என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
    வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல அமல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாவமன்னிப்பு கிடைத்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான சொந்தங்களைப் பேணுதல் என்பதை நாம் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒருமுறை நபிககள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, “இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தைவிட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது?” என்று கேட்டார்.

    அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்:

    1) அல்லாஹ்வை வணங்க வேண்டும், 2) எந்த நிலை யிலும் இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது, 3) கடமையாக்கப்பட்ட 5 நேரத் தொழுகையை தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும், 4) இறை வனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும், 5) சொந்தங்களை சேர்ந் திருக்க வேண்டும்.

    சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேரமுடியாது. நரகத்தின் மேல் போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் “ஸிராத்துல் முஸ்தகீம்”.

    சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் (19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், அதனைக் (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்”.

    தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5 விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலைபோன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும்.

    இதையே திருக்குர் ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21).

    இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.

    வடகரை ஏ. முகம்மது இஸ்மாயில் காஷிபி, சென்னை.
    உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் முகம்மது நபி (ஸல்) ஆவார்.
    உழைப்பாளர்களின் உழைப்பில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வியர்வைத் துளிகளால் தான் உலகம் பல உயரிய கண்டுபிடிப்புகளை கண்டு கொண்டுள்ளது.

    வானில் பறக்கும் வானூர்திகள், விண்வெளி ஆய்வுகள், வானளாவிய கட்டிடங்கள், கடலில் மிதக்கும் மிதவைகள், நிலப்பரப்பில் இயங்கும் வாகனங்கள், ஆலைகள், நிலத்தில் கிடைக்கும் உற்பத்திகள் அனைத்தும் உழைப்பாளர்களின் உன்னதமான வியர்வைத் துளிகளால் உருவானவைகளாகும்.

    உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் முகம்மது நபி (ஸல்) ஆவார். அவர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் ஒன்றாக சேர்த்து பார்த்த மார்க்கம் இஸ்லாம் ஆகும்

    இஸ்லாம் எவருடைய கூலி விஷயத்திலும் அநீதி இழைத்ததில்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அநீதி இழைக்கவில்லை.

    “எவருடைய கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைத்ததில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    உழைப்பாளியின் ஊதியத்தை தர மறுப்பது குற்றமாகும். உழைப்பாளியின் ஊதியத்தை அறவே கொடுக்க மறுப்பதும், அல்லது குறைத்துக் கொடுப்பதும் மோசடியாகும். இத்தகைய அரக்கர்களுக்கெதிராக (நபி (ஸல்) இறைவனிடம் மறுமையில் வாதாடி தண்டனை பெற்றுத்தருவார்கள்) இறைவனும் தானே வாதாடி தக்க பதிலடி கொடுப்பான்.

    “மூவருக்கெதிராக மறுமைநாளில் நான் வாதாடுவேன். 1) என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன், 2) சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக்கிரயத்தைச் சாப்பிட்டவன், 3) கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் உழைப்பை வாங்கிக் (சுரண்டிக்) கொண்டு ஊதியம் கொடுக்காமல் இருந்தவன், என இறைவன் இவ்வாறு கூறியதை நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    உழைப்பாளிகளுக்கு ஆதரவாக இறைவனே முன்வந்து வாதாடுவது உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டுகிறது. அதுபோல வேலைக்கு முன்பு கூலியை நிர்ணயம் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    “எவர் ஒருவர் ஒரு கூலியாளை பணியமர்த்துவாரோ அவர் அவரின் கூலியை தெரிவித்து விடட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), நூல்: பைஹகீ)

    “கூலி குறிப்பிடப்படாமல் கூலியாளை பணியமர்த்துவதை நபி (ஸல்) தடுத்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ, நூல்: அஹ்மது)

    வேலை முடிந்ததும் வியர்வை உலரும் முன்பு பேசிய ஊதியத்தை வழங்கிட இஸ்லாம் பரிந்துரைத்துள்ளது.

    “உழைப்பாளியின் வியர்வை உலரும் முன்பாகவே அவருக்கு நீங்கள் ஊதியம் வழங்கிவிடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    தினக்கூலி, வாரக்கூலி, மாதக்கூலி என வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் ஊதியத்தை வழங்கிட வேண்டும். இவற்றை இழுத்தடிக்கக் கூடாது. இதுவும் உழைப்பாளிக்கு இழைக்கப்படும் அநீதமே. இவ்வாறு செய்ய நேர்ந்தால் அவரின் ஊதியத்தை முதலாளி முதலீடு செய்து லாபத்தையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.

