என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்று விளையாடுவதில் ஆர்வம் கொள்ளாமல், கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், I-Pad -லும் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் ஜீரணம் மந்தமாகவே உள்ளது.
    காலங்கள் நிறைய மாறிவிட்டன. இந்த பத்து வருடங்களில் நம் சுற்றுச்சூழலில், பழக்கவழக்கத்தில் மற்றும் குடும்பசூழ்நிலைகள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

    குடும்பங்கள் எல்லாம் கூட்டுக்குடும்பமாக ஒரு வீட்டில் ஒன்றாக ஏழு எட்டு குழந்தைகள் வளர்ந்த சூழ்நிலையில் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி நினைக்க அவ்வளவாக யாருக்கும் நேரமில்லை. பெரிய குழந்தைகள், சிறு குழந்தைகளை பார்த்துக்கொண்டுவிடுவார்கள். நம்மில் கூட பலர் வீட்டில் அப்பா, அம்மாவை விட சகோதர சகோதரிகளையே பெற்றோர்களாக பாவிக்கும் பழக்கமும் இருந்தது. ஆனால் இன்றோ ஒவ்வொரு குடும்பங்களிலும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மற்றும் இன்று வசதி வாய்ப்பு அதிகரித்து நம் அனைத்து வேலைகளுக்கும், இயந்திரங்கள் வந்துவிட்டதால் குழந்தைகளை பார்த்துக்கொள்வதே மிகப்பெரிய வேலையாக அமைந்துவிட்டது. இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மாற்றம் இன்று குழந்தைகளைச் சுற்றியே உலகம் என்று அமைந்துவிட்டது.

    குழந்தைகளுக்காகவே வீடுகள், பள்ளிகள், கடைகள், விளம்பரங்கள் என்று வந்துவிட்டன. இதனால் அவர்கள் சொல்வது மட்டுமே இங்கு நடக்கின்றது.

    இந்த சூழ்நிலையில் மருத்துவர்களாகிய நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்வி என் குழந்தை சாப்பிடுவதே இல்லையே- இது எதுவும் நோயின் அறிகுறியா? இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்படும்போது நாங்கள் முதலில் செய்வது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது. பெரும்பாலும் அப்படிப்பட்ட குழந்தைகள் சீரான வளர்ச்சி பாதையில் இருப்பார்கள். பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருந்தாலும் இவர்களின் வளர்ச்சி, அவர்கள் வயதிற்கு சரியான அளவிலோ அல்லது அவர்களின் பெற்றோர்களின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப சரியான அளவிலோ தான் இருக்கும்.

    மேலும், நாங்கள் குழந்தைகள் சாப்பிடவில்லை என்று பெற்றோர் ரத்த பரிசோதனை செய்ய சொல்வதால் பண்ணும்போது ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ரத்தசோகை அல்லது கால்சியம் (Calcium) சத்து குறைபாடு இருக்கும். மற்றவர்களுக்கு அனைத்து பரிசோதனையும் சாதாரணமாகவே எந்த குறைபாடும் இன்றி இருக்கும்.

    சரி இப்படி எல்லாமே நன்றாக இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை என்ற காரணத்தை பார்த்தால், மேற்கூறிய மாற்றங்களே காரணம்.

    1. குழந்தைகள் முதல் வயது முதல் 8 வயது வரை எடை குறைவாகவே இருப்பார்கள். வளர்ச்சி அதிகம் இருக்கும். மூன்று பருவங்கள் நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் முதல் வருடம் மற்றும் 9 வயதிற்கு மேல் உள்ள வளர் இளம்பருவம். இந்த மூன்று பருவங்களில் தேவைப்படும் உணவு அளவு வேறு எப்போதும் தேவைப்படுவதில்லை. வயிற்றில் உணவு முழுவதுமாக இருக்கும்போது தூக்கம் வரும். முதல் வயதிற்குப் பிறகு குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். செயல்பாடுகள் அதிகமாகிறது. ஆகவே உணவை குறைத்தால் தான் மூளை சுறுசுறுப்பு அடையும். இது இயற்கை செய்யும் அற்புதம்.

    2. இந்த அற்புதத்தை புரிந்துகொள்ளாமல் மேற்கூறிய குடும்பச் சூழ்நிலையில் அனைவரின் கவனமும் ஒரு குழந்தையிடமிருந்து இருக்கும்போது இந்த பிரச்சினை பெரிதாக ஆகிவிடுகிறது. பெற்றோர் மாற்றி தாத்தா, பாட்டி அனைவரும் கவலைப்பட்டு நோயே இல்லாத சூழ்நிலையிலும் நாம் நோய் இருப்பதாக நினைத்து கொள்கிறோம். சாப்பிடும் வேளைகள், சண்டை வேளைகள் ஆகிவிடுகிறது.

    3. குழந்தைகள் இந்த சூழ்நிலையில் இரண்டு பிற மனநிலைக்கு உள்ளாகிறார்கள்.

