என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்படும் பாரம்பரிய பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆச்சரிய மூட்டும் வகையில் உள்ளன.
    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்படும் பாரம்பரிய பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆச்சரிய மூட்டும் வகையில் உள்ளன. ஏனெனில் பல்வேறு நாடுகளின் வேறுபட்ட கலாசாரத்தின் வடிவங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பாரம்பரிய பழக்கங்கள் திகழ்கின்றன. அதனால் தான் உலகின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அந்நிகழ்வுகள் அமைகின்றன. இந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களை காணவே பலரும் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுகளில் அதிமுக்கியமான சில பழக்கங்களை காணலாம்.

    பிரமாண்ட மின்விளக்கு திருவிழா :

    கிறிஸ்துமஸ் இரவு விருந்துக்கு முந்தைய சனிக்கிழமையில் சான் பெர்னாண்டோ நகரில் மிகப்பெரிய பிரமாண்ட விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இது “ பிலிப்பைன்ஸின் கிறிஸ்துமஸ் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. பதினோரு கிராமங்கள் கலந்து கொண்டு எவை பிரமாண்ட விளக்குகளை தொங்கவிடுகின்றன என்றவாறு போட்டி நடைபெறும். இதனை காண உலகெங்கும் உள்ள மக்கள் கூடுவர். முன்பு அரை மீட்டர் வட்டவடிவிலான காகித விளக்கு கூண்டுகள் அலங்கரிக்கப்பட்டு தொங்கவிடப்படுகின்றன. தற்போது 6 மீட்டர் விட்டம் உள்ள வட்ட வடிவிலான பெரிய காகித விளக்கு கூண்டுகள் அழகுற வண்ண மின் விளக்குகள் பின்னணியில் தொங்கவிடப்படும். அதனை பார்க்கும் போது இனைடாஸ்கோப்பில் விரியும் வண்ண வடிவங்கள் போல் அழகுற இருக்கும்.

    பெரிய காவல் ஆடு நிற்க வைப்பது :

    ஸ்விடனில் கேவல் கேஸ்டல் ஸ்கொயரில் 13 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் ஆடு உருவாக்கப்பட்டு நிற்க வைக்கப்படும். இது 1966-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கியமான பழக்கமாக இந்த ஆடு எரியவைக்கப்பட்டு கீழே விழச் செய்யப்படும். இதுவரை 29 முறை வெற்றிகரமாக இந்த ஆடு எரிக்கப்பட்டு விழவைக்கப்பட்டுள்ளது.



    வீட்டின் விளக்குமாறுகளை ஒளித்து வைத்தல் :

    நார்வே மிக பழமையான கிறிஸ்துமஸ் இரவு பழக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று தங்கள் வீட்டில் உள்ள விளக்குமாறு (துடைப்பம்)-யை ஒளித்து வைத்து விடுவர். ஏனெனில் கிறிஸ்துமஸ் இரவு அன்று சாத்தான்கள் வெளியே செல்லும் போது அவரின் வீட்டு துடைப்பத்தையும் எடுத்து சென்றுவிடுமாம். எனவே கிறிஸ்துமஸ் ஈவ் அன்று பாதுகாப்பான இடத்தில் தங்கள் வீட்டு விளக்குமாற்றை ஒளித்து வைத்து விடுவர். அப்போது தான் திருடமாட்டார்களாம்.

    ரோலர் ஸ்கேட்டிங்கில் செல்வது வழக்கம் :

    வெனிசூலாவின் காராகாஸ் நகரில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் இரவு பூஜைக்கு தேவலாயம் செல்வது என்பது ரோலர் ஸ்கேட்டிங்-யில் மட்டுமே. அதற்கென அனைத்து முக்கிய சாலைகளிலும் கார் போன்ற வாகன போக்குவரத்தை தடை செய்து ரோலர் ஸ்கேட்டிங் பயணத்திற்கே திறந்து இருக்கும். அதுபோல் கிறிஸ்துமஸ் இரவு விருந்தில் “டோமல்ஸ்” என்ற கறி உருளை உணவு பரிமாறப்படும்.

    சிறு மெழுகுவர்த்தி தினம் :

    கொலம்பியாவில் கிறிஸ்துமஸ் தொடங்கியது முதல் நமது வீடு, பொது இடம், நகரம் என அனைத்து இடமும் காகித விளக்கு கூண்டுகள் நடுவே சிறு மெழுகுவர்த்தி ஏற்றி அலங்கரித்து வைப்பர். நகர முழுவதும் வீடுகளின் வாசல் மற்றும் ஜன்னல், பால்கனி என காகித விளக்கு கூண்டில் மெழுகுவர்த்தி எரியும் அழகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிக பிரம்மாண்டமாக காட்சி தரும்.
    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் பாரம்பரிய தொடர்ச்சியாக இணைந்து வருகின்றன.
    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டும் பாரம்பரிய தொடர்ச்சியாக இணைந்து வருகின்றன. இந்த நிறங்கள், ஒவ்வொன்றிற்கும் என ஓர் பிரத்யேகமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையோடு இந்நிறங்களுக்கு உண்டான தொடர்பு குறித்து கிழக்கத்திய மற்றும் வடக்கத்திய ஐரோப்பிய நாடுகள் தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் மரபுகளை வைத்துள்ளன. அதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் காலமான குளிர்காலமும் அதில் உள்ள இருளும், குளுமையும் ஓர் காரணமாகவும் அறியப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் உடன் தொன்றுதொட்டு வரும் நிறங்களாக பச்சை, சிகப்பு, தங்கநிறம், வெள்ளை, நீலம் அறியப்படுகிறது. இவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அனைத்து அலங்கார அணிவகுப்பு மட்டுமின்றி எல்லா நிலையிலும் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

    பச்சை நிறத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    என்றும் பசுமையுடன் திகழும் ஹோலி, இவி மற்றும் மிசல்டாய் போன்ற இலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அலங்காரத்திற்கு என பயன்படுத்தப்பட்டுள்ளன. இருள் நிறைந்த நீண்ட குளிர்கால இரவுகளில் கட்டிடங்கள் மீது பிரகாசமாக தெரிகின்ற வகையில் இந்த பச்சையிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு குளிர்காலம் விரைவில் முடிந்து வசந்தகாலம் வருகிறது என்பதை தெரிவிக்கும் விதமாகவும் உள்ளது.

    ஹோலி என்பது முள் நிறைந்த இந்த இலைகள் இயேசுவின் முள் கிரீடத்தையும் அதில் உள்ள சிவப்பு பழம் முள்பட்டு உதிர்ந்த இயேசுவின் இரத்தத்துளிகளை காட்சிபடுத்தும் விதமாக உள்ளதால் ஹோலி பச்சை இலை பயன்படுத்தப்பட்டன.