    “மழைக்காக மூவர் மலைப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். எதிர்பாராதவிதமாக பெரும்பாறை ஒன்று உருண்டு வந்து அந்தக் குகையின் பாதையை அடைத்துவிட்டது. இதிலிருந்து மீள ஒவ்வொருவரும் இறைவனுக்காகச் செய்த தமது நற்செயலை நினைவு கூர்ந்தனர். இதனால் அந்தப் பாறை அகன்றது. அவர்களில் ஒருவர் “இறைவா! நான் ‘பரக்’ எனும் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து ஒரு கூலியாளை அமர்த்தினேன்.

    வேலை முடிந்ததும் நிர்ணயித்தக் கூலியை அவர் வாங்க மறுத்து சென்றுவிட்டார். அதை நான் நிலத்தில் விதைத்து, விவசாயம் செய்து வந்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும், இடையர்களையும் சேகரித்து விட்டேன். அவர் சில காலங்களுக்குப் பிறகு வந்து, ‘இறைவனை அஞ்சு, எனது கூலியைக் கொடு’ என்றார். நான், ‘இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்’ என்றேன். அவரும் எடுத்துச் சென்றார் என இந்த நிகழ்வை அவர் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
    இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.
    யாரோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு உலக மக்கள் விலை கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

    தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற பயம் இல்லாமை, செல்வங்களைத் தர்மங்கள் செய்யாமல் சுயநலமாக செயல்படுவது, பணபலத்தில் ஏழைகளை உதாசீனம் செய்தல், குலப்பெருமை பேசி சண்டையிட்டுக் கொள்ளுதல், மனிதர்களுக்கு மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டது போன்று, இயற்கை மற்றும் பிற உயிரினங்களை அழித்தல், முறையற்ற வருமானம் ஈட்டுதல்... இப்படி மனிதன் செய்த பல்வேறு தவறுகளால் உலகத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பாவங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இவ்வாறு இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்:

    “மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்”. (திருக்குர்ஆன்30:41)

    அதுபோல மறுமை நாளில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது:

    “அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான். தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (திருக்குர்ஆன் 80:34-37).

    இறைவன் முன்பு நிற்கும் அந்த மறுமை நாளில் உங்களது அதிகாரம், பதவி, செல்வம் எதுவும் உதவாது. அப்போது அந்த மனிதன் நிலை எப்படி இருக்கும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்டுகின்றன.

    “என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே. என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே” (என்று அரற்றுவான்). (திருக்குர்ஆன் 69:28, 29)

    இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த நேரத்தில், நாம் எங்கு? எப்போது? என்ன தவறு செய்தோம்? என்று யோசிப்போம். தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விலகி இருப்போம். செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம்.

    இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    கந்தூரி விழாவையொட்டி தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசு தாரர்களால் சந்தனகுடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தர்காவில் உள்ள மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

    தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தில் மகான் சர்தார் நெய்னா முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. மிக பிரசித்தி பெற்ற இந்த தர்காவில் 310-ம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஹத்தம் தமாம், மகான் நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கந்தூரி விழாவை யொட்டி நேற்று அதிகாலை தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசு தாரர்களால் சந்தனகுடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தர்காவில் உள்ள மக்பாராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. இதில் மகான் வாரிசுதாரர்கள் உலக நன்மைக் காகவும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபடவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    வருகிற செப்டம்பர் மாதம் 2-ந் தேதி கந்தூரி நிறைவு விழாவும், 9-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. விழாவில் கொரோனா பரவல் காரணமாக சந்தனக்கூடு போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் திருவிழாக்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.

