என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ராமபிரான் இந்தத் திருத்தலத்திற்கு வந்து 48 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றதாக தல வரலாறு சொல்கிறது.
    சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ளது போரூர். இங்கு ராமநாதீஸ்வர் திருக்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான இந்தக் கோவில், ராமாயணத்தோடு தொடர்புடையது என்கிறார்கள்.

    இலங்கைக்கு ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தார், ராமபிரான். அப்போது அவர், இந்தத் திருத்தலத்திற்கு வந்து 48 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றதாக தல வரலாறு சொல்கிறது.

    சிவபெருமானை, குருவாக நினைத்து ராமபிரான் வழிபாடு செய்த காரணத்தால், இந்த ஆலயம் குரு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

    உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.
    நாம் இந்த உலக வாழ்வில் எதை எதை எல்லாமோ வெற்றி என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘பெரும் தனவந்தராகவோ, அறிவுஜீவிகளாகவோ வாழ்வது வெற்றி’ என்ற மாயையில் மூழ்கி இருக்கின்றோம். அப்படி என்றால் இந்த வரையறைக்குள் வராதவர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் இல்லையா?. அப்படியானால் உண்மையான வெற்றியாளர்கள் யார்?.

    அல்லாஹ் தன் அருள் மறையிலே இதுபற்றி இவ்வாறு சொல்லுகின்றான்:

    “நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள், வீணான காரியத்தில் இருந்து விலகி இருப்பார்கள். ஜகாத் கொடுத்து வருவார்கள், தங்கள் மர்ம ஸ்தானத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும் தங்களுடைய வாக்குறுதிகளையும் பேணிக்காத்து நடப்பார்கள்” (திருக்குர்ஆன் 23:1-8)

    இப்படிப்பட்ட பண்பு கொண்டவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. இது அனைத்து மக்களுக்கும் அறநெறியைப் போதிக்கின்ற, நேர்வழியைக் காட்டுகின்ற உபதேசமாகவே அமைந்துள்ளது. நம் வாழ்வியலை அதனோடு ஒப்பிட்டு சுய பரிசோதனை செய்து பார்த்தால் நாம் வெற்றியாளரா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

    ஒருவர் வெற்றியாளராக திகழ என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதில் முக்கியமானது இறையச்சத்துடன் கூடிய இறைவணக்கம். எனவே, நம்மைப் படைத்து, பாதுகாக்கின்ற அல்லாஹ்வுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். இந்த உணர்வில், உள்ளச்சத்தோடு தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினால் மனதில் தெளிவான சிந்தனை தோன்றும். உலக ஆசைகளுக்கு ஆட்படாமல் உறுதியான நிலையில் அல்லாஹ்வை வணங்கும் போது அந்த ஏக இறைவன் மகிழ்கின்றான். அவனது அருளால் நமது வாழ்வு வெற்றிப்பாதையை நோக்கி செல்லத்தொடங்கும்.

    ஒருவர் நற்காரியங்கள் செய்ய நினைத்தாலும் அதற்கு தடைபோடுகின்ற எத்தனையோ கேளிக்கைகள். வீண் விளையாட்டுகள், ஆடம்பர பொருட்கள் உள்ளன. உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டுவந்த செல்போன்களே இன்று பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாய் அமைந்துவிட்டது. சிறுவர்கள் முதல் முதுமையைத் தொட்டு நிற்பவர்கள் வரை கைபேசிகளில் கலாசார பண்பாட்டை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காரியங்களில் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்கள் விலகி இருப்பார்கள். நல்ல விஷயங்களில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள், சமுதாயம் மேம்பட வழி திறப்பார்கள்.

    அடுத்து அவர்கள், தாங்கள் ஈட்டிய வருமானங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தை ‘ஜகாத்’ எனும் ஏழை வரியாக தானமாக கொடுத்து விடுவார்கள். இதன்மூலம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் உருவாக உதவுவார்கள்.

    கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் லாபத்தை நான்கு பகுதியாக பிரிப்பார்கள். அதில் ஒன்றை தனக்காகவும், மற்றதை உறவுக்காகவும், மூன்றாமதை மீண்டும் முதலீடு செய்யவும், நாலாமதை ஏழைகளுக்கு தானமாகவும் அளித்து விடுவார்கள். இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. இவ்வாறு சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் பாதையில் பயணிக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.

