என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தன கூடு திருவிழா நடந்தது. சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் உள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் இணைக்கப்பட்டு கொடிமர விழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது.

    இந்த விழாவில் அலங்காநல்லூர் அதன் சுற்று வட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சந்தனக்கூடு நிறைவடைந்தது. தர்காவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முன்னதாக சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்தாண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா 23-ம் தேதி தொடங்கி இன்று (25-ந் தேதி) வரை நடக்கிறது.
    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்தாண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா 23-ம் தேதி தொடங்கி இன்று (25-ந் தேதி) வரை நடக்கிறது. இதையொட்டி 23-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இரவு நடந்தது. அப்போது மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை சென்றடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து மதத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சுல்தான்பாஷா, தாஜுதீன் பாபு மற்றும் விழா குழுவினர் மற்றும் பரம்பரை ஹக்தார்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி செய்து இருந்தனர்.
    “(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி நாம் மேலோட்டமாகவே அறிந்திருப்பது என்பது ஓர் நிதர்சன உண்மை. பொதுவாக நபிகளாரை முஸ்லிம்களின் மதகுருவாக, போதகராக பெரும்பாலும் அறிவார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி அல்ல. நபிகளாரின் வாழ்க்கையும் அப்படி இருந்ததில்லை. நபிகளாரைப் பற்றி திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது:

    “முஹம்மது அவர்கள் முழு மனித சமூகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் ஆவார்கள்”. (திருக்குர்ஆன் 21:107)

    “முஹம்மது அவர்கள் மக்களின் மீதுள்ள சுமைகளை இறக்க, மக்களிடம் பிணைந்திருக்கும் விலங்குகளை உடைக்க வந்தவர்”. (திருக்குர்ஆன் 7:157)

    “மக்களின் உண்மையான வெற்றியில் பேராவல் கொள்பவர்”. (திருக்குர்ஆன் 9:128)

    “(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)

    “மக்களின் அகமும், புறமும் தூய்மைப்படுத்தி வாழ்க்கை கலையை கற்றுக்கொடுத்த மிகச்சிறந்த ஆசான்”. (திருக்குர்ஆன் 62:2)

    “யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 33:21)

    தன்னைப் பற்றி கூறும் பொழுது நபிகள் நாயகம் ஓர் உதாரணத்தின் மூலம் இவ்வாறு சொல்கிறார்:

    “என்னுடைய உதாரணம் நெருப்பு மூட்டும் ஒரு மனிதனுக்கு ஒப்பானதாகும். அவன் மூட்டிய நெருப்பினால், அதனைச் சூழ்ந்த பகுதி பிரகாசமடைகிறது. அப்போது விட்டில் பூச்சிகள் நெருப்பினுள் விழ ஆரம்பிக்கின்றன. அந்த மனிதன் தன்னால் இயன்ற அளவுக்குப் போராடி அப்பூச்சிகளை நெருப்பினுள் விழாமல் காப்பாற்ற முயல்கின்றான். ஆனால், பூச்சிகளோ அவனையும் மீறி நெருப்புக்குள் விழுந்த வண்ணம் உள்ளன. இவ்வாறே நான் உங்களின் இடையைப் பிடித்து நரகில் விழாமல் தடுத்து நிறுத்த முயலுகின்றேன். நீங்களோ நரகில் புகுந்த வண்ணம் உள்ளீர்கள்”.

    மக்கள் நலன், உயர்வு, வெற்றிக்காக அயராது உழைத்த மாமனிதர்தான் நபிகள் நாயகம் அவர்கள். வாழ்க்கையை தனித்தனியாக பிரிக்காமல், முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டிய உத்தம தலைவர். அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்று வருடத்தில் ஒரு நாள் இல்லாமல் எல்லா நாளும் மக்களின் நலனுக்காக வாழ்ந்து காட்டியவர். வீடு முதல் சமூகம் வரை நபிகள் நாயகம் அவர்கள் ‘நம்பிக்கையாளர், உண்மையாளர்’ என்று போற்றப்பட்டவர்.

    வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஓர் அழகிய முன்மாதிரியை நாம் அனைவரும் நன்றாக புரிந்து செயல்படும்போது அமைதி, மகிழ்ச்சி என்ற புதிய உலகம் நாம் காணுவோம்.

    நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. இல்லற வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை, சமூக வாழ்க்கை முதல் பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் வாழ்ந்து, வழிகாட்டி, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரிய வாழ்க்கை. இத்தகைய சிறப்பு மிக்க மனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவோம், ஆமின்.

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
    கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள அரபி பாடசாலையான மதரசாக்களில் குரான் படிக்கும் மாணவ- மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது.
    இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று மிலாது நபி கோவை புல்லுக்காடு, குனியமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள அரபி பாடசாலையான மதரசாக்களில் குரான் படிக்கும் மாணவ- மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது.

    மாணவர்கள் தாளத்துடன் பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் சில மாணவர்கள் நடனமாடியபடி பாட்டு பாடினர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

    ஊர்வலத்தின் போது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள், 5 வேளை தொழுகையின் முக்கியத்துவம், பிறருக்கு உதவும் ஈகையின் முக்கியத் துவம் ஆகியவை குறித்து மாணவர்கள் எடுத்து கூறினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள், மதரசா ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கீழக்கரை அதாயி அரபிக் கல்லூரி மற்றும் எம்.கே.எம். செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பாக மிலாது நபி விழா நடைபெற்றது.
    கீழக்கரை அதாயி அரபிக் கல்லூரி மற்றும் எம்.கே.எம். செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பாக மிலாது நபி விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை சப்- இன்ஸ்பெக்டர் அங்குச் சாமி, அப்துல் கபார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முகம்மது ஷிஹாப் ஆகில் அதாயி செய்திருந்தார். அத் அரசர் அதாயி மதரசாவின் மாணவர்கள் கலந்துகொண்டு நபிகளின் புகழ்மாலை மவுலீது ஓதி உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    அதேபோல் பி.எஸ்.எம். நிறுவனம் மற்றும் ஆயிஷா குர்ஆன் ஹிப்லு மதரசா இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா பி.எஸ்.எம். பெண்கள் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் அரசு காஜி சலாஹுத்தீன் ஆலிம் தலைமை தாங்கினார். அப்துல் சலாம் ஆலிம் பாகவி, முகமது மன்சூர் அலி ஆலிம் ஆகியோர் துவா ஓதி தொடங்கினர்.பி.எஸ்.எம். மேலாளர் அஹமது பிலால் வரவேற்றார். உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் மேலாளர் அப்துல் ரசாக் உமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவுசுல் அமீன் நன்றி கூறினார்.
    மதுரை கோரிப்பாளையம் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    அன்று இரவு விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடையும். விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்களும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சுல்தான்பாஷா, தாஜுதீன், பாபு மற்றும் விழா குழுவினர் பரம்பரை ஹக்தார்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி செய்து வருகிறார்கள்.
    உறவு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு:
    இரண்டு உயிரினங்களுக்கு இடையேயான தொடர்பை, இணைப்பை, நட்பை ‘உறவு’ என்கிறோம். இதன் சொல்வளம் விசாலமானது. உறவு முறை பல பரிணாமங்களை உள்ளடக்கியுள்ளது.

    எத்தகைய உறவுகளாக இருந்தாலும் அந்த உறவுகள் இணைந்து உயிர்ப்பாக இருக்க வேண்டும். பல உயிர்கள் இணைவதுதான் உறவு. உறவுகள் சேர்வதுதான் குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதுதான் கூட்டுக்குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு கோத்திரம். பல கோத்திரங்கள் இணைந்துதான் ஒரு சமூகம் உருவாகிறது. பல சமூகங்களின் சங்கமம்தான் ஒரு தேசியம். பல தேசிய இனங்களின் உருவாக்கம்தான் சர்வதேசம், உலகம்.

