என் மலர்

  ஆன்மிகம்

  இஸ்லாம் வழிபாடு
  X
  இஸ்லாம் வழிபாடு

  இறையருள் பெற, பிறருக்கு உதவிடுங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும்.
  மனிதர்களில் சிலர் சுயநலம் மிக்கவர்களாகவே உள்ளனர். தங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்தும் நல்லவைகளாக இருக்க வேண்டும், தனக்கு மட்டும் எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களாக சிலர் இருக்கின்றனர்.

  அதேநேரத்தில் பலர் பரந்த மனதுடன், ஓடோடிச்சென்று பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் உள்ளனர். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்களால் முடிந்த அளவு உதவி செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

  இவ்வாறு நற்கருமங்கள் செய்பவர்களுக்கு அந்த ஏக இறைவனிடம் நற்கூலி உண்டு. அதை மீறி பிறருக்கு தீங்கு செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனையும் காத்திருக்கிறது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:

  “எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்” (திருக்குர்ஆன் 4:173).

  இதற்கு உதாரணமாக ஒரு வரலாற்று நிகழ்வை காண்போம்:

  நோன்பு காலத்தில் ஒரு நாள் ஹசரத் அலி (ரலி), அவரது மனைவி பாத்திமா (ரலி), அவர்களது மகன்கள் ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), அவர்களது பணியாளர் அல்ஹாரித் (ரலி) ஆகியோர் சாப்பிட எதுவும் இன்றி பட்டினியாக நோன்பு வைத்தனர். இந்த நிலையில் அன்னை பாத்திமா (ரலி) தன்னிடம் இருந்த ஆடை ஒன்றை அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து, இதை கடைத்தெருவில் விற்று உணவு வாங்கிவரும்படி கூறினார்கள்.

  அலி (ரலி) யும் கடைத்தெருவுக்குச்சென்று அந்த ஆடையை 6 திர்கம் பணத்திற்கு விற்றுவிட்டு அந்தப்பணத்துடன் வீடு திரும்பினார். அப்போது வழியில் சிலர் பசியோடு இருப்பதைக்கண்டு அந்த 6 திர்கம் பணத்தையும் அவர்களுக்கு தானமாக கொடுத்து விட்டார்.

  பின்னர் மனைவி, குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று நினைத்தபடி நடந்து வந்தார்கள். அப்போது ஒருவர் ஒட்டகம் ஒன்றுடன் வந்தார். இதை வாங்கிக்கொள்ளுமாறு அலி (ரலி) யிடம் கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்ல, ‘பிறகு பணம் தாருங்கள்’ என்றார்.

  அலி (ரலி)யும் அந்த ஒட்டகத்திற்கு 100 திர்கம் பணம் தருவதாக கூறி வாங்கிக்கொண்டு சிறிது தூரம் வந்த போது, வேறு ஒருவர் அலி (ரலி)யிடம் ‘இந்த ஒட்டகத்தை தனக்கு விற்க விருப்பமா’ என்றார். ஒட்டகத்திற்கு 160 திர்கம் விலை தருவதாகவும் கூறினார்.

  அலி (ரலி) யும் அந்த ஒட்டகத்தை 160 திர்கமிற்கு விற்றார். அதில் 100 திர்கமை ஒட்டகத்தின் உரிமையாளருக்கு கொடுத்து விட்டு 60 திர்கம் பணத்துடன் வீடு திரும்பினார்.

  நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் மனைவியிடம் கூறினார். பின்னர் இதை நபிகளாரிடமும் அவர்கள் தெரிவித்தனர்.

  அப்போது நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள், “அலியே தாங்கள் அல்லாஹ்வுக்காக அந்த 6 திர்கமை ஏழைகளுக்கு தானம் செய்தீர்கள். அதனால் அல்லாஹ் வானவர் ஜிப்ரீயலை வியாபாரியாகவும், வானவர் மீகாயிலை விலைக்கு வாங்குபவராகவும் அனுப்பி உங்களுக்கு நன்மை செய்தான்” என்றார்கள்.

  இதையே இந்த திருக்குர்ஆன் வசனமும் மெய்ப்பிக்கின்றது:

  “அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; இறைமறுப்பாளர்களின் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக” (திருக்குர்ஆன் 2:286).

  எந்த நிலையில் நாம் இருந்தாலும் பிறரது தேவைகளை நிறைவேற்றினால், நமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்பதை உணர்ந்து கொண்டு பிறரின் தேவைகளை நிறைவேற்ற நாம் முன்வரவேண்டும். இறையருள் பெற வேண்டுமானால் பிறருக்கு உதவிடுங்கள். இறைவனின் உதவி உங்களை தேடிவரும்.

  பேராசிரியர் அ. முகமது அப்துல்காதர், சென்னை.
  Next Story
  ×