    பழங்கால ரோமானியர்கள் பசுமையான கிளைகளை ஜனவரி மாதங்களில் அதிர்ஷ்டத்தின் சின்னமாக பரிமாறி கொள்வர். அதுபோல் எகிப்தியர்கள் பனை இலைகளை வீடுகளின் முன்பு குளிர்கால பண்டிகை தொடக்கத்தின் போதே தொங்கவிடுவர். இதுமட்டுமின்றி இன்றைய நாளில் அனைத்து பகுதி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் பயன்படுத்தும் கிறிஸ்துமஸ் மரம் பச்சை நிறமாய் தொடர்ந்து இணைந்து உள்ளன.

    இயேசுவின் இரத்தமான சிவப்பு நிறம்

    நெடுங்காலம் முன்பே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சொர்க்க மரத்தில் காணும் ஆப்பிள் நிறமாய் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சொர்க்க மரம் என்பதால் பைன் மரங்களாய் நிற்க வைத்து அதில் சிகப்பு நிற ஆப்பிள்களை தொங்கவிடுவர்.

    அது போல் ஹோலி பெர்ரி பழங்களின் நிறமும் சிகப்பு, இது இயேசுவின் இரத்தத்தின் வடிவமாக கூறப்படுகிறது. எனவே ஹோலி பச்சை இலையுடன் சிவப்பு உருளை பழங்களும் அலங்காரத்திற்கும் அதன் சிகப்பு நிறம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரதான இடம் பிடிக்கிறது. பிஷப்புகளில் கயிறு சிகப்பு, சாண்டா கிளாஸின் ஆடையின் நிறம் சிகப்பு என கிறிஸ்துமஸ் உடன் சிகப்பு நிறம் தொடர்பு கொண்டுள்ளது.

    நட்சத்திர வண்ணமான தங்கநிறம்

    தங்க நிறம் சூரியன் மற்றும் ஒளியின் நிறமாக உள்ளது. இது இருளான குளிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. கதகதப்பு தரும் நெருப்பின் வண்ணமும் சிவப்பு மற்றும் தங்க நிறமாய் தான் இருக்கிறது. குழந்தை இயேசு பிறக்க போகிறான் என்பதை கூறிய ஞானியை தொடர்ந்த நட்சத்திரத்தின் நிறமாகவும் தங்க நிறம் பார்க்கப்படுகிறது.

    தூய்மை மற்றும் அமைதியை நினைவூட்டும் வெள்ளை

    குளிர்கால பனிபொழிவு அதி உன்னத வெண்மை, சொர்க்க மரத்தின் மீது வெள்ளை காகித செதில்கள் சூழப்பட்டிருக்கும். இது கிறிஸ்தவ கூட்டங்களில் பிரெட் உண்பதை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நிறமாக வெள்ளை நிறத்தை பயன்படுத்துகின்றனர். தேவாலய பலிபீடங்களை சுழற்றும் துணி குறிப்பாக வெள்ளை நிறத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.

    மேரிமாதாவுடன் தொடர்புடைய நீலம்

    இயேசுவின் தாயான மேரிமாதா வுடன் தொடர்பு கொண்டது நீல நிறம். மேலும் வானத்தையும், சொர்க்கத்தையும் பிரதிபலிக்கும் நிறமாகவும் நீலம் உள்ளது. மத்திய கால கட்டத்தில் நீல நிற பெயிண்ட் என்பது தங்கத்தின் விலையை விட கூடுதலாக இருந்தது. மேரி மாதா நீலநிற பூச்சுடன் காட்சியளிப்பது மிக முக்கியமாக கருதப்பட்டது.
    நம்முடைய தேவன் நம்மை சிறையிருப்பிலிருந்து மாற்றும்பொழுது, நிச்சயமாகவே நம் வாழ்வில் சந்தோ‌ஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
    இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள். சிறையிருப்பு என்றவுடனே நம் கண்களுக்கு முன்பாக வருவது சிறைச்சாலை கம்பிகள், சிறைச்சாலைக் கைதிகளே. பலவிதமான குற்றம் புரிவோரும் அவரவர் செய்த குற்றத்திற்கு தக்கதாக தண்டனை வழங்கப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர்.

    பிரியமான சகோதரனே! சகோதரியே! நம்முடைய வாழ்விலும் அநேக சிறையிருப்புகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். பலவிதமான போராட்டங்கள், வேதனைகள் நம்மை சிறைப்படுத்தி இருக்கலாம். இப்படிப்பட்ட சிறையிருப்புகளினின்று விடுதலையைத் தருபவர் நம் அருமை ஆண்டவர் ஒருவரே. நம்முடைய தேவன் நம்மை சிறையிருப்பிலிருந்து மாற்றும்பொழுது, நிச்சயமாகவே நம் வாழ்வில் சந்தோ‌ஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

    ‘‘கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்’’. சங்கீதம் 14:7

    அன்பானவர்களே! நம் தேவன் எப்பொழுது? எப்படி? நம்முடைய சிறையிருப்பை மாற்றுவார்? என்பது குறித்து நாம் தியானிப்போம்.

    பாவத்தை அறிக்கையிடும்போது விடுதலை

    இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் சிறையிருப்பில் இருந்து தேவன் விடுவித்தார். அவர்களுக்கு அற்புதங்களையும் அதிசயங் களையும் செய்து அவர்களை வழிநடத்தி, கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரை விட்டு விட்டு, அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோது, அவர்களை கர்த்தர் மீதியானியரின் கையில் சிறை கைதிகளாக ஒப்புக் கொடுத்தார். (நியாயாதிபதிகள் 6:1) அவர்கள் சிறையிருப்பிலே மிகவும் வேதனைப்பட்டார்கள்.

    ‘‘இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்’’. (நியாயாதிபதிகள் 6:6)

    அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தங்கள் பாவத்தினால் வந்த தண்டனையை மாற்றும்படி ஜெபித்தபோது, கர்த்தர் அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு கிதியோன் என்னும் நியாயாதி பதியை அனுப்பி அவர்களை விடுவித்தார்.

