என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறது.
    சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கறுப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போதும் தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான்.

    அப்படியானால் முன்காலத்தில் அந்த தாயத்தில் என்ன இருந்தது? என்கிறீர்களா..

    குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள்.

    சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பாற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். அதன் மூலம் நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. அதைத்தான் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட்டோம்.

    இந்த நேரத்தில் இங்கே ஒரு மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றி சொல்லியாக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்படுகிறதாம். அதற்காக அவர்களுக்கு பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறது.

    வெறும் தொப்புள்கொடிக்கு எதற்கு பணம் கொடுத்து சேமிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதுதான் மருத்துவம். குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியவர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம்.

    கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.
    வயது வந்தோர்களைப்போல குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நோயின் தாக்கம் சற்று குறைவாகவே குழந்தைகளுக்கு காணப்படுகிறது. கடந்த இரண்டு கொரோனா அலைகளிலும், முன்பே புற்றுநோய், உடல்பருமன், இதய பாதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்த குழந்தைகளை கூடுதலாக பாதித்திருந்தது.

    மூன்றாம் அலையில்குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள். இரண்டாம் அலை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் பெரிய பாதிப்புகளில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றலாம்.

    கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முதல் ஆறு வாரங்களில் மிஸ்சி பாதிப்பு சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும், குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கான பிற பிற தடுப்பூசிகளை, கொரோனா முடியும் வரை நிறுத்தி வைக்க கூடாது,

    மேற்கண்ட தகவல்களை குழந்தைகள் நல டாக்டர்கள் திரவியம் மோகன், கோபால் சுப்பிரமணியம், சுனில் குமார், பர்வீன் பானு தெரிவித்தனர்.

    தொடர்புக்கு டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை, கே.பி. ரோடு, நாகர்கோவில் -629003. செல்போன் எண்:98423 39003.
    கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது.
    பிள்ளைகள் அழகாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோரும் அழகாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள், பலரும் மெச்சும் அளவுக்கு புத்திசாலிகளாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் அவர்கள் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அழகும், அந்தஸ்தும் தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

    பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள். பெற்றோர்கள் அழகாக இருந்தால் என்ன லாபம்? அழகான பெற்றோரை தங்களோடு அழைத்துச்செல்வதே கவுரவம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அதனால் தங்கள் பெற்றோரை எப்படி எல்லாம் அழகுப்படுத்தலாம் என்று பிள்ளைகள் மெனக்கெடவும் செய்கிறார்கள். பெற்றோருக்கு அவ்வப்போது அழகு ஆலோசனைகளும் சொல்லி வருகிறார்கள்.

    பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் பிள்ளைகளுக்காக அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

    போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன. ‘நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்’ என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன.

    அப்படி பெற்றோர் அனுமதி கொடுத்து, ஒரு போட்டியில் கலந்துகொண்டு குழந்தைகள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதித்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.

    பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ‘வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை’ என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரோ, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக் கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

    எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும், ‘நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.

    விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும். படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்றுகுழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.

    சிறுமிகள் தற்போது தங்கள் அம்மாக்கள் அழகு விஷயத்தில் ‘அப் டு டேட்’ ஆக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால் தோழி போல் பழகும் அம்மாக்களை பியூட்டி பார்லர்களுக்கு அழைத்துச் சென்று காலத்திற்கு தக்கபடி அழகாக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அதுபோல் அப்பாக்களும் இளமையுடன் வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொப்பையுடன் வலம் வரும் அப்பாக்களை ‘ஜிம்’முக்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    பெற்றோர்களே காலம் மாறிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
    கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நீதி நெறிகளையும் சரியான அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால் சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
    குழந்தைகளின் உலகம் முற்றிலும் மாறுபட்டது. பார்க்கும் விஷயங்களையும் கேள்விப்படும் செய்திகளையும் அவர்களது கற்பனை திறனுக்கேற்பவே புரிந்து கொள்வார்கள். அதனால் தான் தாத்தா, பாட்டிகள் வாழ்வியல் நெறிகளை கதைகளின் வடிவில் குழந்தைகளுக்கு சொல்வார்கள். தினமும் கதைகளை கேட்கும் குழந்தைகளின் கற்பனை திறன் நன்றாக வளர்ச்சி பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நீதி நெறிகளையும் சரியான அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால் சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    ஆழமாக மனதில் பதியும்

