என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
    குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    தாயின் கருவில் கரு உருவாக்கி, இந்த பூமியில் ஜனிக்கும் போது, கருவிற்கு எந்த பலமும், எந்த ஆற்றலும் இருக்காது; அது தோலும், எலும்பும், உயிரும் கொண்ட ஒரு உயிராகவே இந்த பூமியில் பிறப்பெடுக்கிறது. அப்படி குழந்தைகள் பூமியில் பிறக்கையில், அவர்கள் உடல் எல்லாவித நோய்க்கிருமிகளின் தொற்றுகளுக்கும் ஆளாகக் கூடிய வண்ணம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்.

    தடுப்பூசி ஏன் அவசியம் என்ற கேள்விக்கு, நோய் எதிர்ப்பு சக்தி என்ற விடையையே நம்மால் அளிக்க இயலும். அதாவது, குழந்தைகளோ பெரியவர்களோ குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தால், அவர்கள் எளிதில் நோய்த்தொற்றுகளால் தாக்கப்படலாம்.

    ஆகவே, குழந்தைகளை எந்தவித நோய்த்தொற்றுகளும் தாக்காமல் இருக்க, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ, அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அதுவும் முக்கிய நோய்களான polio - போலியோ, measles - மேசல்ஸ், rubella - ரூபெல்லா, rotavirus - ரோடா வைரஸ், mumps - மெம்பிஸ், smallpox - சின்னம்மை - இவற்றைத் தடுக்க கட்டாயம் தடுப்பூசி அவசியம்.
    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நோய்த்தொற்று அவர்களை எளிதில் தாக்கும். ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.
    குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்.

    வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

    உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

    வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.



    பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.

    கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.
    பூண்டு

    உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

    வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.
    உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம்.
    உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறீர்கள்? நாள்தோறும் அவர்களைப் பொறுப்பாகக் கவனிக்கிறோம் என்று சும்மா இருந்து விடுகிறீர்களா? அன்று உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது இல்லையா? அது போலக் கூடுதல் கவனம் செலுத்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

    உலக இளைஞர் புத்தக இயக்கம், உலகக் குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாடத் திட்டமிட்டது. குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்றோர் அவர்கள் நினைவிற்கு வந்தனர். அவர்களில் முதன்மையானவராக டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் இருந்தார். அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதியையே உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.

    அதன்படி, 1967-ம் ஆண்டில் இருந்து இத்திருநாள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகளாவிய அளவில் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகளை அறிவித்துப் பரிசுகளை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தலைப்பைத் தந்து அது தொடர்பான படைப்புகளுக்குப் பரிசு வழங்குகின்றனர்.

    வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள் உணரச் செய்வது, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் புத்தகங்கள் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பதை அறியச் செய்வது இந்த திருநாளின் நோக்கமாகும்.

    இந்த நாளில் நாம் குழந்தைகளாக இருந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தெந்தக் கதைகள் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து உள்ளன. அவை வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் பயன்பட்டன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    நம் உணர்வை குழந்தைகளிடம் சொல்லி அவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து குழந்தைகளுக்குப் பரிசு தரலாம். படிக்கச் சொல்லி அவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.



    நம் குழந்தைகள் நற்பண்பாளர்களாகத் திகழ வேண்டும். எல்லோரிடமும் அன்பாகப் பழக வேண்டும். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். வீரமும் துணிவும் கொண்டவர்களாக விளங்க வேண்டும். நினைத்ததை நிறைவேற்றும் விடாமுயற்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு புத்தகங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, நற்பண்புகளை வளர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து படிக்க கொடுக்கலாம்.

    வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்தில் உள்ள நூல்களைக் குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள். தமிழில் அப்படிப்பட்ட நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வகை நூல்கள் குழந்தைகளின் கதை சொல்லும் திறனையும் கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும்.

    குழந்தைக் கதைகள் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது தெனாலிராமன் கதைகளே. விக்கிரமாதித்தன் கதைகளை குழந்தைகளின் எல்லை தாண்டியதாகவும், வன்முறையைத் தூண்டுபவையாகவும் கருதுகிறோம்.

    குழந்தைகளிடம் கதை கேட்டால் பெரும்பாலானோர் தெனாலிராமன் குதிரை வளர்த்த கதையும், பூனை வளர்த்த கதையும் சொல்வார்கள். உயிரினங்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் கதைகள் அவை. இவற்றைப் படிக்கும் குழந்தைகள் உயிர்களிடம் எப்படி அன்பு காட்டும்?

    மற்றவை பெரும்பாலானவை பொய் சொல்லி ஏமாற்றுவது, திருடிவிட்டுத் தப்புவது போன்ற கதைகளாகவே உள்ளன. எதிர்மறைச் சிந்தனையை வளர்க்கும் இந்தக் கதைகளைக் குழந்தைகள் படிக்கலாமா?

    மாறாக, விக்கிரமாதித்தன் கதைகள் வீரம், நேர்மை, துணிவு, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், உயிரைக் கொடுத்துப் பிறரைக் காப்பாற்றத் துணிதல், செயற்கரும் செயல் செய்தல் போன்ற உயர்ந்த கருத்துகளைச் சொல்கின்றன. கிளி துன்பப்படுவதைப் பார்த்து இரக்கம் கொண்டு தானும் கிளியாக மாறி அதன் துன்பத்தைப் போக்கும் விக்கிரமாதித்தன் செயல் குழந்தைகள் உள்ளத்தில் அன்பை விதைக்கும். அதில் வரும் புதிர் கதைகள் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டும்.

    உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம். அந்த நூல்கள் அவர்கள் மேன்மேலும் வளரத் தூண்டுதலாக அமையும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்கி உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

    பேராசிரியர் எ.சோதி
    பெற்றோரே உலகம் என்று இருக்கும் குழந்தைகள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
    குழந்தைகள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு தயாராக வேண்டிய தருணம் இது. பெற்றோரே உலகம் என்று இருக்கும் அவர்கள் இனி, புதிய உலகமான பள்ளிக்கூடத்திற்குள் அடியெடுத்து வைக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. ஏகப்பட்ட பணத்தை அள்ளிக்கொடுத்து அட்மிஷன் வாங்கிவிட்டாலும், பெற்றோரால் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. ‘குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு செல்லுமா? இல்லை என்றால் அழுது அடம்பிடிக்குமா..’ என்ற கவலை அவர்களை சூழ்ந்துகொண்டிருக்கும். அந்த கவலை தீர இதை படியுங்கள்.

    பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளுக்கு முதலில் பள்ளியைப் பற்றிய விவரங்களை முழுமையாக சொல்லிக் கொடுங்கள். ஆசிரியர்களிடம் நடந்துகொள்ளவேண்டிய முறையை பக்குவமாக உணர்த்துங்கள்.

    ஒழுங்காக படிக்காவிட்டால், ஒழுங்காக ஹோம் ஒர்க் செய்யாவிட்டால் ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்று ஒருபோதும் மிரட்டாதீர்கள். ஆசிரியர்கள் பற்றி கவுரவமான, உற்சாகமான விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.

    குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்கு சென்றால் அழகான விளையாட்டு பொருட்களும், நிறைய புதிய நண்பர் களும் கிடைப்பார்கள். அவர்களுடனும் நீ சேர்ந்து விளையாடலாம் என்று கூறி, பள்ளி ஒரு அழகான அன்பான உலகம் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    அவர்களோடு பள்ளியில் புதிதாய் சேர்ந்திருக்கும் சக மாணவ, மாணவிகளை வாய்ப்பிருந்தால் குழந்தைகளுக்கு இப்போதே அறிமுகம் செய்துவையுங்கள்.

    பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடனே அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக இப்போதே தயாராகுங்கள்.

    சிறிது நேரம் வெளிவிளையாட்டுகள் விளையாட அனுமதியுங்கள். அதன் பிறகு வீட்டுப் பாடங்களை செய்தால்போதும்.

    குழந்தைகளுக்கு எப்படி படிக்க வேண்டும்? எப்படி வரைய வேண்டும் என்பதையெல்லாம் பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுங்கள்.

    பள்ளி திறப்பதற்கு முன்பு முடிந்தால், ஒரு முறை குழந்தைகளை அவர்களது ஆசிரியரிடம் அறிமுகம் செய்துவைக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான பயம் நீங்கும்.

    புதிய சீருடைகள் வாங்கவும், புத்தகங்கள் வாங்கவும் குழந்தையோடு செல்லுங்கள். புத்தகபை, டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற உபகரணங்கள் வாங்கவும் குழந்தையை அழைத்து செல்லுங்கள்.



    பள்ளிக்கூட வாழ்க்கைக்கு குழந்தைகளை வீட்டிலே பழக்கப்படுத்துங்கள். சாப்பிடுவதற்கு முன்னால் கைகளை கழுவுதல், கீழே சிந்தாமல் சாப்பிடுதல், பின்பு பாத்திரங்களை அடுக்குதல், சுத்தப்படுத்துதல் போன்றவைகளை எல்லாம் சுயமாக செய்ய கற்றுத்தாருங்கள். வீட்டிலே சில நாட்கள் அப்படி பழக்குவது நல்ல பலனைத் தரும். பள்ளி வாழ்க்கையை அவர்கள் சிறப்பாக நடத்த இந்த பயிற்சி உதவும்.

    பள்ளி திறப்பதற்கு முன்பே ஒருசில முறை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பள்ளியை சுற்றி காண்பித்து வகுப்பு அறை, மைதானம், நூல் நிலையம் போன்றவைகளை காட்டி ஆர்வப்படுத்துங்கள்.

    பள்ளி திறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே குழந்தைகளை காலையிலே விழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதனால் அவர்கள் பள்ளிக்கு நேரம் தவறாமல் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

    முதல் நாளில் மற்ற குழந்தைகள் அழுவதைப் பார்த்து உங்கள் குழந்தையும் அழத் தொடங்கலாம். அது பழக பழக சரியாகி விடும். பள்ளியிலே விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.

    முதலில் பள்ளியில் விடும்போது, ‘நான் இங்கேயே அதோ அந்த மரத்தடியில் தான் இருப்பேன். நீ போய் விளையாடிவிட்டு வா’ என்று அனுப்பி வைக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் அழுவதை நிறுத்திவிட்டு வகுப்பறைக்குள் செல்வார்கள். இல்லையென்றால் அருகில் யாரும் இல்லை என்ற தவிப்பு அவர்களுக்கு அதிக பயத்தை உருவாக்கிவிடும்.

    பள்ளியில் யாராவது குழந்தையை அடித்திருக்கலாம். ஏதாவது ஒரு பொருளை பிடுங்கி இருக்கலாம். அதனால் அவர்களுக்கு கோபமோ, பயமோ ஏற்பட்டிருக்கலாம். அதை போக்கும் விதத்தில் தினமும் வீட்டிற்கு வந்ததும் அருகில் உட்கார வைத்துக் கொண்டு பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டு விசாரித்து தேவையான ஆலோசனைகளை பக்குவமாக எடுத்துக்கூறுங்கள்.

    எக்காரணத்தை கொண்டும் பிள்ளைகளிடம் ஆசிரியரைப் பற்றி தவறாக பேசவோ, கடிந்துக் கொள்ளவோ கூடாது. அது அவர்கள் மனதில் வேற்றுமையை உருவாக்கிவிடும்.

    அவர்களுக்கு பிரியமான நண்பர்களுடன் பழகவிடுங்கள், அப்போது தான் சிரித்து பேசி நட்புடன் இருப்பார்கள். நல்ல நண்பர்கள் உங்கள் குழந்தையின் தனிமையை போக்குவார்கள். அதன் மூலம் பாதுகாப்பையும் உணர்வார்கள். நட்பு குழந்தைகளை பள்ளிக்கூடத்தை நோக்கி ஈர்க்கும்.