    பிரியமானவர்களே! நம் வாழ்விலும் நாம் பாவம் செய்யும்போது, கர்த்தரை வேதனைப்படுத்தும்போது, கர்த்தர் நம்மை சிறையிருப்புக்குள்ளாக அனுமதிக்கிறார். நம்முடைய பாவத்தின் நிமித்தமாகவே நம் வாழ்வில் அநேக போராட்டங்கள் ஏற்படக்கூடும். இப்படி வேதனைகள் நம்மை வாட்டும்போது, நாம் புலம்பாமல், மனிதனை நாடி ஓடாமல், கர்த்தர் சமூகத்தில் விழுந்து நம்மை நாமே ஆராய்ந்து, நம் பாவத்தை அறிக்கையிட்டால், கர்த்தர் நம் சிறையிருப்பில் இருந்து விடுதலையைத் தந்து, நம்மை சந்தோ‌ஷப்படுத்துவார்.

    இப்பொழுதே உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். குடும்பத்தில் ஆசீர்வாதமும், மகிழ்ச்சியும் அளவில்லாமல் பொங்கும்.

    வேத வசனத்திற்கு கீழ்ப்படியும்போது விடுதலை

    ‘‘உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கும்படியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழுஆத்மாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்’’. (உபாகமம் 30:2,3) 

    அன்பான சகோதரனே! சகோதரியே! நம் வாழ்வில் காணப்படுகிற வேதனையாகிய சிறையிருப்புக்கு மற்றொரு காரணம், வேத வசனங்களுக்கு கீழ்ப்படியாததே ஆகும். கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து, அதன்படி பரிசுத்தமாக நாம் வாழும்போது, நம் வாழ்விலே எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் கர்த்தர் மாற்றுவார். நம்மை உயர்த்துவார். சந்தோ‌ஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்புவார்.

    எனவே, அன்பானவர்களே! இன்றே வேத வசனங்களை ஆவலோடு வாசியுங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழ உங்களை ஒப்புக் கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா சிறையிருப்புகளையும் மாற்றுவார்.

    மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது விடுதலை

    ‘‘யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்’’. (யோபு 42:10)

    யோபுவின் வாழ்வில் மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டது. வேதனையான ஒரு சிறையிருப்புக்குள்ளே அவன் தள்ளப்பட்டான். அவனுடைய பிள்ளைகளையும், அவனுடைய உடைமைகளையும், சொத்துகளையும் இழந்தான். அது மாத்திரமல்ல, அவனது சரீரத்திலே தீராத வியாதியையும் பிசாசு கொண்டு வந்தான். ஆனாலும் யோபு முணுமுணுக்கவில்லை, தூஷிக்கவில்லை. மேலும், தன்னுடைய சிநேகிதர்களுக்காக தேவனிடம் ஜெபித்தான். கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். அவன் இழந்த அனைத்தையும் இரட்டிப்பாக பெற்றுக்கொண்டான்.

    பிரியமானவர்களே! நம் வாழ்வில் உள்ள சிறையிருப்பு மாற வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நம் குடும்பத்தினரின் இரட்சிப்பிற்காக, அருகில் வசிப்பவர்களுக்காக, நமக்குத் தெரிந்த ஊழியர்களுக்காக ஜெபிக்க, ஜெபிக்க நம்முடைய பிரச்சினைகளை கர்த்தர் மாற்றிப் போடுவார். நம் வாழ்வில் மகிழ்ச்சியும் களிப்பும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

    ‘‘கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத்திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்’’. (சங்.126:4) 

    சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய இந்நற்செய்தியை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் எண்ணிப் பார்த்தல் நல்லது.
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய இந்நற்செய்தியை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் எண்ணிப் பார்த்தல் நல்லது. நீண்ட ஒரு நற்செய்தியாக இது சுட்டப்படுகிறது.

    இயேசு பெருமகனார் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில், எருசலேம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன் னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இறைவனின் ஆட்சி உடனடியாக, வெகு விரைவில் வரப்போகிறது என்று நினைத்தனர். அந்தச் சமயத்தில், வழக்கம்போல் மேலும் ஓர் உவமையை அவர்களுக்குச் சொன்னார்:

    “உயர்ந்த குடிமகன் ஒருவர், ஆட்சி உரிமையைப் பெற்று வருவதற்காக தொலைவில் உள்ள நாட்டிற்குப் போவதற்குப் புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பணியாளர்கள் பத்து பேரை அழைத்தார். பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து, அவர்களை நோக்கி, ‘நான் வரும் வரை, இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஆனால் அவருடைய குடிமக்களோ, ஆட்சியாளரை வெறுத்தனர். ஆகவே, ‘இவர் எங்களுக்கு அரசராக இருப்பது, எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று கூறி தூது அனுப்பினார்கள். இருந்தாலும் அவர், ஆட்சி உரிமையைப் பெற்றுத் திரும்பி வந்தார். பிறகு தம்மிடம் பணம் பெற்றிருந்த பணியாளர்கள் ஒவ்வொருவரும், வணிகத்தில் ஈட்டியது எவ்வளவு என்று அறிவதற்கு, அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.

    முதல் பணியாளர் அங்கு வந்தார். ‘ஐயா! உமது மினாவைக் கொண்டு, பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு, ஆட்சியின் உரிமையாளர், ‘நன்று. நல்ல பணியாளரே! மிகச் சிறிய பொறுப்புகளில், நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். எனவே பத்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார்.

    இரண்டாம் பணியாளர், அதற்கு அடுத்தாற்போல் வந்தார்.

    ‘ஐயா! உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். மகிழ்ச்சியடைந்த அவர், ‘நீர் ஐந்து நகரங்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் கூறினார்.

    வேறு ஒருவர் அவரிடம் வந்து, ‘ஐயா! இதோ! உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனென்றால், நீர் கண்டிப்புள்ளவர் என்பதை அறிவேன். ஆகவே, உமக்குப் பயந்து கொண்டு, இப்படிச் செய்தேன். நீரோ! வைக்காததை எடுக்கிறவர். விதைக்காததை அறுக்கிறவர்’ என்று கூறினார்.

    அதற்கு ஆட்சியின் உரிமையாளர், அந்தப் பணியாளரிடம், ‘பொல்லாத பணியாளனே! உன்னுடைய வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பு இடுகிறேன். நான் கண்டிப்பானவன். வைக்காததை எடுக்கிறவன். விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால், ஏன் என்னுடைய பணத்தை, வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்த பிறகு வட்டியோடு சேர்த்து வாங்கியிருப்பேனே’ என்றார்.

    பிறகு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘ஐயா! அவரிடம் பத்து மினாக்கள் இருக்கிறதே’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அந்த உரிமையாளரோ, அவர்களைப் பார்த்து, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று, உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

    மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை, இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்’ என்று சொன்னார்.