    * ஒன்று அனைவரின் பார்வையும் அவரிடத்தே இருப்பது அவர்களுக்கு தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ள மற்றும் செய்துகொள்ள உதவுகிறது.

    * இரண்டு தங்களின் ஆழ்மனதில் உணவு மீது ஒருவித அதிருப்தியை உண்டாக்கி கொள்கிறார்கள்.

    4. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்று விளையாடுவதில் ஆர்வம் கொள்ளாமல், கைப்பேசியிலும், தொலைக்காட்சியிலும், I-Pad -லும் நேரத்தை செலவழிப்பதால் அவர்களின் ஜீரணம் மந்தமாகவே உள்ளது.

    மாலை முழுவதும் விளையாட்டு என்று சொன்ன வாக்கு மாறி, மாலை முழுவதும் Cellphone என்றாகிவிட்டது. விளையாட வெளியில் செல்ல முடியவில்லை, நிறைய பயம், வாகனங்கள் என்று மாறிமாறி சூழ்நிலையின் காரணமாகவோ, அல்லது படிப்பின் சுமையாகவோ விளையாட்டு பின்னடைவு அடைந்துள்ளது. ஆக, குழந்தைகளின் இயல்பான உடல் மாற்றம் மற்றும் இன்றைய குடும்ப சூழலே குழந்தை சாப்பிடுவதே இல்லை என்கின்ற இந்த நிலைக்கு காரணம். இதற்கான தீர்வு அனைவரிடத்திலும் உள்ளது.

    * மருத்துவர்கள் இதற்கு வெறும் மருந்துகள் எழுதாமல், குழந்தைகளிடத்து வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    * பள்ளிகள் மற்றும் சமுதாயம் குழந்தைகள் விளையாட சூழ்நிலை ஏற்படுத்தி தரவேண்டும்.

    * பெற்றோர்கள் இயல்பான வளர்ச்சியையும் புரிந்துகொண்டு, வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தி, அலைபேசி மற்றும் தொலைக்காட்சியின் பயன்பாட்டை குறைந்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.

    என் குழந்தை சாப்பிடுவதே இல்லை என்பது நோயின் அறிகுறி அல்ல...

    இது நம் சமுதாயத்தின் தேவையில்லா மாற்றத்தின் அறிகுறி.

    பெற்றோர்கள் தங்கள் வளர்ப்பினை மாற்ற வேண்டிய தருணத்திற்கான அறிகுறி எது இயல்பு என்று தெரிந்துகொண்டு அனைத்துக்கும் பதட்டப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டிய சூழலுக்கான அறிகுறி...

    குழந்தைகள் நாட்டின் கண்கள் நாளைய இந்தியா வளமாக இருக்க சிந்திப்போம்...செயல்படுவோம்.

    நோயை தீர்ப்பது மட்டுமே எங்களின் நோக்கம் அல்ல..

    அனைவரையும் நலமோடு வாழவைப்பதே நலம் மருத்துவமனையின் முயற்சி.

    - Dr.நர்மதா அசோக், இயக்குநர், குழந்தை நல மருத்துவர்
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது.
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது. விளையாட்டுடன் தொடர்புபடுத்தியே வாழ்வியலை கற்றுக்கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் தண்ணீரை அதிகம் வீணாக்குவார்கள். தண்ணீரில் விளையாடுவது அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை வீணாக செலவிடக்கூடாது என்பதை விளையாட்டு மனநிலையில் இருந்தே அவர்களுக்கு புரியவைக்கலாம்.

    தினமும் வீட்டில் எவ்வளவு தண்ணீர் செலவிடப்படுகிறது. தேவையில்லாத விஷயங்களுக்கு எவ்வளவு வீணாகிறது என்பதை அவர்களை கொண்டே கணக்கிட வைக்கலாம். உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் குளிக்கிறார்கள். எத்தனை முறை கழிவறையை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள் என்பதை குழந்தைகளை கொண்டு குறிப்பெடுக்க சொல்லலாம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள்? முந்தைய நாளை விட அதிகமாக செலவிடுகிறார்களா? குறைத்துக்கொள்கிறார்களா? என்பதை குறிப்பெடுக்க சொல்லலாம். அதன் மூலம் குடும்பத்தினர் வீணாக தண்ணீர் செலவிடுவதை தவிர்க்க முடியும்.

    வீட்டு தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், காரை கழுவுதல் போன்ற வேலைகளில் குழந்தைகளை ஈடுபட வைக்கலாம். தண்ணீர் பயன்பாடு கொண்ட வேலை என்பதால் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அதன் மூலம் வீணாக அதிக தண்ணீர் செலவிடும் பழக்கத்தையும் கைவிட வைத்துவிடலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துவது போலவே, மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மழை நீரை சேமிப்பதால் என்னென்ன நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.

    வீட்டு தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அது அவர்களுக்கு படிப்புடன் கூடிய அனுபவக்கல்வியாகவும் அமையும். விதையை மண்ணில் ஊன்றுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அது செடியாக வளர்வது போன்ற நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமையும். செடி வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் மாறும்.

