என் மலர்
குழந்தை பராமரிப்பு
- குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும்.
- தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது.
குதூகலமாக கொஞ்சி விளையாடும் பல குழந்தைகள், குளிக்கும் நேரம் வந்தாலே அழுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள். அடம்பிடிக்கும் அவர்களை சமாளித்து குளிக்க வைப்பது தாய்மார்களுக்கு மிகப்பெரும் சவாலாகிவிடும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, உடலில் தண்ணீர் படும்போது வெப்பநிலை மாறுவதால் ஒருவித அச்சம் ஏற்படும். அதனால் அழுவார்கள். சற்று வளர்ந்த பிள்ளைகளுக்கு குளிக்கும்போது சோப்பு நுரை கண்களில் படுவதால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அசவுகரியத்தின் காரணமாக குளியல் பிடிக்காமல் போகிறது. இவற்றை தவிர்த்து, குழந்தைகளை மகிழ்ச்சியாக குளிக்கச் செய்யும் வழிகள் இதோ…
குழந்தைகளை மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். அதிக சூடு அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பாட்டும்போது திடீர் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். அடுத்த முறை குளிக்கும்போதும் இதே நிலை ஏற்படுமோ என்ற பயமே, அவர்களுக்கு குளியல் மீது வெறுப்பு உண்டாகக் காரணமாகிவிடும்.
குழந்தைகளை தலைக்கு குளிக்க வைக்கும்போது ஷாம்பு கலந்த தண்ணீர் கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு அழுவார்கள். இதனைத் தவிர்க்க 'ஹெட் விசர்' எனும் தடுப்பான்களை பயன்படுத்தலாம். இதனால் தண்ணீர் கண்களில் படுவதைத் தவிர்க்க முடியும்.
குழந்தைகளின் சருமம் மென்மையானது. அவர்களுக்கு பயன்படுத்தும் பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகளால் சருமத்தில் அலர்ஜி அல்லது புண்கள் உண்டாகலாம். இது குளிக்கும் போது குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனையின்படி அவர்களுக்கான சோப்பு, ஷாம்பு மற்றும் லோஷன்களை தேர்வு செய்து உபயோகிக்கவும்.
பசியால் அழும் குழந்தைகளை 'குளிக்கவைத்துவிட்டு பசியாற்றலாம்' என்பது தவறான எண்ணம். உணவு கொடுத்து அரை மணி நேரம் கழித்தே அவர்களை குளிக்க வைக்க வேண்டும். இல்லையேல் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். தூங்கும் குழந்தையை எழுப்பி குளிக்க வைக்கக்கூடாது. இது குழந்தையின் தூக்கத்தை பாதிப்பதோடு, குளியல் மீதும் வெறுப்பை உண்டாக்கும்.
வேகமாக 'மட மட' வென்று தண்ணீர் ஊற்றி குளிக்க வைக்கக்கூடாது. இது அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். அலர்ஜி அல்லது புண்கள் இருக்கும் இடத்தில் வேகமாக தண்ணீர் ஊற்றுவதையும், சோப்பு போடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தூக்கும்போது உங்கள் கைகளை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
- குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடுவதால் உறவினர் வீடுகளுக்கோ, தாத்தா, பாட்டி வீட்டுக்கோ செல்ல விரும்புவதில்லை.
- குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான முறையில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்.
வேலை நிமித்தமாக வெளியூர்களில் வந்து தங்கி இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் பள்ளி கோடை விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்வதை பெரிதும் விரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று உறவினர்களும் ஆவலுடன் இருப்பார்கள்.
தற்போதைய எந்திரமயமான உலகில் எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு பிள்ளை. உறவுகள் குறைவு. நேரமும் குறைவு. பழக்க வழக்கங்கள் புதிது என்பதால் உறவைத் தேடுவதைவிட மகிழ்வைத் தேடுவதாக எங்கங்கோ செல்கிறார்கள். இருக்கும் உறவை நினைக்கிறார்களா? கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளோடு பிறந்த ஊர்களுக்கு போக விரும்புகிறார்களா? என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
பொருளாதார பிரச்சினை
கோடை விடுமுறையைக் கழிக்க அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காரைக்குடியை சேர்ந்த மல்லிகா கூறியதாவது:-
கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும், பெற்றோர் மற்றும் தாத்தா- பாட்டி உறவுகளை பார்க்க வேண்டும். அவர்களுடைய அன்பைப் பெறவேண்டும், சந்தோஷமாக அவர்கள் தரும் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எங்களைப் பொறுத்த வரையில் அந்தமானில் இருந்து விமானத்தில் சென்னை வந்திருக்கிறோம். இங்கிருந்து சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்று மீண்டும் வருவதாக இருந்தால் தனியாக ஒரு தொகையை செலவிட வேண்டியிருக்கிறது. பொருளாதார பிரச்சினை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பெரிய தொகையை செலவிட முடிவதில்லை. சொந்த ஊருக்கு வருவதாக இருந்தால் திருமணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தால் மட்டுமே வருகிறோம். விடுமுறையில் சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்துவிட்டது. சொந்த ஊருக்கு வந்து உறவுகளை பார்த்துவிட்டு திரும்பினால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பழைய கால நினைவுகளை அசை போடுவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் இயலவில்லை' என்றார்.
