என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவறான குணங்கள் யார் காரணம்?
    X

    தவறான குணங்கள் யார் காரணம்?

    நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்கள் குறித்து கவலைப்படாமல், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.
    உங்களுக்குள் யுத்தம் எதனால் வருகிறது (யாக்கோபு - 4:1)

    மற்றவர்களால் நமக்கு துன்பங்கள் வந்தது உண்மைதான். சிலரால் நாம் அதிகமாக வேதனையடையும் தருணங்கள் வந்தது உண்மைதான். நமது சூழ்நிலைகளாலும், நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக நிகழ்ந்த காரியங்களாலும் நாம் துயரமடைய நேரிட்டது உண்மைதான். இருப்பினும் ்பெரும்பாலான நமது கஷ்டங்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறர் அல்ல. சூழ்நிலைகள் அல்ல. நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம் என்பது உண்மை.

    நமது தவறான மனநிலை களாலும், தவறான குணங்களாலும், தவறான முடிவுகளாலும் நமக்கு ஏராளமான துன்பங்களும் வேதனைகளும் வந்தது உண்மை. நாம் மட்டும் நல்ல மனநிலையோடும், நல்ல சுபாவங்களோடும், நல்ல சிந்தையோடும், நல்ல உணர்வு களோடும் வாழ்ந்திருந்தால் ஏராளமான மனவேதனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். நாம் சரியாக இருந்திருந்தால் பிறரோ, சூழ்நிலைகளோ நம்மை இந்த அளவுக்கு பாதித்திருக்க முடியாது.

    நமது துன்பங்களுக்கு காரணமாக இருந்தவர்களை நினைத்து நினைத்து மனம் குமுறுகிறோம். நமக்கு வேதனைகளை ஏற்படுத்திய சூழ்நிலைகளை எண்ணி சுய பச்சதாபம் கொள்கிறோம். ஆனால் நமது தவறான குணங்களாலும், ஊறிப்போன தவறான மனப்பண்புகளாலும் நமக்கு ஏற்பட்ட வருத்தங்களையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்துகிறோமா?

    மனிதனின் மிகப்பெரிய எதிரிகள் பிற மனிதர்களோ எதிர் மாறான சூழ்நிலைகளோ அல்ல. அவனது தீய சுபாவங்கள்தான் எதிரிகள். அவன் வளரவிட்டுக் கொண்டிருக்கும் தவறான பழக்கங்களும், ஆசைகளும், கடினமான மனநிலைகளும்தான் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கிய எதிரிகள். 

    நமது தவறான குணங்களும், கடவுளை மையமாக கொண்டு வாழாத மனநிலைகளும் நமக்கு ஏற்படுத்தும் மன வேதனைகளையும், சோர்வுகளையும் எண்ணி மனம் வருந்த வேண்டும். இதை சரி செய்ய தேவகிருபையும் பலமும் பெற்றுவிட்டால் 75 சதவீத துன்பங்கள் விடை பெற்றுவிடும். மீதிஉள்ள 25 சதவீத துன்பங்களை நல்ல குணங்கள் உள்ள இருதயத்தால் எளிதாக வென்றுவிடலாம். நமக்கு எதிராக நின்று செயல்படும் தவறான குணங்கள் குறித்து கவலைப்படாமல், மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எண்ணி நொந்து கொள்வதால் நன்மையில்லை.

    “ தன்னைச் சீர் செய்யாமல் பிறரை சீர்திருத்த விரும்புகிறவன்

    தானும் சீர்கெட்டுப் பிறரையும் சீரழிக்கின்றான்”

    - சாம்சன்பால் 
    Next Story
    ×