    பொதுவாக குழந்தைகள் சாப்பிடும்போது காய்கறிகளை ஒதுக்கி வைப்பார்கள். சமையலுக்கு காய்கறிகள் நறுக்கும்போது குழந்தைகளை அருகில் அமர்த்தி ஒவ்வொரு காய்கறிகள் பற்றியும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள், அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் விளக்கி புரியவைக்கலாம். அதன்மூலம் படிப்படியாக காய்கறிகளை ஒதுக்கி வைக்கும் சுபாவத்தை குறைத்துவிடலாம். சின்ன சின்ன சமையல் வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சாப்பிட்ட தட்டு, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை கழுவுவதற்கும் பழக்கப்படுத்தலாம்.

    துரித உணவுகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ருசிப்பார்கள். ஒருவாரம் முழுவதும் அப்படிப்பட்ட உணவுகளை எவ்வளவு உட்கொள்கிறார்கள் என்பதை அவர்களையே குறிப்பெடுக்க சொல்லலாம். அவற்றின் தீமைகளை விளக்கி புரியவைத்து மறுவாரம் அவற்றை சாப்பிடும் அளவை குறைக்க வைக்கலாம். நாளடைவில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை படிப்படியாக புறக்கணிக்க பழகிவிடுவார்கள்.

    பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய காலணிகள், அட்டை பெட்டிகள் உள்பட வீட்டில் வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கலாம். இணையதளங்களில் மறுசுழற்சி பொருட்களைக்கொண்டு எப்படியெல்லாம் அழகழகான பொருட்களை தயார் செய்யலாம் என்பது பற்றிய வீடியோக்கள் ஏராளம் இருக்கின் றன. அவற்றை பார்வையிட வைத்து அதனுடன் அவர்களின் கற்பனை திறனையும் புகுத்தி மாறுபட்ட கலை பொருட்களை தயார் செய்வதற்கு பழக்கலாம். இந்த வழக்கம் அவர்களை சிறந்த கைவினை கலைஞர்களாக மாற்றும். வளரும்போது தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்க உதவும். 
    ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.
    பிறவியிலேயே உருவாகும் ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் ஸ்டெம் செல் சிகிச்சையால் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.

    ‘ஹிர்ஸ்பரங்க்‘ எனும் ‘பிறவி வீக்கப் பெருங்குடல்‘ நோய் குழந்தைகளிடையே மிகவும் அரிதாக காணப்படும் ஒன்றாகும். குடல் சரியான முறையில் உணவை ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு கடத்த தேவையான நரம்புகள் சில இடங்களில் இல்லாமல் போவதே இந்நோய்க்கு காரணம். இந்தநோயை குணப்படுத்த இன்று வரை அறுவை சிகிச்சைதான் உதவி வருகிறது. ஆனால், அறுவை சிகிச்சையின்றி இதை குணப்படுத்த ஸ்டெம் செல் வழிமுறையால் முடியும் என்று தங்களின் ஆய்வு மூலம் நிரூபித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

    மனித உடலில் பாதிக்கப்படாத பகுதியில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து பிறகு அவற்றை மீண்டும் குடல் திசுக்களில் செலுத்தி இந்த நோயை குணப்படுத்த முடியும். மேலை நாடுகளில் இந்த ஆய்வு விலங்குகளில் செய்யப்பட்ட போது ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

    ஸ்டெம் செல்களை பாலிமர் எனும் வேதிப்பொருளுடன் இணைத்து ‘சிந்தெடிக்ஸ்கபோல்ட்‘ எனும் ஆதரவு இணைப்புகளை குடல் திசுக்களில் செலுத்துவார்கள். இந்த உத்தி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் இதை விலங்குகளில் செலுத்தி ஆய்வு செய்ய மருத்துவ நெறிகள் குழுவிடம் அனுமதி வேண்டி ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த சிகிச்சை முறை நடைமுறைக்கு வரும்போது பிறவிக் குடல் நோயை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
    டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.
    அ டேய்.... ரூம் போட்டு யோசிப்பீங்களா? என கேட்கத் தோன்றுகிறது. அடிக்கடி முளைத்தெழும்புகின்ற இணையச் சவால்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு சவாலுக்குப் பின்பும் பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. ஆனாலும் மக்கள் சவால்களில் குதிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் ஒன்று வந்தது. நடுங்கிக் குளிரும் அதிகாலையில், ஒரு பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை தலையில் கவிழ்க்க வேண்டும் என்பது தான் சவால். உலகெங்கும் மக்கள் சவாலை ஏற்று பக்கெட் பக்கெட்டாக தண்ணீரைத் தலையில் கவிழ்த்து புகைப்படம் எடுத்து இணைய வெளியைத் தெறிக்க விட்டார்கள். பலர் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கையில் கிடந்தார்கள். எவ்வளவு நாள் தான் ஐஸ்வாட்டர் கொட்டறது என அடுத்து நெருப்பு விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். ஆல்கஹால் போன்ற சட்டென தீப்பிடித்து, சட்டென அணைந்து விடுகின்ற திரவங்களை உடலில் கொட்டி தீ வைத்து பிறரை வெல வெலக்க வைப்பது இந்தப் போட்டி. பலர் இதை வெற்றிகரமாகச் செய்தார்கள். மக்கள் கூடும் இடங்களில் உடலில் நெருப்பு வைத்து, நெருப்பையும் மக்களின் அதிர்ச்சியையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்கள். பலரை உற்சாகப்படுத்திய இந்த விளையாட்டு, பலருடைய அழகிய மேனியை கருக்கிப் பொசுக்கவும் செய்தது.