வாணியம்பாடி புல்லூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன்:-
பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்று தங்கி வருவது கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப அதுவும் மாறுபட்டு வருகிறது. 15 நாள், 20 நாள் தங்கி இருந்தது கடந்த காலம் என்றால், தற்போது ஓரிரு நாட்கள் மட்டுமே உறவினர் வீடுகளில் தங்கி விட்டு செல்லும் நிலை உள்ளது.
பொழுதுபோக்கு இடங்கள், நீர்வீழ்ச்சிகள் போன்ற பகுதிகளுக்கு செல்வதில் இளைஞர்களும், குழந்தைகளும், பெற்றோர்களும் தற்போது அதிக அளவில் விரும்புகின்றனர்.
திருப்பத்தூரை சேர்ந்த டி.டி.சி. சங்கர்:-
கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்பொழுது பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை வரும் என்று காத்திருந்து விடுமுறை விட்ட உடன் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தங்குவோம். தற்போது அனைவரும் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியதால் எங்கும் செல்வதில்லை. செல்போன், டி.வி. என முடங்கி கிடைக்கிறார்கள். அப்படியே அழைத்துச் சென்றாலும் அங்கு போர் அடிக்குது எனக்கூறி உடனடியாக வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். இதனை வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, பெற்றோர்கள் எடுத்துக் கூறி உறவினர்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அப்பொழுதுதான் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்கள் வீட்டில் பழகும் விதம் ஏற்படும்.
ஆன்லைன் விளையாட்டுகள்
காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த ஆர்.சுந்தரராஜி:-
ஒவ்வொரு ஆண்டும் முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் வீட்டில் உள்ள குழந்தைகள் ஊருக்கு செல்ல வேண்டும் தாத்தா, பாட்டியை பார்க்க வேண்டும் என்று முன்பு கூறுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. தற்போது செல்போன், கம்ப்யூட்டர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி விடுவதால் உறவினர் வீடுகளுக்கோ, தாத்தா, பாட்டி வீட்டுக்கோ செல்ல விரும்புவதில்லை. வீட்டில் உட்கார்ந்து பொழுதை கழிக்கவே விரும்புகிறார்கள். இப்போது உள்ள குழந்தைகள் செல்போனே உலகம் என மாறிவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும்.
சத்துவாச்சாரியை சேர்ந்த ஆசிரியர் கணேசன்:-
கோடை விடுமுறையில் குழந்தைகளை சுற்றுலா, சமூக நிகழ்வுகள், உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மூளையின் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பது அறிவியலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெற்றோர்கள், குழந்தைகளின் விளையாட்டு, பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான முறையில் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும்.
குழந்தைகளை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதன் மூலம் தாத்தா, பாட்டிகளை அவர்கள் சந்திப்பார்கள். மேலும் கிராமத்து வாழ்க்கை, கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் தெரியவரும். தாத்தா பாட்டிகளிடம் இருந்து பெறப்படும் கடந்த கால அனுபவங்கள், வருங்கால செயல்களுக்கு அடித்தளமாகவும், வருங்கால சவால்களை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் உதவியாக இருக்கும்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் நாங்கள் விசாரிப்போம். கோடை விடுமுறை எவ்வாறு பயனுள்ளதாக கழித்தீர்கள் என்று. அதில் பலர் சொந்த ஊருக்கு சென்றதாக தெரிவிக்கின்றனர். ஆனால் சில பெற்றோருக்கு விடுமுறை இல்லாத காரணத்தினால் அவர்கள் குழந்தைகளை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில்லை.
குழந்தைகள் தான் நமது உண்மையான சொத்து என்பதை பெற்றோர்கள் உணர்ந்து அவர்களுடன் சற்று நேரத்தை செலவிட வேண்டும்.
பொருளாதாரம்
திருவண்ணாமலையை சேர்ந்த இல்லதரசி தனலட்சுமி பாக்கியராஜ்:- நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோடை விடுமுறையின் போது நாங்கள் குடும்பத்துடன் திருப்பதி மற்றும் அருகில் உள்ள ஆன்மிக நகரங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவோம். இந்த ஆண்டும் கோடை விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க விரும்பப்படாமல் பொழுது போக்கிற்காக பூங்காவிற்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்ல விருப்பப்படுகின்றனர். மேலும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லவும் விருப்பப்படுகின்றனர். ஆனால் இதற்கு பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம் என்ற எண்ணமும் மந்தமாகி விடுகின்றது.
இந்திய மருத்துவ சங்க ஆரணி கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன்:-
மிகப் பெரிய பணக்காரராக இருந்தால் வெளி நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வார்கள். லட்சாதிபதியாக இருந்தால் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு செல்வார்கள், வசதி படைத்தவராக இருந்தால் தமிழகத்துக்குள் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள். வசதி இல்லாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோயிலுக்காவது சென்று பொழுது போக்குவார்கள். கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு இன்றி பொதுமக்கள் பலரும் தவித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஆண்டுக்கு 2, 3 முறை சுற்றுலா செல்லக்கூடிய குடும்பங்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு சுற்றுலா செல்லும் பழக்கம் மக்களிடையே குறைந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
- குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன.