    யாத்திரீகர்கள் தர்காவிற்குள் வர அனுமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தர்கா ஹக்தார் கமிட்டியாளர்கள் மற்றும் மகானின் வாரிசுதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன் மேற்பார் வையில் கொரோனா தடுப்பு மற்றும் பொதுசுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
    கோனுளாம்பள்ளம் ஜெய்னுலாபுதீன் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
    திருப்பனந்தாள் அருகே கோனுளாம்பள்ளம் தர்காவில் ஜெய்னுலாபுதீன் அவுலியா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அவரது நினைவாக தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
    ‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).
    இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது:

    ‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 94:5)

    எவரும் வாழ்நாள் முழுவதும் இன்பமாகவே வாழ்ந்தார் என்று வரலாறு கிடையாது. அல்லது ஒருவர் ஆயுள் முழுவதும் துன்பமாகவே வாழ்ந்தார் என்ற சரித்திரமும் கிடையாது.

    மனித வாழ்க்கை ஒரு புத்தகத்தைப் போன்றது. ஒரு பக்கம் துன்பமும், மறுபக்கம் இன்பமும் நிறைந்தது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று மனிதனுக்கும் இன்பம்-துன்பம் என இரு பக்கங்கள் உண்டு.

    இன்பமே இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை. துன்பமே இல்லாத வாழ்க்கை சொர்க்க வாழ்க்கை.

    “சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்தபின்னர் பொது அறிவிப்பாளர் ஒருவர், ‘இனி நீங்கள் இன்பத்துடன் தான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் அடையமாட்டீர்கள்’ என்று அறிவிப்புச் செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    துன்பம் என்பது ஒருவகை வலியினால் ஏற்படும் சோகமான ஒரு உணர்வலை. அது தோல்வியால் வரலாம்; நஷ்டத்தால் ஏற்படலாம்; விருப்பமானதை இழப்பதினால் கூட நடக்கலாம்.

    துன்பத்தை சந்திக்கும் ஒருவர் சகஜமான நிலைக்கு அப்பாற்பட்டு யாரிடமும் பேசாமல் மவுனமாகி விடுவார். தனிமையை விரும்புவார். மனஅழுத்தம் ஏற்பட்டு இளைப்பாற ஓய்வெடுப்பார். அடக்கமுடியாமல் அழுவார்.

    இவருக்கு அப்போது தேவை மன ஆறுதலான நாலு வார்த்தைகள் தான்.

    துன்பத்தில் ஆறுதல் கூறும் அழகிய வார்த்தை என்பது வலி நிவாரணி போன்றது. வலிகள் இருந்தாலும் இந்த வார்த்தையால் மூளை வலியை உணராமல் செய்து விடும்.

    நீ துன்பத்தில் தவிக்கும்போது ஆறுதல் கூறுபவர் நீ விரும்பும் நபராக இருக்கமாட்டார். உன்னை விரும்பும் நபராக இருப்பார்.

    துன்பத்தில் கூறப்படும் அழகிய ஆறுதல் வரிகள் உள்ளன. அவை வருமாறு:

    ‘இறைவன் உமக்கு மகத்தான சன்மானம் வழங்கட்டுமாக! அவன் அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!’ - இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அழகிய ஆறுதல் வரிகள்.

    ‘இறைவன் உமக்கு கருணை பொழியட்டும்! துன்பத்திலிருந்து உம்மை விடுவிக்கட்டும்! உமது துன்பத்தை அகற்றிவிடட்டும்! என்பது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும்.

    உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள். (நூல்: புகாரி)

    ‘ஒருவர் துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி).

    ‘ஒரு இறைநம்பிக்கையாளர் துன்பத்தில் சிக்கிய தமது சகோதரருக்குப் பொறுமையும், ஆறுதலும் கூறி அவரைத் தேற்றினால், அவருக்கு மறுமைநாளில் இறைவன் சங்கை எனும் ஆடையை அணிவிப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸம் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    துன்பத்தில் சிக்குண்டவரை சாதி, மத, இன, நிற, மொழி, தேசியம் பாராமல் அவருக்கு ஆறுதல் கூறுவது நபியின் வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள், நோய்வாய்ப்பட்டு மரண தருவாயில் இருக்கும் ஒரு யூத சிறுவனின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறிவிட்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தருகிறது.

    துன்பத்திற்கு ஏது சாதி, மதம், ஆறுதலில் உள்ளது மனிதநேயம்.

    துன்பத்தில் உள்ளவர்களுக்கு அழகிய வார்த்தைகளால் ஆறுதல் கூறி மனிதநேயம் வளர்ப்போம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.
    நேற்று முகரம் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. தர்கா மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் முகரம் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்படும்.கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு வாரத்தின் 3 கடைசி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முகரம் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. தர்கா மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர்.
    முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது ஷா வலியுல்லா தர்கா ஷெரிப் 420-வது ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.

    பொருளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பள்ளி வாசலின் இமாம் ஜலாலுத்தீன் துவா செய்தார். தொடர்ந்து சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கனிபாய், நவாப் ஜான், கமால் மற்றும் ஜமாத்தார்கள்,

    இதயத்துல்லா, காஜா நசீமுதீன், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.
    இந்த ஆண்டு முகரம் 10 வது நாள் 20.8.2021 (வெள்ளிக்கிழைமை) அன்று வருகிறது.)

    தமிழ், ஆங்கில புத்தாண்டு போல இஸ்லாமிய புத்தாண்டு ‘ஹிஜிரி’ என்ற கணக்கீட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய ஆண்டு சந்திரனை அடிப்படையாக கொண்டது. முகரம், சபர், ரபியுல் அவ்வல், ரபியுல் ஆகிர், ஜமாதில் அவ்வல், ஜமாதில் ஆகிர், ரஜப், ஷபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகிய 12 மாதங்கள் இஸ்லாமிய மாதங்கள் ஆகும்.

    ஒவ்வொரு மாதமும் பிறையைப்பார்த்து கணக்கிடுவார்கள். குறிப்பிட்ட நாளில் பிறை தெரியாவிட்டால் அந்த மாதம் 30 நாள் ஆக கணக்கிடப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு நாடு துறந்து (ஹிஜரத்) சென்ற காலத்தில் இருந்து இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றிருந்த போது ஒரு நிகழ்வு அவர்கள் கவனத்திற்கு வந்தது. அதாவது, மூசா நபியை இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட யூதர்கள் முகரம் மாதத்தில் நோன்பு வைத்திருந்ததை அவர் அறிந்தார். இதற்கான விளக்கத்தை நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது சரித்திர நிகழ்வு ஒன்றை யூதர்கள் கூறினார்கள்.

    மூசா நபி (அலை) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரம் செய்த போது எகிப்து நாட்டை பிர்அவ்ன் என்ற சர்வாதிகாரி ஆட்சி செய்து வந்தான். அவனிடம் இறைக்கொள்கையை மூசா நபி அவர்கள் எடுத்துக்கூறினார்கள். இதை அந்த மன்னன் ஏற்க மறுத்ததோடு, மூசா நபிகளுக்கு தொல்லைகள் கொடுத்து கொடுமைகள் பல செய்தான்.

    மூசா நபியையும் அவரது ஆதரவாளர்களையும் காப்பாற்ற இறைவன் கட்டளை பிறப்பித்தான். உடனே எகிப்து நாட்டில் இருந்து வெளியேறும்படி இறை கட்டளை பிறந்தது. இதை ஏற்று தனது ஆதரவாளர்களுடன் மூசா நபிகள் வேறு நாட்டுக்கு இடம் பெயர்ந்தனர். இதை அறிந்த மன்னன் பிர்அவ்ன் தனது படைகளை அழைத்துக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றான்.

    மக்கள் சென்ற வழியில் செங்கடல் குறுக்கிட்டது. எனவே மக்கள் தப்பிக்க வழியின்றி செங்கடல் முன்பு திரண்டனர், மூசா நபிகளும் அவரது கூட்டத்தாரும். அப்போது இறைவன் உத்தரவுப்படி தனது கையில் வைத்திருந்த தடியால் கடல் நீரை ஓங்கி அடித்தார்கள். அப்போது செங்கடல் இரண்டாக பிளந்து 12 வழிகள் உருவானது. உடனே அந்த வழியாக மூசாவும் அவரது ஆதரவாளர்களும் தப்பித்து மறு கரைக்குச் சென்றனர்.

    மூசா நபிகளை விரட்டி வந்த பிர்அவ்ன் மற்றும் அவனது தளபதி ஹாமான் மற்றும் படைகள் இந்த அதிசயத்தை கண்டனர். அப்போதும் இறைவனின் கட்டளைக்கு எதிராகவே செயல்பட முடிவு செய்தனர். கடலில் தெரிந்த வழிகளில் பிர்அவ்ன் படைகள், மூசாவை விரட்டிச்சென்றன. ஆனால் மூசா நபிகளும் அவருடன் வந்தவர்களும் கரைஏறியதும் கடல் நீர் வழியை மூடியது. பிர்அவ்ன் மற்றும் அவனது படைகள் மொத்தமும் கடல் நீரில் மூழ்கி அழிந்து போயினர்.