    எந்த விஷயத்தையும் கதைகளில் வடிவில் குழந்தைகளுக்கு சொல்லும் போது எளிதாக நினைவில் நிற்கும். நீதி நெறிகள், பள்ளி பாடங்கள் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை சுவாரசியமான கதைகளாக கூறினால் ஆழ்மனதில் அழியாமல் பதியும்.

    ஒழுக்க நெறிகளை வளர்க்கலாம்.

    தங்களுடைய சுதந்திரமான போக்கில் பெரியவர்கள் தலையிட்டு அறிவுரை வழங்குவதை குழந்தைகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதனால் அறிவுரைகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆர்வமூட்டும் வகையில் நன்னெறிக்கதைகளாக சொல்ல வேண்டும். அவர்களது இயல்புக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை அறிந்து அதன் மூலம் நன்னெறிகளை வலியுறுத்தும் கதைகளை கூறுவது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமையும்.

    கதை வடிவில் பாடங்கள்

    பாட நூல்களில் உள்ள வரலாற்று சம்பவங்களை மதிப்பெண் அடிப்படையில் குழந்தைகள் படிக்கும் போது அவை அவர்களது மனதில் பதிவது இல்லை. பாடங்கள் கதைகளாக உருவகம் செய்து சொல்லும் போது அதன் உள்பொருள் அவர்களது மனக்கண்ணில் காட்சிகளாக விரியும். அதனால் பாடங்களில் உள்ள பெயர்கள் உள்ளிட்ட இதர குறிப்புகள் மனதில் எளிதாக பதிந்து விடும்.

    கதைகளால் ஏற்படும் நன்மைகள்

    அன்போடு கதைகளை சொல்லும் பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு பாசப்பிணைப்பு அதிகரிக்கும். கதையில் சொல்லப்பட்ட காட்சிகளை கற்பனை செய்து கொள்வதால் குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். அதனால் வளர்ந்த பிறகு எதையும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து செயல்படுவார்கள். கதை கேட்கும் பழக்கம் காரணமாக கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி உடல் மற்றும் மனஆரோக்கியம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

    கதை சொல்லும் முறை

    இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்குவதற்கு முன்னர் கதை சொல்லலாம். அவர்களது வயதுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து சொல்லி அவற்றிலிருந்து கேள்வி  கேட்பது குழந்தைகளின் கவனத்தை ஒரு முகப்படுத்த உதவும். கதை சொல்லி முடித்த பின் அதன் சாராம்சத்தை அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் திரும்பவும் சொல்ல வைத்து பாராட்டலாம். திகிலூட்டும் பேய் கதைகள், மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றும் கதைகள், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளை குழந்தைகளுக்கு சொல்வதை தவிர்க்க வேண்டும்.
    ஒரு குழந்தை கண்டிராத பழைய உலகத்தை ஏற்கனவே அறிந்துவைத்து ஆற்றுப்படுத்துகிற ஆசான்தான் தந்தை. தாய்ப்பால் ஊட்டிக் குழந்தையைக் கண்ணயரச் செய்கிறவள் தாய்; அறிவுப்பால் ஊட்டிக் குழந்தைக்குக் கண்திறப்புச் செய்கிறவன் தந்தை.
    ஒரு மகனைச் சான்றோன் ஆக்குவதே தந்தையின் தலைக்கடன். அதற்குக் கல்வி தரவும், நல்லொழுக்கம் பேணவும், அறத்திற்கு புறம்பானவற்றை அழிக்கும் மறத்தைக் கற்பிக்கவும் ஒரு தந்தை கடமைப்பட்டவனாகிறான். எனவேதான் ஒரு மனிதனின் வாழ்வில் தந்தை என்பவன் எல்லா வயதிலும் எல்லாக் காலங்களிலும் முன்னுரிமை பெறுகிறான்.

