search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் உள்ள பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல் கந்தூரி விழா நேற்று நிறைவு பெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி அருகே மாநாடு கிராமத்தில் பக்கீர் முகைதீன் ஒலியுல்லாஹ் பள்ளிவாசலில் கந்தூரி விழா கடந்த மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி குர்ஆன் ஓதப்பட்டு, மார்க்க சொற்பொழிவு நடந்தது.

    நிறைவு நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் உடன்குடி புகாரி ஷெரிபு தலைவர் செய்யது நூஹ்முகைதீன் தலைமை தாங்கினார். முகமது முகைதீன், முகமது யூசுப், அஸ்பர், பைஜிர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினர். மதியம் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    மறுமை என்ற மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, தீர்ப்பு நாள் ஆகும். நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்று இந்த பயணம் இறுதியாக முடிவு பெறுகிறது.
    மாலுமி இல்லாத கப்பல், ரேடார் இல்லாத விமானம், இலக்கு இல்லாத பயணி எப்படி இல்லையோ, அவ்வாறே நோக்கம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கை ஒரு பயணம். தாயின் கருவறை அதன் ஒரு நிலையம் என்றால் இவ்வுலகமும் ஒரு நிலையம்தான். எனவே பயணம் தொடர்கிறது.

    இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ உலக படைப்புகள் அவனுக்கு சேவை செய்கின்றன. நிலம், காற்று, நீர், கடல், இரவு, பகல், காலை, மாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சேவை செய்கின்றன என்றால் மனிதன் யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இயல்பான, அடிப்படையான கேள்வி எழுகின்றது.

    திருக்குர் ஆன் கூறுகிறது: “நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை”. (38:27)

    “நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை”. (21:16)

    இறைவன் இவ்வுலகில் மனிதனைப் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். எல்லாவிதமான நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் அவனுக்கு கொடுத்திருக்கிறான். ஆக எல்லா படைப்புக்கும் நோக்கம் உண்டு. நமது வாழ்க்கைக்கும் நோக்கம் உண்டு. எதுவும் தற்செயலாக, நோக்கமில்லாமல் இயங்குவதில்லை. வீண் விளையாட்டிற்காகவும் அல்ல. எல்லா படைப்புகளும் மனிதனுக்காக, மனிதனோ படைத்த இறைவனை வணங்கி, அவன் வழிகாட்டல்படி வாழ்ந்து நன்றி செலுத்துவதற்காக.

    “என்னை அடிபணிவதற்க்கே மனிதர்களை நான் படைத்தேன்” என்று திருக்குர் ஆன் எடுத்துரைக்கிறது.

    இறைவன் நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்திருக்கிறான். எது நல்லது? எது கெட்டது? என்பதைப் பிரித்தறியும் ஆற்றலைத் தந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டு நாம் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இதுதான் இவ்வுலகில் இறைவன் புறத்திலிருந்து நாம் சந்திக்கும் சோதனையாகும்.

    “அவன் மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான், உங்களில் யார் மிகச்சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர் ஆன் 67:2).

    எனவே இறைவன் வைத்த சோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வுலக வாழ்க்கை ஒரு நிலையம் என்றால், மரணம் பிறிதொரு நிலையம். மறுமை என்ற மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, தீர்ப்பு நாள் ஆகும். நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்று இந்த பயணம் இறுதியாக முடிவு பெறுகிறது.

    நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு மனிதன் பதில் சொல்லாத வரையில் அவன் அந்த இடத்தை விட்டு நகர முடியாது. அவை: 1. தனது வயதை எந்தச் செயல்களில் கழித்தான்?, 2. தன் இளமையை எதில் பயன்படுத்தினான்?, 3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?, 4. சம்பாதித்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்?, 5. கற்ற கல்வியின்படி எந்த அளவுக்குச் செயல் புரிந்தான்?”

    எனவே, நோக்கம் அறிந்து வாழ்வோம், நமது பயணம் சுக பயணமாக அமையட்டுமாக!

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

    இதையும் படிக்கலாம்...நலிந்தவர்களின் நலன் காப்போம்.....
    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகு முகம்மது தர்காவும் ஒன்றாகும்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவருகின்ற நம்பியாறு ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். எனவே ஆற்றங்கரை நாயகி’ என அவர்களால் அழைக்கப்படுகிறார்.

    ஆத்தங்கரை பள்ளிவாசலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கந்தூரி திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படும். விழாவில் இஸ்லாமியர்கள் மட்டு மல்லாது, இந்து, கிறிஸ்துவர்கள் என அனைத்து சாதி, மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.