    தற்கால கலாசார சீர்கேடுகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் மது மற்றும் மனம்-உடல் இச்சைகள். அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அந்த இச்சையை ஒருவன் துறந்து விடும் போது பாலுணர்ச்சிகளினால் தூண்டப்படும் பாதகங்களை தடுக்க முடியும். வன்மம் இல்லாத உலகை உருவாக்க அது வழி கோலும். அதற்கு உடந்தையாய் இருப்பவர்கள் வெற்றியாளர்கள்.

    உயர்ந்த குணங்கள் கொண்டவர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உரியவரிடம் பெற்ற அதே நிலையில் ஒப்படைப்பார்கள். அவ்வாறு இறையச்சத்துடன் அமானிதங்களை பேணிக்காத்து, நம்பிக்கையை நாம் வலுப்படுத்தி வந்தால் அவர்களும் வெற்றியாளர்களே.

    கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாவது காப்பாற்றுபவர்களும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். நிறைவேற்ற முடியாத, நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் குணம் கொண்ட மக்கள், சமூகங்களின் எல்லாத் தட்டுகளிலும் நிறைந்துள்ளனர். அவர்கள் ஒருபோதும் வெற்றியாளர்களாக ஆக முடியாது.

    அருள்மறை திருக்குர்ஆன் ஒரு வசனத்தில் ஆறு பண்புகளைச் சொல்லி அதனைப் பேணிப் பாதுகாப்பவர்களே வெற்றியாளர்கள் என்று வரையறுத்துச் சொல்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வசனத்திலேயே, இவர்கள் தான் சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்றவர்கள் என்றும் நற்செய்தி கூறுகிறது.

    அப்படிப்பட்ட உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்கான காரணம், புராணக் கதையோடு தொடர்புடையது. அனைவருக்கும் தெரிந்த பிரகாலதனின் வரலாற்றோடு இணைந்த கதை என்பதால், அது முன்னுரிமை பெற்றதாக மாறுகிறது.
    ஹோலி பண்டிகை- வட இந்தியர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. தென் மாநிலங்களில் இந்த பண்டிகையை கொண்டாடுவது குறைவுதான் என்றாலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான காரணம், புராணக் கதையோடு தொடர்புடையது. எனவே இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அனைவருக்கும் தெரிந்த பிரகாலதனின் வரலாற்றோடு இணைந்த கதை என்பதால், அது முன்னுரிமை பெற்றதாக மாறுகிறது.

    அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபுவின் மகனாக பிறந்தவர், பிரகலாதன். தன்னுடைய சகோதரனான இரண்யாட்சனை ஏற்கனவே வதம் செய்திருந்ததால், மகாவிஷ்ணுவின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான், இரண்யகசிபு. இந்த நிலையில் தன்னுடைய தாயின் கருவில் இருக்கும் போதே, நாரத முனிவரின் மூலமாக நாராயணரின் நாமத்தைக் கேட்டறிந்தவர், பிரகலாதன். இதன் காரணமாக அவர் பிறந்தது முதலே நாராயணரின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். தன் சகோதரனின் இறப்புக்கு காரணமான மகாவிஷ்ணு மீது மகன் பிரகலாதன் பக்தி கொண்டிருப்பது, இரண்யகசிபுவுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது. அந்தக் கோபம் தன்னுடைய மகனையே கொல்லும் அளவுக்கு உக்கிரமாக மாறியது.

    தான் பெற்ற வரங்களால், ‘உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார்?’ என்ற அகம்பாவம் இரண்யகசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. “நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்” என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்ரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை வி‌ஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர். பாம்புகள் அவரை தீண்டவில்லை. மதம் கொண்ட யானையை மிதிக்கச் செய்தனர். அது பிரகாலதன் கழுத்தில் மாலை அணிவித்து விட்டு நகர்ந்துவிட்டது. மலையில் இருந்து உருட்டி விட்டனர்.

    நாராயணரே தன்னுடைய திருக்கரங்களால், பிரகலாதனை தாங்கிக்கொண்டார். இப்படி அனைத்து துன்பங்களில் இருந்தும், பிரகலாதனை அவரது நாவில் இருந்து எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்த நாராணயரின் நாமம் காப்பாற்றியது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கையில் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு, ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட, அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான். ஹோலிகாவிடம், தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான்.

    சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக் கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது. அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில், ஹோலிகாவே எரிந்து சாம்பலாகிப்போனாள். ஆயினும் பிரகலாதனுக்கு ஒன்றும் நேரவில்லை. அவர் சிரித்தபடியே நெருப்பில் இருந்து வெளியே வந்தார். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ‘ஹோலி பண்டிகை’ கொண்டாடப் படுவதாக புராணத் தகவல் சொல்கிறது.

    வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு. ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
    விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம் அருள் மட்டுமல்ல இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படி ஒரு விரதமே வருத்தினி ஏகாதசி விரதம்.
    எப்படி விதிப்படி வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல மதிப்படி ஒருவர் செய்யும் பூஜா பலன்களும் வேண்டுதல்களும் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது மனித குலம் இதுவரை கண்டறிந்து வைத்திருக்கும் உண்மை. விரத நாள்களை முறையாகக் கடைப்பிடிக்க நம் இன்னல்கள் தீர்ந்து நன்மைகள் பெருகும். அப்படி நமக்கு நன்மைகள் அருளும் விரதம் ஏகாதசி விரதம்.

    பொதுவாக சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் ஏகாதசியுடன் கூடிவரும் சனிக்கிழமை என்றால் மிகவும் விசேஷம். அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து ஏகாதசி 11 வது நாள். இந்த நாளில் நம் மனதையும் உடலையும் இலகுவாக்க நாம் விரதம் மேற்கொள்ள வேண்டிய நாள். பத்துநாள்கள் உலக விஷயமாகத் தொடர்ந்து இயங்கும் உடலையும் மனதையும் ஓய்வுபடுத்திப் பராமரிக்க வேண்டிய நாள். உடல் உணவைத் தவிர்ப்பதன் மூலமும் மனம் உலகமயமான எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நினைப்பதன் மூலமும் புத்துணர்ச்சி கொள்ளும். இப்படி பௌதீகமான நன்மைகள் இருந்தாலும் ஆன்மிக ரீதியிலான பலன்களும் அநேகம். விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம் அருள் மட்டுமல்ல இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படி ஒரு விரதமே வருத்தினி ஏகாதசி விரதம்.

    வருத்தினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன்,

    ``விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருத்தினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

    இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருத்தினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்” என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

    இந்த விரதத்தின் பலன்களை எடுத்துச் சொல்லும்போது தானங்களின் பலன்களையும் எடுத்துரைக்கிறார். வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது `குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ண தானம் செய்வதற்கு இணையானது’ என்கிறார்.

    இதில் இரண்டு விஷயங்கள் சூட்சுமமாக உள்ளதாகப் பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒன்று குருக்ஷேத்திர புண்ணிய பூமி என்பது நம் போராட்ட வாழ்வைக் குறிப்பது. அதில் சூரிய கிரகணம் என்பது வாழ்வில் துயரங்கள் சூழும் நேரம் என்று கொள்ளலாம். அப்போது நாம் அளிக்கும் சொர்ண தானமே இந்த விரதமும் வழிபாடும். துன்பங்கள் சூழும்போது இறைவனை நினைப்பது என்பது மிகவும் பலன்தரும்.

    தானங்களில் குதிரை தானத்தைவிட கஜ தானம் உயர்ந்தது. கஜ தானத்தைவிட பூமி தானம் உயர்ந்தது. பூமிதானத்தைவிட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தைவிட சொர்ண தானம் உயர்ந்தது என்கிறார்கள். சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை வருத்தினி ஏகாதசி நமக்கு அருளும்.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின்போது சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    இன்று (புதன்கிழமை) 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து அன்று காலை 9 மணிக்கு தேர்வடம் பிடித்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள்ளும், தேரோட்டத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். திருவிழாவின்போது சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கூழ் ஊற்றுதல், பிரசாதம், அன்னதானம் வழங்குவதற்கும், கோவில் பகுதியில் திருவிழா கடைகளுக்கும் அனுமதி இல்லை. மேலும் அக்னி சட்டி, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் நீராடுதலில் செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான மஞ்சளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.
    * பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள், மீண்டும் மறுநாள் கண்விழித்து எழுவது என்பதே ஒரு மறுபிறவி போன்றதுதான். அதுவும் ஒரு உயிர் படைப்பு போன்றதுதான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.

    * பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது. கண்கள் -ஆரோக்கியத்தையும், உடல் - வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

    * அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாருமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.

    * சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில், சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது. இந்த அதிகாலை நேரத்தில் உடல் சுறுசுறுப்படையும் என்பதால், சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதுதான். உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறானாம். அதனால்தான் அதிகாலையை ‘உஷத் காலம்’ என்கிறார்கள். இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் அதிகாலையில் பூமியை நோக்கி பாய்வதால், அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமான பலனைத் தரும்.

    * பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்யத் தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம், பிரம்ம முகூர்த்தம். அந்த நேரத்தில் எழுந்து, உங்கள் பணிகளைத் தொடங்கினால், வாழ்வில் மாற்றத்தை சந்திக்கலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். லட்சுமி கடாட்சம் இல்லத்தில் குடியேறும்.
    கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் அடுத்துள்ளது, ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு என்னும் பசு வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் ‘ஆவூர்’ என்றானது.
    கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் அடுத்துள்ளது, ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு என்னும் பசு வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் ‘ஆவூர்’ என்றானது. இறைவன்- பசுபதீஸ்வரர், இறைவி- பங்கஜவல்லி.

    இத்திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு, ஒரே பீடத்தில் அமைந்த ஐந்து பைரவர்கள். தேய்பிறை அஷ்டமி திதி அன்று, இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். பிதுர் தோஷத்தையும் பைரவர் வழிபாடு நிவர்த்தி செய்யும்.
    இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை.
    இயேசு பூமியில் அவதரித்து வாழ்ந்த காலம் முழுவதும் மனத்தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். எல்லாப் புகழையும் தமது வானுலகத் தந்தைக்கே அர்ப்பணித்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து, அவருடைய நற்குணங்களைக் கண்டு, மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அந்தப் புகழை இயேசு ஒருபோதும் தன்னுடையது என்று கருதவில்லை. அனைத்தையும் தனது தலையில் அவர் ஏற்றிக்கொள்ளவில்லை, பரலோகத் தந்தைக்கே சமர்ப்பித்தார்.

    இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை. மனிதர்களைக் கண்டு அஞ்சவும்இல்லை. அதேபோல, இயேசு ஒருபோதும் வீராப்புடன் நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடும் அன்போடும் கனிவோடும் நடந்துகொண்டார்.

    தன்னை நாடிவந்த மக்கள் அத்தனை பேரையும் நடத்திய விதத்திலும் மனத்தாழ்மையைக் காட்டினார் இயேசு. தனது சீடர்கள் தனக்கு ஏமாற்றம் அளித்தபோது அவர்கள் மீது எரிந்து விழவில்லை; மாறாக, அவர்களிடம் அன்பாகவே நடந்துகொண்டார். ஓய்வு எடுப்பதற்கும், தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்வதற்கும் அவர் தனிமையான இடத்தைத் தேடிச் சென்ற நேரத்தில் மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்; அப்போது இயேசு அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை, தம்முடைய சொந்த நலன்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கற்பித்தார்.

    “நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியுடனும் இருக்கிறேன்” (மத்தேயு 11:29) என்று இயேசு குறிப்பிட்டார். தன் சீடர்களுக்கு மனத்தாழ்ச்சியைக் கற்பிக்க அவர் மறக்கவில்லை.

    பூமியில் இயேசு வாழ்ந்த கடைசி இரவு அது. தனது சீடர்களுடன் இரவு விருந்து நடக்கிறது. அப்போது இயேசு எழுந்து தம் மேலங்கியைக் கழற்றி வைத்தார். ஒரு வேலைக்காரனைப் போல ஒரு சிறு துண்டை இடுப்பில் அணிந்துகொள்கிறார். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தமது சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகே தனது மேலங்கியை அணிந்துகொள்கிறார்.

