என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பட்டாணி பருப்பில் வடை செய்வதால் சூப்பராக இருக்கும். இன்று பட்டாணி பருப்பை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
    கடலைப் பருப்பு - 50 கிராம்,
    அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
    இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பட்டாணி பருப்பு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீர்ச்சத்து நிறைந்த காய்கறியான சுரைக்காயின் மூலம் சத்தான சுவையான பாயாசம் எப்படி தயாரிக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய் - 1 (சிறியது)

    தண்ணீர் - 2 கப்

    நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    பால் - 1/2 லிட்டர்

    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். (சுரைக்காயை துருவிய உடன் சீக்கிரமே தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். இல்லையென்றால் கருப்பு நிறத்தில் மாறி விடும்). சிறிது நேரத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து விடவும்.

    அடுப்பில் கனமான பாத்திரத்தில் சூடான பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    மற்றொரு அடுப்பில் வேறு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி, முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.

    பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காயை அதனுடன் சேர்க்கவும்.



    பின்னர் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் உலர்ந்த பழங்கள், எசன்ஸ், குங்குமப்பூ சேர்க்கலாம்.

    சத்தான சுவையான சுரைக்காய் பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழம் - 2
    குளிர்ந்த பால் - 2 கப்
    வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் பால் மற்றும் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மாவில் இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இன்று ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    ராஜ்மா - 1 கப்
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    தனியாதூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கல் உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவைக்கு
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை:


    ராஜ்மா என்பது ‘ரெட் கிட்னி பீன்ஸ்’ என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு. இதனை 12 மணி மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ப.மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கரம் மசாலா, தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.

    பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.

    ஆரோக்கிய பலன்: இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இதய படபடப்பை சீராக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும் நுங்குவை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று நுங்கு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நுங்கு - 10
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 3
    சர்க்கரை - சுவைக்கு



    செய்முறை :

    6 நுங்கின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 4 நுங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும்.

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்

    நன்கு ஆறிய பாலில் அரைத்த, பொடியாக நறுக்கிய நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக பாயசம் பதத்திற்கு கலக்கவும்.

    இப்போது சுவையான நுங்கு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருணைக்கிழங்கில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கருணைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கருணைக்கிழங்கு - 100 கிராம்
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - சிறிய துண்டு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 3
    கொத்தமல்லி - 2 கொத்து
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - சிறிது
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை:

    இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.

    பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பூண்டு, சோம்பு, சீரகம், இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    கருணைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி குக்கரில் வைத்து வெய்ட் போட்டு 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் செய்தால் சாப்பிடும் போது விறு விறு என்று இருக்காமல் இருக்கும்.

    கருணைக்கிழங்கு வெந்ததும் தோல் உரித்து நன்கு மசித்து விடவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அதன் பிறகு அரைத்து வைத்த விழுது மற்றும் கறிவேப்பிலை போட்டு  பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்..

    அடுத்து அதில் மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.

    பிறகு தோசைமாவு பதத்தில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக ஆனதும் மேலே கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் செய்த கலவையை போட்டு பரப்பி விடவும். பிறகு அதை வில்லைகளாக போட்டு எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எடுத்து வைத்த வில்லைகளை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு கட்லெட் ரெடி.
    குழந்தைகளுக்கு மில்க்‌ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் காபி மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இன்ஸ்டன்ட் காபி பொடி - 1 டீஸ்பூன், 25 மில்லி சுடு தண்ணீரில் தனியாக வைக்கவும்),
    வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப் (குழிகரண்டி)
    குளிர்ந்த கெட்டி பால் - 200 மில்லி,
    ஐஸ்கட்டி - 2 கியூப்,
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    கோகோ பவுடர் - 1/2 டீஸ்பூன்.

    மேலே அலங்கரிக்க

    விப்பிங் கிரீம் - 1 கப்,
    சாக்லேட் பவுடர் - மேலே தூவ,
    சாக்லேட் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    மிக்சியில் ஐஸ்கிரீம், பால், காபி டிகாஷன், சர்க்கரை, கோகோ பவுடர், ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி பிறகு அதில் மிக்சியில் உள்ள காபி மில்க் ஷேக் ஊற்றி அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன்மேல் சாக்லேட் பவுடர் தூவி பரிமாறவும்.

    காபி பிரியர்களுக்கு இந்த கோடைகாலத்தில் காபி மில்க்ஷேக் மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட்டில் அல்வா செய்து கொடுக்கலாம். இன்று இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - அரை கிலோ
    சீனி துளசி பவுடர் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10
    பசு நெய் - 5 டீஸ்பூன்
    பசும் பால் - அரை லிட்டர்
    தண்ணீர் - 100 மி.லி



    செய்முறை:


    அகன்ற பாத்திரத்தில் கேரட்டை போட்டு அதனுடன் ஏலக்காய் தூள், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கீழே இறக்கிவிடவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.

    அதனுடன் வேகவைத்த கேரட்டை கொட்டி கிளறிவிடவும்.

    பின்னர் சீனி துளசி பவுடரை தூவி நன்றாக கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.

    கேரட் அல்வா தயார். (நிறத்திற்காக எந்த பவுடரும் பயன்படுத்தக்கூடாது)

    ஆரோக்கிய பலன்: கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்களுக்கு நல்லது. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைகண் நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். இருளிலும் கூட கண் நன்றாக தெரியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும் கோதுமை ரவை வடை. இன்று இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள் :

    கோதுமை ரவை - ஒரு கப்
    வெள்ளை உளுந்து - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1/2 கப்
    பச்சைமிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சின்ன துண்டு
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

    பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.

    அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.

    மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை ரவை வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். இன்று கருப்பு கொண்டை கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு கொண்டை கடலை - 1 கப்
    சின்ன வெங்காயம் - அரை கப்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
    கல் உப்பு - தேவையான அளவு
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 2
    கொத்தமல்லிதழை - தேவைக்கு



    செய்முறை:

    கொண்டை கடலையை நன்றாக கழுவி 10 மணிநேரம் நீரில் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், பிரிஞ்சி இலை போட்டு அவை பொரிந்ததும் வெங்காயத்தைகொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து லேசாக வதக்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து கிளறுங்கள்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதைத்தொடர்ந்து கொண்டை கடலையை கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    ஆரோக்கிய பலன்: கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோய்க்கும் நல்லது. இதை தொடர்ந்து உண்பதால் உடல் பொலிவு பெறும். படர் தாமரை போன்ற சரும பிரச்சினை வராமலும் தடுக்கும்.
    வேர்க்கடலை சாட் கடைகளில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த வேர்க்கடலை சாட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று,
    பச்சை மிளகாய் - 4,
    கிரீன் சட்னி, சாட் மசாலா - தலா ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வேர்க்கடலையை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வேர்க்கடலையை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக அதனுடன் கிரீன் சட்னி, சாட் மசாலா, உப்பு கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலை சாட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க பால் சர்பத் குடிக்கலாம். இன்று இந்த ஜூஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 1/2 லிட்டர்,
    நன்னாரி சர்பத் - 100 மிலி,
    சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்,
    பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசினை தண்ணீரில் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    இவை இரண்டும் குளுமையான பொருள் என்பதால், வெயில் காலத்தில் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னை ஏற்படாது.

    பாலை காய்ச்சி நன்கு குளிர வைக்கவேண்டும்.

    குளிர வைத்த பாலில் நன்னாரி சர்பத், சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலந்த ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

    குளுகுளு பால் சர்பத் ரெடி.

    சப்ஜா மற்றும் பாதாம் பிசினை மட்டும் தனியாக ஊறவைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது பாலில் கலந்து குடிக்கலாம். 
    ×