search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிடிவாதம் பிடித்து சாதிக்கும் குழந்தைகள்

    நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும்.
    குழந்தைகளிடம் பிடிவாத குணம் தலைதூக்குவதற்கு பெற்றோர்தான் காரணமாக இருக்க முடியும். நிறைய பேர் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். தங்களிடம் பணப்புழக்கம் இருக்கும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே செலவு செய்வார்கள். பணக்கஷ்டத்தில் இருக்கும்போது குழந்தைகள் ஏதாவது கேட்டால் கடிந்து கொள்வார்கள். குழந்தைகள் எப்போதும் பெற்றோரிடம் ஒரேவிதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும். தாங்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் திடீரென்று கோபம் கொண்டு வாங்கித்தர மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    தனக்கு பிடித்தமானதை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். சுற்றுலாவிற்கோ, கடைவீதிக்கோ செல்லும்போது கண்ணில்படும் பொருட்களையெல்லாம் சில குழந்தைகள் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவற்றுள் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளை வாங்கிக்கொடுக்காவிட்டால் அந்த இடத்திலேயே அழுது புரண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். இத்தகைய பிடிவாதத்திற்கு தவறான வளர்ப்பு முறைதான் காரணம்.

    குழந்தைகள் விரும்பும் பொருட்களையெல்லாம் வாங்கிக்கொடுத்து பழக்கிவிடக்கூடாது. அந்த பொருட்கள் அவர்களுக்கு தேவையானதுதானா? என்பதை பெற்றோர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு அவசியமான பொருளாக இருந் தாலும் கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் அழுத்தம் திருத்தமாக சொல்லி புரியவைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோரின் கஷ்டம் குழந்தைகளுக்கு தெரியாது. ‘எனக்கு இப்பவே வேணும்’ என்று அழுது அடம் பிடித்தாலோ, பிடிவாதமாக இருந்தாலோ அவர்களின் விருப்பத்திற்கு தலைசாய்த்துவிடக்கூடாது. உங்களிடம் உறுதி இல்லாவிட்டால் குழந்தைகளின் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

    குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அது நியாயமற்றதாக இருந்தால் விளக்கி புரியவையுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். ஒருபோதும் குழந்தைகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். பொறுமையாக பேசுங்கள். அதையும் மீறி பிடிவாதமாக நடந்துகொண்டால் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அக்கம், பக்கத்தினருக்கு கேட்கும் படி கத்தி பேசாதீர்கள். எது சரி? எது தவறு? என்பதை நிதானமாக பேசி புரிய வையுங்கள். 

    குழந்தை பருவத்திலேயே ஒருசில விதிமுறைகளை வகுத்து அதன்படி செயல்படுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அத்தகைய விதிமுறைகளை வீட்டில் உள்ள மற்றவர்கள் மீறி நடக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்தவொரு சூழலிலும் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்தால் குழந்தைகள் அதனை பின்பற்ற பழகிக்கொள்வார்கள். அவர்களிடம் பிடிவாத குணம் எட்டிப்பார்க்காது. தாங்கள் விரும்புவதெல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் எப்படியும் பெற்றோர் வாங்கித் தந்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். வாங்கித்தர மறுக்கும்பட்சத்தில் பிடிவாதம் பிடித்தே சாதிக்க நினைப்பார்கள். 

    அப்படியும் கிடைக்காவிட்டால் மனம் உடைந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளால் சிறு இழப்பை கூட தாங்கிக்கொள்ள முடியாது. தோல்வியை தாங்கிக் கொள்ளும் சக்தியும் அவர்களிடம் இருக்காது. மன தைரியம் இல்லா தவர்களாகவே வளர்வார்கள். எப்போதாவது பிடிவாதம் பிடித்தால் தவறில்லை. ஆனால் பிடிவாதத்தை வழக்கமாக்கிக்கொண்டால் கண்டுகொள்ளாமல் இருப்பதே சிறந்தது. சிறிது நேரம் அழுது அடம்பிடித்துவிட்டு பிறகு இயல்பாகிவிடும். அப்போது ‘தனக்கு பிடித்தமானதை வாங்கி தர மாட்டீர்களா?’ என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தும். அந்த சமயத்தில் பெற்றோர் விளக்கி புரியவைத்தால் ஏற்றுக்கொண்டு விடும்.

    நீங்கள் பிடிவாத குணம் கொண்ட பெற்றோரா? சிறுவயதில் பிடிவாதம் பிடித்தே நினைத்ததை சாதித்தவர்களா? இப்போதும் பிடிவாதம் பிடிப்பவரா? உங்கள் நடத்தை இப்போது குழந்தைகளிடம் பிரதிபலிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள்தான் மாற வேண்டும். குழந்தைகளுக்கு முன்மாதிரியான பெற்றோராக இருக்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். 
    Next Story
    ×