    யாரோ ஒருவரின் தியாகத்தால்தான் ஒரு குடும்பம் நிலைபெறுகிறது. ஒரு குடும்பம் நிலைபெறுவது யாரால் என்ற கேள்வி முக்கியமானது. எவன் ஒருவனின் தியாகத்தால் குடும்பம் நிலைபெறுகிறதோ அந்த தியாகசீலரால்தான் குடும்பம் என்ற கட்டமைப்பு கட்டுக்குலையாமல் கட்டியெழுப்பப்படுகிறது. “உங்கள் கூட்டுக் குடும்பத்தின் வெற்றி ரகசியம் என்ன?” என்று நடிகர் திலகம் சிவாஜியை ஒருமுறை கேட்டேன். “அது வேற ஒண்ணும் இல்ல வைரம். எவன் சம்பாத்தியத்தில் ஒரு குடும்பம் நடக்கிறதோ, அவன் தன் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டும்” என்று தெளிந்த தத்துவம் சொன்னார்.

    ஒரு குடும்பத்தை நிர்மாணிக்க நிலைநிறுத்த ஒரு தந்தை அடைகிற மெய்வருத்தம் கண்ணுக்குப் புலப்படும்; அவன் ஈட்டுகிற வருமானம் புலப்படும். ஆனால், குடும்பத்தைக் கரைசேர்க்க அவன் அடைகிற கண்ணுக்குத் தெரியாத அவமானங்கள் கணக்கில் வருவதில்லை. தன் தந்தை எங்கெங்கே அவமானப்பட்டிருப்பார் என்று கணக்குப்போடத் தெரிந்த மகன்களால் கண்ணீரை நிறுத்த முடியாது. ஆனால், அடுக்குமாடிகளில் குடியிருக்கிற ஐ.டி இளைஞன் யாரும் தன் தந்தையின் படத்தை வீட்டில் மாட்டி இருப்பதாய்ச் சாட்சி இல்லை. திருமணத்திற்குமுன் காதலி படத்தையும், திருமணத்திற்குப் பின்பு தன் குழந்தையின் படத்தையும் கைபேசியில் காட்சிக்கு வைத்திருப்பதைப்போல் எந்த இளைஞனும் தந்தையின் படத்தைக் கைபேசியில் காட்சிப்படுத்தவில்லை.

    உன் தந்தையை நீ எப்படி மதிக்கிறாய் என்பதைத்தான் உன் மகன் உற்று கவனித்து வருகிறான். உன்னை அவன் மதிப்பதற்கும் உன்னிடமே ஒத்திகை பார்க்கிறான். சினிமாக்களால் தாயை நேசிக்கத் தெரிந்த ஒரு பாசாங்குப் பாசம்கூட தந்தையின்மீது பெரும்பாலும் இல்லை. ஒரு செடிக்குத் தாய் தண்ணீர் ஊற்றுகிறாள்; தந்தைதான் உரம் போடுகிறான். உரம் கெட்டவாசனை அடிப்பதாய்த் தோன்றும். அதனால் தண்ணீரைப்போல் உரம் நேசிக்கப்படுவதில்லை. ஆனால், அதுதான் உறுதி தருகிறது.

    தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்சினையாகவே திகழ்கிறது.

    “நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே!” என்று தகப்பன் நினைக்கிறான். “என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே!” என்று மகன் தவிக்கிறான். விதைத்தவன் நான்தானே என்ற தினவு தந்தைக்கும், விளைந்தவன் நான்தானே என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்தே வருகிறது. குடும்பம், அரசியல், தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நிகழ்கிறது.
    எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
    கோடை காலத்தில் பச்சிளங் குழந்தைகளின் உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு தலை பகுதியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் குழந்தைகளின் மென்மையான சருமம் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப தயார்படுத்தப்பட வேண்டும்.

    எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.

    குழந்தை குளித்து முடித்த பிறகு, சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும். வெயில் காலங்களில், இந்த எண்ணெய் மசாஜ், குழந்தைக்கு மிகவும் உகந்தது.

    கருப்பு எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் குழந்தைக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது மிகவும் முக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே உள்ளது.

    குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

    குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடல் பளபளப்பாக மினுமினுப்பாக மாறும். விளக்கெண்ணெய் பயன்படுத்தும் போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் உதடு மற்றும் கண் பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்த ஒரு எண்ணெய். குழந்தைக்கு மசாஜ் செய்ய மிகவும் ஏற்ற எண்ணெய்களில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் துணை புரியும்.
    பிள்ளைகள் சிறிது நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடினால் கூட கண்டித்த நாம் கல்விக்காக அவர்கள் பல மணிநேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் போது வேறு வழியில்லாமல் அனுமதித்து கொண்டு இருக்கிறோம்.
    கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நம் இயல்பு வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. அதற்கு தீர்வாக அமைந்தது தான் ஆன்லைன் வழிக்கல்வி. அதில் வகுப்புகள் ஆன்லைன் தளங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. வீட்டுப்பாங்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. பிள்ளைகள் சிறிது நேரம் ஸ்மார்ட் போனில் விளையாடினால் கூட கண்டித்த நாம் கல்விக்காக அவர்கள் பல மணிநேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் போது வேறு வழியில்லாமல் அனுமதித்து கொண்டு இருக்கிறோம்.

    ஆன்லைன் வழி கற்றல் முறையால் மாணவர்களின் கல்வி தடையில்லாமல் தொடர்வது மகிழ்ச்சியே அதே சமயல் இந்த செயல்முறையால் உடல் நலத்தில் பாதிப்பு மன அழுத்தம் போன்ற சில எதிர்மறை தாக்கங்களில் இருந்து அவர்களை காக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. இதற்காக பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

    அன்றாட நடைமுறை

    பள்ளி செல்லும் நாட்களிலேயே காலை வேளையில் பிள்ளைகளை சரியான நேரத்தில் கிளம்ப செய்வது பல பெற்றோருக்கு போராட்டமாக இருக்கும்ஃகொண்டே ஆன்லைன் மூலம் சரியான நேரத்தில் வகுப்பில் கலந்து கொள்ள செய்வதை பற்றி கேட்கவா வேண்டும். இதை தவிர்க்க தினமும் இரவில் சரியான நேரத்தில் தூங்கி காலையில் சீக்கிரம் எழும் வழக்கத்தை கடைப்பிடிக்க பழக்க வேண்டும். இதனால் ஆன்லைன் வகுப்பிற்கு சரியான நேரத்தில் தயாராக முடியும். வீட்டிலேயே இருந்தாலும முறையான நேரப்பட்டியலை பின்பற்றும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    தேவையான வசதிகள்

    பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது பென்சில், பேனா நோட்டுப்புத்தகம் போன்றவை இருக்கிறதா என்று சரிபார்ப்போம். அதேபோல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் முன்பும் அதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வீட்டில் சரியான இடத்தை ஏற்படுத்தி கொடுப்பது முக்கியம். கவனம் சிதறும்படியான இடங்களை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் பிள்ளைகள் எப்போதும் நம் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

    பாதுகாப்பு வழிமுறைகள்

    இணைய தொழில்நுட்பம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சரியான முறையில் தொழில்நுட்பத்தை கையாளும் போது அவற்றை தவிர்க்க முடியும். மாணவர்கள் வலைத்தளத்தில் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் தனிப்பட்டவையாகவும், மற்றவர்கள் எளிதில் கண்டறியாத வகையிலும் இருக்க வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் தகவல்கள், முகநூலில் நண்பர் ஆவதற்கான கோரிக்கைகளை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற தகவல்கள் வந்தால் உடனே பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் வெப்கேமராவை மூடி வைக்க வேண்டும். மடிக்கணினியில் உள்ள கேமராவை சிறிய வெள்ளைத்தாளை ஓட்டி மறைக்கலாம். ஆன்டி வைரஸ் போன்ற கணினி பாதுகாப்பு மென்பொருள்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

    இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெற்றோருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனால் ஏதேனும் அஞ்சத்தகுந்த செயல்கள்நடைபெறும்போது அவை உடனே நம் கவனத்துக்கு வரும். நாமும் பிள்ளைகளை பாதுகாப்பாக வழிநடத்த முடியும்.
    பொறுமை, புரிந்துக்கொள்ளும் தன்மை, கொஞ்சம் கலைத்திறன் போன்றவை இருந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே போரட்டமே இல்லாமல் எளிதில் நன்றாக உணவு அளித்து ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம்.
    ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. பொறுமை, புரிந்துக்கொள்ளும் தன்மை, கொஞ்சம் கலைத்திறன் போன்றவை இருந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே போரட்டமே இல்லாமல் எளிதில் நன்றாக உணவு அளித்து ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம்.