    நெல்லை மாவட்டம் மட்டு மல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பங்கேற்கிறார்கள்.
    கந்தூரி விழா கொடி யேற்றத்தின் போது பள்ளிவாசல் டிரஸ்டிகள் ஊரான அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பள்ளிவாசலுக்கு யானை மீது சந்தனக்குடம் மற்றும் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

    பள்ளிவாசல் டிரஸ்டிகள் மன்னர்கள் போல தலையில் கீரிடம் வைத்து பாரம்பரிய உடையணிந்து கொடியேற்றுவர். அப்போது பள்ளிவாசல் இடத்திற்கு அப்போதைய உரிமையாளரான ராமன்குடி முத்து கிருஷ்ணாபுரம் அருணாச்சல நாடார் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினர் அளிக்கும் வரவேற்பு மற்றும் காணிக்கைகளை பெற்று செல்வது பள்ளிவாசல் தோன்றிய நாள் முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.

    தற்போது அவரது பேரன் அருள்துரை இதை முன்னின்று நடத்தி வருகிறார். யானை மீது கொடி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அன்ன தானமும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.
    ஹசரத் சையதலி பாத்திமா, மீது கொண்ட பற்றால் இப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு செய்யதலி பாத்திமா என்று பெயரிட்டுள்ளதை அதிகமாக காணலாம். இதனை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மேலும் பல்வேறு வியாபாரிகள் தங்களது கடைகளில், வீடுகளில் ஆத்தங்கரை பள்ளிவாசல் புகைப்படத்தை வைத்திருப்பதை காணலாம்.

    செய்யது அலி பாத்திமா கேரளா கொடுங்கலூரிலிருந்து திருவனந்தபுரம் வழியாக தமிழகத்துக்கு வந்தார்கள். செய்யது அலி பாத்திமாவின் சகோதரிகள் மொத்தம் 5 பேர். முதலாவது திருவனந்தபுரத்தில் உள்ள பீமா பள்ளியிலுள்ள பீமா. இரண்டாவது ஆத்தங்கரை செய்யது அலி பாத்திமா, மூன்றாவது திசையன்விளை- ஆத்தங்கரையில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் சின்னப்பிள்ளை நாச்சியார் அம்மாள், நான்காவது தங்கை குஜராத்திலும், ஐந்தாவது தங்கை மஹாராஷ்டிராவிலும் அடங்கப்பட்டுள்ளனர். அவர்களது புகழும் செய்யது அலி பாத்திமா போலவே பிரசித்தி பெற்றதுதான் என்கின்றனர் திசையன்விளையில் வாழும் மக்கள்.
    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம் (வர்ணம் பூசும் பணி) தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அஸர் தொழுகை நடந்தது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி வெள்ளை முகூர்த்தத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் டிரஸ்டிகள், தர்கா ஆதீனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.
    நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுசாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட

    புனித சந்தனம் குடத்தில் நிரப்பப்பட்டு சலங்கைகள் ஒலிக்க தர்காவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சுமந்து செல்ல ஊர்வலம்

    புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் சந்தனகுடத்தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து அங்கு சந்தனம் பூசும்

    நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.

    இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன்,

    தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் சேக் ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. மவுலீது ஓதும் நிகழ்ச்சி பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் மற்றும் ஜமாத் தார்கள் முன்னிலையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று கந்தூரி தேங்காய் சாதம் வழங்கப்பட்டது.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் சிராஜுதீன், செய லாளர் பலீல் அகமது மற்றும் ஜமாத் நிர்வாகிகள், முஸ்லீம நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது, ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கந்தூரி விழா கமிட்டி தலைவர் ரோஸ் சுல்தான் உள்பட ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தொழுகைக்கு பின்பு முகைதீன் ஆண்டகை பற்றி சொற் பொழிவு ஆற்றி மக்கள் நலனுக்காகவும் சிறப்பு துவா செய்தார்.

    இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர். பனைக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பணிகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரைத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவை நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த் தனை நடத்தபட்டது. கந்தூரி விழாவையொட்டி நெய்சோறு வழஙகப்பட்டது.

    விழாவில் ஜமாத் நிர்வாகத்தின் அறங்கா வலர்கள், மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது. நேற்று நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது.

    கடந்த 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிலம்பு விளையாட்டுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கொடிசுற்று வரி வசூல், மாலை 3 மணிக்கு அரபி மதரஸா நிகழ்ச்சிகள், இரவு 9.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நடைபெற்றது. நேற்று காலையில் நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.

    போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரஹ்மான் பரிசு வழங்கினார். இமாம்கள் முகம்மது ஆலிம், முகம்மது சபீக் ஆகியோர் மார்க்க சொற்பொழிவு வழங்கினர். கந்தூரி கமிட்டி ஆலோசகர் மொய்த்தீன் வரவேற்று பேசினார். கந்தூரி விழாக் கமிட்டி நிர்வாகிகள் உட்பட திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் யூனூஸ் மீரான் மற்றும் புதுமனை ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    நலிந்தவர்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களின் உரிமைகளை வழங்கிட இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி நடக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.
    நலிந்தவர்களின் உரிமைகளை மீட்டுக்கொடுப்பதில் இஸ்லாம் முனைப்புக் காட்டுகிறது. சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க பலசாலிகளுடன் போட்டி போட்டு தங்களின் உரிமைகளை போராடி பெறுவதில் பலமிழந்து பின்தங்கி இருப்பவர்கள்தான் இந்த நலிந்த பிரிவினர்.

    தங்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பெறமுடியாமல் தவியாய் தவிக்கும் இவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் இயலாமையும், பலவீனமும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பிரிவினர் சமுதாயத்தில் பலவிதமான முகங்களாக பரவலாக காணப்படுகின்றனர்.

    இவர்களின் கண்ணீரைப் போக்க, துயரங்களை துடைக்க இஸ்லாம் பாடுபடுகிறது, ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    பராஉ பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்: “நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவற்றில் ஒன்று ‘நலிந்தவருக்கு உதவுவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

    ‘கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார், அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய்-தந்தை உண்டா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’, என்றார். ‘அவ்வாறாயின் அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    முஸ்அப் பின் ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்: “என் தந்தை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ‘தம் வீரச்செயல்களின் காரணத்தால் தமக்குப் பிறரைவிட ஒரு சிறப்பு இருக்கவேண்டும். (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப்பங்கு கிடைக்க வேண்டும்)’ எனக் கருதினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உங்களிடையேயுள்ள நலிந்தவர்களின் பொருட்டால்தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிடைக்கிறது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)

    “இறைவனின் உதவி இந்த சமுதாயத்திற்கு கிடைப்பதெல்லாம் நலிந்தவர்களின் பிரார்த்தனையாலும், அவர்களின் தொழுகையாலும், அவர்களின் தூய எண்ணத்தினாலும்தான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: முஸ்அப் பின் ஸஅத் (ரலி), நூல்: நஸயீ)

    “என்னை நலிந்தவர்களுடன் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: நஸயீ)

    “சொர்க்கவாசிகள் யார் என்று நான் உங்களுக்கு தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) நலிந்தவர்கள்; பணிவானவர்கள். அவர்கள் இறைவனின் மேல் ஆணையிட்டு எதையேனும் கூறினால், இறைவன் அதை அவ்வாறே நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி), நூல்: புகாரி)

    ஆபூபக்கர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த போது, அவர்கள் ஆற்றிய முதல் உரையில், ‘மக்களே! நான் உங்கள் மீது தலைமை பொறுப்பேற்றுள்ளேன். நான் உங்களைக் கொண்டு உயர்ந்தவன் அல்ல. நான் நல்லது செய்தால், எனக்கு உதவிடுங்கள். நான் தவறு செய்தால் என்னை நேராக வழி நடத்துங்கள். உண்மை அமானிதமாகும். பொய் மோசடியாகும். உங்களில் நலிந்தவர் என்னிடம் பலசாலி ஆவார். அவரின் (இழந்த) உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன். உங்களில் பலசாலி என்னிடம் பலம் அற்றவர் ஆவார். அவரிடமிருந்து நலிந்தவரின் உரிமையை மீட்டெடுப்பேன்’ என்று சபதம் எடுத்தார்கள்.

    “இறைவா! பெண்கள், அநாதைகள் ஆகிய இரு நலிந்த பிரிவினரின் உரிமைகளை நான் பாழ்படுத்துவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்”.

    நலிந்தவர்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களின் உரிமைகளை வழங்கிட இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி நடக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

    இதையும் படிக்கலாம்...பதவிக்காக ஆசைப்படாதீர்கள்...
    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).
    அரசுப்பணியோ, தனியார் பணியோ, எந்த துறையாக இருந்தாலும் ஒருவர் அங்கு வகிக்கும் பதவி அல்லது பணி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அது சாதாரண பணியாளராக இருந்தாலும், நிர்வாகத்தில் உயர்வாக உள்ள பதவியாக இருந்தாலும் சரியே.

    பதவியுடன் இணைந்து இருக்க வேண்டியது அதை ஏற்று வாழும் மனிதனின் திறமைகளும், ஒழுக்கபலமும் தான். தகுதி உள்ளவர்கள் பதவியைப்பெற்றால் அதில் வெற்றிகளை குவிப்பார்கள், அதன்மூலம் மனித சமூகத்திற்கு பயன்களையும் பெற்றுத்தருவார்கள்.