    இவற்றை அவ்விடத்தில் சொன்ன பிறகு, அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுப் போனார்.”

    இந்நற்செய்தியை ஒருகணம் மீண்டும் சிந்திப்போம். இந்த உவமையில் வரக்கூடிய மூன்றாவது பணியாளரின் செயல்பாடு என்ன என்பதை அறிந்தோம். எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல், சோம்பேறியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய தலைவரின் குறைகளை மட்டும் காணக்கூடிய வராகவும் இருக்கிறார். ஆகவே அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது.

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலை இதுதான். தங்களுடைய குறைகளை மட்டும் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    அக்காலத்தில் வாழ்ந்த ஆட்சியாளர்கள், பணியாளர்கள், குடிமக்கள் இவர்களின் நிலைகளெல்லாம் இப்படித்தான் இருந்தன. நான் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்தும் நீ நடந்து கொண்ட விதம் சரியில்லைதானே! என்று அவனுடைய பேச்சுக்கு, எதிர் பேச்சுப் பேசுகிறார். தீர்ப்பும் கூறு கிறார்.

    மற்றவரின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனநிலை என்றுமே இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மனநிலை இருக்குமேயானால், வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது. பொதுவாக ஆட்சியாளரின் மனநிலை அப்படித்தான் இருக்கத் தோன்றும். இது இவ்வுலகம் சார்ந்தது. இயல்பாக நடந்திருப்பது.

    இந்நற்செய்தியைப் படிக்கும் நாம், பொறுப்பும், சுறுசுறுப்பும் தேவை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்

    ‘நீர் கண்டிப்புள்ளவர். உமக்குப் பயந்து இப்படி முடிந்து வைத்தேன் என்றும், நீர் வைக்காததை எடுக்கிறவர். நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றும் பணியாள் சொன்னதும் அவருக்குக் கோபம் வருகிறது. இவனுடைய பேச்சு, பகைவர்களைத் தண்டித்துக் கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆகவே, பிறர் குறையை மட்டும் கூறிக் கொண்டிராமல், தன் குறையை உணர்ந்து செயல்படுவது நல்லது என்பதை நற்செய்தியின் உவமை வாயிலாக உணர்வோம். அக்காலத்தவர்களின் கடின உள்ளத்தை, அவர் உணர்ந்ததனால், இப்படிப்பட்ட உவமையைக் கூறுகிறார் என்பதையும் அறிவோமாக!
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளன்று மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். மறவன்குடியிருப்பு பங்குதந்தை மரியதாஸ் மறையுரையாற்றுகிறார்.

    23-ந் தேதி காலை 9 மணிக்கு புதுநன்மை பெறுவோருக்கான தியானம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பள்ளவிளை பங்குதந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மேலராமன்புதூர் பங்குதந்தை ஆனந்த் மறையுரையாற்றுகிறார். 24-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்டனி ஆரோக்கியம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தளவாய்புரம் பங்குதந்தை ஜெயில்சிங் அருளுரையாற்றுகிறார். இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.

    25-ந் தேதி மாலை 6 மணிக்கு திணை இயக்குனர் வின்சென்ட் பி.வில்சன் தலைமையில் திருப்பலியும், பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

    26-ந் தேதி மாலை 6 மணிக்கு குருசடி பங்குதந்தை பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கண்டர்விளாகம் பங்குதந்தை ஜாண் குழந்தை மறைவுரையாற்றுகிறார். அதன்பிறகு நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தினமும் திருப்பலி நடக்கிறது.

    29-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலிக்கு ஆற்றுப்படுத்துதல் பணிகள் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமை தாங்குகிறார். இரவு 10 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

    31-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் திருக்குடும்ப விழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், மாலை 5.30 மணிக்கு திருக்கொடி இறக்கம், புகழ்மாலை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடக்கிறது. இரவு 11 மணிக்கு புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    1-1-2018 அன்று ஊர் நிர்வாகம் சார்பில் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 2-ந்தேதி இளைஞர்கள் இயக்கம் சார்பில் இரவு 7 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய நிர்வாகக்குழு தலைவர் அந்தோணிமுத்து, செயலாளர் வாலன்டின் பிரிட்டோ, பொருளாளர் ராபி ரோசாரியோ, பங்குதந்தை பேட்ரிக்சேவியர், இணை பங்குதந்தை ஜோஸ் பெஸ்க் துரைசாமி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
    நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்கள் குறித்து கவலைப்படாமல், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.
    உங்களுக்குள் யுத்தம் எதனால் வருகிறது (யாக்கோபு - 4:1)

    மற்றவர்களால் நமக்கு துன்பங்கள் வந்தது உண்மைதான். சிலரால் நாம் அதிகமாக வேதனையடையும் தருணங்கள் வந்தது உண்மைதான். நமது சூழ்நிலைகளாலும், நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக நிகழ்ந்த காரியங்களாலும் நாம் துயரமடைய நேரிட்டது உண்மைதான். இருப்பினும் ்பெரும்பாலான நமது கஷ்டங்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறர் அல்ல. சூழ்நிலைகள் அல்ல. நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம் என்பது உண்மை.

    நமது தவறான மனநிலை களாலும், தவறான குணங்களாலும், தவறான முடிவுகளாலும் நமக்கு ஏராளமான துன்பங்களும் வேதனைகளும் வந்தது உண்மை. நாம் மட்டும் நல்ல மனநிலையோடும், நல்ல சுபாவங்களோடும், நல்ல சிந்தையோடும், நல்ல உணர்வு களோடும் வாழ்ந்திருந்தால் ஏராளமான மனவேதனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். நாம் சரியாக இருந்திருந்தால் பிறரோ, சூழ்நிலைகளோ நம்மை இந்த அளவுக்கு பாதித்திருக்க முடியாது.

    நமது துன்பங்களுக்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து நினைத்து மனம் குமுறுகிறோம். நமக்கு வேதனைகளை ஏற்படுத்திய சூழ்நிலைகளை எண்ணி சுய பச்சதாபம் கொள்கிறோம். ஆனால் நமது தவறான குணங்களாலும், ஊறிப்போன தவறான மனப்பண்புகளாலும் நமக்கு ஏற்பட்ட வருத்தங்களையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்துகிறோமா?

    மனிதனின் மிகப்பெரிய எதிரிகள் பிற மனிதர்களோ எதிர் மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவனது தீய சுபாவங்கள்தான் எதிரிகள். அவன் வளரவிட்டுக் கொண்டிருக்கும் தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமான மனநிலைகளும்தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கிய எதிரிகள். 

