என் மலர்tooltip icon

    உலக கோப்பை கால்பந்து-2022

    • முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதியில் தென் கொரியா 2 கோல் அடித்தும் 3-2 என்ற கணக்கில் தோற்றது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68- து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • முதல் பாதியில் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் அதிரடியாக ஆடிய கேமரூன் இரு கோல் அடித்து சமன் செய்தது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா, கேமரூன் அணிகள் மோதின.

    போட்டியின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்டெலொடோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் செர்பியா இரு கோல்கள் அடித்து அசத்தியது. 46-வது நிமிடத்தில் பாவ்லோவிக் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் சாவிக் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் செர்பியா 2-1 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 53-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேமரூன் வின்செண்ட் அபுபக்கர் 63 வது நிமிடத்திலும், எரிக் மாக்சிம் 66வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    ஆட்டநேர இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
    • தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'ஜி' பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் கேமரூன்-செர்பியா ( மாலை 3.30 ), பிரேசில்-சுவிட்சர்லாந்து (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    கேமரூன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடமும், செர்பியா 0-2 என்ற கணக்கில் பிரேசிலிடமும் தோற்று இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரேசில் , சுவிட்சர்லாந்து அணிகள் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. எனவே 2-வது வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.

    5 முறை சாம்பியனான அந்த அணி சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை. ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து தர வரிசையில் 15-வது இடத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய ஆட்டங்களில் பிரேசில் 3-ல் சுவிட்சர்லாந்து 2-ல் வெற்றி பெற்று உள்ளன.

    குரூப் 'எச்' பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் தென் கொரியா- கானா (மாலை 6.30), போர்ச்சுக்கல்-உருகுவே (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    தென் கொரியா தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. கானா அணி 2-3 என்ற கணக்கில் போர்ச்சுக்கலிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும்.

    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கொண்ட போர்ச்சுக்கல் அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. உருகுவே அணி பலம் வாய்ந்த போர்ச்சுகலை தோற்கடித்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • 37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும்.

    ரியாத்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

    அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதில் அவர் சாதனையும் புரிந்துள்ளார்.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது ரொனால்டோ இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    அந்த கிளப் நிர்வாகம் அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து அவர் மான்செஸ்டர் யுனைடட் கிளப் மானேஜர் எரிக் டென்னை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியா கிளப் ஒன்று ரொனால்டோ தங்கள் கிளப்பில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வழங்க முன் வந்துள்ளது.

    ரியாத்தில் உள்ள அல்நாசர் கிளப் ரொனால்டோவை 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.1838 கோடி தர இருப்பதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.612 கோடிக்கு மேல் கிடைக்கும். இதை சி.பி.எஸ். ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    37 வயதான ரொனால்டோ சவுதி கிளப்பின் அழைப்பை ஏற்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் அந்த கிளப்பில் விளையாட தனது விருப்பத்தை தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது ரொனால்டோவின் இறுதி முடிவுக்காக அந்த கிளப் காத்திருக்கிறது.

    அல் நாசர் அணி ஆசியாவின் சிறந்த கிளப்களில் ஒன்றாகும். 9 'லீக்' பட்டங்களை வென்றுள்ளது. ரொனால்டோ கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக கோப்பையில் கானாவுக்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்.
    • கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

    நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது. அடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.


    கடந்த 2015-ல் அறிமுகமானாலும் 2-வது கிரிக்கெட் போட்டியை 2019-ல் விளையாடினார். பின்னர் 2021 வரை இந்திய அணியில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்க அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஏ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மழுப்பியது.


    அதில் 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்தார் சஞ்சு சாம்சன். ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி இந்திய நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கியது.


    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு எவ்வளவு மறுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அநீதிக்கு எதிராக ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு என்ற பொன்னெழுத்துக்களை கொண்ட பதாகைகளை தாங்கி பிடித்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.


    ஆம் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் "கத்தாரில் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கொண்ட நாங்கள் சஞ்சு சமசனுக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்றும் "எந்த போட்டியாக இருந்தாலும் எந்த அணியாக இருந்தாலும் அல்லது வீரராக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்" என மிகப்பெரிய பதாகைகளில் தங்களது ஆதரவு வசனங்களை கையில் பிடித்து ஆதரவு கொடுத்தார்கள்.

    இதை அவரின் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உட்பட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

    • வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

    பிரஸல்ஸ்:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

    இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

    • முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'இ' பிரிவில் நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.

    இதற்கு பதிலடியாக 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.

    போட்டியின் முடிவில் 'இ' பிரிவில் ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து சுற்றுக்கு முன்னேற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தால் போதும். ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

    • அதிவேக கோல் அடித்து கனடா வீரர் சாதனை படைத்தார்.
    • குரூப் எப் பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் குரோஷியா உள்ளது.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரோஷியா, கனடா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்தார். இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது ஆகும். 

    எனினும் 36வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரேஜ் கிராமரிச் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 44வது நிமிடத்தில் மார்கோ லிவாஜா கோலை அடித்து குரோஷியாவை முன்னிலை பெறச் செய்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்தது.

    2வது பாதி ஆட்டத்திலும் குரோஷியா அணி சிறப்பாக விளையாடியது. 70வது நிமிடத்தில் ஆண்ட்ரேஜ் கிராமரிச் 2வது கோலை அடித்தார். மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் 94வது நிமிடத்தில் குரோஷியா வீரர் லோவ்ரோ மேஜர் ஒரு கோல் அடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இதன் மூலம் எப் பிரிவில் நான்கு புள்ளிகளுடன் குரோஷியா முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக பெல்ஜியத்திற்கு எதிரான கடைசி ஆட்டத்தில் டிரா செய்தாலே அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    • முதல் பாதியில் கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
    • இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.

    இரண்டாவது பாதியின் 73-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அப்தெல் ஹமீது சபிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் சகாரியா அபுக்லால் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

    இதன்மூலம் குரூப் எப் பிரிவு புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.

    • முதல் பாதியில் கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
    • 2வது பாதியில் கோஸ்டா ரிகா அணி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கச் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற சமனிலையில் இருந்தன.

    இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் கெய்ஷர் ஃபுல்லர் ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டநேர இறுதியில் கோஸ்டா ரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. இதன்மூலம் குரூப் இ பிரிவு புள்ளிப்பட்டியலில் ஜப்பான், கோஸ்டா ரிகா தலா 3 புள்ளிகளுடன் 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளது.

    • நாஜி நவுஷி என்ற பெண்மணிக்கு 33 வயதாகும். இவர், 5 குழந்தைகளின் தாய்.
    • மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் பார்க்க கேரளாவில் இருந்து கத்தாருக்கு பயணித்த 5 குழந்தைகளின் தாய்

    தோஹா:

    உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய்.

    அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம். மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.


    இவரின் நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன்.

    நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.

    நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    ×