என் மலர்
சமையல்
- கேரளாவில் இந்த நேந்திரம் பழ பஜ்ஜி மிகவும் பிரபலம்.
- மாலை நேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
நேந்திரம் பழம் - ஒன்று
மைதா மாவு - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை(சீனி) - 2 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
நேந்திரம் பழத்தை தோல் நீக்கி வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ கனத்தில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். மிதமான தீயில் வைத்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்.
பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
இப்போது சூடான சுவையான நேந்திரம் பழ பஜ்ஜி தயார்.
- கத்திரிக்காயை வைத்து பல சமையல் வகைகள் செய்யலாம்.
- இன்று கத்திரிக்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 200 கிராம்
தக்காளி - 3
பெ. வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 4
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தே.அளவு
கறிவேப்பில்லை - தே.அளவு
உப்பு - தே.அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கத்திரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.
- மாலைநேரத்தில் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
- வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
முட்டை - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
* கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சிறிதளவு கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும், மிளகுப்பொடி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் போட்டு நன்றாக கிளறிய பின்னர் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும். மசாலா பச்சை வாசனை போய் முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* பிசைந்த சப்பாத்தி மாவினை, மிகவும் மெல்லிய சின்ன வட்ட சப்பாத்தியாக தேய்த்து முக்கோண வடிவில் செய்து நடுவில் முட்டை மசாலாவை வைத்து கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
* இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான முட்டை சமோசா ரெடி.
- இது சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவு.
- சம்பா கோதுமை ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசி பருப்பு - அரை கப்
உப்பு - சுவைக்கு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - 6
செய்முறை :
இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.
பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.
விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள்.
தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள்.
அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.
- கேரளாவில் இறால் மொய்லி மிகவும் பிரபலமான உணவு.
- இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 கப் (முதல் பால்)
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு/வினிகர் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கால் கப்
செய்முறை
இறாலை நன்கு சுத்தம் செய்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து ஒரு நிமிடம் சிறுதீயில் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றவும்.
பின்பு தேங்காய் பாலைச் சேர்க்கவும்.
நுரைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
சுவையான இறால் மொய்லி தயார்.
இதனை இட்லி, தோசை, இடியாப்பம், சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று சிக்கன், நூடுல்ஸ் சேர்த்து சூப் செய்முறை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - அரை பாக்கெட்
சிக்கன் - அரை கிலோ
கேரட் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகு பொடி - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் - 3
பூண்டு - 5 பற்கள்
வெங்காயம் - 1
கொத்தமல்லி - கையளவு
செய்முறை
சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நூடுல்ஸை தனியாக வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அதோடு காய்கறிகளையும், உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.
விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த நூடுல்ஸ், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி.
- காலையில் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் போண்டா செய்யலாம்.
- இந்த போண்டா செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப்
கடலைமாவு - 1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி .- 1 துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை :
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மீந்த சாதத்தை போட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.
அதனுடன் கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி சேர்த்து நன்கு பிசையவேண்டும். இதில் தண்ணீர் ஊற்றத்தேவையில்லை.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான ரைஸ் போண்டா ரெடி.
- குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
- எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 200 கிராம்
குதிரைவாலி அரிசி - 50 கிராம்
தயிர் - கால் கப்
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.
குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் வரும் போது இறக்கி விடவும்.
பிறகு, தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்துக் குடிக்கலாம்.
- பேபிகார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இன்று பேபிகார்னில் பஜ்ஜி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேபிகார்ன் - 12,
கடலை மாவு - 1 கப்,
அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கு,
ஆப்ப சோடா - சிட்டிகை
அரைக்க:
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்.
செய்முறை:
பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளவர், கடலை மாவு, அரிசி மாவை போட்டு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பேபிகார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
இப்போது சூப்பரான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.
- பொடி தோசையில் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, கலந்து வைத்த வெங்காய கலவையை தோசை மேல் தூவி அதன் மேல் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சூப்பரான வெங்காய பொடி தோசை ரெடி!!!
- சிக்கன் வைத்து பலவித உணவுகளை சமைக்கலாம்.
- இன்று சிக்கன் வைத்து மோமோஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
சிக்கன் கொத்துகறி - 1/4 கிலோ
வெங்காயம் - 2
முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
சிக்கன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கன் கொத்துக்கறி, பொடியாக்கி நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை பந்து போன்று சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதை சிறிய அளவிலான மெல்லிய சப்பாத்தியாக திரட்டி கொள்ளவும்.
அதன் பின்னர் கிளறி வைத்து உள்ள சிக்கன் கலவையை அந்த சப்பாத்தியில் வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் வைத்து வேக விட வேண்டும்.
15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
தற்போது சுவையான ரெஸ்ட்ரன்ட் ஸ்டைல் சிக்கன் மோமோஸ் ரெடி.
- இதர கீரைகளைவிட இதில் அதிகளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
- முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - ஒரு கப்,
பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
நெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் -1,
பூண்டு பல் - 4,
தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும்.
வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.
சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.






