search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    வருத்தினி ஏகாதசி மகிமைகளும் விரதம் கடைப்பிடிக்கும் எளிய வழிமுறைகளும்

    விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம் அருள் மட்டுமல்ல இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படி ஒரு விரதமே வருத்தினி ஏகாதசி விரதம்.
    எப்படி விதிப்படி வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல மதிப்படி ஒருவர் செய்யும் பூஜா பலன்களும் வேண்டுதல்களும் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது மனித குலம் இதுவரை கண்டறிந்து வைத்திருக்கும் உண்மை. விரத நாள்களை முறையாகக் கடைப்பிடிக்க நம் இன்னல்கள் தீர்ந்து நன்மைகள் பெருகும். அப்படி நமக்கு நன்மைகள் அருளும் விரதம் ஏகாதசி விரதம்.

    பொதுவாக சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் ஏகாதசியுடன் கூடிவரும் சனிக்கிழமை என்றால் மிகவும் விசேஷம். அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து ஏகாதசி 11 வது நாள். இந்த நாளில் நம் மனதையும் உடலையும் இலகுவாக்க நாம் விரதம் மேற்கொள்ள வேண்டிய நாள். பத்துநாள்கள் உலக விஷயமாகத் தொடர்ந்து இயங்கும் உடலையும் மனதையும் ஓய்வுபடுத்திப் பராமரிக்க வேண்டிய நாள். உடல் உணவைத் தவிர்ப்பதன் மூலமும் மனம் உலகமயமான எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நினைப்பதன் மூலமும் புத்துணர்ச்சி கொள்ளும். இப்படி பௌதீகமான நன்மைகள் இருந்தாலும் ஆன்மிக ரீதியிலான பலன்களும் அநேகம். விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம் அருள் மட்டுமல்ல இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படி ஒரு விரதமே வருத்தினி ஏகாதசி விரதம்.

    வருத்தினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன்,

    ``விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருத்தினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

    இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருத்தினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்” என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

    இந்த விரதத்தின் பலன்களை எடுத்துச் சொல்லும்போது தானங்களின் பலன்களையும் எடுத்துரைக்கிறார். வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது `குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ண தானம் செய்வதற்கு இணையானது’ என்கிறார்.

    இதில் இரண்டு விஷயங்கள் சூட்சுமமாக உள்ளதாகப் பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒன்று குருக்ஷேத்திர புண்ணிய பூமி என்பது நம் போராட்ட வாழ்வைக் குறிப்பது. அதில் சூரிய கிரகணம் என்பது வாழ்வில் துயரங்கள் சூழும் நேரம் என்று கொள்ளலாம். அப்போது நாம் அளிக்கும் சொர்ண தானமே இந்த விரதமும் வழிபாடும். துன்பங்கள் சூழும்போது இறைவனை நினைப்பது என்பது மிகவும் பலன்தரும்.

    தானங்களில் குதிரை தானத்தைவிட கஜ தானம் உயர்ந்தது. கஜ தானத்தைவிட பூமி தானம் உயர்ந்தது. பூமிதானத்தைவிட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தைவிட சொர்ண தானம் உயர்ந்தது என்கிறார்கள். சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை வருத்தினி ஏகாதசி நமக்கு அருளும்.
    Next Story
    ×