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம்.
அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம். நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டி உள்ளது..
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும், சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வ
ளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.
குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக பாதிப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- தாயின் ஆரோக்கியம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம்.
- சில தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த முடியாமல் சிரமப்படுவார்கள்.
பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். இதில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் அவசியமானவை. தாயின் ஆரோக்கியம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். இணை உணவுகள் கொடுக்க ஆரம்பித்தப் பின்பு, படிப்படியாக தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தலாம். சில தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்களுக்கான சில ஆலோசனைகள் இதோ…
குழந்தைகள் திட உணவுகள் சாப்பிடத் தொடங்கியதும் தானாகவே தாய்ப்பால் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஒரு வயதுக்குப் பிறகு, ஒரு நாளுக்கு 3 வேளை மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் போதும். சிறிது சிறிதாக தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும்.
தினமும் 3 வேளை தாய்ப்பால் புகட்டுவதை 2 வேளையாகக் குறைக்க வேண்டும். பின்னர் ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்கள், பகல் நேரத்தில் அவர்கள் தாய்ப்பாலை மறக்க உதவியாக இருக்கும்.
இந்த சமயங்களில் தாய்க்கு மார்பில் பால் கட்டுதல், பால் கசிதல், மார்பகத் தசை இறுகுதல், வலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதை குணப்படுத்துவதற்கு வீட்டு வைத்தியம் செய்வதற்கு முன்பு மகப்பேறு நல மருத்துவரை அணுகுவது நல்லது. பால் சுரப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளும்பொழுது பால் சுரப்பு குறையும். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தினால், தாய்க்கு பால் சுரப்பு நின்றுவிடும். குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பாலை மறக்கச் செய்வதுதான் சற்று சிரமமானது. சில குழந்தைகள் இரவில் தாய்ப்பால் குடித்துக் கொண்டே உறங்குவார்கள். கொடுக்கவில்லை என்றால் அழுது அடம் பிடிப்பார்கள்.
அந்த நேரத்தில் அவர்களை அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும். மெல்லிய குரலில் கதை சொல்லியோ அல்லது தாலாட்டுப் பாடியோ குழந்தையை மென்மையாக வருடி தூங்க வைக்க வேண்டும். குழந்தை தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, எளிமையான உணவுகளை கொடுக்க வேண்டும். தந்தையின் அருகில் குழந்தையை உறங்க வைப்பது சிறந்தது.
நள்ளிரவில் குழந்தை பாலுக்கு அழும்போது, தந்தையே குழந்தையைத் தட்டிக் கொடுத்து, தூங்க வைக்கலாம். இரவு நேரத்தில் தாய்ப்பாலை நிறுத்தியதும், இரண்டு நாளுக்கு ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். இந்த இரண்டு நாள் இடைவெளியில் குழந்தை தாய்ப்பாலுக்கு அழவில்லை என்றால், தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். தாய்ப்பாலுக்கு மாற்றாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு புட்டிப்பால் கொடுக்கலாம்.
- காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும்.
- லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை.
என்ன... உடல் இப்படி அனலாய் கொதிக்கிறது? பாராசிட்மால் மாதிரியான காய்ச்சல் மாத்திரையை 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் போட்டால் போதும்.
நான்கைந்து நேரம் சாப்பிட்டால் போதும் காய்ச்சல் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது.
எனவே தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே மாத்திரைகளை தயக்கம் இல்லாமல் கொடுக்கிறார்கள்.
மிகவும் சின்ன குழந்தைகளாக இருந்தால் சொட்டு மருந்து அல்லது 'சிரப்' வடிவில் இருக்கும் இதே காய்ச்சல் மருந்துகளை கொடுக்கிறார்கள்.
சர்வ சாதாரணமாக கொடுக்கும் இந்த மாத்திரை, மருந்துகளால் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகப்படியான காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டதால் பல குழந்தைகள் ஆபத்தான கட்டம் வரை சென்று மீண்டு இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.
சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளில் 44 குழந்தைகள் இந்த மாதிரி மருந்து பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த குழந்தைகள் பிறந்து 4 மாதம் முதல் 17 வயது உடையவர்கள்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளால் உடலில் விஷத்தன்மை ஏறியும், கல்லீரல் பாதிக்கப்பட்டும் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளார்கள். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 4 பேர் மிக தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார்கள்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:-
வைரஸ் தொற்றுகளின் போது காய்ச்சல் அதிகமாக இருக்கும் முதல் 3 முதல் 4 நாட்களுக்கு காய்ச்சலின் அளவு அதிகமாகத்தான் இருக்கும் அதன் பிறகு 6 அல்லது 7 நாட்களில் சீராகி விடும்.
ஆனால் இந்த கால கட்டத்தில் பயத்தின் காரணமாக அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கு 105 டிகிரி காய்ச்சல் வரை வரும். உடனே மாத்திரைகளை அடிக்கடி கொடுக்கிறார்கள். ஏனெனில் வலிப்பு, மயக்கம் வந்துவிடலாம் என்று பயப்படுவதே இதற்கு காரணம்.