    நமது தவறான குணங்களும், கடவுளை மையமாக கொண்டு வாழாத மனநிலைகளும் நமக்கு ஏற்படுத்தும் மன வேதனைகளையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்த வேண்டும். இதை சரி செய்ய தேவகிருபையும் பலமும் பெற்றுவிட்டால் 75 சதவீத துன்பங்கள் விடை பெற்றுவிடும். மீதிஉள்ள 25 சதவீத துன்பங்களை நல்ல குணங்கள் உள்ள இருதயத்தால் எளிதாக வென்றுவிடலாம். நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்கள் குறித்து கவலைப்படாமல், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.

    “ தன்னைச் சீர் செய்யாமல் பிறரை சீர்திருத்த விரும்புகிறவன்

    தானும் சீர்கெட்டுப் பிறரையும் சீரழிக்கின்றான்”

    - சாம்சன்பால் 
    தேவையை உணராமல் எவ்வளவுதான் நமக்கென்று ஆஸ்தி அந்தஸ்தை பெருக்கி கொண்டாலும் அதனால் கவலைகள் கரைவதில்லை.
    தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் (மத்தேயு 6:33)

    மனவியல் மருத்துவர் ஒருவரிடம் ஒரு நாள் இருவர் சிகிச்சைக்காக வந்தனர். ஒருவர் சொத்துக்கள் எதையும் சம்பாதிக்க முடியாமல் போன ஒரு ஏழை. இன்னொருவர் அளவுக்கதிமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள பெரும் பணக்காரர். இரண்டு பேருடைய நிலைமையும் முற்றிலும் எதிர் எதிரானது. ஆனால் இருவரின் வியாதியும் ஒரே விதமானது. இருவருக்கும் கடுமையான மனஉளைச்சல். ஏழை மனிதனுக்கு தன் பிள்ளைகளுக்காக எதையும் சம்பாதிக்க முடியாமல் போனதே என்ற கவலையால் மன உளைச்சல் வந்தது. பெரும் பணக்கார மனிதனுக்கு தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரச்சினையில்லாமல் பகிர்ந்து கொடுக்க முடியாத சிக்கலால் மன உளைச்சல் வந்தது.

    பணமின்மையும் கவலைகளை கொண்டு வரும். பணமிகுதியும் கவலைகளை கொண்டு வரும். எனவே கவலைகள் வராமல் தடுக்க பணமோ, பொருளோ உதவாது என்பதே உண்மை. தைராய்டு வியாதி சிலரை நோஞ்சான்களாக மாற்றிவிடும். சிலரை மிகவும் பருமனாக்கி விடும்.

    பணத்தை தேடுவதினால் அல்ல. செல்வங்களை சேர்ப்பதினால் அல்ல. இருதயத்தில் கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுவதினாலேயே கவலைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. மனதை வறுமை நிலைமை ஆண்டாலும் கவலைகள் பெருகும். செல்வ நிலைமைகள் ஆண்டாலும் கவலைகள் வரும். கடவுள் இருதயத்தில் ஆளுகை செய்தால் எந்த நிலைமையிலும் கவலைகளுக்கு தீர்வு ஏற்படும்.

    கடவுளால் இருதயம் ஆளுகை செய்யப்படும்போது அங்கே தேவ அமைதி வரும். தேவ அமைதி இருதயத்தில் தங்கும்போது கவலைகள் உள்ளே வரவும் இயலாது. வெளியே போகாமல் கவலைகள் தங்கிவிடவும் முடியாது. சாலமன் ராஜாவிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தன. இருப்பினும் அவர் கவலைகளுக்குத் தீர்வு கண்ட மனிதன் அல்ல. 

    அப்போஸ்தலனாகிய பவுல் இல்லாமைகளின் நடுவில் வாழ நேர்ந்தவன். ஆனாலும் கவலைகள் அவனை ஆளமுடியவில்லை. அவன் தேவ சமாதானத்தினால் மனரம்மியமாக வாழ இயன்றவனாயிருந்தான். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் தனக்குள் தேவ ஆளுகையை தேடி தன் மனதை இலகுவாக வைக்க அவன் அறிந்திருந்தான்.

    நமது இருதயம் கடவுளால் ஆளப்பட வேண்டிய ஒரு இயற்கையான அவசியத்தில் உள்ளது. நமது இருதயம் தேவ ஐக்கியத்தினாலும் ஆலோசனையினாலும் வழிநடத்தப்பட வேண்டிய தேவையில் உள்ளது. அந்த தேவையை உணராமல் எவ்வளவுதான் நமக்கென்று ஆஸ்தி அந்தஸ்தை பெருக்கி கொண்டாலும் அதனால் கவலைகள் கரைவதில்லை.

    “ செல்வம் கொஞ்சமாயிருந்தால் நீ எஜமானாயிருப்பாய்

    அதிகமாகி விட்டாலே அதற்கு அடிமையாகி விடுவாய்“

    -சாம்சன் பால் 
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.
    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகாரமாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவில் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் பழைய கோவிலில் திருப்பலி, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை செபமாலை, திருப்பலி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். இரவு 9 மணிக்கு திருச்சப்பரபவனி நடைபெற்றது.

    9-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேலராமன்புதூர் பங்குத்தந்தை அருட்பணியாளர் ஆனந்த் தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும், திருப்பலி நடக்கிறது. இதற்கு தூத்துக்குடி மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் கிருபாகரன் தலைமை தாங்குகிறார். திண்டிவனம் தமிழக விவிலிய பணிக்குழு அருட்பணியாளர் உபால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    10-ம் நாளான நாளை(ஞாயிற்றுகிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர்ரெம்ஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது. இதற்கு கன்னியாகுமரி காசா கிளாரட் அருட்பணியாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் டன்ஸ்டன் மறையுரை ஆற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது. 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
    ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.
    ‘நான் ரொம்ப ஸ்டெடி’ என்று தான் தள்ளாடிக் கொண்டிருக்கும் குடிகாரன் சொல்வான். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய வாழ்க்கை. டிஜிட்டல் மாயைக்குள் சிக்கித் தவிக்கின்ற இளசுகள் யாரையேனும் நிறுத்தி கேட்டுப் பாருங்கள், ‘நான் அப்படியெல்லாம் இல்லையே’ என்பார்கள்.

    ‘எப்பவாச்சும் தான் நான் போனையே யூஸ் பண்றேன்’ என்று சொல்கின்ற இளசுகளில் பெரும்பாலானோர், எப்போதாவது தான் போனை தரையிலேயே வைக்கிறார்கள். போனைத் தவுழும் நேரம், பெற்றோரைத் தழுவியிருந்தால் தாய்ப்பாசம் தழைத்திருக்கும். போனைத் தழுவும் பொழுதெல்லாம் துணையைத் தழுவியிருந்தால் குடும்ப உறவு வலுவடைந்திருக்கும்.

    அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஐந்தரை அங்குல வெளிச்சத் திரைகளில் டிஜிட்டல் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் வாழ்க்கையின் இனிமையை இழந்து விடுகின்றனர். ஆனால், அது தான் இன்றைய யதார்த்தம்.

    எல்லாமே ‘பாஸ்ட் புட்’ போல சட்டென கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது இளைய சமுதாயம். முகநூலில் முகம் பார்த்து, ‘வாட்சப்’பில் குரல் கேட்டு சந்திப்பதற்கு நாள் குறிக்கும் இள வயதுகள் அவசரத்தின் குடுவைகளில் சோதனைக்கூட அமிலங்களைப் போல உருமாறி அழிகின்றனர்.

    உண்மையில் ‘நேரமில்லை’ என நினைக்கும் நாம் செலவிடும் நேரங்களில் பெரும்பாலானவை வீணானவையே. சந்தேகமெனில் ஒரே ஒரு வேலை செய்யுங்கள். உங்களுடைய போனில் வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற அனைத்து உரையாடல், சமூக வலைத்தளங்களை ‘அன் இன்ஸ்டால்’ செய்து விடுங்கள். ஒரு வாரம் கழிந்து திரும்பிப் பாருங்கள், உங்களுக்கு எக்கச்சக்க நேரம் கிடைத்திருக்கும். நீங்கள் இழந்தது என எதுவுமே இருக்காது. அது தான் யதார்த்தம்.

    ஆன்மிக வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கைஅல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை.

    அன்னை தெரசா ஒருமுறை ஆலயம் சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு முதியவர் சாலையோரம் கிடப்பதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய ஓடினார். கூட இருந்தவர்கள், ‘சர்ச்சுக்கு நேரமாகிறது, திரும்பி வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அன்னையோ, ‘நீங்கள் செல்லுங்கள் நான் இயேசுவை இங்கேயே கண்டு கொண்டேன்’ என்றார்.

    நின்று நிதானிப்பவர்களே மனிதர்களில் இயேசுவைக் காண்கின்றனர். இந்த இயந்திரமயமான காலகட்டத்தில் ஆன்மிக வாழ்க்கை செழுமையடைய நாம் என்ன செய்ய வேண்டும்:

    அன்புடன் சந்திப்போம்

    அன்பின் சந்திப்புகள் அதிகரிக்க வேண்டும். அதுவும் தனிப்பட்ட சந்திப்புகளாக, உரையாடல்களாக, அரவணைத்தல்களாக, அன்புப் பகிர்தல்களாக இருக்க வேண்டும். அதுவே உறவைக் கட்டியெழுப்பும்.

    உதாரணமாக, பல ஆண்டுகளாக நாம் சந்திக்காத எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். அவர்களை திடீரென ஒரு நாள் சென்று பார்த்து அவர்களோடு சில மணி நேரங்கள் செலவிட்டுப் பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். அன்பு எத்தனை வசீகரமானது என்பதை அறிய முடியும்.

    மனம் விட்டுப் பேசுவோம்

    மனம் விட்டுப் பேசுவதற்கு மனமில்லாமலோ, நேரமில்லாமலோ பயணிக்கின்றனர் இன்றைய இளம் தம்பதியர். ‘டைமுக்கு காபி கிடைக்காவிட்டால் கூட டைவர்ஸ் கேட்கிறார்கள்’. இயந்திரத்தனமான வாழ்க்கை அவர்களுடைய இதயங்களுக்கு இடையே தொழில்நுட்பத்தை இட்டு நிரப்புகிறது. இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, மனம் விட்டுப் பேசும் பழக்கத்துக்கு நாம் திரும்ப வேண்டும். டைப் அடிக்கும் வார்த்தைகளில் அல்ல, கரம் பிடிக்கும் வார்த்தைகளில் தான் அன்பின் ஸ்பரிசம் செழிக்கும் என்பதை உணர வேண்டும்.

    இருப்பதைப் பகிர்வோம்

    ‘மனிதநேயத்தின் வேர்களே பகிர்ந்தலின் கிளைகளில் கனிகளை விளைவிக்கும்’. கடைசியாக எப்போது உங்களிடம் இருந்த உணவையோ, உடையையோ, நேரத்தையோ, பொருட்களையோ பகிர்ந்தளித்தீர்கள் என சிந்தியுங்கள். பழைய ஆடைகளை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்கக் கூட மாதக்கணக்கில் தாமதம் செய்கிறோமா இல்லையா? நிதானிப்போம், ‘பகிர்தலோடு வாழ்தலே பரமனோடு வாழ்தல்’ என்பதை உணர்வோம்.

    மனமார மன்னிப்போம்

    இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த ஒரு முக்கியமான விஷயம் மன்னித்தல். நமது கடந்த தலைமுறையினரிடம் இருந்த பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, விட்டுக் கொடுத்தலோ இந்த தலைமுறையினரிடம் இல்லை. மன்னிப்பை மறுதலித்து வெறுப்பை வளர்க்கவே சமூகமும், ஊடகங்களும் கற்றுத்தருகின்றன. மன்னித்தல் வேண்டுமெனில், நாம் உலகின் போதனைகளை விடுத்து, இறைவனின் போதனைகளை உடுத்த வேண்டும்.

    நிஜத்தை அணிவோம்

    இயந்திர வாழ்க்கை கொண்டு வரும் முக்கியமான குணாதிசயம் இரட்டை வேடம் போடுதல். அவசரத்தின் கைக்குள் அலைகின்ற வாழ்க்கையில் பொய்யும், கபடமும் இணைந்தே பயணிக்கின்றன. நிஜம் அமைதியாய் வரும், பொய் புயலாய் வரும். நிஜம் தென்றலாய் வருடும், பொய் கனலாய் சுடும். உள்ளுக்குள் ஒன்றை புதைத்து, முகத்தில் ஒன்றைத் தரித்து வருகின்ற போலித்தனங்களை உதறுவோம்.

    இறை வார்த்தைகளை மனதில் நடும் போது விளைகின்ற செயல்கள் நல்ல செயல்களாகவே இருக்கும். வெறுப்பின் விரல் பிடிக்காமல், அன்பின் மனம் பிடித்து நடப்போம்.