    உறவு என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் உலகம் உருவாகிறது. அந்த உலகமே உறவுமுறையில் ஐக்கியமாகி விடுகிறது. அந்த புனித உறவின் வீழ்ச்சியின் முதல்படியே கூட்டுக் குடும்பம் சிதைந்து, தனிக்குடும்பமாக பிரிந்து போவதில் துவங்குகிறது. தனிக்குடித்தனம், தனிக்குடும்பம் பெருகப் பெருக உறவுமுறை அருகிக் கொண்டே வருவது கவலையளிக்கிறது.

    உறவு என்பது உணர்வுப்பூர்வமானது. அந்த உறவு கூட இறைவனிடம் உணர்வுப்பூர்வமான சில விஷயங்கள் குறித்து பேசியது சிந்திக்கத்தக்கது. அதன்விவரம் வருமாறு:

    “இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது.

    இறைவன், “சற்று பொறு” என்றான்.

    “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்றது உறவு.

    உடனே இறைவன், “உறவே, உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பது உனக்கு திருப்தியளிக்கவில்லையோ” என்று கேட்டான்.

    அதற்கு “ஆம், திருப்திதான் என் இறைவா” என்றது உறவு.

    “இது உனக்காக நடக்கும்” என்றான் இறைவன்.

    இந்த நபிமொழியை அறிவித்த பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நயவஞ்சகர்களே, நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும். உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் திருக்குர்ஆனின் (47:22) இறைவசனத்தைக் கூறினார்கள்”. (நூல்: புகாரி)

    உறவாடுவது என்பது பதிலுக்குப் பதில் செய்யும் காரியம் அல்ல. உறவை முறித்தவனுடன் வலிய வந்து உறவாடுவதே உண்மையான உறவு.

    “பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    உறவை முறித்து வாழ்பவன் உலக வாழ்க்கையை மட்டும் இழக்கவில்லை. சொர்க்க வாழ்க்கையையும் இழக்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். “உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: சுபைர் பின் முத்யிம் (ரலி), நூல்: புகாரி)

    உறவுமுறையை முறிப்பதற்கு பலவிதமான காரணங்கள் ஏற்படுகிறது. 1) அறிவற்ற செயல்பாடு, 2) இறையச்ச குறைபாடு, 3) தற்பெருமை, 4) நீடித்த தொடர்பின்மை, 5) அதிகமான தொந்தரவு தருவது, 6) உறவுகளை சந்திப்பதின் முக்கியத்துவம் குறைந்து போவது, 7) கருமித்தனம், 8) உறவை மறந்து உலக ஈடுபாடு, 9) மனமுறிவு, 10) பொறாமை. இன்னும் இதுபோன்ற காரணங்கள் ஒருவரிடம் வெளிப்படும் போது, அவரைச் சுற்றியுள்ள உறவுக்காரர்கள் அவரிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றனர்.

    உறவை முறிக்கும் எந்த காரியங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது.

    “ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாக இருங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம்).

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
    நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.
    உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென நம் ஒவ்வொருவரின் உள்ளமும் எதிர்பார்க்கிறது, ஏங்குகிறது. உலக அமைதியை குலைக்கும் காரணிகளை ஒழித்தால் மட்டுமே உலகம் அமைதி பெற வாய்ப்புள்ளது.

    நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.

    நிறம்

    ஒருவரின் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர், கருப்பாக இருப்பதால் அவர் தாழ்ந்தவர் அல்லர். நிறம் நமது தேர்வு அல்ல. ஒரு குடும்பத்தில் பிறக்கும் சகோதரர்களிடமே நிறத்தால் வேறுபாடு இருப்பது உண்டு. தாயின் நிறம் தந்தையின் நிறம் இன்னும் மூதாதையர்களின் நிறம் கூட ஒரு குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்கவல்லது.