    இயேசு ஏன் இந்தத் தாழ்மையான வேலையைச் செய்தார்? இயேசுவே விளக்கமளிக்கிறார் பாருங்கள்: “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை எஜமான் என்றும், போதகரே என்றும் அழைக்கிறீர்கள். எனக்கு உங்கள் இதயத்தில் உயர்ந்த இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்குத் தந்திருக்கிற இடத்திலிருந்து இறங்கி உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இந்த மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா. 13:12-15).

    இப்படியொரு தாழ்மையான வேலையைச் செய்ய முன்வந்ததன் மூலம் தம் மைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளத் தம்முடைய சீடர்களுக்கு உதவினார். அந்தப் பாடம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம்பெற்றது. மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள அவர்களுக்கு ஊக்கமளித்தது.

    மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை இயேசு தனது சீடர்களுக்கு வலியுறுத்திக் காட்டியது அது முதல் தடவை அல்ல. ஒருசமயம் தனது சீடர்களுக்கு மத்தியில் போட்டி மனப்பான்மை தலைதூக்கியபோது, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் பக்கத்தில் நிறுத்தி, “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று அவர்களிடம் சொன்னார் (லூக். 9:46-48).

    மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்ட தன்னைக் கொல்ல நினைக்கும் பரிசேயர்கள் முதன்மையான இடத்தைப் பெறவே துடிக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்ததால், “தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக். 14:11) என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

    சில சமயங்களில் தாழ்வாய்க் கருதப்படும் வேலைகளை நாம் மனப்பூர்வமாய் ஏற்றுச் செய்வதன் மூலம் இயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா? இதை சிந்தித்து பார்க்கவும், முயன்று பார்க்கவும் இந்த புனித வாரம் நமக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது. முயன்று பார்ப்போம். புனித வாரத்தில் பக்தியோடு பங்கெடுப்போம்.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே, அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். அதற்கு காரணம் இருக்கிறது.
    அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே, அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். அதற்கு காரணம் இருக்கிறது. கணவர் தன்னுடன் வாழ மறுத்ததும், இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்றார், புனிதவதி. பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார்.

    இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், ‘அம்மையே அமர்க’ என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
    காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒரு மாத காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    தற்போதைய காரைக்கால் பகுதி, முன் காலத்தில் ‘காரை வனம்’ என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் வணிகத் தொழிலை செய்து வந்தனர். இங்கு வணிகர்களின் தலைவராக இருந்தவர் தனதத்தன். இவருக்கும், இவரது மனைவி தர்மவதிக்கும் மகளாகப் பிறந்தவர், புனிதவதி. பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட இவர், சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயது வந்ததும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

    திருமணத்திற்குப் பிறகு, புனிதவதி கணவருடன், காரைக்கால் பகுதியிலேயே வசித்து வந்தார். ஒரு முறை பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் வருகை தந்தார். அவர் தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தனிடம் கொடுத்தார். அக்கனிகளை அவர் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் புனிதவதியின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அடியார் வேடத்தில் உணவு வேண்டி, அவரது வீட்டு வாசலில் வந்து நின்றார். அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் தந்து உபசரித்தார், புனிதவதி. அதனை உண்ட சிவனடியார் புனிதவதியை வாழ்த்திச் சென்றார். இதற்கிடையில் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு, பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய புனிதவதி, மீதமிருந்த ஒரு மாங்கனியை தன்னுடைய கணவரின் இலையில் வைத்தார்.

    மாங்கனியின் சுவை நன்றாக இருந்ததால், மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கூறினார், பரமதத்தன். இதனால் செய்வதறியாது திகைத்த புனிதவதி, ‘இல்லை’ என்று சொன்னால் கணவர் கோபித்துக் கொள்வாரோ என்று நினைத்து, பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை நினைத்து இருகரத்தையும் நீட்டி வேண்டினார். அப்போது ஆச்சரியப்படும் வகையில் அவரது கையில் ஒரு மாங்கனி தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதனை கணவருக்கு பரிமாறினார்.

    முதலில் வைத்த மாங்கனியைவிட இந்தக் கனி அதிக சுவையுடன் இருந்தது. இதனால் பரமதத்தனுக்கு சந்தேகம் உண்டானது. ‘ஒரே மரத்தில் இருந்து வந்த இரண்டு மாங்கனி களிலும் இவ்வளவு சுவை வித்தியாசம் எப்படி இருக்கும்?’ என்று நினைத்தார். உடனே மனைவியிடம், “இந்தப் பழம் ஏது?” என்று கேட்டார். கணவரிடம் பொய் சொல்ல விரும்பாத புனிதவதி, நடந்ததை அப்படியே எடுத்துரைத்தார்.