    அடுத்ததாக ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும் ஒரு சவால் வந்தது. சீறிவரும் ரெயிலுக்கிடையே, பாய்ந்து வரும் வாகனங்களுக்கிடையே, உச்சாணிக் கொம்பில், கட்டிடங்களின் அபாய விளிம்புகளில் என சாவுக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று மக்கள் செல்பி எடுத்துத் தள்ளினார்கள். ஏகப்பட்ட உயிர்களைப் பலிகொண்ட விளையாட்டாய் இது மாறிப் போனது.

    48 மணி நேர சவால் என்று ஒன்று, இந்த ஆண்டின் துவக்கத்தில் வந்தது. பதினெட்டு மணி நேரம் காணாமல் போய்விடவேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டும். அது தான் சவால். பல பெற்றோரை அதிர்ச்சிக்குள் அழைத்துச் சென்ற சவாலாக இது மாறிப் போனது.

    இந்த சவால்களில், சர்வதேசத்தையே நடுநடுங்க வைத்த சவால்களாக புளூவேல், மோமோ போன்ற சைக்கோ விளையாட்டுகள் ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் உயிர்களைப் பலிகொண்டன. பல அரசுகள் இந்த விளையாட்டுகளைத் தடை செய்தும், எச்சரிக்கை விடுத்தும் மக்களைக் காப்பாற்றின என்று சொல்லலாம்.இப்போது கடந்த சில மாதங்களாக ‘நம்பர் நெய்பர்’ (அடுத்த எண் ) எனும் புதிய சவால் ஒன்று மெல்ல மெல்லப் பரவி வியாபிக்கத் துவங்கியிருக்கிறது. இது என்ன சவால்? சிம்பிள். நமது மொபைல் பத்து இலக்க எண்ணாக இருக்கிறது அல்லவா? அந்த பத்தாவது இலக்க எண்ணை மட்டும் மாற்றி வேறு எண் போட்டால் அவர் நமது அடுத்த எண் நபர். அவருக்கு வாட்ஸப் பண்ணுவது, மெசேஜ் பண்ணுவது நண்பராக முயற்சிப்பது தான் இந்த விளையாட்டு. அதாவது உங்கள் எண் 5-ல் முடிகிறதெனில், அந்த இடத்தில் 5-க்குப் பதில் வேறு எண்ணைப் போடவேண்டும்.

    அந்த நபரிடம் தொடர்பு கொண்டு, உரையாடி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன் ஷாட் (திரைப்பதிவு) செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது தான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம். இந்த விளையாட்டும் பல விபரீதங்களை மெல்ல மெல்ல கொண்டு வந்து கொண்டிருக்கிறது. யாரென்றே தெரியாத நபரிடம் பேசுவதும், அவரிடம் நமது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும் நாம் விரும்பியே ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போல என்பதில் சந்தேகமில்லை. இப்படி நடந்த முயற்சிகளில் சில அநாகரிக உரையாடல்களாகவும், கொலை மிரட்டல்களாகவும், எச்சரிக்கைகளாகவும் மாறிப் போனது.

    யாரென்றே தெரியாத நபருக்கு செய்தி அனுப்புவது அவரது தனிநபர் உரிமையில் தலையிடுவதாகவும் மாறிவிடுகிறது. சில நாடுகளில் இது சட்ட விரோதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக இந்த சவால் விளையாட்டுப் போர்வையில் புல்லுருவிகள் உங்களை அணுகலாம் என்பதால் இரட்டைக் கவனம் அவசியமாகிறது.

    டிஜிட்டல் வெளியில் இன்று உலவுகின்ற இந்த சவால் விளையாட்டுகள் பதின் வயதினரையும், சிறுவர்களையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது. அவர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்கான விஷயத்தையும் செய்து இந்த சவாலில் வெற்றி பெற நினைக்கிறார்கள். அது அவர்களுடைய உடல்நலனுக்கோ, ஏன் உயிருக்கோ கூட ஆபத்தாய் முடிவதை அவர்கள் உணர்வதில்லை.

    இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து கட்டளைகள் இவை.

