என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு வலியுறுத்தும் தலைமை பண்பு
    X

    இயேசு வலியுறுத்தும் தலைமை பண்பு

    பதவியையும், பட்டத்தையும் துறந்து, அதிகாரத்தையும், ஆஸ்தியையும் ஒதுக்கிய தொண்டுள்ளம் கொண்டவர்கள் தான் இறைவனின் முன்னிலையில் உயர்ந்தவர்கள்.
    உண்மையான தலைமை பண்பு என்பது மக்களுக்கு தொண்டு செய்வதே ஆகும் என்பதை இன்றைய நாளில் இயேசு வலியுறுத்துகிறார். ஆடம்பரம் நம் வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டது. ஆரவாரம் இன்றி அமைதியாக நடத்தும் எந்த நிகழ்ச்சியும் மக்களை கவர்வது இல்லை. மக்களின் கவனத்தை ஈர்க்க, ஒலிபெருக்கி கட்டி சத்தமாகவும், கண்ணை கவரும் வகையில் மின் அலங்காரம் செய்தும் விளம்பரம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுதான் இன்றைய உலகின் போக்கு.

    எந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டுமெனில் இதுதான் சிறந்த வழி என நம்பப்படுகிறது. தனி மனித வாழ்விலும் இப்படித்தான் நிகழ்கிறது. மற்றவர்கள் தன்னை பார்க்க வேண்டும், பெரிதாக எண்ண வேண்டும், புகழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எப்படியாவது புகழபட வேண்டும் என்பது வாழ்வாகி விட்டது. அதற்காக மனிதன் எதையும் செய்ய தயாராகிறான். அந்தப்புகழை ஏதாவது ஒரு வழியில் அடையத்துடிக்கிறான். உண்மை முகத்தை மறைத்து, பொய் முகத்தை காட்டி புகழ்தேடும் மனிதர்கள் ஏராளம். இந்த போக்கை இயேசு கிறிஸ்து கண்டிக்கிறார்.

    உலக மதிப்பீடுகளில் ஊறியவர்களுக்கு இந்த உலகில் பேரும், புகழும் பெரிதாக தெரியலாம். அதை பெறுவதற்கு எதையும் செய்வர். ஆனால் நீடித்த புகழும், நிறை வாழ்வும் உலக மதிப்பீடுகளுக்கு அடிமையாவதால் கிடைக்காது. பதவியையும், பட்டத்தையும் துறந்து, அதிகாரத்தையும், ஆஸ்தியையும் ஒதுக்கிய தொண்டுள்ளம் கொண்டவர்கள் தான் இறைவனின் முன்னிலையில் உயர்ந்தவர்கள்.

    “உலகத்தலைவர்கள் மக்களை அடக்கி ஆள்கிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள். அதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்க கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராக இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்களுக்கு பணியாளராக இருக்கட்டும்“ என்பதே கிறிஸ்து காட்டும் வழி. (மத் 20:25-27) இதுபோன்ற மதிப்பீடுகளில் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டினார். அதுபோல நம்மையும் வாழ அழைக்கிறார்.

    அருட்திரு. ஜோ.மைக், சேசு சபை, திண்டுக்கல். 
    Next Story
    ×