    இறைவனுடைய அத்தாட்சிகளில் இவையும் ஒன்று என்று திருகுர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:22)

    மொழி

    ஒருவர் தன் மொழியை நேசிப்பது, மதிப்பது இயல்பான விஷயம் தான். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தன் மொழி மட்டும் தான் சிறந்தது, மற்ற மொழிகள் தாழ்வானவை என்ற எண்ணம் தான் தவறானது.

    நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜி உரையில் கூறினார்கள், “ஒரு அரபி, அரபிஅல்லாதவரை விடவோ, உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர், வெள்ளையர் கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர்”.

    மொழியாலும் நிறத்தாலும் பெருமை பேசி கொண்டிருந்த மக்களை தம் 23 ஆண்டு கால பிரச்சாரத்தின் மூலம் உயர்வு தாழ்வற்ற சமுதாயத்தை நபிகள் நாயகம் அவர்கள் உருவாக்கினார்கள்.

    பிறப்பு

    தான் பிறந்த இனம், குலம் உயர்ந்தது என்று ஒரு மாயை உலக அளவில் பல இடங்களில் காண முடிகிறது. இந்த மாயையை உடைத்தெறியவும் சர்வதேச சகோதரத்துவத்தை நிலைநாட்ட இறைமறையின் வசனம் கூறுவதைக் காண்போம்.

    “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

    உயர்ந்தவர் யாரென்றால், இறையச்சம் உடையவரே! என்று இறைவன் கூறுகின்றான். அவர் எந்த நாட்டை, மொழியை, இனத்தை, குலத்தைச் சார்ந்தவராயினும் சரியே. எனவே, எவரும் உயர்ந்தவராகலாம், இறையச்சம் உடையவராய்த் திகழ்வதன் மூலமாக என்று இறைவன் தெளிவு படுத்துகின்றான்.

    ஆளுக்கொரு நீதி

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி திருடிவிட்டாள். அவளுக்கு தண்டனை கொடுத்தால் உயர் குலத்தைச் சார்ந்தவராக கருதப்படக்கூடிய அந்த குலத்தாருக்கே அவமானம் என்பதால், அவளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தூது அனுப்பினார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக கூறினார்கள், “உயர்ந்தவர்களுக்கு ஒரு நீதி, தாழ்ந்தவர்களுக்கு ஒரு நீதி என்று நடந்து கொண்டதால்தான் முன் சென்ற சமுதாயங்கள் அழிந்து போயின. எனவே, அப்படிப்பட்ட தவறைச் செய்வதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவளது கரங்களைத் துண்டிப்பேன்” என்று கூறி, ஆளுக்கொரு நீதி என்ற அநீதியைத் தடுத்தார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கிறது.

    தாமதிக்கும் நீதி

    ஒரு தவறு நடந்தால், தீமை நடந்தால் அதை விசாரித்து சாட்சியங்களைக் கொண்டு நிரூபித்துவிட்டு மிக விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட்டால்தான் தீமைகளைக் களைய முடியும். தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

    இவ்வாறாக நிற, மொழி பாகுபாட்டைக் களைந்து பிறப்பால் அனைவரும் சமமானவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உயர் கொள்கைகளை நிலை நிறுத்தி அனைவருக்கும் சமநீதி மற்றும் உரிய நேரத்தில் விரைவான நீதியை வழங்கும் போது உலக அமைதி சாத்தியமாகும்.

    பி. சையத் இப்ராகீம், சென்னை.
    மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான் இறைவன்.
    இந்த பூமியில் வாழும் மனிதர்களை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைவன் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றான். மனிதர்களை நல்வழிப்படுத்த இறைவன் அனுப்பிய நபிமார்களும் அதன்படியே வாழ்ந்து மக்களை நேர்வழிப்படுத்த வழிகாட்டினார்கள்.

    திருக்குர்ஆனும், நபிமொழிகளும் மனிதர்களை நேர்வழியில் நடக்க வலியுறுத்தினாலும் அதில் இருந்து மாறுபட்டு நடக்கவே மனித மனம் துடிக்கின்றது.

