search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா?

    இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை.
    இயேசு பூமியில் அவதரித்து வாழ்ந்த காலம் முழுவதும் மனத்தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். எல்லாப் புகழையும் தமது வானுலகத் தந்தைக்கே அர்ப்பணித்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து, அவருடைய நற்குணங்களைக் கண்டு, மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அந்தப் புகழை இயேசு ஒருபோதும் தன்னுடையது என்று கருதவில்லை. அனைத்தையும் தனது தலையில் அவர் ஏற்றிக்கொள்ளவில்லை, பரலோகத் தந்தைக்கே சமர்ப்பித்தார்.

    இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை. மனிதர்களைக் கண்டு அஞ்சவும்இல்லை. அதேபோல, இயேசு ஒருபோதும் வீராப்புடன் நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடும் அன்போடும் கனிவோடும் நடந்துகொண்டார்.

    தன்னை நாடிவந்த மக்கள் அத்தனை பேரையும் நடத்திய விதத்திலும் மனத்தாழ்மையைக் காட்டினார் இயேசு. தனது சீடர்கள் தனக்கு ஏமாற்றம் அளித்தபோது அவர்கள் மீது எரிந்து விழவில்லை; மாறாக, அவர்களிடம் அன்பாகவே நடந்துகொண்டார். ஓய்வு எடுப்பதற்கும், தந்தையை நோக்கிப் பிரார்த்தனை செய்வதற்கும் அவர் தனிமையான இடத்தைத் தேடிச் சென்ற நேரத்தில் மக்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்; அப்போது இயேசு அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை, தம்முடைய சொந்த நலன்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கற்பித்தார்.

    “நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியுடனும் இருக்கிறேன்” (மத்தேயு 11:29) என்று இயேசு குறிப்பிட்டார். தன் சீடர்களுக்கு மனத்தாழ்ச்சியைக் கற்பிக்க அவர் மறக்கவில்லை.

    பூமியில் இயேசு வாழ்ந்த கடைசி இரவு அது. தனது சீடர்களுடன் இரவு விருந்து நடக்கிறது. அப்போது இயேசு எழுந்து தம் மேலங்கியைக் கழற்றி வைத்தார். ஒரு வேலைக்காரனைப் போல ஒரு சிறு துண்டை இடுப்பில் அணிந்துகொள்கிறார். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தமது சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகே தனது மேலங்கியை அணிந்துகொள்கிறார்.

    இயேசு ஏன் இந்தத் தாழ்மையான வேலையைச் செய்தார்? இயேசுவே விளக்கமளிக்கிறார் பாருங்கள்: “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை எஜமான் என்றும், போதகரே என்றும் அழைக்கிறீர்கள். எனக்கு உங்கள் இதயத்தில் உயர்ந்த இடத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எனக்குத் தந்திருக்கிற இடத்திலிருந்து இறங்கி உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இந்த மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா. 13:12-15).

    இப்படியொரு தாழ்மையான வேலையைச் செய்ய முன்வந்ததன் மூலம் தம் மைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளத் தம்முடைய சீடர்களுக்கு உதவினார். அந்தப் பாடம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம்பெற்றது. மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள அவர்களுக்கு ஊக்கமளித்தது.

    மனத்தாழ்மையின் முக்கியத்துவத்தை இயேசு தனது சீடர்களுக்கு வலியுறுத்திக் காட்டியது அது முதல் தடவை அல்ல. ஒருசமயம் தனது சீடர்களுக்கு மத்தியில் போட்டி மனப்பான்மை தலைதூக்கியபோது, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் பக்கத்தில் நிறுத்தி, “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” என்று அவர்களிடம் சொன்னார் (லூக். 9:46-48).

    மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவிட்ட தன்னைக் கொல்ல நினைக்கும் பரிசேயர்கள் முதன்மையான இடத்தைப் பெறவே துடிக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்ததால், “தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக். 14:11) என்று மற்றொரு சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

    சில சமயங்களில் தாழ்வாய்க் கருதப்படும் வேலைகளை நாம் மனப்பூர்வமாய் ஏற்றுச் செய்வதன் மூலம் இயேசு காட்டிய மனத்தாழ்மையை நம்மால் பின்பற்ற முடியுமா? இதை சிந்தித்து பார்க்கவும், முயன்று பார்க்கவும் இந்த புனித வாரம் நமக்கு சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறது. முயன்று பார்ப்போம். புனித வாரத்தில் பக்தியோடு பங்கெடுப்போம்.
    Next Story
    ×