரிக்கவும். அதேபோல் தர்பூசணியின் சதை பகுதியை எடுத்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். பின்பு வெள்ளரி, தர்பூசணி இரண்டையும் கலந்து பசை போல் குழைக்கவும். விருப்பப்பட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக்கொள்ளலாம். இந்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கால் மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இந்த பேஸ் பேக் சருமத்திற்கு குளிர்ச்சியையும், புத்துணர்வையும் தரும்.

    தக்காளி - தேன்:

    தக்காளி, தேன் கலவை சருமத்திற்கு அதிசயங்களை செய்யக்கூடியது. தக்காளியில் டெடனிங் பண்புகள் உள்ளன. அது கோடையில் குளிர்ச்சியான பேஸ் பேக் தயாரிப்புக்கான சிறந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை குளிர்ச்சியை உணர வைக்கும்.

    செய்முறை: ஒரு தக்காளியை விழுதாக அரைத்து அதிலிருந்து மெல்லிய கூழ் எடுக்கவும். அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலக்கவும். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

    • வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது.
    • சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய் பசை உள்ள சருமத்தை அழகாக பராமரிக்கலாம்.

    எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், எண்ணெய்ப் பசை உள்ள சருமம் தன்னம்பிக்கையையே குலைப்பது. இது, வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது. முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்துக்கு காரணம். பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும் சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

    1. சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்

    சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவையாக, கடினமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே, எண்ணெய்ப் பசை சருமத்துக்கான பிரத்யேகமான சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் எதுவென அறிந்து அவற்றைப்பயன்படுத்துங்கள்.

    2. ஃபேஷியல் மாஸ்க்

    தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.

    3. இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்

    பொதுவாக, எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இப்படி செய்வதால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால், ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

    4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

    எண்ணெய்ப் பசை சருமம் என்று மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் அதிகம். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய்பசை சருமத்துக்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    5. அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்

    எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். நம் கைகள் மோசமான பாக்டீரியா கடத்திகள். இதைக்கொண்டு அடிக்கடி முகத்தை தொடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தொற்று பரவிக்கொண்யிருக்கும். எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். ஒருமுறை முகத்தைத் தொட்டதும் கை கழுவுங்கள்.

    • காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில், பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த சமயத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கோடையில் காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில யோசனைகள் இதோ:

    இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம். காலின் பெருவிரலுக்கு இடையில் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். கோடையில், அணியும் காலணிகள் வழக்கமாக அணிவதை விட, அளவில் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.

    அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தட்டையான காலணிகளைத் தவிர்த்து, மெத்தென்று இருக்கும் வகையிலான மென்மையான காலணியையே தேர்வு செய்ய வேண்டும்.

    தோல் சுவாசிக்க அனுமதிக்கும் வகையிலும், இயற்கை வெப்ப பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையிலும், காற்றோட்டமான காலணிகளைத் தேர்வு செய்வதும் கட்டாயம். தூய்மையான மெல்லிய தோலால் செய்யப்பட்ட காலணிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    நாம் எந்த வகையான காலணிகளை அணிந்தாலும், அன்றைய நாள் முடிவில், கால்களுக்குச் சிறிது நேரம் மசாஜ் தேவை. பருவ நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ அல்லது வெது வெதுப்பான நீரிலோ கால்களை சிறிது நேரம் வைத்திருந்த பின், லேசாக மசாஜ் செய்யலாம்.

    சில வகை காலணிகள்:

    கிளாடியேட்டர்கள்:

    இது பெண்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய கோடைக்கேற்ற காலணி. அந்தக் காலத்தில், போரின் போது கிரேக்க மற்றும் ரோமானியர்கள் அணிந்திருந்த காலணி போன்றதாகும். இந்தக் காலணி, கீழ்ப் பகுதி தட்டையாகவும், உள்ளங்கால் முதல் மேல் பகுதி வரை அகலமான குறுக்குப் பட்டைகளுடனும் இருக்கும். இது அணிவதற்கு மிகவும் வசதியானது. வெளியூர் பயணத்தில் நீண்ட தூரம் நடக்கவும் ஏற்றது.

    பிளிப்-பிளாப்ஸ்:

    இவை முன்பக்கத்திலிருந்து தொடங்கி பக்கவாட்டில் முடிவடையும் வரை, ஆங்கில எழுத்து 'ஒய்' வடிவில் பட்டைகளைக் கொண்டிருக்கும். இறுக்கமாக இல்லாததால், பெண்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், பாதங்களை உறுத்தாமலும் இருக்கும்.

    ஸ்டைஸ்லைடர்கள்:

    கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பிரபலமாக இருக்கும் காலணி இது. இவை, பின்பக்கம் உயரம் குறைவாகவும், கால்களை மறைக்காமல் திறந்தபடி இருக்கும் வகையிலான காலணிகள்.

    • கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் சிறந்த தீர்வாக உள்ளது.
    • இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

    இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    முதல் முறை:

    கருஞ்சீரகம் – 100 கிராம்,

    வெந்தயம் – 100 கிராம்,

    தேங்காய் எண்ணெய் – 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

    பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

    மற்றொரு முறை:

    கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,

    வெந்தயம் - 2 டீஸ்பூன்,

    கற்றாழை ஜெல் - 1 கப்,

    தேங்காய் எண்ணெய் - 1 கப்

    எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும்.

    அடுப்பில், வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.

    இதை, வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு, அடர்த்தியாக முடி வளரும்.

    • இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல்.
    • காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம்.

    இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் கல்யாணி கூறியதாவது:

    "இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும். அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.

    நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

    முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள். அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும்.

    தற்போது நவீன முறையில் எளிதாக நீராவி குளியல் சிகிச்சை எடுக்கலாம். இதற்கென நவீன எந்திரம் உள்ளது. அந்த நவீன எந்திரத்தில் உள்ள நாற்காலியில் நீராவி குளியல் சிகிச்சை எடுப்பவரை அமர வைக்க வேண்டும். அவரின் தலை வெளியே தெரியும்படி அந்த நாற்காலியை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சரி செய்து கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அந்த எந்திரத்தில் மூலிகை தைலம் அல்லது நொச்சி தைலம், யூக்கலிப்டஸ் தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி எந்திரத்தை இயக்கி விடலாம். அதிலிருந்து வரும் நீராவி உடல் முழுவதும் நன்கு பரவும். அப்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் மூலம் கழிவுகள் வெளியேறும். பொதுவாக நீராவி குளியலின் பலனை 8 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெறலாம்.

    காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இதுவே இன்றளவில் 'ஆயில் மசாஜ்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து எண்ணெய் குளியலை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதனால் உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    ஆயில் மசாஜ்க்கு பதிலாக 'பார்சியல் மசாஜ்' என்பதையும் மேற்கொள்ளலாம். இதன்படி கை, கால், முகம், வயிறு, முதுகு, நெஞ்சுப்பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதுதவிர பழைய முறைப்படி உச்சி முதல் பாதம் வரை முழு உடல் எண்ணெய் குளியல் முறையையும் மேற்கொள்ளலாம்.

    எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இதில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அதிக பலன் தரும். சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் குளியலில் அறிவியல் பூர்வமாக தற்போது நிறைய முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து உடலின் தசைகளை தட்டுவதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தோல் சுரப்பிகளின் பணி சீராக நடக்கும். உடலின் கொழுப்பு குறையும். உடலில் வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும். முகத்திற்கு பொலிவு கிடைக்கும். வயிற்றின் கழிவுகள் நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்" என்றார், அவர்.

    • முடி உதிர்வு பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
    • முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

    நீண்ட கூந்தல் முடியை விரும்பும் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை முட்டுக்கட்டையாக அமையும். முடிகள் வலிமையை இழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவையும் முடி உதிர்வுக்கு வித்திடுகின்றன.

    இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுதல் போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. பலவீனமான முடியை சரி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

    1. ஆப்பிள் சிடேர் வினிகர்

    ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் தேய்க்கவும். பின்பு 'பிளாஸ்டிக் ராப்' அல்லது 'ஷவர் கேப்'பை கொண்டு தலையை மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். பலவீனமான முடியை சீர்படுத்த இது சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.

    2. முட்டை

    முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்படுத்த உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவவும். பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்கும் தன்மை கொண்டது என்பதால் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

    3. அவகோடா

    நன்கு பழுத்த அவகோடா பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து ஈரமான தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை தண்ணீரில் அலசிவிடலாம். அவகோடா பழத்தில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல் கொண்டவர்கள் மாதம் ஒரு முறை உபயோகிக்கலாம்.

    4. ஆலிவ் எண்ணெய்

    வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி விடவும். பின்பு 'ஷவர் கேப்' கொண்டு தலையை மூடிவிடவும். முக்கால் மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். வறண்ட கூந்தல் கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப் பானது.

    5. கற்றாழை சாறு:

    75 ஊட்டச்சத்துக்கள், 20 தாதுக்கள், 12 வைட்டமின்கள் மற்றும் 18 அமினோ அமிலங்களை கொண்ட நம்பமுடியாத கண்டிஷனிங் ஏஜெண்டாக கற்றாழை செயல்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்டது. கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம்.

    6. சந்தன எண்ணெய்:

    ஆலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்க்கவும். பின்பு தலைமுடியின் நுனியில் லேசாக தடவவும். தலைமுடி சேதம் அடைவதை தடுப்பதற்கு சந்தன எண்ணெய் உதவும்.

    7. வாழைப்பழம்:

    2 வாழைப்பழங்கள், 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம். வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் சிலிகா முடி வளர்ச்சியை தூண்டிவிடும்.

    • பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும்.
    • ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    அழகைப் பராமரிப்பது என்பது முகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதாகும். முக அழகைப் பாதுகாப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் பலரும் பாதங்களைப் பற்றி யோசிப்பது கிடையாது. இதன் காரணமாக பாதங்களில் வெடிப்புகள் உண்டாகிறது.

    இது அழகைக் கெடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. கால்களுக்குப் பொருந்தாத காலணிகள், அளவுக்கதிகமான உப்புத் தண்ணீரில் பாதங்கள் படுவது, சத்துக்குறைவு போன்ற காரணங்களால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இத்தகைய வெடிப்புகள், இறந்த செல்கள் படிதல் போன்ற பிரச்சினைகளை நீக்கி பாதங்களை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு 'பியூமிஸ் கல்' உதவுகிறது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    'பியூமிஸ் கல்' பாதங்களின் உலர்ந்த சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களின் மீது தேய்ப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஒவ்வொரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகும், அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் பயன்படுத்திய கல்லை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி பாதங்களை மசாஜ் செய்துகொள்ளலாம். மாய்ஸ்சுரைசருக்குப் பதிலாக தேங் காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.

    பிறகு, சுத்தமான துண்டைப் பயன்படுத்தித் துடைத்து, உலரவிட்டு காலுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதையும், குதிகால் வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம். பாதங்களில் காயங்கள், புண் ஏதேனும் இருந்தால் பியூமிஸ் கல்லை பயன்படுத்தக்கூடாது.

    ×