    பள்ளிதான் அவர்களது முதல் வெளி உலகம். அங்கே எல்லா குழந்தைகளாலும் உடனடியாக பொருந்திப்போக முடியாது என்ற உண்மையை உணர்ந்து, நிதானமாக குழந்தைகளிடம் நடந்துகொள்ளுங்கள். மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவைகளை கைவிட்டு அன்பாக நடந்துகொள்ளுங்கள். அனைத்தும் சாத்தியமாகும்.
    மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான் மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன. நமது கல்வியில் பெரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டியது நமது தலையாய கடமையாகும். இன்று ஆங்கில வழிக்கல்வி மீது மக்களுக்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுள்ளது. தமிழைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழைப் பொறுத்தவரை சில செய்யுள் பகுதிகள் மட்டும் மனப்பாடம் செய்ய வேண்டியது இருக்கும். மற்றபடி எல்லாப்பாடங்களையும், பொதுவாகப் புரிந்து படிக்க வேண்டிய மனப்பக்குவத்தை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். எல்லா பாடங்களையும் மானப்பாடம் செய்யவைப்பது மிகப்பெரிய தவறு.

    மாணவர்கள் தனியாகச் சிந்திக்கின்ற தன்மையை உருவாக்குவதோடு, சொந்தமாக எழுதுகின்ற வழக்கத்தையும் கொண்டு வர வேண்டும். அதற்கு மனப்பாடம் செய்தலும், ஒப்பித்தலும் பரம எதிரிகளாக அமையும் என்பது திண்ணம். மாணவர்களை, ‘இந்த பாடத்தைதான் படிக்க வைக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. அப்போதுதான் மாணவர்களால் ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லவர்களாக விளங்கும் வாய்ப்பு கிடைக்கும்.



    மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கும் கல்வியைப் புகட்ட வேண்டும். பள்ளிக்கூடங்களிலேயே திறனாய்வுத் தேர்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும். இனி வரும் மாணவச் சமுதாயம், கடுமையான போட்டிகள் நிறைந்த ஒரு உலகத்தை சந்திக்க இருக்கிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்வதில் பள்ளிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேல்நிலைப்பள்ளி படிப்பு வரை தான் கல்வி நிலையங்கள் ஒரு மாணவனுக்கு ஆடுகளமாக அமையும். எனவே அந்தக் காலக்கட்டத்தில் அவனுக்கு எல்லா பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். கல்லூரிப்படிப்பின் போது மாணவனின் எண்ணங்கள் சிதறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே ஒரு மாணவனை பக்குவப்படுத்துவதற்கு வேண்டிய இடமே ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகள் என்பதில் சந்தேகம் இல்லை.

    எனவே மேல்நிலைப்பள்ளி வரை உள்ள வகுப்புகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு மாணவர்களுக்கு பொது அறிவுச்சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும். வினாடி-வினா போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும். திறன் அறியும் தேர்வு முறைகளை கல்வியில் புகுத்த வேண்டும். பக்கம் பக்கமாக எழுதுகின்ற முறையினை மாற்றி எதிர்காலத்திற்குத் தேவையான நுண்ணிய, நுணுக்கமான முறைகளை கல்வியில் புகுத்தினால் நாடு நலம் பெறும்.

    -முனைவர் ராம.கண்ணன், நெல்லை 
    குழந்தைகளுக்கு கோடை காலம் அவ்வளவு ஏற்றதல்ல. அவர்களது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, நீரிழப்பு காரணமாக தோல் வியாதிகள் உண்டாகலாம்.
    குழந்தைகளுக்கு கோடை காலம் அவ்வளவு ஏற்றதல்ல. அவர்களது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, நீரிழப்பு காரணமாக தோல் வியாதிகள் உண்டாகலாம்.

    குழந்தைகளுடன் வெளியே செல்ல திட்டமிட்டால் மறக்காமல், அவர்களின் சருமத்திற்கு பொருத்தமான சன்ஸ்கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். அவை தோல் வியாதிகளில் இருந்து காக்க உதவும். வெளி இடங்களில் அதிக நேரம் செலவிடுவதாக இருந்தால் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பொருத்தமான சன்ஸ் கிரீமை பூசிக்கொள்வது நல்லது.

    காட்டன் ஆடை உடுத்துவதோடு அது வெளிர் நிறம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் பாகங்களை வெயிலில் இருந்து காக்கும். அதேபோல் குழந்தைகளுக்கு தரமான டயாபர்களையும் உபயோகப்படுத்த வேண்டும். அவைகளையும் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரும அலர்ஜி பிரச்சினை உருவாகக்கூடும்.

    வெளியிடங்களில் குழந்தை தூங்கும்போது எடை குறைவான போர்வையை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    அகலமான தொப்பியை அணிவது வெயிலில் இருந்து குழந்தையின் முகத்திற்கு பாதுகாப்பு தரும்.

    பச்சிளம் குழந்தையாக இருந்தால் அடிக்கடி தாய்ப்பால் புகட்ட வேண்டியது அவசியம். அது உடலில் உள்ள நீரிழப்பை ஈடு செய்யும். அவ்வப்போது கொஞ்சமாவது தண்ணீர் கொடுப்பதும் அவசியம்.

    தேவைப்பட்டால் பசும் பாலைகாய்ச்சி வழங்கலாம்.

    சிறுவர், சிறுமிகளை வெளி இடங்களில் சென்று விளையாடுவதற்கு ஆசைப்பட்டால் அதற்கு கடிவாளம் போடக்கூடாது. அதேவேளையில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது.

    குழந்தைகள் வியர்க்குரு பிரச்சினையால் அவதிப்பட்டால் காய்ச்சிய நீருடன் தயிரை கலந்து உடலில் தடவி வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும். முல்தானி மெட்டியும் பயன்படுத்தலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து வியர் குருவை போக்கும்.

    பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நீரிழப்பு அதிகமாக இருக்கும். அடிக்கடி தர்ப் பூசணி கொடுப்பது நல்லது. அது உடலில் நீரின் அளவை ஈடு செய்ய உதவும்.



    கோடை காலத்தில் காரமான உணவு வகைகள் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேற வழிவகுத்துவிடும். குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும், பழ வகைகளையும் கொடுக்க வேண்டும். கார உணவுகள் குழந்தைகளின் வயிற்றுக்கும் ஏற்றதல்ல.

    உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. அவை சருமத்திற்கு நல்லது. ரத்த ஓட்டம் சீராக நடைபெற துணைபுரியும்.

    எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அவை செரிமானமாகுவதற்கு அதிக நேரமாகும். அதனால் உடல் சோர்ந்து சோம்பல் தலைதூக்கி விடும்.

    ஜூஸ் வகைகள், குளிர்பானங்களில் இனிப்பு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்புவார்கள் என்பதற்காக அதிக இனிப்பு கொடுத்துவிடக்கூடாது.