    ஆனால் இதனை பரமதத்தன் நம்பவில்லை. “ஈசனே.. உனக்கு கனி தந்தார் என்பதை எப்படி நம்புவது? மீண்டும் ஒரு கனியை சிவபெருமானிடம் சொல்லி உன்னால் வரவழைக்க முடியுமா?” என்று கேட்டார்.

    இதையடுத்து புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, முன்பு போலவே இப்போதும் ஒரு மாங்கனி, புனிதவதியின் கரங்களில் தோன்றியது. இதைக் கண்டு வியப்படைந்த பரமதத்தன், “நீ மனிதப் பிறவியே இல்லை. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்ந்தால் அது சரிபட்டு வராது” என்று கூறி விட்டு, வாணிபம் செய்வதற்காக பாண்டியநாடு சென்றுவிட்டார்.

    மதுரை மாநகர் சென்ற பரமதத்தன் அங்கு, வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர் களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, தன் முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று சூட்டினார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, தன்னுடைய உறவினர்களின் மூலமாக புனிதவதிக்கு தெரியவந்தது. அவர், தன் உறவுகளுடன் பாண்டிய நாடு சென்றார். அங்கு வசித்த பரமதத்தனின் இல்லத்தைக் கண்டுபிடித்தார். புனிதவதியைக் கண்ட பரமதத்தன், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். அதோடு தன்னால் இறைசக்தி படைத்த பெண்ணோடு வாழ முடியாது என்று உறுதிபட தெரிவித்து விட்டார்.

    கணவரே இல்லை என்ற பிறகு, தனக்கு அழகு மேனி எதற்கு என்று எண்ணிய புனிதவதி, தன்னுடைய உருவத்தை பேய் வடிவமாக மாற்றும்படி இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே செய்தார். இதையடுத்து இறைவனைக் காண்பதற்காக, கயிலாயம் புறப்பட்டார், புனிதவதி. ‘கயிலாயம்’ இறைவன் குடியிருக்கும் புனிதமான இடம் என்பதால், அங்கு தன்னுடைய கால் படக் கூடாது என்பதற்காக, தலைகீழாக நடந்து சென்றார்.

    இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால், இறைவா உன்னை என்றும் மறவாமை வேண்டும். நீ ஆடும் போது உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும்” என்றார். அவ்வாறே அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்தார். அங்கு தன் திருவடி யின் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற புனிதவதி, 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருப்பதாக வரலாறு சொல்கிறது. இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும் இவர் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக காரைக்கால் அம்மையார் சிறப்பு பெறுகிறார். காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒரு மாத காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
    போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.

    புராண வரலாறு :

    அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.

    இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.

    மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.

    ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.

    இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.

    அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.

    சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.

    பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

    சரபேஸ்வரர் :

    தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.

    அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.

    வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.

    இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.

    எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.

    தொன்மைச் சிறப்பு:

    இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

    சரபேஸ்வரர் வழிபாடு :

    எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.

    இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

    அமைவிடம் :

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.
    மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக, இறைவனை வழிபட்டு வந்ததாக, புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
    மனிதர்களைப் போலவே, விலங்குகளும் தங்கள் பிறவியின் பலனை அடைவதற்காக, இறைவனை வழிபட்டு வந்ததாக, புராணங்களும், பல கோவில் வரலாறுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அப்படி விலங்குகள் வழிபட்ட சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலி வனம். காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார். சாபத்தால் புலியாக மாறிய முனிவர், இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

    சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் பெற்றிருக்கிறாள்.

    சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும். யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.

    எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம்.

    ஈ - வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

    பாம்புகள், சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

    அணில், குரங்கு, காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது.

    மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    வண்டு, சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார். இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

    நண்டு, சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி. சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

    சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

    யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

    ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

    கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார்.

    சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை. தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.
    ×