என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022
- முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.
எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- முதல் பாதியில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
- ஆட்ட நேர இறுதியில் போலந்து 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின.
முதல் பாதியின் 39-வது நிமிடத்தில் போலந்தின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார்.
இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் ராபர்ட் லெவான்டௌவுஸ்கி ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
முதல் போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை சவுதி அரேபியா அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்தது.
- இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துனீசியா அணிகள் மோதின.
முதல் பாதியின் 23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் டூயூக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனீசியா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இரு போட்டிகளில் ஒரு டிரா, ஒரு தோல்வி என ஒரு புள்ளியுடன் துனீசியா கடைசி இடத்தில் உள்ளது.
- ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது.
- இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல.
ரியாத்:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது.
2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.
சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் கால்பந்து வீரர்களை வெகுவாக பாராட்டும்.
- அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
- உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
லுசாயில்:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.
இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.
இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.
சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.
குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.
துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.
- கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
- இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு.
கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் பேட் ஸ்டேடியத்தில் நள்ளிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் இருந்தன.
இரண்டாவது பாதி முடிவிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.இதனாம் ஆட்டம் சமனில் முடிந்ததுடன் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம் குரூப் பி பிரிவு புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஈரான் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
- குரூப் ஏ பிரிவு புள்ளி பட்டியலில் கத்தாருக்கு கடைசி இடம்.
- லீக் சுற்றுடன் வெளியேறுவதால் கத்தார் ரசிகர்கள் சோகம்.
தோஹா:
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கத்தார் அணி, முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.
இதனை தொடர்ந்து, 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர் கொண்ட கத்தார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது.
எனினும் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த கத்தார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கோப்பை தொடரிலும் இருந்து வெளியேறி உள்ளது. இது கத்தார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
- 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
- உலகக் கோப்பையில் கத்தார் அணி இன்று முதல் கோலை பதிவு செய்தது
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடந்த குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தார் அணி, செனகலுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செனகல் வீரர்கள், முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றனர். அந்த கோலை 41வது நிமிடத்தில் பவுல்யே தியா அடித்தார்.
அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2வது கோலை பதிவு செய்தது செனகல். 48வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார் பமாரா டைதியோ.
அதன்பின் போட்டியை சமன் செய்யும் நோக்கில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. முகமது முன்டாரி கோல் அடித்து ஆறுதல் அளித்தார். உலகக் கோப்பையில் கத்தார் அணியின் முதல் கோல் இதுவாகும்.
அதன்பின், கத்தார் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த செனகல் அணி 84வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டது. மாற்று வீரர் சம்பா டியங் இந்த கோலை பதிவு செய்தார். இறுதியில் 3-1 என செனகல் அபார வெற்றி பெற்றது.
- ஹென்னிஸி தனது பாக்சை விட்டு வெளியே பாய்ந்து வந்து பந்தை தடுக்க முயன்றார்.
- உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் வேல்ஸ் கோல்கீப்பர் ஹென்னிஸி நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த ஈரான் வீரர் மெஹ்தி தாரெமி, பந்தை துரத்திக்கொண்டு கோல் கம்பத்தை நெருங்கினார். ஆபத்தை உணர்ந்த ஹென்னிஸி, அவரது எல்லையை விட்டு வெளியே பாய்ந்து வந்து, தாரெமிக்கு முன்னதாக பந்தை தடுக்க முயன்றார். அதற்குள் தாரெமி அடித்த பந்து ஹென்னஸியை தாண்டி சென்றுவிட்டது.
அதேசமயம் வந்த வேகத்தில் ஹென்னிஸி, தாரெமியை உதைக்க, இருவரும் கீழே விழுந்துவிட்டனர். விதிமுறை மீறலை கவனித்த போட்டி நடுவர் மரியோ எஸ்கோபார், ஹென்னிஸிக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டினார். ஆனால் வீடியோ மானிட்டரைப் பார்த்த அவர், பின்னர் தனது முடிவை மாற்றி, ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து ஹென்னிஸி சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் முதல் ரெட் கார்டு இதுவாகும்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும். உலகக் கோப்பையில் ரெட் கார்டு பெற்ற மூன்றாவது கோல் கீப்பர் ஹென்னிஸி ஆவார். இதற்கு முன்பு 2010ல் தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே, 1994ல் இத்தாலி கோல் கீப்பர் ஜியன்லுகா பக்லியுகா ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.
- வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான், வேல்ஸ் அணிகள் மோதின. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அதன்பின்னர் கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.
இந்த போராட்டத்தில் ஈரான் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியது. ரூபஸ் செஸ்மி, ரமின் ரசீயன் தலா ஒரு கோல் அடித்து, வேல்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 2-0 என ஈரான் வெற்றிபெற்றது.
வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர். அப்போது ஈரான் மற்றும் வேல்ஸ் நாடுகளின் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வேல்ஸ் ரசிகர்களின் கைதட்டி பாராட்டியதைப் பார்த்த சில ஈரானிய வீரர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
- எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை.
- காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.
உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன.
காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-
நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார். பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.