    சேவியர், சென்னை.
    பதவியையும், பட்டத்தையும் துறந்து, அதிகாரத்தையும், ஆஸ்தியையும் ஒதுக்கிய தொண்டுள்ளம் கொண்டவர்கள் தான் இறைவனின் முன்னிலையில் உயர்ந்தவர்கள்.
    உண்மையான தலைமை பண்பு என்பது மக்களுக்கு தொண்டு செய்வதே ஆகும் என்பதை இன்றைய நாளில் இயேசு வலியுறுத்துகிறார். ஆடம்பரம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது. ஆரவாரம் இன்றி அமைதியாக நடத்தும் எந்த நிகழ்ச்சியும் மக்களை கவர்வது இல்லை. மக்களின் கவனத்தை ஈர்க்க, ஒலிபெருக்கி கட்டி சத்தமாகவும், கண்ணை கவரும் வகையில் மின் அலங்காரம் செய்தும் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுதான் இன்றைய உலகின் போக்கு.

    எந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டுமெனில் இதுதான் சிறந்த வழி என நம்பப்படுகிறது. தனி மனித வாழ்விலும் இப்படித்தான் நிகழ்கிறது. மற்றவர்கள் தன்னை பார்க்க வேண்டும், பெரிதாக எண்ண வேண்டும், புகழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எப்படியாவது புகழபட வேண்டும் என்பது வாழ்வாகி விட்டது. அதற்காக மனிதன் எதையும் செய்ய தயாராகிறான். அந்தப்புகழை ஏதாவது ஒரு வழியில் அடையத்துடிக்கிறான். உண்மை முகத்தை மறைத்து, பொய் முகத்தை காட்டி புகழ்தேடும் மனிதர்கள் ஏராளம். இந்த போக்கை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார்.

    உலக மதிப்பீடுகளில் ஊறியவர்களுக்கு இந்த உலகில் பேரும், புகழும் பெரிதாக தெரியலாம். அதை பெறுவதற்கு எதையும் செய்வர். ஆனால் நீடித்த புகழும், நிறை வாழ்வும் உலக மதிப்பீடுகளுக்கு அடிமையாவதால் கிடைக்காது. பதவியையும், பட்டத்தையும் துறந்து, அதிகாரத்தையும், ஆஸ்தியையும் ஒதுக்கிய தொண்டுள்ளம் கொண்டவர்கள் தான் இறைவனின் முன்னிலையில் உயர்ந்தவர்கள்.

    “உலகத்தலைவர்கள் மக்களை அடக்கி ஆள்கிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள். அதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்க கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராக இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்களுக்கு பணியாளராக இருக்கட்டும்“ என்பதே கிறிஸ்து காட்டும் வழி. (மத் 20:25-27) இதுபோன்ற மதிப்பீடுகளில் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டினார். அதுபோல நம்மையும் வாழ அழைக்கிறார்.

    அருட்திரு. ஜோ.மைக், சேசு சபை, திண்டுக்கல். 
    கஷ்டம் மிகுந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டுமென்று இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவ்வாறு கூறுகிறார்.
    வாழ்க்கை வட்டமா? செவ்வகமா? என்று தெரியவில்லை. ஆனால் அது கஷ்டம் என்று மட்டும் தெரிகிறது. இதுபோன்ற கஷ்டம் மிகுந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டுமென்று இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவ்வாறு கூறுகிறார். “பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடாதீர்கள்” (லூக்கா 6:37) பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்கவோ, பிறரை தீர்ப்பிடவோ பெரிய ஞானம் தேவையில்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை அறிவே போதுமானது.

    ஆண்டுதோறும் தவக்காலத்தில் ஆன்மிக, தெய்வீக வாழ்வு வாழ வேண்டும் என இயேசு கூறுகிறார். பணம், பட்டம், ஆடம்பரம், தற்பெருமை என வாழ்ந்து வரும் இன்றைய சூழலில் இத்தகைய ஆன்மிக வாழ்வு சிறப்பானது, அற்புதமானது. அந்த வாழ்வு ஒருவரை ஒருவர் சகோதர, சகோதரியாக வாழ வைக்கிறது.

    பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் தங்கினாலும் காலையில் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசை நோக்கி பறந்து செல்கிறது. மனிதர்களும் அதுபோல தான். காலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கி அவரவர் பணிக்காக செல்கிறோம். பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடாதீர்கள் என்னும் நற்செய்தி வாசகத்தை ஒவ்வொருவரும், அவரவர் உள்ளத்தில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.

    ஒரு பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது. ஒரு சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை அகற்றுகிறது. பெரிய மலை, சிறிய உளியால் உடைக்கப்படுகிறது. அதுபோன்று உங்களது உள்ளத்தில் நிலைநிறுத்திக்கொள்ளும் இயேசுவின் இந்த சிறிய வாசகம் பல ஆயிரம் மக்களை மன்னிக்கும். அதனால் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும்.

    யானையிடமிருந்து ஆயிரம் அடி தூரமும், குதிரையிடமிருந்து நூறு அடி தூரமும், கொம்பு உள்ள மிருகத்திடமிருந்து பத்து அடி தூரமும் விலகியிருங்கள். உங்களிடமிருந்து மற்றவர்கள் விலகியிருக்க வேண்டுமா? அல்லது பயமில்லாமல் அருகில் வரவேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

    அருட்திரு. ஆர்.மரியலூயிஸ், குடும்பநல வாழ்வு பணிக்குழு, திண்டுக்கல்.
    இயேசு பெருமான் இவ்வுலகிற்கு வந்த நோக்கமே, மனித குலத்துக்கு மீட்பு அளிக்கத்தான் என்பதை உணர்வோம்.
    “என்னுடைய உடைமைகளில் பாதியை ஏழை மக்களுக்குக் கொடுத்து விடுகிறேன். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, எதையாவது கவர்ந்து இருப்பேனேயானால், அதை நான்கு மடங்காகத் திருப்பி அளித்து விடுகிறேன்”

    புனித லூக்கா என்ற நற்செய்தியாளரின் நற்செய்தியை படித்து இன்புறுவோம்.

    அக்காலத்தில், இயேசு பெருமான் ‘எரிகோ’ என்ற நகருக்குச் சென்று, அந்த நகரின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அங்கு ‘சக்கேயு’ என்ற பெயரைக் கொண்ட செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர், வரி தண்டுவோருக்குத் தலைவராகவும் இருந்தார்.

    இயேசு பெருமானை, ‘யார் அவர்?’ என்று பார்க்க அதிக ஆவல் கொண்டார். மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்ததால், அவரைப் பார்ப்பதற்கு இயலவில்லை. சக்கேயு, குள்ளமாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அவர் முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய், இயேசு பிரானைப் பார்ப்பதற்காக, அத்தி மரத்தில் ஏறி நின்றார்.