இவ்வாறு அதிக அளவில் மாத்திரை கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், கல்லீரலில் வீக்கம் போன்ற பாதிப்புகள் உருவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 99 சதவீதம் பேர் தானாக உட்கொள்ளவில்லை. பெற்றோர்கள் தான் தவறாக கொடுத்து இருக்கிறார்கள்.
காய்ச்சல் பல காரணங்களுக்காக வெளிப்படலாம். ஆனால் மருத்துவர்களை பார்த்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் காய்ச்சல்தானே என்று மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.
உண்மையான நோயை கண்டு பிடித்து அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் மருந்துகள் மூலம் நச்சத்தன்மையும் உருவாக்கி வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத்தான் மருந்தின் நச்சுத்தன்மை ஏற்படுகிறது.
உடல் நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்குத்தான் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் அளவை தாண்டும் போதுதான் சிக்கல் உருவாகிறது.
காய்ச்சல் பரிசோதிக்கும் கருவியை வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். காய்ச்சலை பரிசோதித்து லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை. தானாகவே சரியாகி விடும். மேலும் பரிந்துரைத்த அளவை விட கூடுதலாக கொடுக்காதீர்கள். அதிகபட்சமாக தினசரி 4 முறைக்கு மேல் கொடுக்கவும் கூடாது.
சொட்டு மருந்து அடர்த்தியானது. ஒரு சொட்டில் 5 மில்லி சிரப்புக்குரிய வீரியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மருத்துவரின் ஆலோசனை கட்டாயம்.
காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும். எனவே அதற்கு ஏற்றவாறு மருத்து மாத்திரைகளை கையாள்வதே நல்லது என்றார்கள்.
டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறைந்த கால இடை வெளியில் அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. மாத்திரை கொடுப்பதற்கு முன்பு காய்ச்சலை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
100 டிகிரி காய்ச்சல் தாண்டினால்தான் மருந்து தேவைப்படும். பாராசிட்மால் சொட்டு மருந்து மிகவும் அடர்த்தியானது. அதனுடன் சிரப்பை கலந்து குடிப்பது தவறு.
பாராசிட்மால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கல்லீரலை செயலிழக்க செய்யவும் வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
சாதாரண காய்ச்சல் தானே குறிப்பிட்ட மாத்திரைகளை வங்கி கொடுத்தால் போதும் என்று குழந்தைகளுக்கு ஆபத்தை வரவழைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
- குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.
டாக்டர் உமாசங்கர், (இணை பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி):-
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இளநீர், நுங்கு அதிகமாக கொடுக்கலாம். பொதுவாக குழந்தைகள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். ஆனால் பெற்றோர்தான் அவர்களை கட்டாயப்படுத்தி தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வைக்க வேண்டும்.
மேலும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரைதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இந்த நேரத்தில் குழந்தைகளை விளையாட விடுவதை தவிர்க்கலாம். எக்காரணத்தை கொண்டும் குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்த அதிக குளிர்ந்த தண்ணீரை குடிக்க கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மண் பானை தண்ணீரை பயன்படுத்தலாம். அதிக வெயில் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, சின்னம்மை ஆகிய நோய் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகளவில் தண்ணீர் குடித்தால் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.
மெடிக்கல் எமர்ஜென்சி
டாக்டர் நம்பிராஜன், (இதயவியல் துறை தலைவர், அரசு ஆஸ்பத்திரி):-
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது சருமத்தில் ஒருவித வறட்சி ஏற்படும். இதன் தாக்கம் அதிகரிக்கும்போது தோல், சிவப்பாக மாறி மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்லும்.
இதுபோன்று ஏற்பட்டால் அது மெடிக்கல் எமர்ஜென்சி ஆகும். இந்த நேரத்தில் உடனடியாக அந்த நபரை நிழலில் அமர வைத்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு தண்ணீர் உள்பட எதுவும் குடிக்க கொடுக்கக்கூடாது.
மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நமது உடலில் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. அதை நாம் குடிக்காமல் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள செல் சுருங்கும். இதனால் இதயத்துடிப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக துடிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. இதுதான் மாரடைப்புக்கு காரணம் ஆகும்.
தண்ணீர் முக்கியம்
இது தவிர சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற நோய் இருப்பவர்கள் அதிக வெயிலில் வெளியே செல்லக்கூடாது.
வெயில் நேரத்தில் அதிகளவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் இதயத்துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வெயிலுக்கு உடலுக்கு தண்ணீர்தான் முக்கியம். அதை தவறாமல் குடித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால், அறிகுறிகள் மாறுபடலாம்.
- சில குழந்தைகள் 10 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
குழந்தை பிறந்த முதல் வருடத்தில் அவர்களின் ஒவ்வொரு அடுத்த கட்ட முன்னேற்றங்களும், இயக்கங்களும் நம்மை வியக்க வைக்கும். என்னுடைய குழந்தை குப்புற விழ தாமதமானது. ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன், ஆனால் அதை பற்றி தெளிவாக தகவல்கள் தெரிந்த பின் இதில் கவலை கொள்ள அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
இதில் அம்மாக்களுக்கு நம் குழந்தை வளரும் போது இன்னும் குப்புற விழவில்லையே, தவழவில்லையே, நடக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்விலும் வெவ்வேறு காலகட்டங்களில் நேரங்களில் அவர்களின் மைற்கல்லை அடைவார்கள். மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு நாம் வருத்தம் அடைய அவசியமில்லை.
உதாரணமாக இந்த பதிவில் குழந்தையின் நடையை பற்றி குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். அதாவது குழந்தை நடக்க தயாராக இருப்பதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்.
குழந்தை ஒன்பதாம் மாதத்தை கடந்து செல்லும் போது பல அறிகுறிகள் காணலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதால், அறிகுறிகள் மாறுபடலாம்.
* மேலிருந்து இழுப்பது – உங்கள் குழந்தை நடை போட முயற்சிக்கும் போது, அருகில் உள்ள மர பெஞ்ச், கட்டில் போன்ற மரச்சாமான்களை பிடித்து கொண்டு எழுந்து நிற்க பப முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் குழந்தை ஒரு மாத காலத்திற்குள் நடக்க முயற்சிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
* வட்டம் அடிப்பது - உங்கல் குழந்தை 7 அல்லது 8 மாதம் இருக்கும் போது சுற்றுவார்கள் அதாவது வட்டம் அடிப்பார்கள். இது குழந்தைகள் நடை பழக தொடங்குவதற்கான அறிகுறிகளில் ஒன்று. சில குழந்தைகள் 10 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
* கைகளை பயன்படுத்தி படிகளில் ஏறுவது – சில குழந்தைகள் தங்கள் கைகளை பயன்படுத்தி மாடிப்படிகளில் ஏற முயற்சி செய்வார்கள். இந்த குழந்தைகள் தங்கள் கால்களை வைத்து வேகமாக நகர்வார்கள். இதை நீங்கள் காணும் போது உங்கள் குழந்தை சீக்கிரமே முதல் படி எடுத்து வைக்க போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
* உடல் அறிகுறிகள் – நிச்சயமாக அம்மாக்களுக்கு தெரியும், குழந்தைகள் ஒரு மைற்கல்லை அடையும் போது அடத்தை காட்டுவது காரணம் இல்லாமல் அழுவது, சாப்பிட அடம் பிடிப்பது, அதிக நேரம் தூக்கம் அல்லது ஓய்வு போன்ற அறிகுறிகளை காணலாம். இதன் மூலம் இந்த உலகத்தை அவர்களின் கால்களால் ஆராய தொடங்கப்போகிறார்கள். அதனால் வீட்டை பாதுகாப்பான சூழலாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
* பிடித்து செல்வது – அதாவது குழந்தை அருகில் இருக்கும் நாற்காலி அல்லது சோஃபா போன்ற பொருட்களை பிடித்து இரண்டு மூன்று அடி எடுத்து வைப்பார்கள். கனமான பொருட்களை பிடித்து முன்னேறி செல்ல தொடங்குவார்கள்.
* முழங்கால்களை வைத்து சமநிலைப்படுத்துவது – பல குழந்தைகள் தங்களின் முழங்கால்களை வைத்து சமநிலையாக்கி குனிந்து எழுந்து நின்று நடக்க தொடங்குவார்கள். முதல் ஒரு காலை வைத்து ஊன்றி நின்று பின்பு அடுத்த காலை அடி எடுத்து வைத்து நடக்க பழகுவார்கள்.
* கிராப் வாக் – குழந்தை நண்டு போல் ஊர்ந்து செல்லும் என்று சொல்வார்கள். அது தான் கிராப் வாக். அவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் பயன்படுத்தி ஊர்ந்து வேகமாக ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுவிடுவார்கள். சீக்கிரமே உங்கள் குழந்தை நடை பயில தொடங்க போகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
* உதவியுடன் நடப்பது – சுவற்றை பிடித்து அல்லது பெரியவர்கள் கையை பிடித்து நடக்க தொடங்குவார்கள். இது அவர்களுக்குள் நடப்பதற்கான தன்ன்மபிக்கையை கொடுக்கிறது. அவர்களின் இரண்டு கைகளையும் நாம் பிடித்து நடக்க உதவி செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் எண்ணுவார்கள். அதன் பிறகு ஒரு கையை விட்டு விட்டு நடக்க விட வேண்டும் இப்படியே தொடரும் போது அவர்கள் தாங்களாகவே நடை பயில தொடங்கிவிடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு வழிகளை பின்பற்றுவார்கள். சில நேரங்களில் மற்ற குழந்தைகளை பார்க்கும் போது நீங்கள் அவர்களோடு ஒப்பிட்டு வருத்தம் அடைவீர்கள். ஆனால் 15 மாதத்திற்கு பிறகும் குழந்தை நடக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
- பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள்.
- பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும்.
தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பானமாக கருதப்படுகிறது. இதில் சுவை என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் கோடைகாலங்களில் தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது ஏன் தெரியுமா?
பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை கொடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவார்கள். ஆனால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அதில் எல்லா ஊட்டச்சத்துகளும் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இந்த கோடைகாலத்தில் குழந்தை உட்கொள்ளும் தாய்ப்பால் அவர்களை நீரேற்றமாக வைத்திருக்க போதுமானதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் தாய்ப்பால் போதும் என்பது தான் பதிலாக இருக்கிறது.
தண்ணீர் ஏன் கொடுக்கக்கூடாது?
பிறந்து சில மாதங்கள் வரை, பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் தண்ணீரை செரிமானம் செய்ய தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். அவர்களின் வளர்ச்சியடையாத சிறுநீரகங்கள் ஊட்டச்சத்து இழப்பினால் எளிதில் பாதிக்கப்படும். பிறந்த குழந்தையின் வயிற்றில் உண்மையில் 1 முதல் 2 டீஸ்பூன்கள் அல்லது 5 முதல் 10 மி.லிக்கு மட்டுமே இடம் இருக்கும். குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது தேவையில்லாத பொருள்களால் அவர்களின் வயிற்றை நிரப்புவதற்கு சமம். இதனால் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் கலோரிகளுக்கு இடமளிக்காது. குறிப்பாக தண்ணீரில் எந்த சத்துக்களும் இல்லை. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கும்.
குழந்தையின் 6 மாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அரை கப் தண்ணீர் தேவைப்படுகிறது. சில குழந்தைகள் அதிகமாக விரும்பினாலும் கொடுக்கலாம். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக எதுவும் தேவைப்படாது. உங்கள் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பதற்கு முன், உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு அவர் சொல்லும் அளவுகளில் தண்ணீர் கொடுங்கள்.
- குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.
- கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் சதா சண்டையிடுவது சகஜமான விஷயம். உடன் பிறந்தவர்களிடம் போட்டிபோட்டு சண்டையிடுவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதைக் கண்டுபிடித்தால் அப்புறம் வீடு அமைதிப்பூங்கா ஆகிவிடும்!
குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும்.
குழந்தைகளின் சண்டை, அடம் தற்காலிகமானதுதான். ஆனால், அதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம். அதுபோல் 'அது வேண்டும் இது வேண்டும்' எனச் சொல்லி அடம் பிடிப்பதும் சகஜம்.
ஏன் குழந்தைகளுக்குள் சண்டை வருகிறது?
காரணமற்ற சிறு விஷயங்களாக இருக்கலாம்.
-தான் வேண்டியதை அடைய
-தனக்கு முன்னுரிமை தர
-உணர்ச்சி வசப்படுதல்
-தன் மனதுக்குப் பிடிக்காதது நடக்கும்போது தாங்கிகொள்ள முடியாமை.
ஏன் குழந்தைகள் அடம் பிடிக்கிறது?
தன் தேவைகளை நிறைவேற்றிகொள்ள அடம் பிடித்தல். தான் ஆசைப்படுவது நடக்காமல் போனால் அடம் பிடிப்பது. கோபம், சண்டை போன்ற உணர்ச்சிவயப்படுதலின் போது அடம் செய்வது.
குழந்தையின் இந்தக் குணங்களுக்கு பின்னால் காரணங்கள் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள். குழந்தைகளை அடிப்பதோ மனம் நோகும்படி திட்டுவதோ கூடாது. குழந்தைகளை தனியாக கூட்டி சென்று பக்குவமாக மென்மையாக பேசி புரிய வைப்பது அவசியம். குழந்தைகளை கவனிப்பில்லாமல் அப்படியே விட்டுவிடுவது பெரும் தவறு. குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.
வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும். சண்டை போட்டாலும் அடம் பிடித்தால் நல்ல குழந்தைக்கு அழகல்ல எனச் சொல்லி புரிய வைக்கலாம். சண்டை போட்டாலும் அடம் பிடித்தாலும் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும். ஆனால், விட்டுக்கொடுத்தோ சமூக நட்புடன் நடந்துகொண்டாலோ அலாதியான இன்பம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள்.
கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம். ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர். எப்போதும் பெரியவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையிடமும் சண்டையிடும் குழந்தையிடமும் அவர்களின் முழுமையான பேச்சை கேட்ட பின் பதில் சொல்லலாம். பெற்றோர் இவர்களுக்கு பதில் சொல்லும் முன் குழந்தைகளின் உணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளின் பேச்சை கேட்ட பின்பு, பெரியவர்கள் ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்க கூடாது. இதனால் வெறுப்பும் தோல்வி மனப்பான்மையும் வந்துவிடும். இது வேண்டும் என அடம் பிடித்து சண்டை போட்டாலோ வேறு காரணங்களுக்காக சண்டை போட்டாலோ பெற்றோர் இரண்டு முடிவுகளைச் சொல்லி அதில் ஒன்றை குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் சமாதானம் அடைவார்கள். அதே சமயம் தன்னை கவனிக்கவில்லை தனக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை போன்ற எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும்.
ஒருவரை அடிப்பது, அடித்து காயப்படுத்துவது குற்றம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மனதிலும் உடலிலும் காயங்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். பெரியோர், சிறியோர் என அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்ட குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும்.
உணவு ஊட்டுவது போல குளிப்பாட்டுவது போல அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது. அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் தற்போதைக்கு இந்த விஷயம் கிடைக்காது. ஏனெனில் இந்தக் காரணத்தால் என எடுத்து சொல்லுங்கள்.
அடம் பிடித்தார்கள் என்றால் உன்னிடம் இவ்வளவு பொம்மைகள் உள்ளன. மற்ற குழந்தைகளிடம் இவ்வளவு கிடையாது. இது உனக்கு கிடைத்த நல்ல விஷயம் என நேர்மறை கருத்துகளை சொல்லி புரிய வைக்கலாம். குழந்தைகள் திருப்தி அடைவர். சண்டையை எப்போது தீவிரமாக்காமல் இருக்க பெற்றோர் தலையிடுவது முக்கியம். புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்திவிட்டால் பிரச்னைக்கு இடமில்லை.
அடம் பிடிப்பதை வாங்கி தர வாய்ப்பு, வசதி வரும். அப்போது வாங்கி தருகிறேன் என எடுத்து சொல்லலாம். பக்கத்து வீட்டு குழந்தையுடன் தன் குழந்தை சண்டை போடுவதை சில பெற்றோர் தீவிரமாக்கி விடுகின்றனர். சமூக நட்பை குழந்தையிலே வளர்த்தால்தான் பெரியவர் ஆனதும் சமூகத்துடன் வாழ குழந்தைகளால் முடியும்.
- மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
- உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது.
கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.
ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.
கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைக்கால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.
ப.கோபிகா
12-ம் வகுப்பு,
ஜெ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
- கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம்.
- கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
தமிழகம் முழுவதும் பள்ளி தேர்வுகள் முடிவுற்ற நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மற்ற வகுப்புகளுக்கும் அடுத்த வராம் முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தாலும் கொளுத்தும் கோடை வெயிலால் குழந்தைகள் உடல்நலனில் அதிக அக்கற்றை காட்ட வேண்டிய சூழல் பெற்றோருக்கு ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடம் இல்லை, சீக்கிரம் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை, படிப்பு இல்லை என்பதால் கோடை விடுமுறை என்பது குழந்தைகளுக்கு வருடத்தின் மிகவும் சுவாரஸ்யமான காலம். கோடைகாலம் என்பது புதிய விஷயங்களை ஆராய்வதற்கும், பயணம் செய்வதற்கும், கண்டு பிடிப்பதற்கும் சிறந்த நேரம்.
இந்த நேரத்தில் குழந்தைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருக்கிறார்கள். ஒன்றும் செய்யாமல் நாள் முழுவதும் குழந்தைகள் இருக்கும்போது, அவர்களை நிர்வகிப்பது பெற்றோர்களுக்கு கடினமாக இருக்கலாம். எனவே, கோடை விடுமுறையை வீணாக்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருந்தபடியே அதை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு இல்லாமல் சுத்தமான காற்றில் நடப்பதால் அதிகாலை நடைப்பயிற்சி மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. தவிர, கவனச் சிதறல்களிலிருந்து விலகி உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உரையாடலை நடத்தவும், அவர்களை நன்கு அறிந்து கொள்ளவும் முடியும்.
உங்கள் குழந்தைகளை சமையலறை வேலைகளில் ஈடுபடுத்தும் போது, அவர்களுக்கு சில அடிப்படைக் கற்றலைக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் வேடிக்கையாகவும் நேரத்தை செலவிடலாம். இதனால் குழந்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். நீங்கள் ஒருபோதும் யோசிக்காத யோசனைகளை அவர்கள் கொண்டு வர முடியும்.
செல்போன்கள் மற்றும் டேப்லெட்களில் கேம்களை விளையாடுவதால், நல்ல பழைய போர்டு கேம்கள் பின்சீட்டைப் பெற்றுள்ளன. செல்போன் கேம்களால் உற்சாகமான எதுவும் நடக்கவில்லை. எனவே உங்கள் கோடை விடு முறையை குடும்பத்துடன் சில பலகை விளையாட்டுகளில் செலவிடுங்கள்.
ஆண்டு முழுவதும் குழந்தைகள் பொருட்களை சேகரிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடுக்கி வைக்கவோ, வரிசைப்படுத்த அவர்களுக்கு நேரம் இல்லை. அதை நீங்களே செய்ய தொடங்கும்போது, விரைவில் அவர்களும் இணைவதை நீங்களே காண்பீர்கள்.
பள்ளி நாட்களில் குழந்தைகள் சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும். விடுமுறை என்பது அவர்கள் சற்று தாமதமாக எழுந்திருக்கும் நேரம். ஒவ்வொரு வார இறுதியில் ஒரு நல்ல திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும். குடும்பமாக ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தை ரசிப்பதை விட வேடிக்கை வேறு எதுவும் இல்லை
இங்கு புத்தகங்களுக்குப் பஞ்சமில்லை. மேலும் பல வந்துகொண்டும் இருக்கின்றன. புத்தகங்கள் வாழ்க்கை அடிப்படைகளை கற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு கருவியாகும். ஒவ்வொரு புத்தகமும் கற்பிக்க ஏதாவது உள்ளது.
எனவே படிக்கும் பழக்கம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கும் சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து படித்து, புத்தகத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் தோட்டம் இருந்தால், அல்லது நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைக்கு ஒரு செடியை பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.
ஒரு செடி எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை அவருக்கு வழி காட்டுங்கள். செடி வளர்வதை பார்ப்பது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும்.
கைவினைப்பொருளை உருவாக்குவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். ஓவியம் வரைய செய்வது போன்ற விஷயங்களிலும் ஈடுபட செய்யலாம்.
ஆண்டு முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு கோடை விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கும் குழந்தைகளின் நேரத்தை, ஒரு சரியான திட்டமிடல் மூலம் ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் மறக்கமுடியாத விடுமுறையாக மாற்றிக் கொள்ளலாம்.
எனவே, இந்த திட்டங்களை கடைபிடித்து விடுமுறையை நிச்சயமாக வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றலாம்.
- ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
- பெற்றோர் பயிற்சி முகாம் பற்றி முழுமையாக விசாரியுங்கள்.
தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. "கோடை காலம் எப்போது வரும் என்று முன்பெல்லாம் குழந்தைகள் காத்திருப்பார்கள். நண்பர்கள், தோழிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று மரம் ஏறி மாங்காய் பறிப்பார்கள். ஆறுகளுக்கு சென்று நீச்சலடித்து குளித்து மகிழ்வார்கள். கூட்டமாக சேர்ந்து விளையாடுவார்கள்.
தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நகரத்து குழந்தைகளால் இன்று, அதை கற்பனைசெய்துகூட பார்க்க முடிவதில்லை. அதனால் அவர்களை பெற்றோர் 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த முகாம்களில் தற்காப்பு, நீச்சல், மேற்கத்திய நடனங்கள், ஓவியம் வரைதல், இசைக் கருவிகள் மீட்டுதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை சிறுவர்-சிறுமியர்களுக்கு வழங்குகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் மனக்குழப்பம், மனஅழுத்தம் போன்றவைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பத்து பதினைந்து நாட்களில் அந்த முகாம்கள் முடிந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அதுவரை அமைதிகாத்துவிட்டு பெரும்பாலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் காலகட்டத்தில்தான் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அப்போது நிறைய குழந்தைகள் கவுன்சலிங்குக்கு அழைத்துவரப்படுகிறார்கள். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு சமூகத்தை பற்றிய பயமும் அதிகரிப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்து, பெற்றோர் இந்த கோடைகாலத்தில் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்" என்கிறார், பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகளின் மனநல ஆலோசகர் வித்யாரெட்டி.
"முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டும். முக்கியமான உடல்உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறவேண்டும். அதோடு 'உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள் ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல' என்பதை புரியவைக்கவேண்டும். தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்.
உங்கள் குழந்தை கோடைகால பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பினால், 'எங்கேயாவது போ.. எதையாவது கற்றுக்கொள்..' என்று அனுப்பிவிடாமல், பயிற்சி கொடுக்கும் அந்த அமைப்பு பற்றி முழுமையாக விசாரியுங்கள். அவர்களது பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.
பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொடுதல்களை உருவாக்கினால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள்.."
"பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். 'நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்' என்று கூறவேண்டும். ஆனால் 99 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதில்லை. 'நீ பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பாமல் அவ்வாறு கூறுகிறாய்' என்று பதில்சொல்வார்கள். சிலரோ ஒருபடி மேலே போய், 'அந்த நபர் ரொம்ப நல்லவர். அவரை சந்தேகப்படக்கூடாது' என்று அவருக்கு பாராட்டுரை வழங்கிவிட்டு, தங்கள் குழந்தையை மட்டம் தட்டிவிடுவார்கள். அவ்வாறு பெற்றோர் நடந்துகொள்ளக்கூடாது. குழந்தைகளை முழுமையாக நம்பவேண்டும். குழந்தை சொன்ன உடன் அந்த சம்பவம் பற்றி ஆராயவும் முன்வரவேண்டும்"
கோடை பயிற்சி வகுப்புகளில் நீங்கள் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
"புற்றீசல்கள் போல் யார் வேண்டுமானாலும் சம்மர் கேம்ப் நடத்தலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. தகுதியானவர்கள், தகுதியான பயிற்சியாளர்களை வைத்தே இதை தொடங்கவேண்டும். அவர் களுக்கான நிபந்தனைகளை அரசு வகுத்து, நடத்தை விதிகளை பின்பற்றச்செய்யவேண்டும். மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் 'ஒரு நிறுவனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு' என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும். அதனால் அத் தகைய நிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பிரச்சினைக்குரியவர்களை பயிற்சியாளர் களாக சேர்த்துவிடக்கூடாது. நாம் எல்லா மையங்களையும் குறைசொல்லவில்லை. பிரச்சினைக்குரியவைகள் மட்டும் சமூக நலன் கருதி சரிசெய்யப்படவேண்டும்"
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






