என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் புனித அமல அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் டிசம்பர் மாதத்தில் திருவிழா மற்றும் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. 

    இதில் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தேரில் அமல அன்னை சொரூபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து தேர்பவனி புறப்பட்டு அம்மாமண்டபம் ரோடு வழியாக மாம்பழச்சாலையில் உள்ள ஹோலி கான்வென்ட்டை சென்றடைந்தது. பின்னர் அதே வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. 

    இந்த தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மாத்யூ, உதவி பங்கு தந்தை தைனீஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு மேலராமன்புதூர் பங்கு தந்தை அருட்பணியாளர் ஆனந்த் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது.

    17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கமும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் கிளாசின், ஜெனிஸ், இளங்கோ, பங்குபேரவை துணைத் தலைவர் லியோன், செயலாளர் பிரபா, துணை செயலாளர் கசின்ராய், பொருளாளர் மரியஜான், மற்றும் பங்குமக்கள், பங்குபேரவையினர், அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது.
    திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது. 

    இதில் பங்கு தந்தை மைக்கிள் ஜோ மற்றும் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 16-ந் தேதி காலை 8 மணிக்கு திருவிழா திருப்பலியும், இதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு புனித சவேரியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடக்கிறது. 

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    கும்பகோணத்தில், புதுப்பிக்கப்பட்ட தூய அலங்கார அன்னை பேராலயத்தில் அருள்பொழிவு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    1899-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி கும்பகோணம் மறை மாவட்டம் புதுச்சேரியில் இருந்து பிரிந்து புதிய மறை மாவட்டமாக உருவானது. கும்பகோணத்தில் 1840-ம் ஆண்டு கட்டப்பட்ட அலங்கார அன்னை பேராலயம் மறைமாவட்ட பேராலயமானது. 1931-ம் ஆண்டு ஆயர் பீட்டர்பிரான்சிஸ், மறைமாவட்டத்தின் முதல் இந்திய ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது முயற்சியால் பேராலயத்தின் கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெற்று 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி தூய அமலஉற்பவ அன்னை பெருவிழா நாளன்று ஆயர் பீட்டர் பிரான்சிஸ்சால் அருள்பொழிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 81 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூய அலங்கார அன்னை பேராலயம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட பேராலயத்தின் அருள்பொழிவு விழா நேற்று நடந்தது. விழாவில் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கல்வெட்டை திறந்து வைத்தார். குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நுழைவு வாயிலை புனிதப் படுத்தினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. ஆயர் பி.ரெமிஜியுஸ் பேராலயத்தை அருள்பொழிவு செய்தார். ஆயர் சிங்கராயன் மறையுரையாற்றினார். திருப்பலியில் கும்பகோணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோணிசாமி வரவேற்றார். புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கினார். கும்பகோணம் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பி.ரெமிஜியுஸ் வாழ்த்துரை வழங்கினார். 

    விழாவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ், சேலம் மறைமாவட்ட ஆயர் எஸ்.சிங்கராயன், குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு ஏ.அமிர்தசாமி, குடந்தை மறைமாவட்ட பொருளாளர் எம்.பிலிப்சந்தியாகு, புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஸ்பராஜ், லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ், மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு கோஸ்மால்ஆரோக்கியராஜ், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கல சாமி, மறைமாவட்ட துறவியர் பேரவை தலைவர் அருட்சகோதரி எம்.விமலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    விழாவில் மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ரவிபெர்னார்ட், முன்னாள் நகரசபை தலைவர்கள் ரத்னாசேகர், சு.ப.தமிழழகன், ராயாஸ் குழுமம் ராயா.ஆர்.கோவிந்தராஜன், நோபெல் குழுமம் லியாகத்அலி, முன்னாள் கவுன்சிலர் ஜான் மற்றும் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் அலங்கார அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை மற்றும் நூல் ஆசிரியர் மரியஅந்தோணிஜேம்ஸ் எழுதிய புத்தகத்தை பேராயர் அந்தோணிஆனந்தராயர் வெளியிட முதல் பிரதியை இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் ஸ்தனிஸ்லாஸ் பெற்றுக்கொண்டார். முடிவில் பங்குத்தந்தை தேவதாஸ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மரியஅந்தோணிஜேம்ஸ், பங்கு பேரவை செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், செல்வஆரோக்கியராஜ், லியோன் சேவியர், மரியகிரகோரி, என்ஜினீயர் வின்சென்ட், செல்வநாயகம், சார்லஸ், சாகுல்சாலமன், பங்கு பேரவையினர், அருட்கன்னியர்கள், பக்தசபைகள், இளைஞர் இயக்கத்தினர், அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேன். இன்றைக்கே தருவேன்” (சகரியா 9:12) என்று வேதம் கூறுவதை மறந்துவிட வேண்டாம்.
    நம்பிக்கையற்ற உலகில் ஒவ்வொரு நாளும் தேவ கிருபையினால் வாழ்ந்து வருகிறோம். பலதரப்பட்ட போராட்டங்கள், நெருக்கங்கள், பொருளாதார பிரச்சினைகள் என பலவிதங்களில் இந்நாட்களில் மக்கள் மிகுந்த கஷ்டத்தின் வழியாய் கடந்து போகிறார்கள். இந்த செய்தியை வாசிக்கிற உங்கள் வாழ்க்கையும் பல நெருக்கம் நிறைந்ததாக காணப்படும் என்றால் கர்த்தருக்குள் உங்களைத் திடப்படுத்திக் கொண்டு ஆண்டவர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

    “அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்”. சங்கீதம் 112:7, “நான் நம்புகிறது அவராலே வரும்” (சங்கீதம் 62:5) என தாவீது கூறுவது போல, “நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது” என நீதி.23:18 சொல்வது போல, ஆண்டவரை மனப்பூர்வமாய் நம்பி, தொடர்ந்து செயல்பட்டால் வெற்றிகள் தேடி வரும்.

    மனிதன் மேல் நம்பிக்கை

    ‘மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மை வருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்”. எரேமியா 17:5,6

    எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருதயம் மனுஷன் பக்கமாய் சார வேண்டாம். இந்தக் காரியத்தில் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று அநேகர் அரசியல் தலைவர்கள், கோடீஸ்வரர்கள், பெரிய மனிதர்கள், அதிகாரிகள் என மனிதர்களையே நம்பி அவர்களையே சார்ந்து வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், மனுஷனை நம்பினால் உதவி செய்வார்கள் எனக் காத்திருந்து, காத்திருந்து மிகுந்த மன உளைச்சல் அடைந்து சோர்ந்து போகிறார்கள்.

    அநேக பெற்றோர்களும் கூட பிள்ளைகளை நம்பி அவர்களைச் சார்ந்து இறுதியில் பிள்ளை களால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மேலே குறிப்பிட்ட எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உன்னிப்பாய் வாசித்துப் பாருங்கள். மனிதனை நம்பும் போது எண்ணற்ற ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம். எந்த நிலையிலும் நமக்கு உதவி செய்யக்கூடியவர், ஆண்டவராகிய இயேசு ஒருவர்தான். ஆகவே இன்றே தீர்மானியுங்கள். நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விட்டு கர்த்தரையே நம்புங்கள், திடமாயிருங்கள்.

    ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை

    “இவ்வுலகத்திலே ஐசுவரியம் உள்ளவர்கள் இறுமாப்பான சிந்தை உள்ளவர்களாக இருக்காமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கவும்”. 1 தீமோத்தேயு 6:17

