search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    30 வயதும்.. முகச் சுருக்கமும்..
    X

    30 வயதும்.. முகச் சுருக்கமும்..

    • வயது அதிகரிக்கும்போது கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்.
    • முக பயிற்சிகள், உணவு பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம்.

    30 வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும்.

    அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது. ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்:

    வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்:

    தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்:

    சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    Next Story
    ×