search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மெக்சிகோவுடன் இன்று நள்ளிரவு மோதல்- வெற்றி நெருக்கடியில் அர்ஜென்டினா
    X

    மெக்சிகோவுடன் இன்று நள்ளிரவு மோதல்- வெற்றி நெருக்கடியில் அர்ஜென்டினா

    • அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
    • உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    லுசாயில்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.

    இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.

    சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

    குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.

    Next Story
    ×