    1. நேரடியான விளையாட்டுகளே எப்போதும் பாதுகாப்பானவை, உறவையும் உடல் நலத்தையும் வளர்ப்பவை. டிஜிட்டல் விளை யாட்டுகள் உடல்நலத்துக்கு எப்போதுமே கேடு விளைவிப்பவை தான். டிஜிட்டல் தவிர்.

    2. எந்த ஒரு சவாலான விளையாட்டையும் செய்ய முயலாதீர்கள். பிறர் நம்மைத் தூண்டி விடுகின்ற வார்த்தைகளுக்கு பலியாகாமல் சுயமாய் சிந்தித்து அதைத் தவிர்ப்பது மிக முக்கியம். கூட இருப்பவர்கள் ஏத்தி விடுவதற்காக நாம் வீழ்ந்து விடக் கூடாது. ஈகோ தவிர்.

    3. நமக்குப் பரிச்சயமில்லாத நபரோடு எந்த விதமான விளையாட்டையோ, சவாலையோ செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நீண்ட நெடுங்காலமாய் சோசியல் மீடியா தோழராய் இருந்தாலும் நேரடியாய்த் தெரியாவிடில் ஒதுங்கி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். நெருக்கம் தவிர்.

    4. பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவர்களும், பதின்வயதினரும் எந்த சவால்களையும் செய்யக் கூடாது. ரகசியம் தவிர்.

    5. உளவியல் ரீதியிலான துன்புறுத்தல்கள், சவால்கள், பிரச்சினைகள் எழுந்தால் உடனே பெற்றோரிடமோ, நம்பிக்கைக்குரியவர்களிடமோ சொல்லி அவர்களுடைய உதவியை நாட வேண்டும். தனிமை தவிர்.

    6. சோசியல் மீடியாவிலோ, டிஜிட்டல் வெளியிலோ உங்களுக்குக் கிடைக்கும் லைக்ஸ், ஷேரிங், கமெண்ட் போன்றவை உங்களுடைய வாழ்க்கையை எந்த விதத்திலும் அர்த்தமுள்ளதாக்கப் போவதில்லை. மாயை தவிர்.

    7. சோசியல் மீடியாவில் பிரகாசிக்க விரும்பினால் உங்களுடைய திறமைகளைப் படைப்புகளாக, இசையாக, ஓவியமாக, குறும்படமாக அல்லது அது போன்ற ஏதோ ஒரு விஷயமாக இணையத்தில் பதிவேற்றி பிரபலமாகுங்கள். அது தருகின்ற மகிழ்ச்சி அலாதியானது. திறமை பயில்.

    8. உங்கள் நண்பர் வட்டாரத்தில் யாரேனும் இத்தகைய சவால்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உண்டு. ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களின் உதவிகளை நீங்கள் நாடலாம். நட்பு பயில்.

    9. பெற்றோரும் பெரியோரும் இத்தகைய புதிய புதிய சவால்களைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றை பிள்ளைகளுக்கு விலக்கி எச்சரிக்கை செய்ய வேண்டும். முன்னெச்சரிக்கை பயில்.

    10. பெற்றோர் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகள் டிஜிட்டலைப் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கும் அதே நேரத்தில், பெற்றோரும் டிஜிட்டலை ஒதுக்கியே வைக்க வேண்டும். நேசம் பயில்.

    சேவியர்
    நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும்.
    குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தனக்கு பிடித்தமானதை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். சுற்றுலாவிற்கோ, கடைவீதிக்கோ செல்லும்போது கண்ணில்படும் பொருட்களையெல்லாம் சில குழந்தைகள் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவற்றுள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளை வாங்கிக்கொடுக்காவிட்டால் அந்த இடத்திலேயே அழுது புரண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இத்தகைய பிடிவாதத்திற்கு தவறான வளர்ப்பு முறைதான் காரணம்.

    குழந்தைகள் விரும்பும் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்து பழக்கிவிடக்கூடாது. அந்த பொருட்கள் அவர்களுக்கு தேவையானதுதானா? என்பதை பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அவசியமான பொருளாக இருந் தாலும் கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் அழுத்தம் திருத்தமாக சொல்லி புரியவைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோரின் கஷ்டம் குழந்தைகளுக்கு தெரியாது. ‘எனக்கு இப்பவே வேணும்’ என்று அழுது அடம் பிடித்தாலோ, பிடிவாதமாக இருந்தாலோ அவர்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்துவிடக்கூடாது. உங்களிடம் உறுதி இல்லாவிட்டால் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

    குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அது நியாயமற்றதாக இருந்தால் விளக்கி புரியவையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். ஒருபோதும் குழந்தைகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். பொறுமையாக பேசுங்கள். அதையும் மீறி பிடிவாதமாக நடந்துகொண்டால் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அக்கம், பக்கத்தினருக்கு கேட்கும் படி கத்தி பேசாதீர்கள். எது சரி? எது தவறு? என்பதை நிதானமாக பேசி புரிய வையுங்கள். 