    கொடுங்கோலன் பிர்அவ்ன் மன்னனிடம் இருந்து மூசா நபிகளை இறைவன் பாதுகாத்த நாள் தான் முகரம் மாதம் 9 வது நாள் ஆகும். இதை நினைவு படுத்தும் வகையிலே தான் அன்றைய தினம் நாங்கள் நோன்பு நோற்று இறைவனை வணங்குகிறோம், என்று யூதர்கள் தெரிவித்தனர்.

    இதைக்கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உங்களை விட அந்த நாளை கண்ணியப்படுத்துவதில் நாங்கள் ரொம்பவும் கடமைப்பட்டவர்கள். எனவே முகரம் மாதம் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

    இந்த நோன்பை ‘ஆஷுரா நோன்பு’ என்றும் அழைப்பார்கள்.

    இந்த நோன்பை ஒருவர் கடைப்பிடித்தால் அவரது ஒரு வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் இந்த நாளில் தான் ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக்கொண்டான். இறைவன் ஆதமை படைத்ததும் இந்த நாளில் தான், சொர்க்கத்தில் அவரை ஏற்றுக்கொண்டதும் இந்த நாளில் தான்.

    நபி இப்ராஹீம் (அலை) பிறந்ததும், நெருப்புக்குண்டத்தில் இருந்து அவர் தப்பித்ததும், ஈசா நபி பிறந்ததும், அவரை சொர்க்கத்திற்கு உயர்த்தியதும், முதன் முதலாக உலகிற்கு மழை பொழிந்ததும் இந்த நாளில் தான். (ஆதாரம்: நூல் முகாஷஃபதுல் குலூப் இமாம் கஜ்ஜாலி)

    இத்தனை சிறப்பு மிக்க இந்த நாட்களில் நாம் நோன்பு நோற்று இறைவனை வணங்கி முகரம் மாதத்தை மகிமைப்படுத்துவோம். நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு இறைவனின் அருள்பெறுவோம். ஆமீன்.

    வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ஹிஜிரி 1443 ஆண்டின் முகரம் மாதம் முதல் நாள் இன்று (11-ந் தேதி) முதல் தொடங்குகிறது. எனவே முகரம் 10-ம் நாள், முகரம் பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படும்.
    இஸ்லாமிய ஆண்டு, ஹிஜிரி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. ஹிஜிரி ஆண்டின் முதல் மாதத்தின் பெயர் முகரம். கடைசி மாதத்தின் பெயர் துல்ஹஜ் என்பதாகும்.

    தற்போது ஹிஜிரி 1442-ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நிறைவு பெறுவதைத்தொடர்ந்து, புதிய ஆண்டின் (1443) முதல் மாதமான முகரம் மாத பிறை நேற்று முன்தினம் (9-ந் தேதி) தென்படவில்லை.

    இதையடுத்து ஹிஜிரி 1443 ஆண்டின் முகரம் மாதம் முதல் நாள் இன்று (11-ந் தேதி) முதல் தொடங்குகிறது. எனவே முகரம் 10-ம் நாள், முகரம் பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படும்.

    மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்.
    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
    மனிதர்களில் சிலர் சுயநலம் மிக்கவர்களாகவே உள்ளனர். தங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்தும் நல்லவைகளாக இருக்க வேண்டும், தனக்கு மட்டும் எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.

    அதேநேரத்தில் பலர் பரந்த மனதுடன், ஓடோடிச்சென்று பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் உள்ளனர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

    இவ்வாறு நற்கருமங்கள் செய்பவர்களுக்கு அந்த ஏக இறைவனிடம் நற்கூலி உண்டு. அதை மீறி பிறருக்கு தீங்கு செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனையும் காத்திருக்கிறது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

    “எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:173).

    இதற்கு உதாரணமாக ஒரு வரலாற்று நிகழ்வை காண்போம்:

    நோன்பு காலத்தில் ஒரு நாள் ஹசரத் அலி (ரலி), அவரது மனைவி பாத்திமா (ரலி), அவர்களது மகன்கள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா (ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

    அலி (ரலி) யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்கம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்கம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்.

    பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஒட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி (ரலி) யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, ‘பிறகு பணம் தாருங்கள்’ என்றார்.

    அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்திற்கு 100 திர்கம் பணம் தருவதாக கூறி வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது, வேறு ஒருவர் அலி (ரலி)யிடம் ‘இந்த ஒட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா’ என்றார். ஒட்டகத்திற்கு 160 திர்கம் விலை தருவதாகவும் கூறினார்.

    அலி (ரலி) யும் அந்த ஒட்டகத்தை 160 திர்கமிற்கு விற்றார். அதில் 100 திர்கமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்கம் பணத்துடன் வீடு திரும்பினார்.

    நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர்.

    அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், “அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்கமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்” என்றார்கள்.

    இதையே இந்த திருக்குர்ஆன் வசனமும் மெய்ப்பிக்கின்றது:

    “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர்களின் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக” (திருக்குர்ஆன் 2:286).

    எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும். இறையருள் பெற வேண்டுமானால் பிறருக்கு உதவிடுங்கள். இறைவனின் உதவி உங்களை தேடிவரும்.

    பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
    ‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
    மென்மையான போக்கு இறைவனின் உயர்வான பண்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இதற்கு எதிரான போக்கு வன்மை. மென்மையை ஆதரிப்பவர் இறைநேசராக இருப்பார். வன்மையை ஆதரிப்பவர் ஷைத்தானின் உடன்பிறப்பாக உலா வருவார்.

    மென்மையான போக்கு என்பது நமது பேச்சில் வெளிப்பட (குளிர) வேண்டும். நமது செயலில் மிளிர வேண்டும். நாம் எடுக்கும் முடிவில் ஒளிர வேண்டும். இவ்வாறு நமது அணுகுமுறையை அமைத்துக் கொண்டால் சர்வமும் நன்மை மயமாக ஆகிவிடும்.

    “ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘ஆயிஷாவே! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும், பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்’ என்று கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘எல்லா விஷயங்களிலும் மென்மையைக் கையாளுவதையே இறைவன் விரும்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    பெற்றோர் குழந்தைகளிடமும், குழந்தைகள் பெற்றோர்களிடமும், பெரியவர் சிறியவரிடமும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கணவன் மனைவியிடம், ஆசிரியர் மாணவ-மாணவிகளிடம் மென்மையை கையாள வேண்டும். மேலும் பொதுமக்களிடமும், அனைத்துவிதமான உயிரினங்களிடமும் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கு அடுத்தபடியாக மென்மையான போக்கை ஆயுள்முழுவதும் கடைப்பிடித்த ஒரு மாமனிதர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

    “இறைவனின் கிருபையின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப் போயிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 3:159)

    “இறைவன் புறத்திலிருந்து எவருக்கு மென்மையான போக்கிலிருந்து பங்கு கொடுக்கப்பட்டதோ, அவருக்கு இவ்வுலக, மறுவுலக நலவுகளில் இருந்து பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எவர் மென்மையான சுபாவத்தின் பங்கை இழந்து விட்டாரோ, அவர் இருவுலக நலவுகளையும் இழந்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பஹவீ).

    “எந்த வீட்டாருக்கு அல்லாஹ் மென்மையை வழங்குகிறானோ, அதன் மூலம் அவர்களுக்குப் பலன் அளிக்கிறான். எந்த வீட்டாருக்கு மென்மை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு கடினத்தன்மையின் மூலம் நஷ்டமடையச் செய்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: பைஹகீ)

    மென்மை பரிபூரண இறைநம்பிக்கையின் ஆதாரமாகவும், அழகிய இஸ்லாமின் ஆதாரமாகவும் அமைகிறது. அது இறைநேசத்தையும், மக்களின் பாசத்தையும் பலனாகத் தரும். அது ஒருவரின் சீர்திருத்தத்தையும், அவரின் நற்குணத்தையும் பிரகடனப்படுத்தும். மென்மையின் முடிவு நற்குணமாகும். மென்மை மனிதனுக்கு நன்மையை அடைய வைக்கும் அற்புதமான செயலாகும். மென்மையே நன்மை, நன்மையே மென்மை.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ×