search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாத்திரை, மருந்துகளால் குழந்தைகளுக்கு ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை
    X

    மாத்திரை, மருந்துகளால் குழந்தைகளுக்கு ஆபத்து: மருத்துவர்கள் எச்சரிக்கை

    • காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும்.
    • லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை.

    என்ன... உடல் இப்படி அனலாய் கொதிக்கிறது? பாராசிட்மால் மாதிரியான காய்ச்சல் மாத்திரையை 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் போட்டால் போதும்.

    நான்கைந்து நேரம் சாப்பிட்டால் போதும் காய்ச்சல் காணாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்கள் மத்தியில் இருக்கிறது.

    எனவே தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே மாத்திரைகளை தயக்கம் இல்லாமல் கொடுக்கிறார்கள்.

    மிகவும் சின்ன குழந்தைகளாக இருந்தால் சொட்டு மருந்து அல்லது 'சிரப்' வடிவில் இருக்கும் இதே காய்ச்சல் மருந்துகளை கொடுக்கிறார்கள்.

    சர்வ சாதாரணமாக கொடுக்கும் இந்த மாத்திரை, மருந்துகளால் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதிகப்படியான காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டதால் பல குழந்தைகள் ஆபத்தான கட்டம் வரை சென்று மீண்டு இருப்பதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்கள்.

    சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளில் 44 குழந்தைகள் இந்த மாதிரி மருந்து பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த குழந்தைகள் பிறந்து 4 மாதம் முதல் 17 வயது உடையவர்கள்.

    அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளால் உடலில் விஷத்தன்மை ஏறியும், கல்லீரல் பாதிக்கப்பட்டும் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளார்கள். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 4 பேர் மிக தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:-

    வைரஸ் தொற்றுகளின் போது காய்ச்சல் அதிகமாக இருக்கும் முதல் 3 முதல் 4 நாட்களுக்கு காய்ச்சலின் அளவு அதிகமாகத்தான் இருக்கும் அதன் பிறகு 6 அல்லது 7 நாட்களில் சீராகி விடும்.

    ஆனால் இந்த கால கட்டத்தில் பயத்தின் காரணமாக அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

    குழந்தைகளுக்கு 105 டிகிரி காய்ச்சல் வரை வரும். உடனே மாத்திரைகளை அடிக்கடி கொடுக்கிறார்கள். ஏனெனில் வலிப்பு, மயக்கம் வந்துவிடலாம் என்று பயப்படுவதே இதற்கு காரணம்.

    இவ்வாறு அதிக அளவில் மாத்திரை கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், கல்லீரலில் வீக்கம் போன்ற பாதிப்புகள் உருவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.

    இந்த மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 99 சதவீதம் பேர் தானாக உட்கொள்ளவில்லை. பெற்றோர்கள் தான் தவறாக கொடுத்து இருக்கிறார்கள்.

    காய்ச்சல் பல காரணங்களுக்காக வெளிப்படலாம். ஆனால் மருத்துவர்களை பார்த்து அதற்கான காரணத்தை கண்டுபிடிக்காமல் காய்ச்சல்தானே என்று மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.

    உண்மையான நோயை கண்டு பிடித்து அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து காய்ச்சல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் மருந்துகள் மூலம் நச்சத்தன்மையும் உருவாக்கி வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத்தான் மருந்தின் நச்சுத்தன்மை ஏற்படுகிறது.

    உடல் நிலையை பரிசோதித்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்குத்தான் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் அளவை தாண்டும் போதுதான் சிக்கல் உருவாகிறது.

    காய்ச்சல் பரிசோதிக்கும் கருவியை வீடுகளில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். காய்ச்சலை பரிசோதித்து லேசான காய்ச்சல் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை. தானாகவே சரியாகி விடும். மேலும் பரிந்துரைத்த அளவை விட கூடுதலாக கொடுக்காதீர்கள். அதிகபட்சமாக தினசரி 4 முறைக்கு மேல் கொடுக்கவும் கூடாது.

    சொட்டு மருந்து அடர்த்தியானது. ஒரு சொட்டில் 5 மில்லி சிரப்புக்குரிய வீரியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மருத்துவரின் ஆலோசனை கட்டாயம்.

    காய்ச்சல் உடல் உறுப்பு பாதுகாப்புக்கான அறிகுறியாகவும் இருக்கும். எனவே அதற்கு ஏற்றவாறு மருத்து மாத்திரைகளை கையாள்வதே நல்லது என்றார்கள்.

    டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குறைந்த கால இடை வெளியில் அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள கூடாது. மாத்திரை கொடுப்பதற்கு முன்பு காய்ச்சலை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    100 டிகிரி காய்ச்சல் தாண்டினால்தான் மருந்து தேவைப்படும். பாராசிட்மால் சொட்டு மருந்து மிகவும் அடர்த்தியானது. அதனுடன் சிரப்பை கலந்து குடிப்பது தவறு.

    பாராசிட்மால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கல்லீரலை செயலிழக்க செய்யவும் வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சாதாரண காய்ச்சல் தானே குறிப்பிட்ட மாத்திரைகளை வங்கி கொடுத்தால் போதும் என்று குழந்தைகளுக்கு ஆபத்தை வரவழைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×