search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் பெற்றோர்
    X
    வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் பெற்றோர்

    வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் பெற்றோர்

    ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கி இருக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்த, பெற்றோர் விளையாட்டு பொருட்களை அதிகமாக வாங்கித் தருகிறார்கள். இதனால் கடைகளில் விளையாட்டுப் பொருட்கள் வேகமாக காலியாகிறது.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பீதி காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். சில நிமிடங்கள் கூட வீட்டில் தங்காத குழந்தைகளும், தற்போது வீட்டிலேயே சிறைக் கைதிகளாக இருக்கிறார்கள். தப்பித்தவறி குழந்தைகள் வெளியே சென்று விடாதவாறு பெற்றோரும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    இதனால் குழந்தைகள் ஒரு வித மன அழுத்தத்திற்கு வந்துவிடுகிறார்கள். இதை சரிகட்டும் நடவடிக்கையாக பெற்றோரும் குழந்தைகளுடன் குழந்தைகளாக ஆடிப்பாடி விளையாடி வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஓடிப் பிடித்து விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் பெற்றோர் விளையாடி மகிழ்கிறார்கள். குழந்தைகள் எந்த விதத்திலும் சோர்ந்து விடக்கூடாது என்பதில் பெற்றோர் மெனக்கெடுகிறார்கள்.

    அந்தவகையில் முழு ஊரடங்கு தளர்வு மீண்டும் அமலில் வந்துள்ள நிலையில், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையகங்களில் தற்போது கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.

    குறிப்பாக ஸ்கேட்டிங் போர்டு, செஸ் போர்டு, கேரம் போர்டு, ரிமோட் கார்கள், விளையாட்டு துப்பாக்கிகள், ஷூட்டிங் ரைடர், பொம்மைகள் போன்ற விளையாட்டு சாதனங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. கை குழந்தைகள் உள்ள வீடுகளில் காய்கறி, பழங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற வடிவிலான பொம்மைகளும் வாங்கப்படுகின்றன. இதனால் கடைகளில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வேகவேகமாக காலியாவதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குழந்தைகள் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களை குஷிப்படுத்த இதுபோல விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தருகிறோம். புதிய விளையாட்டு பொருட்கள் கிடைப்பதால் குழந்தைகளும் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். ஆசை தீர விளையாடி மீண்டும் உற்சாகம் அடைகிறார்கள்.

    கொரோனா பீதி ஓய்ந்த பிறகு தான் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த தேவையானதை செய்து வருகிறோம், என்றனர்.
    Next Story
    ×