    1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் ஒன்றரை லிட்டர் திரவ உணவுகளை கொடுப்பது அவசியமானது. அவை தண்ணீர், ஜூஸ், சூப்புகள் என எந்தவகையாகவும் இருக்கலாம். கால் லிட்டர் பால் கொடுப்பதும் அத்தியாவசியமானது.

    விளையாடும் நேரம் தவிர மற்ற சமயங்களில் வீட்டு தோட்ட வேலைகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தலாம். அது உடலுக்கு நல்ல உடற் பயிற்சியாகவும் அமையும். பெற்றோருக்கும் நேரம் பயனுள்ள வகையில் செலவாகும்.

    கோடை கால சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரலாம். அந்த முகாம்கள் நல்ல ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தொல்லைப்படுத்துகிறார்கள் என்பதற்காக கோடை கால முகாம்களுக்கு அனுப்பிவிடாதீர்கள். முகாம்களை பற்றி தீர ஆராயுங்கள். ஒருசிலவற்றில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 
    டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல்.
    பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! -இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிட்டல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளை குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல்.

    இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக்குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன. அதிலும் சுட்டிக்குழந்தைகளின் நிலைமை படுமோசம். ஏனெனில் அவர்கள் வளர்க்கப்படுவதே, அப்ளி கேஷன்களின் உதவியுடன்தான். நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் மலையேறி, யூ-டியூப் வீடியோக்களை காட்டி சோறு ஊட்டும் நிலை உருவாகிவிட்டது. அதனால் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களிலும், அதிலிருக்கும் அப்ளிகேஷன்களிலும் ஸ்மார்டாக செயல்படுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆம்..! குழந்தைகள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள், யாருக்கும் தெரியாமல் அவர்களை கண் காணிக்கிறதாம். இந்த கண்காணிப்பு குழந்தை கடத்தல் வரை நீளலாம் என எச்சரிக்கிறார்கள், ஆய்வாளர்கள். இந்த அதிர்ச்சி தகவல்களுக்கு பிள்ளையார் சுழிப்போட்டவர்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை நிரூபித்ததுடன், அதற்கு காரணம் பெற்றோர்கள்தான் என கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

    அமெரிக்காவில் ‘கோப்பா’ US Children’s Online Privacy Protection Act (Coppa) என்ற குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம், குழந்தைகளின் தகவல்களை பாதுகாப்பது தான். ஆனால் கோப்பா சட்டத்தை கண்டுகொள்ளாத பல அப்ளிகேஷன் நிறுவனங்கள், குழந்தைகளின் தகவல்களை திருடும் வகையில் பல ஆயிரம் அப்ளிகேஷன்களை உருவாக்கியிருக்கிறார்களாம். இதை கலிபோர்னியா ஆய்வாளர்கள் நிரூபித்ததுடன், ஒருசில கருத்துக்கணிப்புகளையும், ஆய்வு களையும் நடத்தியிருக்கிறார்கள். அவை அனைத்துமே குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடுக்கிட வைக்கிறது. அது என்ன தெரியுமா...? பெற்றோர்கள்தான் குழந்தைகளை இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கவைக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது.



    எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், ‘பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாக’ கவலை தெரிவித்திருக்கிறார்கள். அதனால்தான் தாங்களும் செல்போனிற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க... இருபத்து ஐந்து சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட் போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகமாக நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீத குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர். இப்படி பெற்றோரும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டு வைப்பதற்கு ஒரே காரணம் ஸ்மார்ட்போன்களும், அப்ளி கேஷன்களும்தான்.

    சமூகவலைதளம், நவீன அப்ளிகேஷன்களால் குடும்ப உறவுகளை மறந்து, குழந்தைகளையும் ‘தகவல் திருட்டு’ என்னும் சிக்கலில் சிக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ என்கிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லைஎனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா..? இந்த கருத்தை புள்ளிவிவரங்கள் நம்பவைக்கின்றன.

    இந்த சூழலில் தான் கூகுள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. அதாவது குழந்தைகளை மறைமுகமாக கண் காணிக்கின்றன.



    குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள்?, எதை தேடுகிறார்கள்?, அவர்களுக்கு எது பிடிக்கிறது?, எங்கு இருக்கிறார்கள்? என்பதைக் கண்ணும் கருத்துமாக கவனிக்கின்றன. உதாரணத்திற்கு... ஒரு குழந்தை ரிமோட்டில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேடினால், அதை கண்காணிப்பவர்கள், அதுசம்பந்தமான விளம்பரங்களையும், இணையதளங்களையுமே குழந்தைகளின் கண்களில் தென்படும்படி உலாவ விடுவார்கள். இது மோட்டார் சைக்கிளுடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் வயதுக்கு மீறிய விஷயங்களையும், ஆபாசமான தகவல்களையும் உலாவ விட்டால் என்ன ஆவது...?.

    ஒருசில அப்ளிகேஷன்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை திருடுகின்றன. ஒருசில ஆப்ஸ்கள் காண்டாக்ட் தகவல்களையும், குழந்தைகளின் விவரங்களையும் திருடுகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்பு கின்றன. இப்படியே தகவல் திருட்டு பட்டியல் நீள்கிறது. பெரியவர்களிடம் செய்யமுடியாத தகவல் திருட்டை, குழந்தைகளின் மூலம் செய்வதுதான் ஒருசில அப்ளிகேஷன் நிறுவனங்களின் நோக்கம். அதற்கு நாமும் துணைபோகிறோம் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. இத்தனைக்கும் பிரபலமான, சுமார் ஏழரை லட்சம் முறைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம்.

    குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே கூகுள் நிறுவனமும், பேஸ்புக் நிறுவனமும் தனிநபர் தகவல்களை மிகப் பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை அடிக்கடி உயிர்ப்புடன் துடிப்பது உண்டு. அந்தசமயங்களில் மட்டும் வாய்திறக்கும் கூகுள், அந்த சர்ச்சையை மூடி மறைக்க ஒருசில அப்ளிகேஷன்களை தடைசெய்வதும் உண்டு.

    மேலும் பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் உறுதியளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இப்போதும் உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்தவிதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்...!