    இஸ்லாம் பதவியை ஒரு அமானிதமாக கருதுகிறது. அதை உரியவர்களுக்கு ஒப்படைப்பது சமூக மக்களின் கடமையாக எடுத்துரைக்கிறது.

    ‘‘பொறுப்புகளை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என்கிறது திருக்குர் ஆன் (4:58).

    அதாவது தகுதியில்லாத, பலவீனமான, ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற மக்களிடம் பதவிகளை ஒப்படைக்காதீர்கள். ஆகவே இஸ்லாத்தில் பதவி என்பது கேட்டு பெறுவதல்ல. மாறாக ஒப்படைக்கப்படுகின்ற ஓர் விலைமதிக்க முடியாத அமானிதம் ஆகும். ஒவ்வொரு பொறுப்பும் மறுமை நாளில் படைத்த இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படும்.

    நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதை கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்குக் கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்யப்படும்”.

    பொறுப்பின் சுமையை அறியாதவரும், அதிகார மோகம் கொண்டவர்களும்தான் பதவிக்கு ஆசைப்படுவார்கள். இதற்கு மாற்றமாக பதவியை ஒரு பொறுப்பாக உணர்ந்து செயல்படுபவர்கள், அதன் மீது ஆசை கொள்ளாதவர்கள் மீது இறைவனின் உதவியும், வழிகாட்டலும் கிடைக்கும்.

    பதவி பெறுபவர்களைவிட பதவியில் அமர்த்தும் பொது மக்கள் மீதும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆளுமை, திறமை, நல்லொழுக்கம் உள்ளவர்களைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்த வேண்டும். நன்மக்கள் இருந்தால்தான் நல்ல தலைவர்களை இந்த சமூகம் பெறும். எனவே மக்கள் சுயநலம் இல்லாமல், பாரபட்சம் காட்டாமல் நல்லவர்களை, வல்லவர்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

    அவ்வாறு பதவியில் அமர்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும். தனது செயல்களை கண்காணித்துக் கொண்டும், மதிப்பீடு செய்து கொண்டும் இருக்க வேண்டும். ஆலோசனைகளின் அடிப்படையில் பாரபட்சம் இல்லாத நிலையில் முடிவுகள் எடுக்க வேண்டும். மக்களுக்கும் அதைவிட மேலாக படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்ற நம்பிக்கையோடு பயணிக்க வேண்டும். மக்கள்நலன் முதன்மையாக இருக்கும் பட்சத்தில் பதவியாளர்கள் சேவை உணர்வோடும், அன்போடும் நடந்து கொள்வார்கள்.

    நபிகள் நாயகம் கூறினார்கள்: “உங்களின் தலைவர்களில் சிறந்தவர்கள், அவர்களை நீங்கள் அன்பு கொள்வீர்கள், அவர்கள் உங்களை அன்பு கொள்வார்கள்”.

    இத்தகைய ஒழுக்கங்களோடு ஆட்சியாளர்கள், பொது மக்கள் செயல்படும் பொழுது சமூகத்தில் அமைதியும், வளர்ச்சியும் செழித்தோங்கும் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னுதாரணமாக நபிகள் நாயகத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.

    ஆகவேதான் அண்ணல் காந்தி அடிகளார் கலீபா உமர் அவர்களின் ஆட்சியை விரும்பினார்கள். ‘இந்திய நாடு உயர வேண்டும் என்றால், கலீபா உமரைப் போன்ற நேர்மையான ஆட்சியாளர் ஆள வேண்டும்’ என்று ஆசைப்பட்டார்கள்.

    நாட்டில் அமைதி, பொருளாதார செழிப்பு, பெண்களின் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி, பன்முக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் பதவியில் நல்லவர்கள் வருவதும், அத்தகைய தலைமுறையை உருவாக்குவதும் நம் அனைவரின் தலையாய கடமை ஆகும்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை
    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    மனித மனங்களில் குடி கொண்டிருக்கும் குணநலன்களில் உயர்வான நற்குணம் பெருந்தன்மை.

    பெருந்தன்மை என்றால் என்ன?

    நமது உள்ளங்களிலும், எண்ணங்களிலும் மற்றவர்கள் குறித்து நல்உணர்வுடனும், நல்ல மனநிலையிலும் இருக்கும் தன்மையே பெருந்தன்மை.

    யாரைப் பற்றியும் உள்ளத்தாலும், எண்ணத்தாலும் தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றுவதே பெருந்தன்மையின் அடையாளமாகும்.