    ஒரு நாளைக்கு ஒரு புதிய உணவு தான் தரலாம். வீட்டில் சமைக்கும் அனைத்து வகை உணவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக பழக்கப்படுத்தலாம். புது உணவுகளை ஆரம்பிக்கும்பொழுது அதில் உப்பு, இனிப்பு, காரம் போன்ற எதையும் சேர்க்கத்தேவையில்லை.பெரும்பாலும் இனிப்பு சேர்க்கப்படுவதால் பல குழந்தைகள் இனிப்பு சுவைக்கு அடிமையாகின்றன. இதை தவிர்க்க இணை உணவு ஆரம்பிக்கும் காலகட்டத்தில் அந்த உணவின் ஒரிஜினல் சுவையோடு கொடுப்பதே நன்மை பயக்கும். மசித்த காய்கறிகள், கீரைகளும் குழந்தையின் ஏழாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.

    வாழை, பப்பாளி, மாம்பழம் போன்ற அனைத்து வகை பழங்கள் நன்கு மசித்து சிறிதளவு ஊட்டலாம்.பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பல பேர் பயப்படுகிறார்கள்.அதில் உண்மை ஏதும் இல்லை.குழந்தைகளுக்கு கண்டிப்பாக பழங்களை ஊட்டலாம்.

    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.பல பெற்றோர்கள் “எங்கள் குழந்தை எதையுமே மென்று சாப்பிட விரும்புவதில்லை” என்று கூறுவதிற்கு இதுவே காரணம்.

    பிஸ்கட்டை பாலில் மசித்து தருவது சரியான இணை உணவு அல்ல. பெரும்பாலான பெற்றொர்களும் தாத்தா பாட்டிகளும் பிஸ்கட் ஊட்டுவதை ஆரோக்கியம் என்று நம்புகிறார்கள்.ஆனால், பிஸ்க்ட் கொடுப்பதினால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் அது பசியின்மையை ஏற்படுத்தும். பிஸ்கட் ருசி கண்ட குழந்தை வேறு எந்த உணவையும் எளிதில் ஏற்காது அடம் பிடிக்கும்.

    நம் வீட்டில் சமைக்கும் பாரம்பரிய உணவை தருவதற்கு பயப்படும் பெற்றோர்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகளை எப்படி நம்புகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது! அதே போல் டின்களில் அடைத்து விற்கப்படும் குழந்தையின் பிரத்தியேக உணவுகள் தர வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. குழந்தை வளர வளர வடை, சப்பாத்தி, பூரி போன்றவையும் பருப்பு/சாம்பார்/தயிர் போன்றவற்றில் நன்கு ஊறவைத்து, மசித்து ஊட்டலாம்.

    வேகவைத்து மசித்த சுண்டல் வகைகள், பொரி, அவல், உலர்ந்த திராட்சை, எள்ளுருண்டை, பொடித்த பொட்டுக்டலை/வேர்கடலை, பேரீச்சம்பழம் ஆகிய வகைகள் நல்லதொரு ஸ்நாக்சாகும். அசைவ உணவு வகைகள் குழந்தையின் ஒன்பது (அ) பத்து மாதத்திலிருந்து தர ஆரம்பிக்கலாம்.முட்டையின் மஞ்சள் கரு முதலில் தரலாம். பின்னர் ஒவ்வொரு வகையான அசைவ உணவைத் தொடரலாம்.