    கட்டுரையாளர்: சேவியர்
    நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.
    கோடையில் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கிறீர்களா குட்டீஸ். அதற்காக செல்போன் விளையாட்டில் மூழ்கிவிடாதீர்கள். செல்போன் விளையாட்டுகளைவிட சுவாரசியமான விளையாட்டுகள் பல நமது பாரம்பரியத்தில் உண்டு. மரபு விளையாட்டுகள் விளையாடுவதற்கு விறுவிறுப்பாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும், அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும். அதே நேரத்தில் கோடையின் வெயில் நம்மை தாக்காமலும் காக்கும். வீட்டிற்குள்ளும், நிழலிலும் அமர்ந்து விளையாடும் சில பாரம்பரிய விளையாட்டுகளை பார்ப்போமா...

    நமது பாரம்பரிய விளையாட்டுகள், வரலாறு அறிய முடியாத பழமை கொண்டது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஏராளமான விளையாட்டுகள் இருந்துள்ளன.

    சொக்கட்டான் (தாயக்கட்டம்), சில்லுக்கோடு (நொண்டியாட்டம்), கண்ணாமூச்சி (கண்டுபிடித்தல் ஆட்டம்), திருடன் போலீஸ், தட்டாங்கல் (சுட்டிக்கல் அல்லது கல்லு பிடித்தல்), கிச்சுக்கிச்சு தாம்பாளம், குலைகுலையாய் முந்திரிக்கா, பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், கில்லி (சில்லுக்குச்சி), பம்பரம், கோலியாட்டம், பல்லாங்குழி, ஏறுதழுவுதல், கபடி, உறியடித்தல், கோகோ, மாட்டுவண்டி பந்தயம், சைக்கிள் பந்தயம், இளவட்டக் கல் தூக்குதல் என நமது பாரம்பரிய விளையாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இவற்றில் சொக்கட்டான் , தட்டாங்கல், கிச்சுக்கிச்சு தாம்பாளம், பூப்பறிக்க வருகிறோம், ஆடுபுலி ஆட்டம், பரம்பரம், கோலி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள் வீட்டிற்குள்ளும், நிழல் உள்ள இடங்களிலும் எளிமையாக விளையாடலாம்.

    பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கு வலுவூட்டும். சூழலுக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு மற்றும் தைரியம் போன்ற பண்புகளை வளர்க்கக்கூடியது. விரைவாக செயல்படும் ஆற்றல், அறிவுத்திறன், கூர்மைத்திறன், நினைவாற்றல் மேம்பாடு, மனபலம் தரக்கூடியது. உறவு வளர்க்கும் ஆற்றல், கூடிவாழும் இயல்பை வளர்க்கும் திறனும் நமது விளையாட்டு களுக்கு உண்டு.

    தாயக்கட்டம்

    கோடை மற்றும் மழைக் காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடும் விளையாட்டுகளில் முக்கியமானது சொக்கட்டான் எனப்படும் தாயக்கட்டம். ஐந்துக்கு ஐந்து சதுரங்கள் கொண்ட கட்டத்தில் அல்லது, 4 பக்கமும், ஐந்திற்கு மூன்று என்று அமைந்த கட்டங்களால் ஆன தளத்தில் ஆடும் விளையாட்டு இது. நான்கு பக்கமும் தலா ஒருவர் அமர்ந்து விளையாடலாம்.

    எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டோ அல்லது தனியாகவோ விளையாடலாம். ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். பகடைக் காய்களில் விழும் எண்களுக்கு ஏற்ப கட்டங்களில் காய்களை நகர்த்தி விளையாடுவார்கள். அடுத்தவர் காய் வைத்துள்ள கட்டத்தில் சரியாக முடியும் வகையில் எண்ணிக்கை வந்தால் அந்த காய் வெட்டுப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். மீண்டும் அவர்கள் தாயம் போட்டுத்தான் காயை நகர்த்த வேண்டும். வெட்டியபின் கட்டத்தை ஒரு சுற்று சுற்றி, பழம் அடைய செல்ல வேண்டும். முதலில் நான்கு காய்களையும் மீட்டு கொண்டு வந்து பழமாக்குபவர் வெற்றி பெற்றவராவார்.

    கிராமப்புறங்களில் சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், வெறு சிறு விதைகள் போன்றவற்றை காய்களாக பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கில் வண்ணவண்ண காய்களும், பகடைகளும் கிடைக்கின்றன. தாயக்கட்ட விதிமுறைகள் இடங்களுக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். சொக்கட்டான் ஆட்டம் சில மணி நேரங்களுக்கு சுவாரஸ்யமாக பொழுதுபோக்க உதவும்.



    பல்லாங்குழி

    சிறுமிகள் மற்றும் பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்கும் விளையாட்டு பல்லாங்குழி. பல்வேறு உலக நாடுகளிலும் பல்லாங்குழி ஆட்டம் சிறிய மாறுதல்களுடன் விளையாடப்படுகிறது. மரப்பலகையில் சிறுசிறு குழிகளுடன் இருக்கும் விளையாட்டு சாதனத்தில் முத்துகளை நிரப்பி விளையாடுவார்கள். ஒரு குழியில் உள்ள முத்துகளை எடுத்து, அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொன்றாக இட்டு, முத்து தீரும் இடத்தில் வெற்றுக் குழி வரும்போது, அவர் அடுத்த கட்டத்தில் உள்ள முத்துகளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார். இப்படி போட்டியாளர் இருவர் மாறி மாறி ஆடும்போது, கடைசி முத்து தீரும் வரை ஆட்டம் நடைபெறும். யார் நிறைய முத்துகள் சேர்க்கிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார். இதிலும் சில ஆட்ட முறைகள் உள்ளன. விதிமுறையிலும் சிறிது வேறுபாடுகள் வைத்து விளையாடுவது உண்டு.

    சிறுவர்களின் கணித அறிவை வளர்ப்பது, புத்திசாலித்தனமாக செயல்படும் ஆற்றலை வளர்ப்பது பல்லாங்குழி ஆட்டத்தின் சிறப்புகளாகும்.

