என் மலர்
சமையல்
- மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
- மட்டன் கீமா வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் கீமா - 150 கிராம்
வெங்காயம் - 1 + 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - 1 டீஸ்பூன்
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
பஜ்ஜி மாவு - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை.
கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.
வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.
பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.
- இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- இந்த சப்பாத்தி செய்வதும் எளிது, சுவையும் அலாதியானது.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 10,
மைதா மாவு - 100 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பால் - 100 மில்லி,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.
பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
- சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
- இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் எலும்பு கறி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
கல்பாசி பூ - 2
ஏலக்காய் - 2
பட்டை, லவங்கம் - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.
விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.
- வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 150 கிராம்
தயிர் - அரை கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.
இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.
- குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மேகி நூடுல்ஸ்லேயே மிக சுவையான வடை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மேகி நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வேக வைத்த உருளைக்கிழங்கு (தோல் நீக்கியது) - 2
வெங்காயம் - 1
ப. மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
கேரட் - 2
மிளயாய் தூள் - அரை தேக்கரண்டி
மேகி மசாலா
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மேகி நூடுல்ஸை உதிர்த்து போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
பின்னர் மசித்து வைத்த உருளைக்கிழங்கை மேகி உடன் போட்டு கிளறவும்.
இப்போது வெங்காயம், ப. மிளகாய், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
இந்த கலவையை ஒரு பௌலில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், தேங்காய் துருவல், மேகி மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
இப்பொழுது இந்த மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை வடைபோல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறம் ஆனதும் எடுக்கவும்.
இப்பொழுது சூடான சுவையான மேகி வடை தயார்.
- சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபி செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவைக்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.
பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.
இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.
- தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று நெய் அப்பம்.
- இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 250 கிராம்
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
ஏலக்காய் - 4
சமையல் சோடா - ¼ தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
உப்பு - ¼ தேக்கரண்டி
வெல்லம் - 200 கிராம்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும்.
குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும்.
இப்போது நெய் அப்பம் தயார்.
- பச்சை பயிறு கிரேவி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- பச்சை பயறில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்தது
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு, இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
சீரகம் - ½ மேஜைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி
மல்லி தூள் - 1 மேஜைக்கரண்டி
சீரக தூள் - ½ மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை பயறை நன்கு சுத்தம் செய்து கழுவி 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சீரகத்தை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி குழையும் வரை வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பச்சை பயரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு சுமார் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான பச்சை பயறு கிரேவி தயார்.
- வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 3,
கடலை மாவு - 1 கப்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
ஆப்பசோடா - சிட்டிகை.
செய்முறை:
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
மாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை நன்கு பிசறி (இதழ் இதழாக பிரியும்படி) மாவில் சேர்த்து கலந்து காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.
இப்போது சூப்பரான உதிர் வெங்காய பஜ்ஜி ரெடி.
- முட்டை ஆப்பம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இந்த ஆப்பம் செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 3 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
உளுந்து - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சமையல் சோடா - 3 சிட்டிகை
உப்பு - சிறிதளவு
முட்டை மசலாவிற்கு :
முட்டை - மூன்று
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை :
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.
* அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் சாஃப்ட்டாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
* ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.
* பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.
* சுவையான முட்டை ஆப்பம் ரெடி.
* இத்துடன் காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள குருமா சூப்பராக இருக்கும்.
- இன்று வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பொட்டு கடலை - 3 ஸ்பூன்
தேங்காய் - கால் மூடி
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 7
கிராம்பு - 3
பட்டை சிறிய துண்டு - 1
சோம்பு - 1 ஸ்பூன்
கல்பாசி - அரை ஸ்பூன்,
முந்திரி - 4
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - ஒன்றரை ஸ்பூன்
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.
- காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- காலையில் மீந்து போன மாவில் மாலையில் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கப்
வெங்காயம்- 1,
பீன்ஸ் - 10,
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
ப.மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.






