search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சரும அழகை பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்
    X

    சரும அழகை பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்

    • ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
    • ஆண்கள் பெண்களை போல் முறையான சரும பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை.

    பெண்களுக்கு இணையாக ஆண்கள் பலரும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பெண்களை போல் முறையான பராமரிப்பு வழிமுறைகளை கையாள்வதில்லை. ஒருசில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே சரும அழகை மெருகேற்றிக்கொள்ளலாம். முதுமை எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போட்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * பொதுவாகவே ஆண்கள் எந்தவொரு கிரீமையும் சருமத்தில் தடவுவதற்கு விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் எளிதில் வறட்சி அடைந்துவிடும். மென்மை தன்மை நீங்கி கடினமானதாகவும் மாறிவிடும். மென்மை அழகை பேணுவதற்கு மாய்ஸ்சுரைசரை தினமும் தடவி வரலாம். இது சரும வறட்சியை போக்கக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    * சன்ஸ்கிரின் கிரீம்களை பெண்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. ஆண்களும் பயன்படுத்தலாம். அது சூரிய கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கக்கூடியது என்பதால் இருபாலரும் தாராளமாக உபயோகிக்கலாம். சன்ஸ்கிரினையும் முறையாக உபயோகிக்க வேண்டும். வெளியே புறப்பட்டு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்வது நல்லது.

    * சன்ஸ்கிரின் போலவே முதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் 'ஆன்டி ஏஜிங் கிரீம்'களை ஆண்களும் அவசியம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவாகவே முதுமை தோற்றத்தை எதிர்கொள்வதை தடுத்துவிடலாம்.

    * ஆண்கள் முகத்திற்கு ஷேவிங் செய்யும்போது தவறாமல் கிரீம் பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு இதமளிக்கும். ஈரப்பதத்தையும் தக்கவைத்துக்கொள்ளும். சிலரோ கிரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்வார்கள். அது சரும வறட்சிக்கு வழிவகுத்துவிடும். அதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். வெட்டு காயங்களை எதிர்கொள்ளவும் நேரிடும். அதனை தவிர்க்க ஷேவிங் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பிறகு லோஷனையும் தவறாமல் தடவ வேண்டும்.

    * ஆண்களில் பலர் குளிக்கும்போது உடலுக்கு பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கும் உபயோகிப்பார்கள். அப்படி சோப்பை பயன்படுத்துவது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மையை நீக்கிவிடக்கூடும். அதனால் சருமம் வறட்சியடையும். சரும செல்களும் பாதிப்பை எதிர்கொள்ளும். அதனை தவிர்க்க சோப்புக்கு பதிலாக 'பேஸ் வாஷ்' பயன்படுத்துவது சிறந்தது.

    * பெண்களின் சருமத்தில் மட்டுமே அழுக்குகள், இறந்த செல்கள் படிவதில்லை. ஆண்களின் சருமத்திலும் இத்தகைய பாதிப்புகள் நேரும். அதனால் ஆண்களும் அவ்வப்போது 'ஸ்கரப்' செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி முகம் புதுப்பொலிவோடு காட்சியளிக்கும். பால்-பாதாம், தயிர்-லவங்கப்பட்டை, தேங்காய் எண்ணெய்-புரவுன் சுகர், ஓட்ஸ்-கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி எளிதாக 'ஸ்கிரப்' செய்யலாம்.

    Next Story
    ×