    ஆடுபுலியாட்டம்


    அறிவுத்திறனை வளர்க்கும் வியூக விளையாட்டு ஆடு புலி ஆட்டம். இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இந்த ஆட்டம் விளையாடப் படுகிறது. முக்கோணம் மற்றும் செவ்வகம் இணைந்ததாக ஆடுபுலி ஆட்டத்தின் கட்டங்கள் இருக்கும். இதை எளிதாக சாக்பீஸ் கட்டிகளில் வரைந்து கொண்டு ஆடுவது மக்களின் வழக்கம். இதில் 3 புலிக் காய்கள் (கற்கள்), 10 அல்லது 15 ஆடு காய்கள் (சிறுகற்கள்) இருக்கும். ஒவ்வொரு கட்டம் சந்திக்கும் புள்ளியில் காய்களை வைக்க வேண்டும். புலியானது ஆடு காய் இருக்கும் புள்ளியைத் தாண்டி அடுத்த புள்ளியில் தாவும் வகையில் வைத்துவிட்டால் ஆடு ஆட்டமிழக்கும். அடுத்தடுத்த புள்ளியில் இரு ஆடுகள் இருந்தால் புலியால் தாவ முடியாது. அதேபோல இரு பக்கமும் புலி தாவ முடியாத அளவு ஆடுகள் மறைத்துக் கொண்டால் புலிக் காயை நகர்த்தியவர் தோல்வி காண்பார். இந்த ஆட்டத்தில் ஆடுகளை புத்திசாலித்தனமாக நகர்த்தினால் வெற்ற பெற முடியும்.

    கோலி- பம்பரம்

    இதேபோல கோலிக் குண்டுகள் மற்றும் பரம்பர விளையாட்டுகளையும் வீட்டிலிருந்த படியும், மரத்தடி நிழலிலும் எளிதாக விளையாடலாம். கோலி ஆட்டத்தில் பல வகைகள் உண்டு. விதிமுறைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுவது உண்டு.

    பம்பரங்களை பொழுதுபோக்காக சுற்றி விளையாடுவது, குழுவாக இணைந்து விளையாடுவது உண்டு.

    திருடன்-போலீஸ்

    கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன்-போலீஸ். 5 குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு. சிறுதுண்டு காகிதத்தை எடுத்து சதுரமாக வெட்டிஅதில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என எழுதி மடித்து தரையில் போட்டவுடன் ஆளுக்கொரு சீட்டை எடுப்பர். பின்பு போலீஸ் யார் என்பர்.அந்த சீட்டு உள்ளவர் நான் தான் போலீஸ் என்றவுடன் மற்ற நால்வரும் அமைதியாக இருப்பார்கள். போலீஸ் சீட்டு வைத்து உள்ளவர் திருடன் சீட்டு வைத்திருப்பவரை கண்டுபிடிக்க வேண்டும். திருடன் சீட்டு வைத்திருப்பவருக்கு எந்த வெற்றி புள்ளியும் இல்லாததால் அவர் போலீசிடம் தப்பிக்க பல்வேறு முகபாவனைகளை கையாள்வார். அதை கூர்ந்து நோக்கி நால்வரில் திருடனை கண்டறிய வேண்டும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் மனநிலையைக் கணிக்கும் உளவியல் பயிற்சியைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு.

    இனிமை மிகுந்த பாரம்பரிய விளையாட்டுகளை ஆடி, கோடையின் கொடுமையில் இருந்து தப்புவோம். அறிவையும், சமூகப் பண்பையும் வளர்த்து மகிழ்வோம்! 
    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.
    வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடர்களை பயன்படுத்துவதை விட எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.

    வெயில் காலத்தில் முகத்தில் கொப்பளங்களோ, கட்டிகளோ வருவதற்கு முதல் காரணம், உடலில் எதிர்ப்புசக்தி குறைவதுதான். இரண்டாவது காரணம், அதிகமாக வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உலர்ந்த தன்மை ஏற்படும். இதனை, நீர்ப்போக்கு (Dehydration) என்பார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் சருமத்தில் பெரும்பாலும் கட்டிகள் ஏற்படுகின்றன.

    சிலருக்கு வெயில் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். இதனாலும் முகத்தில் கட்டிகள் ஏற்படலாம். உடலிலுள்ள கழிவுகளும், உடல்சூடும் வெளியேறாமல் உடலிலேயே தங்குவதால், இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. எனவே, வெயில் காலத்துக்கு முன்பிலிருந்தே சருமத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை வெயிலில் குழந்தைகள் விளையாடும்போதும் கூட மறக்காமல் அதிக தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது குடிக்க வேண்டும்.



    எண்ணெய் தேய்த்து குளிப்பதனால், உடலில் சூடு தங்குவது தடுக்கப்படும். வாரத்துக்கு இரண்டு முறை, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, அதில் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டுக் குளிக்கவும். வெயில் காலத்தில், விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, உடலின் சூடு வெளியேறி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    நாட்டு மருந்துக் கடைகளில் குளிர் தாமரை தைலம் கிடைக்கும். அந்த எண்ணெயுடன், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் அரை டீஸ்பூன்  

    நல்லெண்ணெய், இயற்கையான சன்ஸ்கிரீன் லோஷன். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால், வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

    கறிவேப்பிலையை காம்புடன் எடுத்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து சொட்டு விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில்விட்டு, அந்தக் கறிவேப்பிலை காம்பை விளக்கெண்ணெயுடன் உரசினால், விழுது போன்று கிடைக்கும். அதனை, வேனில்கட்டிகள் வந்துள்ள இடங்களில் பூசி வந்தால், கட்டிகள் நீங்கும்.