    “என் குழந்தை வாயில் எதையும் வாங்குவதில்லை, வாயில் வைத்தவுடனே துப்புகிறது” என்று பல தாய்மார்கள் கூறுவார்கள். அதன் அடிப்படை என்னவென்றால் பால் உறிஞ்சி குடித்தக் குழந்தைக்கு உணவை நாக்கை மடித்து உள்செலுத்த இன்னும் பழகவில்லை, புதிய உணவு, புதிய சாப்பிடும் முறை, இவை இரண்டும் பழகுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை உணவு ஊட்டுபவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மேலும் குழந்தை சாப்பிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதற்கு தாய்க்கு மிகுந்த பொறுமை அவசியம்.

    முற்காலத்தில் அம்மா, பாட்டி உணவு ஊட்டும் பொழுது காக்கா நரிக்கதை, நீதிக்கதைகள் சொல்லி உணவு ஊட்டுவார்கள்.இதனால் சிந்திக்கும் திறன், கவனிக்கும் ஆற்றல், கூடி வாழும் கலை, நற்பண்புகள் ஆகியவை உணவுடன் சேர்த்து ஊட்டப்பட்டது.ஆனால் தற்காலத்தில் மொபைல் / டீவி / லேப்டாப் கார்ட்டூன்கள் காட்டி உணவு கொடுக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைக்கு உணவின் ருசி, அதை சாப்பிடும் முறை போன்றவை தெரியாமலே போகிறது, இதே பழக்கம் வளர்ந்த பின்னும் தொடர்கிறது.இந்த பழக்கத்தால் சிறு குழந்தையிலிருந்தே உடல் பருமன் உண்டாகிறது என்ற உண்மை நிறைய பேர் உணர்வதில்லை.

    சாப்பிடும் பொழுது வேறு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதால் வயிற்றிலிருந்து “ போதும் சாப்பிடுவதை நிறுத்து“ என மூளைக்கு செல்லும் நுண்ணிய சிக்னல் அறியப்படாமலேயே போகிறது, அதனால் சாப்பிடும் அளவு நம்மையறியாமலேயே அதிகரிக்கிறது. இதன் விளைவு உடல் பருமன்.இனை உணவு சாப்பிடும் பொழுது ஏற்பட்ட பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்து பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” எனும் பழமொழி இதற்கும் பொருந்தும்!!

    சத்துணவு நிபுணர்கள் எப்பொழுதும் கூறுவது “சத்தான எந்த உணவை கொடுக்கவேண்டும்” என முடிவு செய்வது தாயின் கடமை.தரப்படும் உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என முடிவு செய்வது குழந்தையின் உரிமை. இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.குழந்தைக்கு பசி இல்லாத பொழுது மற்றும் குழந்தை போதும் என்று சொன்னபிறகு வலுக்கட்டாயமாக ஊட்டினால் வாந்தி எடுக்கும்.இதை தாய்மார்கள் குழந்தைக்கு உணவு பிடிக்கவில்லை அதனால் தான் வாந்தி எடுக்கிறது என்று நினைக்கக்கூடும்.
    இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாணவர்களின்கல்விபாதிக்காத வகையில் அவர்களுக்குஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடு தான் வகுப்பு என்றாகிவிட்டது.. அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ஆன்லைன்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கல்வியும் அவசியம், அதேநேரத்தில் கண்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை உணர்ந்து மாணவ-மாணவிகள் தங்களின் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் செல்போன், கணினியிடம் இருந்து சிறிது நேரம் விலகி இருக்கவேண்டும்.
    கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சேலம் சண்முகா மருத்துவமனை டாக்டர் பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.
    கேள்வி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எவை?

    பதில்: கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்பூட்னிக்-வி.

    கேள்வி: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய தடுப்பூசிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்படும் இடைவெளி என்ன?

    பதில்: கோவிஷீல்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்பட வேண்டிய கால இடைவெளி 12 முதல் 16 வாரங்கள் ஆகும். கோவாக்சினுக்கு 4 வாரங்கள் ஆகும். இதேபோல் ஸ்பூட்னிக்-வி-க்கு 3 வாரங்கள் ஆகும். மேலும் இதில் 2 டோஸ்கள் போட வேண்டிய தடுப்பூசிகளும் ஒரே வகையாக தான் இருக்க வேண்டும். மாற்றி தடுப்பூசி செலுத்தக்கூடாது.

    கேள்வி: தடுப்பூசி போட்ட பின்னும் என் மூலம் நோய் மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    பதில்: தடுப்பூசி போடப்பட்ட பிறகும் நாம் இன்னும் வைரசின் செயலில் உள்ள நோய் கடத்தியாக இருக்க முடியும். இதன் பொருள் நம் உடலை தாக்கும் வைரசில் இருந்து பாதுகாக்கப்பட்டிருந்தாலும் நோய் எதிர்ப்பு இல்லாத பிற நபர்களுக்கு வைரசை தீவிரமாக பரப்புகிறோம். எனவே நோய் எதிர்ப்பு இல்லாத நபர்களின் கூட்டத்தில் இருக்கும் போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

    கேள்வி: பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதிக்கும் 3-வது அலை பற்றிய கணிப்புகள்?

    பதில்: முதல் அலையில் 4.5 சதவீத குழந்தைகளும், 2-வது அலையில் 5 முதல் 6 சதவீத குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். இப்போது அதிகமாக 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்த அலையில் பாதிக்கப்படக்கூடிய குழுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சுமார் 25 சதவீதம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. முந்தைய அலைகளின் புள்ளி விவரங்களில் இருந்து குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில், வைரஸ் ஏற்பிகள் அவர்களுக்கு குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளதால், எதிர்கால அலைகளும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். இருப்பினும் இது விரைவாக மாறக்கூடிய வைரஸ் மற்றும் மிகவும் கணிக்க முடியாதது என்பதால் நாம் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும். நிலைமையை கையாள உள் கட்டமைப்புகளுடன் தயாராக இருப்பது நமக்கு நல்லது.

    கேள்வி: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் என்ன?

    பதில்: இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளை முடித்த தறபோதைய தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட டாக்டர்களுக்கு அனுமதி இல்லை. கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக்-வி ஆகியவை தற்போது குழந்தைகளுக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    வேறுபடும்

    கேள்வி: முதல் தடுப்பூசியும், 2-வது தடுப்பூசியும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?

    பதில்: கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு 2 தடுப்பூசிகளும் ஒன்று தான். ஆனால் ஸ்பூட்னிக்-வி போன்ற தடுப்பூசிகளுக்கு முதல் மற்றும் 2-வது தடுப்பூசிகள் சற்று வேறுபடும்.

    கேள்வி: உணவருந்திய பின் தடுப்பூசி போட வேண்டுமா? அல்லது வெறும் வயிற்றிலும் போட்டுக்கொள்ளலாமா?

    பதில்: தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் நேரடியான தொடர்பு இல்லை. இருந்தாலும் சிறிது உணவு அருந்திய பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை தவிர்க்கும். எனவே உணவுக்கு பின் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை. அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
    குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை.

    ஆம், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது. தந்தையின் மனதில் கஷ்டங்கள் அனைத்தும் புதைந்துவிடுவதால் அவை வெளியில் தெரிவதில்லை. தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் பல கருத்துகள் கூறப்பட்டு உள்ளன. அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை. அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனை பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை பிள்ளைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முதுமைக்காலத்தில் தந்தையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு உடலும், உள்ளமும் உறவுகளுடன் உரையாட, பாசத்தில் நனைய நினைக்கும்போது அவற்றை அவர்களுக்கு வழங்கி இருக்கிறோமா? தள்ளாத வயதில் அவர்களுக்குரிய அனைத்து கடமைகளையும் செய்கிறோமா? என்ற கேள்வியை நம்முன்னே கேட்டு பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற் பணியாகும்.

    அதுவே அவர்களுக்கு நாம் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அனைத்து விஷயங்களுக்கும் அவர்களுடைய ஆலோசனைகளை கேட்பதுடன், அவர்களுடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மதிப்பளித்து அவர்கள் வழி நடப்போம்.
    குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலோங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
    பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அதுபோல் குழந்தைகளின் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.

    ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம்.

    பெற்றோரின் பெரிய கடமை

    அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வுகள் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலோங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

    தொடக்க கல்வி முக்கியம்

    பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுங்கிவிடக்கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூக சூழலில் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப்புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்த நாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

    நல்ல வார்த்தைகள்

    குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
    ×