    பெருந்தன்மையாளர்கள் தாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறரும் மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

    பெருந்தன்மையை அனைத்து வடிவங்களிலும் காணமுடியும். அதை கொடுக்கல் வாங்கலில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கேட்பதில் வெளிப்படுத்தலாம். கடனை திருப்பிக் கொடுப்பதில் வெளிப்படுத்தலாம். வழக்காடுவதில் வெளிப்படுத்தலாம். பிறரை மன்னிப்பதிலும் வெளிப்படுத்தலாம்.

    ‘வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள்புரிவானாக! என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)

    “ஒரு மனிதர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம் ‘நீ உலகில் என்ன நற்செயல் புரிந்துள்ளாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். காசு விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்’ என்று கூறினார். இதனால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    “பெருந்தன்மையுடன் நடந்த இந்த மனிதரைப் பார்த்து இறைவன் ‘பெருந்தன்மையுடன் நடப்பதற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். எனவே, என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்யுங்கள்’ என வானவர்களிடம் கூறினான் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: முஸ்லிம்)

    பெருந்தன்மையாக நடந்து கொள்வது இறைவனையே கவர்ந்துவிட்டது. இதற்கு பிரதிபலனாக இறைவன் அவரின் பாவங்களை தள்ளுபடி செய்து, அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்துள்ளான். அந்த மனிதர் உலகில் செய்த ஒரே காரியம் பெருந்தன்மையாக நடந்து கொண்டது மட்டுமே. பெருந்தன்மையாக நடப்பதற்கு இறைவனிடம் உயர்ந்த பதவியும், சிறந்த விருதும் கிடைத்துவிடுகிறது.

    இறைவனே பெருந்தன்மை மிக்கவன்தானே!

    “(அவனே) சிம்மாசனத்திற்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்”. (திருக்குர்ஆன் 85:15)

    பெருந்தன்மை என்பது இறைவனின் ஓர் அருட்குணம். அந்த குணத்தை வெளிப் படுத்துவோருக்கு இறைவன் தனிமரியாதையை வழங்கி, மற்றவர்களின் முன்னிலையில் கவுரவிக்கின்றான்.

    இத்தகைய தன்மையை நபி (ஸல்) அவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்தார்கள்.

    “ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் தான் கொடுத்த ஒட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது அவர் நபிகளாரிடம் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘அவரை தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி, அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ‘அவருக்குத் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயது உடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது’ என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘அதையே வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்லமுறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறி பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதைப் போன்று நாமும் நடந்து, இறைவனின் உயர்பதவியை அடைவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

    இதையும் படிக்கலாம்...சமூக பொறுப்புணர்வு அவசியம்...
    “ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    உலகை ஒரு சேர அச்சுறுத்தி வரும் சொல் “கொரோனா”. பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல் நிமிரவிடாமல் துரத்துகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் சிலர், அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்குச் செவி மடுக்காமல் செயல்படுவது வேதனைக்குரியது. தொற்று நோய் காலங்களில் சமூக விலகலை பின்பற்றுவதே சிறந்தது. இதையே இஸ்லாம் வரவேற்கிறது.

    தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத வாழ்க்கை முறைகளை அமைப்பது சமூக பொறுப்புணர்வாகும். இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்றாகும்.

    தும்மல், இருமல் போன்றவை நோய்கள் பரவ ஒரு காரணியாகும். இது இயற்கையானது என்றாலும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் வராமல் செயல்படுவது இஸ்லாம் வகுத்த சமூக நலன் கலந்த ஒழுக்க முறைகளாகும்.

    நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை நோய்த் தடுப்புச் சார்ந்தவையாகக் கருதி, இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள். இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

    “நபி (ஸல்) அவர்களுக்குத் தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)

    எச்சிலும், நோய்க்கிருமிகள் பரவ காரணமாக அமைகிறது. இதனால் பல நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புதல் குற்றமாகக் கருதப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவதை நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள். இதுதொடர்பான நபிமொழிகள் வருமாறு:

    “ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதாகக் கண்டேன்” (நூல்: முஸ்லிம்).

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்”. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).

    நபி (ஸல்) கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (நூல்: புகாரி).

    கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருந்தாலும், அரசின் கட்டளைகளை பின்பற்றி, நாம் சமூக விலகலை கடைப்பிடித்து, முறையாக முகக்கவசம் அணிந்து, தடுப்பூசிகளையும் பிற மருத்துவ ஆலோசனைகளையும் பயன்படுத்தி வாழ்வோம். நோயற்ற சமூகத்தை உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.

    ஏ.எச். யாசிர் ஹசனி, லால்பேட்டை.
    ×