    நாட்டு மருந்துக் கடைகளில் செங்காவி கிடைக்கும். அதனை பவுடராக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குச் செய்துகொள்ளவும். பின்னர், அதனுடன் 10 சொட்டு விளக்கெண்ணெய், 2 சொட்டு தேன் கலந்து, வேனில்கட்டிகளில் பூசினால், இரண்டே நாள்களில் கட்டிகள் மறைந்துவிடும்.
    பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. பெற்றோர் பெண்களை பற்றி எப்போதும் ஆண் குழந்தைகளிடம் கவுரவமாகவே பேசவேண்டும்.
    ‘பெண் குழந்தைகளை கட்டுப்பாட்டோடு வளர்க்கவேண்டும்’ என்று காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், உடை அணிவது முதல் வெளியே சென்று திரும்புவது வரை பல விஷயங்களில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவளுக்கு வெளி இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கும் அவளே மூலகாரணம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    சமூகம் என்பது ஆண்-பெண் இருபாலரையும்கொண்டது. அப்படியிருக்கையில் ஏதாவதொரு வகையில் நடக்கும் சமூக குற்றத்திற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இந்த தவறான கருத்து தவறு செய்யும் ஆண்களை சுலபமாக தப்பிக்க வழிவகை செய்துவிடுகிறது. பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. ஆண் குழந்தைகளை, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் வளர்க்கவேண்டும். வீட்டிலிருந்தே இதற்கான பாடத்தை தொடங்க வேண்டும். முதலில் அம்மா, சகோதரி என்று வீட்டிலுள்ளவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். அக்கம்பக்கத்து பெண்களையும் கேலி, கிண்டல் செய்வதை அனுமதிக்கக்கூடாது. பெண்களை பற்றி எப்போதும் ஆண் குழந்தைகளிடம் கவுரவமாகவே பேசவேண்டும்.

    ஒழுக்கம்

    பெண்கள் மட்டுமே ஒழுக்கம் என்ற விஷயத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். அதுபற்றிய அறிவுரை பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுத்து அதன்படி நடக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களை எப்படி அழைக்கவேண்டும்? அவர் களிடம் எப்படி மரியாதையாக பழகவேண்டும்? என்பது போன்ற விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று என்பதை குழந்தை பருவத்திலேயே புரிய வைத்துவிடவேண்டும். ஒழுக்கத்தில் மிக முக்கியமானது பெண்களை மதிப்பது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்திடவேண்டும்.

    தவறுகள்

    தவறுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பதில் இருபாலினத்தவரிடமும் எந்த பாகுபாடும் காண்பிக்கக்கூடாது. யார் தவறு செய்தாலும் அவர்களை திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்காக கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தவறுகள் செய்வதற்கு பயமும், தவறு செய்திருந்தாலும் தங்களை திருத்தி கொள்வதற்கான மனப்பக்குவமும் உண்டாகும். மூளையும் அதற்காக பழக்கப்படும். எந்த ஒரு வேலையையும் யோசித்து நிதானமாக செய்யும் வழக்கமும் அவர்களுக்கு ஏற்படும்.

    சுதந்திரம்


    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்படுவதுதான் நடைமுறையில் இருக்கிறது. வெளியில் சென்று நண்பர்களுடன் அதிக நேரம் ஊர் சுற்றுவது, நேரம் கடந்து வீட்டிற்கு வருவது, மனம் விரும்பியபடி சிகை அலங்காரம் செய்துகொள்வது, விதவிதமாக உடை அணிந்துகொள்வது, வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்வது, பெண்களைப் பற்றி தவறாக விமர்சிப்பது போன்ற பல விஷயங்களில் ஆண் பிள்ளைகளின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமை கொடுத்து கண்டிப்போடு வளர்க்க வேண்டும். ஊர்சுற்றுவது பெண்களுக்கு தவறு என்றால், அது ஆண்களுக்கும் தவறுதான். காலம் கடந்து வீடு திரும்புவது, எங்கு போகிறோம் என்பதை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் போவது எல்லாம் தவறுதான். அது ஆண், பெண் இருபாலருக்குமே பாதுகாப்பற்றதும்கூட.

    மமாக பாவித்தல்

    பெண்களை சமமாக பாவித்து மதிக்கும் பக்குவம் ஆண் களுக்கு வரவேண்டும். அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவருமே ஆண்-பெண் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும். எந்த விதத்திலும் பெண்கள், ஆண்களுக்கு குறைந்தவரில்லை என்ற விஷயம் அவர்கள் மனதில் பதியவைக்கப்படவேண்டும்.



    தவறான விமர்சனம்

    பெண்களை கேலி செய்வது, மற்றவர்கள் முன் தரம்பிரித்து பேசுவது போன்றவை தவறு என்பதை புரிய வைக்கவேண்டும். எப்போது அந்த தவறை ஆண் குழந்தைகள் செய்தாலும் உடனடியாக தலையிட்டு முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். சிறுவர்கள் வெளியில் சென்று தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகும்போது அவர்களின் பேச்சையும், நடத்தையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். தன்னைவிட மூத்தவர்கள் பெண்களை தவறாக விமர்சனம் செய்தால், தானும் அதுபோல் நடந்துகொள்ள முன்வருகிறார்கள். அதை அப்படியே அனுமதித்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் வரம்பு மீறி விமர்சனம் செய்ய தொடங்கி விடுவார்கள். சிலர் பள்ளி ஆசிரியைகளைகூட குரு என்றும் பார்க்காமல் தவறாக விமர்சிக்கிறார்கள். அது விளையாட்டுத்தனமானது அல்ல, விபரீதமானது என்பதை சிறுவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.

    பெண்களை அடிப்பது

    பெரும்பாலான சிறுவர்கள், பெண்களிடம் தங்கள் பலத்தைக்காட்ட நினைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே சட்டென்று அடித்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். இந்தப் பழக்கம் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. சகோதரி களுடன் சண்டை வரும்போது அவர்களை அடிக்க முற்படும் வழக்கத்தை கண்டித்து நிறுத்தாவிட்டால் அது வெளியிலும் தொடரும். இது பெரிய சிக்கலில் போய் முடியும்.

    பொறுப்பு

    ஆண்களுக்கு நிறைய சமூக கடமைகள் இருக்கின்றன என்பதை சிறுவயதிலே அவர்களுக்கு உணர்த்தவேண்டும். வீட்டில் உள்ள பெண்களுக்கு துணையாக இருப்பதும், அதேபோல வெளியிலிருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதும் அவர்களுடைய கடமை. இந்த பொறுப்புணர்வு வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். மனதில் அலைபாயும் எண்ணங்களை தடுத்து நிறுத்தி, கல்வியில் கவனம் செலுத்த கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும் விஷயங்களைவிட நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தான் மனதில் நன்கு பதியும். நல்ல குடும்பத் தலைவராக, குடும்ப பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள மனைவி, அம்மா, சகோதரி மற்றும் உறவுப் பெண்களையும், மற்ற பெண்களையும் மரியாதையாக நடத்துங்கள். அதைப் பார்த்து உங்கள் ஆண்பிள்ளைகள் கற்றுக்கொள்ளட்டும். 
    மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.
    வெறும் பள்ளிப்பாடங்கள் மட்டும் வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நாம் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமக்கு அடையாளத்தையும், வெற்றியையும் தேடித் தருகின்றன. மாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியல் இதோ...