    குழந்தை பருவத்திலேயே ஒருசில விதிமுறைகளை வகுத்து அதன்படி செயல்படுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அத்தகைய விதிமுறைகளை வீட்டில் உள்ள மற்றவர்கள் மீறி நடக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்தவொரு சூழலிலும் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்தால் குழந்தைகள் அதனை பின்பற்ற பழகிக்கொள்வார்கள். அவர்களிடம் பிடிவாத குணம் எட்டிப்பார்க்காது. தாங்கள் விரும்புவதெல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் எப்படியும் பெற்றோர் வாங்கித் தந்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். வாங்கித்தர மறுக்கும்பட்சத்தில் பிடிவாதம் பிடித்தே சாதிக்க நினைப்பார்கள். 

    அப்படியும் கிடைக்காவிட்டால் மனம் உடைந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளால் சிறு இழப்பை கூட தாங்கிக்கொள்ள முடியாது. தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தியும் அவர்களிடம் இருக்காது. மன தைரியம் இல்லா தவர்களாகவே வளர்வார்கள். எப்போதாவது பிடிவாதம் பிடித்தால் தவறில்லை. ஆனால் பிடிவாதத்தை வழக்கமாக்கிக்கொண்டால் கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது. சிறிது நேரம் அழுது அடம்பிடித்துவிட்டு பிறகு இயல்பாகிவிடும். அப்போது ‘தனக்கு பிடித்தமானதை வாங்கி தர மாட்டீர்களா?’ என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தும். அந்த சமயத்தில் பெற்றோர் விளக்கி புரியவைத்தால் ஏற்றுக்கொண்டு விடும்.

    நீங்கள் பிடிவாத குணம் கொண்ட பெற்றோரா? சிறுவயதில் பிடிவாதம் பிடித்தே நினைத்ததை சாதித்தவர்களா? இப்போதும் பிடிவாதம் பிடிப்பவரா? உங்கள் நடத்தை இப்போது குழந்தைகளிடம் பிரதிபலிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள்தான் மாற வேண்டும். குழந்தைகளுக்கு முன்மாதிரியான பெற்றோராக இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். 
    ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த, பெற்றோர் விளையாட்டு பொருட்களை அதிகமாக வாங்கித் தருகிறார்கள். இதனால் கடைகளில் விளையாட்டுப் பொருட்கள் வேகமாக காலியாகிறது.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பீதி காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். சில நிமிடங்கள் கூட வீட்டில் தங்காத குழந்தைகளும், தற்போது வீட்டிலேயே சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். தப்பித்தவறி குழந்தைகள் வெளியே சென்று விடாதவாறு பெற்றோரும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    இதனால் குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதை சரிகட்டும் நடவடிக்கையாக பெற்றோரும் குழந்தைகளுடன் குழந்தைகளாக ஆடிப்பாடி விளையாடி வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஓடிப் பிடித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் பெற்றோர் விளையாடி மகிழ்கிறார்கள். குழந்தைகள் எந்த விதத்திலும் சோர்ந்து விடக்கூடாது என்பதில் பெற்றோர் மெனக்கெடுகிறார்கள்.

    அந்தவகையில் முழு ஊரடங்கு தளர்வு மீண்டும் அமலில் வந்துள்ள நிலையில், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையகங்களில் தற்போது கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக ஸ்கேட்டிங் போர்டு, செஸ் போர்டு, கேரம் போர்டு, ரிமோட் கார்கள், விளையாட்டு துப்பாக்கிகள், ஷூட்டிங் ரைடர், பொம்மைகள் போன்ற விளையாட்டு சாதனங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. கை குழந்தைகள் உள்ள வீடுகளில் காய்கறி, பழங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற வடிவிலான பொம்மைகளும் வாங்கப்படுகின்றன. இதனால் கடைகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வேகவேகமாக காலியாவதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குழந்தைகள் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களை குஷிப்படுத்த இதுபோல விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறோம். புதிய விளையாட்டு பொருட்கள் கிடைப்பதால் குழந்தைகளும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். ஆசை தீர விளையாடி மீண்டும் உற்சாகம் அடைகிறார்கள்.

    கொரோனா பீதி ஓய்ந்த பிறகு தான் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த தேவையானதை செய்து வருகிறோம், என்றனர்.
    குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடை முறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    * முதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ள விருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப் பாருங்கள். அப்போது தான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.

    * குழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.

    * குழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச்நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடைகளைத் தவிர்க்கவும்.

    * குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத்தில் பயணிக்கலாம். சில நாடுகளில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப்பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம். தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப் படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

    * பல அறைகளைக் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக் கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

    * நீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக்கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந்தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.

    * சுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப் பார்க்கிற ஆர்வத்தில் குழந்தை களை சோர்வாக்கி விடாமல், அவர்களுக்கு சௌகரியமான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

    * விமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்து கொண்டே தட்டிக் கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய்வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது.  

    பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்லவிருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக் கொள்வதும் சிறப்பு. முதல் உதவிப் பெட்டி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.
    ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
    கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிக்கூடங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப் போன்றவை இல்லாத சூழலாலும், நெட்வொர்க் பிரச்சினை காரணமாகவும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்று புதிய நடைமுறையை கையில் எடுத்துள்ளது. அங்குள்ள டும்கா மாவட்டத்தில் உள்ள பங்கதி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

    அதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 246 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் 204 பேர் வீட்டில் ஸ்மார்ட்போன் இல்லை. கணினி, லேப்டாப் போன்ற வசதிகளும் இல்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரான ஷியாம் கிஷோர் சிங் காந்தி, வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு எப்படியாவது பாடம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். தீவிர யோசனைக்கு பிறகு ஒலிப்பெருக்கியை தகவல் தொடர்பு சாதனமாக மாற்றிவிட்டார். பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்திருக்கும் மரங் கள், தெருக்கள், வீடுகளில் ஆங்காங்கே ஒலிப்பெருக்கி, ஸ்பீக்கர்களை கட்டிவைத்துவிட்டார். பள்ளிக்கூடத்தில் இருந்து ஆசிரியர்கள் மைக் மூலம் பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். காலையில் 10 மணி அளவில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருக்கும் மரங்கள், வீட்டு திண்ணைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்கிறார்கள். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் ஒலிப்பெருக்கிகள் வழியாக மாணவர்களை சென்றடைகிறது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக ஆசிரியர் சொல்லும் குறிப்புகளை நோட்டில் எழுதுகிறார்கள். தினமும் இரண்டு மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில், “கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்தே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டன. எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களில் பெரும் பாலானோரிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாததால் ஒலிப்பெருக்கியை தேர்ந்தெடுத்தேன். ஐந்து ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து மைக் வழியாக பாடம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உதவியாக இருக்கிறார்கள். இந்த புதிய அணுகுமுறை மாணவர்களுக்கு பிடித்திருக்கிறது. நன்றாக புரிந்து கொள்கிறார்கள். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, ஏதேனும் கேள்வி கேட்க விரும் பினாலோ அவர்கள் மற்ற வர்களுடைய மொபைல்போன்களில் இருந்தும் கேள்விகளை எனக்கு அனுப்புகிறார்கள். அடுத்த நாள் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்போம்” என்கிறார்.

    இந்த கற்றல்முறைக்கு கிராம மக்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்துள்ளது. புதிய பாணியில் மாணவர்கள் பாடம் படிப்பதாக கூறுகிறார்கள். தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தியின் முயற்சியை பாராட்டியுள்ள மாவட்ட கல்வி அதிகாரி பூனம் குமாரி, “இங்குள்ள 2,317 அரசுப்பள்ளிகளும் இதே மாதிரியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதும் ஆசிரியர்கள் அவசரம், அவசரமாக பாடத்திட்டங் களை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது, மாணவர்களுக்கும் சுமை அதிகரிக்காது” என்று கூறியுள்ளார்.

    ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. 
    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

    குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

    பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

    குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்.

    ஊரடங்கு காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு ‘வெளியே சென்றால் கொரோனா பூதம் வந்துவிடும்’, என பெற்றோர் பயமுறுத்தி வைத்துள்ளனர். இதனால் காரணம் தெரியாமலேயே அடிக்கடி கை கழுவி கொள்கிறார்கள்.
    கொரோனா எனும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் காரணமாக உலக நாடுகளே பீதியில் உறைந்து போயிருக்கின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா வைரஸ் புரையோடி கிடப்பதால் மக்கள் அனைவரும் பயம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறவே யோசிக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது.

    ஊரடங்கு காரணமாக குழந்தைகள் தங்களின் சந்தோஷத்தை பறிகொடுத்து விட்டார்கள் என்றால் அது மிகையல்ல. பட்டாம்பூச்சிகள் போல சிறகடித்து விளையாடி மகிழவேண்டிய குழந்தைகள் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடாதவாறு பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள். இதனால் குழந்தைகள் விளையாட்டுகள் இல்லாமல் தெருக்கள் அமைதியாக காட்சியளிக்கின்றன.

    முன்பெல்லாம் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும்போது, ‘பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன்‘, என்று பயமுறுத்தி தாய்மார்கள் சோறு ஊட்டினார்கள். இப்போது எங்கு திரும்பினாலும் கொரோனா எனும் வார்த்தையே பயத்துடன் எதிரொலிக்கின்றன. டி.வி.க்களிலும் நிமிடத்துக்கு ஒருமுறை கொரோனா எனும் வார்த்தை இடம்பெறுகிறது. இதனால் ‘கொரோனா என்றால் என்னம்மா?‘ என்று குழந்தைகள் கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

    இதையடுத்து குழந்தைகளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று குழம்பும் பெற்றோர் ஒருவழியாக, ‘கொரோனா ஒரு பூதம். வெளியே போய் விளையாடினா புடிச்சிட்டு போயிடும்’, என்று பயமுறுத்தி விடுகிறார்கள். மேலும் ‘பூதம் வராம இருக்கணும்னா அடிக்கடி இந்த மருந்த (சானிடைசர்) ஊத்தி கை கழுவனும்‘, என்றும் சொல்லி கொடுக்கிறார்கள். இதனால் கொரோனா என்பது பூதம் என்று குழந்தைகள் அடிமனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது.

