search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைக்கு முகக்கவசம்
    X
    குழந்தைக்கு முகக்கவசம்

    கொரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பா?: டாக்டர் விளக்கம்

    கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சேலம் சண்முகா மருத்துவமனை டாக்டர் பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.
    கேள்வி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எவை?

    பதில்: கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்பூட்னிக்-வி.

    கேள்வி: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய தடுப்பூசிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்படும் இடைவெளி என்ன?

    பதில்: கோவிஷீல்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்பட வேண்டிய கால இடைவெளி 12 முதல் 16 வாரங்கள் ஆகும். கோவாக்சினுக்கு 4 வாரங்கள் ஆகும். இதேபோல் ஸ்பூட்னிக்-வி-க்கு 3 வாரங்கள் ஆகும். மேலும் இதில் 2 டோஸ்கள் போட வேண்டிய தடுப்பூசிகளும் ஒரே வகையாக தான் இருக்க வேண்டும். மாற்றி தடுப்பூசி செலுத்தக்கூடாது.

    கேள்வி: தடுப்பூசி போட்ட பின்னும் என் மூலம் நோய் மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    பதில்: தடுப்பூசி போடப்பட்ட பிறகும் நாம் இன்னும் வைரசின் செயலில் உள்ள நோய் கடத்தியாக இருக்க முடியும். இதன் பொருள் நம் உடலை தாக்கும் வைரசில் இருந்து பாதுகாக்கப்பட்டிருந்தாலும் நோய் எதிர்ப்பு இல்லாத பிற நபர்களுக்கு வைரசை தீவிரமாக பரப்புகிறோம். எனவே நோய் எதிர்ப்பு இல்லாத நபர்களின் கூட்டத்தில் இருக்கும் போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

    கேள்வி: பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதிக்கும் 3-வது அலை பற்றிய கணிப்புகள்?

    பதில்: முதல் அலையில் 4.5 சதவீத
    குழந்தை
    களும், 2-வது அலையில் 5 முதல் 6 சதவீத குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். இப்போது அதிகமாக 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்த அலையில் பாதிக்கப்படக்கூடிய குழுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சுமார் 25 சதவீதம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. முந்தைய அலைகளின் புள்ளி விவரங்களில் இருந்து குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில், வைரஸ் ஏற்பிகள் அவர்களுக்கு குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளதால், எதிர்கால அலைகளும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். இருப்பினும் இது விரைவாக மாறக்கூடிய வைரஸ் மற்றும் மிகவும் கணிக்க முடியாதது என்பதால் நாம் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும். நிலைமையை கையாள உள் கட்டமைப்புகளுடன் தயாராக இருப்பது நமக்கு நல்லது.

    கேள்வி: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் என்ன?

    பதில்: இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளை முடித்த தறபோதைய தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட டாக்டர்களுக்கு அனுமதி இல்லை. கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக்-வி ஆகியவை தற்போது குழந்தைகளுக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    வேறுபடும்

    கேள்வி: முதல் தடுப்பூசியும், 2-வது தடுப்பூசியும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?

    பதில்: கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு 2 தடுப்பூசிகளும் ஒன்று தான். ஆனால் ஸ்பூட்னிக்-வி போன்ற தடுப்பூசிகளுக்கு முதல் மற்றும் 2-வது தடுப்பூசிகள் சற்று வேறுபடும்.

    கேள்வி: உணவருந்திய பின் தடுப்பூசி போட வேண்டுமா? அல்லது வெறும் வயிற்றிலும் போட்டுக்கொள்ளலாமா?

    பதில்: தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் நேரடியான தொடர்பு இல்லை. இருந்தாலும் சிறிது உணவு அருந்திய பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை தவிர்க்கும். எனவே உணவுக்கு பின் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×