    சுறுசுறுப்பு :

    வெற்றியின் அடிப்படையே சுறுசுறுப்பான இயக்கத்தில்தான் உள்ளது. சோம்பேறிகளால் சாதிக்க முடிவதில்லை. சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டால் அவர்களால் அடைய முடியாத இலக்கு இல்லை. பலருக்குள்ளும் சோம்பேறித் தனம் எனும் பூதம் ஒளிந்து கொண்டிருக்கும். ஆனால் வெற்றியாளர்களிடம் மட்டுமே சுறுசுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் இருப்பது, படிக்கும் நேரத்தில் அரட்டையடித்து பொழுதுபோக்குவது, விளையாடி மகிழ்வது, தேவையற்ற சிந்தனையில், செயல்களில் நேரத்தை வீணடிப்பது எல்லாமே சோம்பேறித்தனமும், அசட்டை எண்ணத்தின் வெளிப்பாடும்தான். கடும் முயற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தை ஒழிக்க முடியாது. சோம்பல் ஒழிந்தால் சுறுசுறுப்பு தானே பிறந்துவிடும். வெற்றியும் துளிர்விடத் தொடங்கிவிடும்.

    ஒழுங்குபடுத்தல் :

    எதற்கும் ஒரு திட்டம் வகுத்து, சீரான ஒழுங்குடன் செயல்படுவது வெற்றி மாணவர்களின் அடையாளம். பாடத்திட்டங்களை சீராக தினமும் படிப்பவர்கள், தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவதுபோல, எதிலும் திட்டமிட்டு செயல்படுபவர்கள் வெற்றியை எட்டுவது திண்ணம்.

    பிரித்து செயல்படுங்கள் :

    பல பாடங்கள் படிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்ய முடியாது. எனவே ஒன்றை திறம்பட செய்து முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது முக்கியமாகும். எனவே எத்தனை பாடங்கள், திட்டங்கள் இருந்தாலும் அவற்றை பகுதி, பகுதியாக பிரித்து செயல்படுத்துவது வெற்றியை எளிதாகப் பெற துணை செய்யும்.



    நடப்பதை பதிவு செய்யுங்கள் :

    வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவததை குறிப்பெடுப்பதுபோல, இலக்கை நோக்கிய பயணத்தையும் குறிப்பெடுப்பதும், நடப்பதை பதிவு செய்வதும் முக்கியமாகும். இதுதான் ஏற்ற இறக்கங்களை அறிந்து அடுத்த கட்ட திட்டமிடலுக்கு உதவும்.

    ஆராய்ந்து செயல்படுங்கள் :

    வெற்றித் திட்டத்தை அவ்வப்போது ஆராயுங்கள். இப்போதைக்கு கல்விதான் இலக்கு என்றால் படிக்கும் இடம், படிக்கும் நேரம், உடன்படிக்கும் மாணவர் குழு ஆகியவற்றை தீர்மானிப்பதும், இந்த செயல்பாடு வெற்றிக்கு உதவுகிறதா? என்பதை ஆராய்வதும் முக்கியமாகும்.

    கேள்வி கேளுங்கள் :

    கேள்வி ஞானம் எப்போதுமே வெற்றிக்கு அவசியமாகும். பாடங்கள் படிக்கும்போதும், ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போதும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, யார் என பலவிதமான கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது இலக்கை அடைய உதவும்.

    ஓய்வு முக்கியம் :


    வெற்றிக்கு செயல்பாடுமட்டுமல்ல, போதிய ஓய்வும் அவசியம். நமது உள்ளம் ஓய்வின்றி செயல்படலாம். ஆனால் உடல் ஓய்வின்றி செயல்படாது. எனவே உடலுக்கு போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு செயல்பட்டால் உள்ளம் மேலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றியை துரிதப்படுத்தும்.

    படிக்கும்போது வேண்டாத பழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பாழகிவிடுகிறது. மேற்கண்ட நற்பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறுவது நிச்சயம்! 
    கோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்..
    கோடைக்காலத்தில் தான் குழந்தைகளுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும், உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். எனவே, கோடையில் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். கோடையில் குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு என்னென்ன பழங்கள் கொடுத்தால் நன்மை தரும் என்பதை பற்றி பார்ப்போம்..

    ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி மாதுளம் பழத்திற்கு உண்டு. இது, குழந்தைகளின் இதய ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.

    கோடைக்காலத்தில் தர்பூசணியை குழந்தைகளுக்கு பழச்சாறாக தராமல், பழமாகவே சாப்பிட கொடுக்கவும். ஏனெனில், உடலில் நீர் வற்றிப்போகாமல் இருக்கப் பெரிதும் உதவும்.

    கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்சூடு காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தடுக்கும் சக்தி கொண்டது, சப்போட்டா பழம். இந்த பழம் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

    பெரிய நெல்லிக்காயை குழந்தைகளுக்கு அப்படியே கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். அதனால் சிறிது உப்பு, மஞ்சள் கலந்து வேகவைத்துக் கொடுக்கவும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



    வெயில் காலத்தில் பச்சை, கருப்பு, உலர்ந்த திராட்சை என எல்லா வகைகளையும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது வெயில் காலத்தில் குழந்தைகளை எளிதில் சோர்வடைய விடாமல் பாதுகாக்கும்.

    கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகளை நீக்க வல்லது. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் அடைவதற்கும் உதவுகிறது.

    வெயில்கால மதிய வேளைகளில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை கலந்து தருவது நன்மை தரும்.

    சாத்துக்குடியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பல், ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

    கோடைக்காலத்தில் முலாம் பழத்தை துண்டுகளாக்கி சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடல்சூட்டையும் குழந்தைகளுக்கு ஏற்படும் சருமப் பிரச்னையை தடுக்கும்.

    கோடைக்காலத்தில் குளிர்ச்சியை தரக்கூடிய பழங்களில் ஒன்று வெள்ளரி. இது குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணித்து, உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.
    ×