    இதனால் துள்ளி திரிய வேண்டிய காலத்திலும் கொரோனா பயம் காரணமாக சுட்டி குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே அடிக்கடி சானிடைசர் ஊற்றியோ, சோப்பு போட்டோ கைகளை நன்றாக கழுவி கொள்கிறார்கள். இதனால் டி.வி.க்களே கதியென வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியே செல்வதை காட்டிலும், வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பு என்பதால் பெற்றோர் இந்த நடைமுறையை கையாண்டு வருகிறார்கள்.

    என்னதான் டி.வி.க்களில் நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று பொழுதை கழித்தாலும், வீட்டு வாசலில், தெருக்களில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதே தனி சுகம்தான். அந்த சுகத்தை மீண்டும் எப்போது அனுபவிப்போம் என்ற ஆசையில் குழந்தைகளும் இருப்பதை மறுக்க முடியாது. காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
    பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
    ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக கொரோனா வைரஸ் மாறி விட்டிருக்கிறது. அதனால்தான் அதற்கு எதிராக முழு உலகமும் போர் தொடுத்திருக்கிறது.

    இந்த கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று சொன்னால் அது குழந்தைகள்தான்.

    துள்ளிக்குதித்தாடும் மான் குட்டிகள் போன்ற அவர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போய் இருக்கிறது.

    தினசரி பள்ளிக்கூடம் செல்ல முடிவதில்லை. பக்கத்து வீட்டு சக குழந்தைகளுடன்கூட நினைத்த நேரத்தில் விளையாட முடிவதில்லை. நண்பர்களை, தோழிகளை சந்தித்து பேச முடிவதில்லை. அப்பா,அம்மாவுடன் வெளியே செல்ல முடிவதில்லை. பார்க், பீச், ஓட்டல், மால், தியேட்டர் எல்லாமே எட்டாக்கனவுகளாகி விட்டன. வீட்டுச்சிறையில் தங்களை அடைத்து வைத்திருப்பதாகத்தான் குழந்தைகள் கருதுகிறார்கள்.

    இந்த குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைப்பதில்லை. அப்பா, அம்மா மூலமோ, தாத்தா, பாட்டி மூலமோ குழந்தைகளையும் கொரோனா தொற்று பாதிக்கிறது.

    குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்தக் குடும்பமே இடி விழுந்த மண்பானை போல நொறுங்கிப்போய் விடுகிறது. ஆனால் அந்தளவுக்கு நொறுங்கிப்போகத்தேவையில்லை. ஒருவிதத்தில் பார்த்தால், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளான 7,500 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மருத்துவ தரவுகளை விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இதில் வெளியாகி உள்ள முதல் ஆச்சரியமூட்டும் தகவல், ஐந்தில் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் தெரிவதில்லை என்பதுதான்.

    குழந்தைகளின், இளைஞர்களின் நுரையீரல் எக்ஸ்ரேக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் 21 சதவீத குழந்தைகளின் நுரையீரலில் மட்டுமே திசு காயத்தின் அறிகுறிகள் தெரிந்துள்ளன. 5.6 சதவீத குழந்தைகள் மட்டும்தான் காய்ச்சல் அறிகுறிகிளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    3 சதவீதத்துக்கும் சற்று அதிகமான அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாகி அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை பார்க்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    தி லேன்சட் மருத்துவ இதழின் அங்கமான ‘இகிளினிக்கல் மெடிசன்’ பத்திரிகையில் இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த ஆய்வுக்கு பின்னர், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனாவை சிறப்பாக சமாளிக்கிறார்கள் னன்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

    எனவே குழந்தைகளுக்கு கொரோனா என்ற உடனேயே உலகமே முடிவுக்கு வந்து விட்டது போல பெற்றோர் கலங்கி விடத்தேவையில்லை. அவர்கள், அதில் இருந்து மீண்டு வெளியே வருகிற சிறப்பான சக்தியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகள் மனதளவில் மீண்டு வர பெற்றோரும், மற்றோரும் கைகொடுத்தால் போதும். 
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது இந்த வழிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும்.  பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக, அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.

    1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.

    2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.

    3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.

    4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத்தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.

    குறிப்பு :

    டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.

    இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மருந்து கொடுக்கும் முறை:

    1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துக்களைக் கொடுக்கக் கூடாது.

     2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக் கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

    3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.

    4. வலிப்பு(Fits) உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.

    5. பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.

    மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவதே மிகவும் நல்லது.
    ×