search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல்
    X
    திசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல்

    திசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகு முகம்மது தர்கா

    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகு முகம்மது தர்காவும் ஒன்றாகும்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவருகின்ற நம்பியாறு ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். எனவே ஆற்றங்கரை நாயகி’ என அவர்களால் அழைக்கப்படுகிறார்.

    ஆத்தங்கரை பள்ளிவாசலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கந்தூரி திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படும். விழாவில் இஸ்லாமியர்கள் மட்டு மல்லாது, இந்து, கிறிஸ்துவர்கள் என அனைத்து சாதி, மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.

    நெல்லை மாவட்டம் மட்டு மல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பங்கேற்கிறார்கள்.
    கந்தூரி விழா கொடி யேற்றத்தின் போது பள்ளிவாசல் டிரஸ்டிகள் ஊரான அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பள்ளிவாசலுக்கு யானை மீது சந்தனக்குடம் மற்றும் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

    பள்ளிவாசல் டிரஸ்டிகள் மன்னர்கள் போல தலையில் கீரிடம் வைத்து பாரம்பரிய உடையணிந்து கொடியேற்றுவர். அப்போது பள்ளிவாசல் இடத்திற்கு அப்போதைய உரிமையாளரான ராமன்குடி முத்து கிருஷ்ணாபுரம் அருணாச்சல நாடார் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினர் அளிக்கும் வரவேற்பு மற்றும் காணிக்கைகளை பெற்று செல்வது பள்ளிவாசல் தோன்றிய நாள் முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.

    தற்போது அவரது பேரன் அருள்துரை இதை முன்னின்று நடத்தி வருகிறார். யானை மீது கொடி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அன்ன தானமும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.
    ஹசரத் சையதலி பாத்திமா, மீது கொண்ட பற்றால் இப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு செய்யதலி பாத்திமா என்று பெயரிட்டுள்ளதை அதிகமாக காணலாம். இதனை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மேலும் பல்வேறு வியாபாரிகள் தங்களது கடைகளில், வீடுகளில் ஆத்தங்கரை பள்ளிவாசல் புகைப்படத்தை வைத்திருப்பதை காணலாம்.

    செய்யது அலி பாத்திமா கேரளா கொடுங்கலூரிலிருந்து திருவனந்தபுரம் வழியாக தமிழகத்துக்கு வந்தார்கள். செய்யது அலி பாத்திமாவின் சகோதரிகள் மொத்தம் 5 பேர். முதலாவது திருவனந்தபுரத்தில் உள்ள பீமா பள்ளியிலுள்ள பீமா. இரண்டாவது ஆத்தங்கரை செய்யது அலி பாத்திமா, மூன்றாவது திசையன்விளை- ஆத்தங்கரையில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் சின்னப்பிள்ளை நாச்சியார் அம்மாள், நான்காவது தங்கை குஜராத்திலும், ஐந்தாவது தங்கை மஹாராஷ்டிராவிலும் அடங்கப்பட்டுள்ளனர். அவர்களது புகழும் செய்யது அலி பாத்திமா போலவே பிரசித்தி பெற்றதுதான் என்கின்றனர் திசையன்விளையில் வாழும் மக்கள்.
    Next Story
    ×