    இயேசு பெருமான் அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்தார். அங்கே, சக்கேயு நின்று கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர், சக்கேயுவைப் பார்த்து, “சக்கேயுவே, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று கூறினார். அவர் வேகமாக இறங்கி வந்து, மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

    இதைக் கண்ட அனைவரும் “பாவியிடம் தங்கப் போகிறாரே இவர்” என்று தங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டனர். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே! என்னுடைய உடைமைகளில் பாதியை ஏழை மக்களுக்குக் கொடுத்து விடு கிறேன். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, எதையாவது கவர்ந்து இருப்பேனேயானால், அதை நான்கு மடங்காகத் திருப்பி அளித்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்.

    இயேசு பெருமான், சக்கேயுவை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கத்தான் மானிட மகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

    இந்த நற்செய்தியை நாம் மிகவும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். தன்னைத் தவிர மற்றவர்களைப் பாவியாகவும், குற்றவாளிகளாகவும் பார்ப்பதுதான், மனித குணம். திருத்திக் கொள்வதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு என்பதை, நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    சக்கேயுவின் செயலைக் கவனியுங்கள். இயேசு பெருமகனாரைப் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதற்காக அவர், கூட்டத்திற்கு முன்னே சென்று, தன் உருவம் குள்ளம் என்ற காரணத்தால், அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி நிற்கிறார்.

    ‘இவருக்காக இவ்வளவு கூட்டம் கூடுகிறதே! யார் இவர்?’ இந்த விருப்பமும், ஆசையுமே அவரை மாற்றியிருக்க வேண்டும். ஏதோ ஒரு முடிவில்தான் அப்படிச் செயல்படுகிறார். அவரின் உள்ளத்தை இயேசு பெருமகனார் அறிந்த காரணத்தால், “சக்கேயுவே, வேகமாக இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார். மிக வேகமாக இறங்கி, அவரை சக்கேயு வரவேற்கிறார்.

    இவ்வார்த்தைகளை, சக்கேயு எதிர்பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், ‘தான் பெரிய பாவி’ என்பதைச் சக்கேயு உணர்ந்திருக்கக் கூடும். சக்கேயுவின் துடிதுடிப்பும், ஆர்வமும், இயேசு பெருமகனாரைப் பார்க்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அவரை மேல் நிலைக்கு உயர்த்தி விட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    சக்கேயுவைப் பற்றி அறிந்தவர்கள் எப்படி இச்செயலை ஏற்றுக் கொள்வார்கள்? அதைவிட ஒரு படி மேலே சிந்தித்தால், இயேசு பெருமான் கூறிய வார்த்தையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் வெளியில் சொல்லவும் முடியவில்லை. தங்களுக்குள்ளே இவ்விதமாக ‘பாவியிடம் தங்கப் போகிறாரே!’ என்று முணுமுணுக்கிறார்கள்.

    அவர்களின் முணுமுணுப்பு, இயேசு பிரான் அறியாததல்ல. அவர் முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா? ஏன் முழுவதையும் அறிந்தவரல்லவா? இவர்களின் முணுமுணுப்பு சக்கேயுவின் மனதையும் தொட்டிருக்கக் கூடும்.

    எது எப்படியிருந்தாலும், சக்கேயுவின் மனம் மாறுகிறது. ‘பாவியையும் இவரால் நேசிக்க முடிகிறதே’ என்றும் எண்ணியிருப்பார். உடனே அவரைப் பார்த்து, தான் செய்யப் போகும் செயல்களைப் பட்டியலிடுகிறார். தன் உடைமைகளில் பாதியை, ஏழைகளுக்குத் தானமாக அளிக்கச் சம்மதிக் கிறார். யார் மீதாவது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, சம்பாதித்திருந்தால், அவற்றை நான்கு மடங்காகத் திருப்பி அளிக்கிறேன் என்கிறார்.

    இந்த மனம் சக்கேயுவுக்கு எப்படி வந்தது? என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம். எப்பொழுது வந்தது? என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம். தான் பெரும் பாவியாயிற்றே! என்பதை உணர்ந்த அவர், எல்லோரையும் போல, தூயவரைப் பார்க்கத் துடிக்கிறார். அந்தத் துடிப்பால், ஏதோ நடக்கப்போகிறது என்றெல்லாம் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட அன்றே, அவரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு தூண்டுதல் அவரை, தன் முனைப்போடு செயல்பட வைக்கிறது. செயலில் இறங்குகிறார். தூயவரின் வார்த்தைகளால், மனம் திருந்துகிறார்.

    ஆம்! இயேசு பெருமான் இவ்வுலகிற்கு வந்த நோக்கமே, மனித குலத்துக்கு மீட்பு அளிக்கத்தான் என்பதை உணர்வோம். அதிலும் குறிப்பாக பாவிகளை அதிகம் நேசித்தார். நற்செய்திகளை முழுதும் புரட்டிப் பார்த்தால், ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், சிறார்கள் இவர்களை நேசித்தார் என்பது ஒருபுறம் இருக்க, பாவிகளை நேசிக்கிறார் என்பதுதான் நற்செய்தியில் பரவிக் கிடக்கிறது.

    இந்த மந்தையைச் சேராத ஆடுகள் நிறைய உண்டு. வழி தவறிக் கிடக்கின்றன. அவைகளையும், இந்த மந்தைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான், அவருடைய உள்ளக்கிடக்கை. மன்னிப்பும், நேசிப்பும் இயேசு பெருமகனாரின் இரு கண்கள் என்பதை, நற்செய்தியைப் படிப்போர் உணர்ந்தாலே போதுமானது. அவை நம்மை வழி நடத்தும்.

    தன்னைப் போல பிறரையும் நேசி என்ற அடிப்படைக் கருத்தை எடுத்துரைத்த இயேசு பெருமகனாரை எண்ணிப் பார்ப்போம்.

    ‘ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’

    பிறர் குற்றம் போல, தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலை பெற்ற மக்கள் உயிர்க்கு வரக்கூடிய துன்பம் உண்டோ? இத்திருக்குறளையும், நற்செய்தியோடு இணைத்துப் பார்த்து, நல்லவராக வாழ முற்படுவோம். நன்னெறி தொடர, இதுபோன்ற நற்சிந்தனைகள் தொடர்ந்து வலிமையூட்டட்டும்.

    செம்பை சேவியர்.
    ×