search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தந்தைக்கும் மகனுக்குமான உறவு
    X
    தந்தைக்கும் மகனுக்குமான உறவு

    தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படிப்பட்டது?

    ஒரு குழந்தை கண்டிராத பழைய உலகத்தை ஏற்கனவே அறிந்துவைத்து ஆற்றுப்படுத்துகிற ஆசான்தான் தந்தை. தாய்ப்பால் ஊட்டிக் குழந்தையைக் கண்ணயரச் செய்கிறவள் தாய்; அறிவுப்பால் ஊட்டிக் குழந்தைக்குக் கண்திறப்புச் செய்கிறவன் தந்தை.
    ஒரு மகனைச் சான்றோன் ஆக்குவதே தந்தையின் தலைக்கடன். அதற்குக் கல்வி தரவும், நல்லொழுக்கம் பேணவும், அறத்திற்கு புறம்பானவற்றை அழிக்கும் மறத்தைக் கற்பிக்கவும் ஒரு தந்தை கடமைப்பட்டவனாகிறான். எனவேதான் ஒரு மனிதனின் வாழ்வில் தந்தை என்பவன் எல்லா வயதிலும் எல்லாக் காலங்களிலும் முன்னுரிமை பெறுகிறான்.

    யாரோ ஒருவரின் தியாகத்தால்தான் ஒரு குடும்பம் நிலைபெறுகிறது. ஒரு குடும்பம் நிலைபெறுவது யாரால் என்ற கேள்வி முக்கியமானது. எவன் ஒருவனின் தியாகத்தால் குடும்பம் நிலைபெறுகிறதோ அந்த தியாகசீலரால்தான் குடும்பம் என்ற கட்டமைப்பு கட்டுக்குலையாமல் கட்டியெழுப்பப்படுகிறது. “உங்கள் கூட்டுக் குடும்பத்தின் வெற்றி ரகசியம் என்ன?” என்று நடிகர் திலகம் சிவாஜியை ஒருமுறை கேட்டேன். “அது வேற ஒண்ணும் இல்ல வைரம். எவன் சம்பாத்தியத்தில் ஒரு குடும்பம் நடக்கிறதோ, அவன் தன் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டும்” என்று தெளிந்த தத்துவம் சொன்னார்.

    ஒரு குடும்பத்தை நிர்மாணிக்க நிலைநிறுத்த ஒரு தந்தை அடைகிற மெய்வருத்தம் கண்ணுக்குப் புலப்படும்; அவன் ஈட்டுகிற வருமானம் புலப்படும். ஆனால், குடும்பத்தைக் கரைசேர்க்க அவன் அடைகிற கண்ணுக்குத் தெரியாத அவமானங்கள் கணக்கில் வருவதில்லை. தன் தந்தை எங்கெங்கே அவமானப்பட்டிருப்பார் என்று கணக்குப்போடத் தெரிந்த மகன்களால் கண்ணீரை நிறுத்த முடியாது. ஆனால், அடுக்குமாடிகளில் குடியிருக்கிற ஐ.டி இளைஞன் யாரும் தன் தந்தையின் படத்தை வீட்டில் மாட்டி இருப்பதாய்ச் சாட்சி இல்லை. திருமணத்திற்குமுன் காதலி படத்தையும், திருமணத்திற்குப் பின்பு தன் குழந்தையின் படத்தையும் கைபேசியில் காட்சிக்கு வைத்திருப்பதைப்போல் எந்த இளைஞனும் தந்தையின் படத்தைக் கைபேசியில் காட்சிப்படுத்தவில்லை.

    உன் தந்தையை நீ எப்படி மதிக்கிறாய் என்பதைத்தான் உன் மகன் உற்று கவனித்து வருகிறான். உன்னை அவன் மதிப்பதற்கும் உன்னிடமே ஒத்திகை பார்க்கிறான். சினிமாக்களால் தாயை நேசிக்கத் தெரிந்த ஒரு பாசாங்குப் பாசம்கூட தந்தையின்மீது பெரும்பாலும் இல்லை. ஒரு செடிக்குத் தாய் தண்ணீர் ஊற்றுகிறாள்; தந்தைதான் உரம் போடுகிறான். உரம் கெட்டவாசனை அடிப்பதாய்த் தோன்றும். அதனால் தண்ணீரைப்போல் உரம் நேசிக்கப்படுவதில்லை. ஆனால், அதுதான் உறுதி தருகிறது.

    தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்சினையாகவே திகழ்கிறது.

    “நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே!” என்று தகப்பன் நினைக்கிறான். “என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே!” என்று மகன் தவிக்கிறான். விதைத்தவன் நான்தானே என்ற தினவு தந்தைக்கும், விளைந்தவன் நான்தானே என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்தே வருகிறது. குடும்பம், அரசியல், தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நிகழ்கிறது.
    Next Story
    ×