    இன்றைய மனிதனின் வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்று சிந்தித்துப்பார்த்தால் உள்ளம் நடுங்கவே செய்யும். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் மனம் விரும்பிய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே மனிதன் ஆசைப்படுகிறான். அந்த ஆசையின் விளைவாக அதன்படி நடக்கவும் துணிகின்றான்.

    இந்த உலக வாழ்க்கை சோதனை நிறைந்தது. மனிதர்கள் ஒவ்வொருவரையும் மனைவி-மக்கள், செல்வம், பதவி, பகட்டான பொருட்கள், புகழ், நோய், வறுமை, துன்பம் என்று அனைத்தையும் கொடுத்து சோதனை செய்கின்றான், இறைவன்.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி, மேலும் பொருள்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்”. (திருக்குர்ஆன் 2:155).

    “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).

    “உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது”. (திருக்குர்ஆன் 64:15).

    இறைவனின் சோதனையில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்கவே முடியாது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அவன் இறைவனின் சோதனைக்கு ஆளாகியே தீரவேண்டும். அவ்வாறு சோதனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு கேடயமாக இருக்கக்கூடியவை திருக்குர்ஆன் ஓதுதல், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஸதகா அளித்தல் போன்றவையாகும். இறையச்சத்துடன் கூடிய தொழுகையுடன் இறைவன் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    அதையும் மீறி இறைவனின் சோதனை வந்தால் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடமே அதில் இருந்து மீண்டுவர உதவி தேடவேண்டும். இதையே திருக்குர்ஆன் (2:156) குறிப்பிடும்போது, “(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள்”, என்று தெளிவாக கூறுகின்றது.

    ஆனால் எல்லா மனிதர்களும் இப்படி இருப்பதில்லை. இன்பம் வரும் போது இறைவனை மறந்து விடுகிறார்கள். இது இறைவன் தங்களுக்கு அளித்த நற்கொடை என்பதை நினைக்கத்தவறிவிடுகிறார்கள். தங்களது உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்கள். பின்னர் சோதனை ஏற்படும் போது இறைவனை தஞ்சமடைய மறுத்து ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் கடுமையான நஷ்டமும், வேதனையும் இருக்கிறது என்று திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்”. (திருக்குர்ஆன் 22:11).

    “மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 39:49).

    எனவே, நமக்கு நன்மைகள் வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். அதைத்தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம். அந்த நன்மையின் மூலம் நாம் மட்டுமின்றி பிறரும் நன்மை அடையும்படி செயல்படுவோம். இதேபோல சோதனைகள் வந்தால் அதையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோம். இறைவனை அடி பணிந்து அந்த சோதனையில் இருந்து மீண்டுவர வழிகாட்டும்படி பிரார்த்தனை செய்வோம்.

    அல்லாஹ் வாரி வழங்குவதில் இணையற்ற வள்ளல் தன்மை மிக்கவன். தன்னை அடிபணிந்து வணங்கிய அடியார்களின் கரங்களை வெறுமையாக அனுப்புவதில்லை. அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானம் மிக்கவன், இரக்க குணம் உள்ளவன். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவனிடமே சரண் அடைவோம். அவனிடமே பாதுகாப்பு கேட்போம். இறைவன் அருள்மழை நம் மீது நிச்சயம் பொழியும், ஆமின்.

    பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.
    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இரவு 7 மணிக்கு நூர்ஷா தைக்காலில் உள்ள நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் ஆண்டவர் சமாதிக்குதைக்கால் டிரஸ்டி உபைத்துர் ரஹ்மான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    இதில் இஸ்லாமியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர். இதற்கான பதுகாப்பு பணியில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர்.
    பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், தான தர்மங்கள் செய்வதிலும், இறைவணக்கத்திலும் போட்டி போடுவதைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.
    சிலர், ‘தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எப்படிப்போனாலும் கவலையில்லை’ என்ற கருத்தைக்கொண்டிருப்பார்கள். சிலர் இதையும் தாண்டி, ‘தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், அடுத்தவர்கள் நன்றாக இருக்கக்கூடாது’ என்று பொறாமை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இந்த நினைப்பை, இது மாதிரியான எதிர்மறையான எண்ணத்தை இஸ்லாம் தடை செய்கிறது.

    “நீங்கள் வாழ்வதற்குப் பிறர் வீழ வேண்டுமெனப் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    தமக்கு எதுவெல்லாம் நடக்கக்கூடாது என நாம் நினைப்போமோ, அது மற்றவருக்கும் நடக்கக்கூடாது என்ற அறமே, ‘இன்னா செய்யாமை’ ஆகும். எதிரிக்கு பதிலுக்குப் பதிலடி கொடுப்பதினால் அவனை வென்று விட முடியாது. அவனுக்கும் நன்மை செய்வதன் மூலம் அவனை வென்று காட்ட வேண்டும்.

    “நன்மையும் தீமையும் சமமாக ஆகாது. நீர் தீமையை மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அப்பொழுது, எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்”. (திருக்குர்ஆன் 41:34)

    போட்டி, பொறாமை என்பதெல்லாம் பணத்திலோ, பதவி சுகத்திலோ, பழிவாங்கும் தன்மையிலோ, தீயசெயல்களிலோ இருக்கக்கூடாது. மாறாக போட்டி என்பது நன்மையான காரியங்களில் அமைய வேண்டும். இத்தகைய போட்டியைத்தான் இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது.

    இதுகுறித்து நபி (ஸல்) கூறுவதாவது:- இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதற்காகவும் போட்டி, பொறாமைப்படக்கூடாது. அவை: 1) ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். இதைக்கண்ட மற்றொருவர் “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே” என்று ஆதங்கத்துடன் கூறினார். 2) மற்றொருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபித்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) இடையே நன்மை செய்வதில் போட்டி இருந்தது. இதுபற்றி உமர் (ரலி) கூறுவதாவது:- “ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தர்மம் செய்வது குறித்து ஏவினார்கள். செல்வம் என்னிடம் நிறைவாக இருந்ததால் இது எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதுவரைக்கும் நான் அபூபக்கர் (ரலி) அவர்களை எந்த நன்மையிலும் முந்த முடியவில்லை.

    இன்றைய தினம் நான் போட்டி போட்டு, கூடுதலாக தர்மம் செய்து முந்திவிட வேண்டி, நபியவர்களிடம் எனது சொத்தில் சரி பாதியை கொண்டு வந்து கொட்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்?” என கேட்க... “நான் பாதி சொத்தை விட்டு வந்துள்ளேன்” என்று கூறினேன். பிறகு, அபூபக்கர் (ரலி) தம்மிடமுள்ள அனைத்தையும் நபியிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, “நீர் உமது குடும்பத்தாருக்கு என்ன விட்டு வந்தீர்” என நபி (ஸல்) கேட்டதும் “நான் இறைவனையும், இறைத்தூதரையும் மட்டுமே மிச்சம் வைத்து வந்துள்ளேன்” என்றார். இதைப் பார்த்த உமர் (ரலி), அபூபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்து “நான் எதிலும் எப்போதும் உம்மை முந்திவிட முடியாது” என்றார். (நூல்: திர்மிதி)

    போட்டி என்றால் இதுதான் போட்டி, சரியான போட்டி. இவ்வாறு பிறருக்கு நன்மைகள் செய்வதிலும், தான தர்மங்கள் செய்வதிலும், இறைவணக்கத்திலும் போட்டி போடுவதைத் தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காலில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகையை அடுத்த நாகூரில் நூர்ஷா சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மாலை 6.30 மணிக்கு தைக்கால் டிரஸ்டி உபைத்துர் ரஹ்மான் சாஹிப் துவா ஓதிய பிறகு கொடியேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர்.
    ×