    ‘பணம் என்றால் பிணமும் தன் வாயைத் திறக்கும்’ என்று கூறுவார்கள். ‘பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்’ என்று வேதம் கூறுகிறது. அதே வேளையில் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1 தீமோத்தேயு 6:10) என்று வேதம் கூறியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    இன்றைக்கு பண ஆசையினால் மோசம் போனவர்கள் ஏராளம். பணத்தை நம்பி தேவ கிருபையை இழந்தோர் ஏராளம். ஆனால் இங்கே தேவ வசனம் என்ன சொல்லுகிறது. இந்த உலகத்தில் சகல வசதிகள் படைத்தவர்கள் இறுமாப்பான சிந்தை கொள்ளாமல், நிலையற்ற பணத்தின் மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிற சகல நன்மைகளையும் நமக்கு நிறைவாக கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

    கஷ்ட காலத்தில் ஆண்டவரையே சார்ந்து வாழ்ந்த அநேகர் தங்களுக்கு வசதிகள் வந்த உடனே அதைக் கொடுத்த ஆண்டவரை மறந்து விட்டு தங்கள் கைகளில் இருக்கும் பணம், பொருட்கள் மீது நம்பிக்கை உடையவர்களாய் மாறி விடுகிறார்கள்.

    ஐசுவரியம் தேவனுடைய ஆசீர்வாதம் தான். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கும்போது தான் பிரச்சினைகளும், போராட்டங்களும் நமக்குள் வந்து விடுகிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே எப்போதும் கர்த்தரை சார்ந்து அவரையே நம்புங்கள். அப்போது ஐசுவரியம் உங்களைத் தொடரும்.

    கர்த்தர் மேல் நம்பிக்கை

    “கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்”. எரேமியா 17:7,8

    மனுஷனை நம்பாமல், ஐசுவரியத்தை நம்பாமல், கர்த்தரையே நம்பும்போது எத்தனை ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என மேற்கண்ட வசனம் மூலம் அறியலாம். அந்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களும், உங்களில் நிறைவேற கர்த்தரை நம்பித் திடமனதாயிருங்கள்.

    “நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’ என ரோமர் 4:18-ல் ஆபிரகாமைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அனுதினமும் எந்த சூழ்நிலையிலும் ஆண்டவரை நம்பிக்கையோடு பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்புவதெல்லாம் கர்த்தராலே வரும்.

    “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேன். இன்றைக்கே தருவேன்” (சகரியா 9:12) என்று வேதம் கூறுவதை மறந்துவிட வேண்டாம்.

    ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54 
    கும்பகோணத்தில் புதுப்பிக்கப்பட்ட தூய அலங்கார அன்னை பேராலயத்தின் அருள்பொழிவு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
    கும்பகோணம் காமராஜர் சாலையில் அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த பேராலயத்தில் அருள்பொழிவு விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நூல்வெளியீட்டு விழா நடக்கிறது. விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோணிசாமி வரவேற்கிறார். 

    புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்குகிறார். கும்பகோணம் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பி.ரெமிஜியுஸ் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ், சேலம் மறைமாவட்ட ஆயர் எஸ்.சிங்கராயன், குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு ஏ.அமிர்தசாமி, குடந்தை மறைமாவட்ட பொருளாளர் எம்.பிலிப்சந்தியாகு, புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஸ்பராஜ், லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ், மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு கோஸ்மால்ஆரோக்கியராஜ், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கல சாமி, மறைமாவட்ட துறவியர் பேரவை தலைவர் அருட்சகோதரி எம்.விமலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ, கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, கும்பகேணம் பரஸ்பர சகாய நிதி தலைவர் ராம.ராமநாதன், முன்னாள் எம்.பி.ரவிபெர்னார்ட், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்னாசேகர் மற்றும் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் அலங்கார அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை மற்றும் நூல் ஆசிரியர் மரியஅந்தோணிஜேம்ஸ் எழுதிய புத்தகத்தை பேராயர் அந்தோணிஆனந்தராயர் வெளியிடுகிறார். இதன் முதல் பிரதியை இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் ஸ்தனிஸ்லாஸ் பெற்றுக்கொள்கிறார். முடிவில் பங்குத் தந்தை தேவதாஸ் நன்றி கூறுகிறார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலிக்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் தலைமை தாங்குகிறார். ஆயர் பி.ரெமிஜியுஸ் பேராலயத்தை அருள்பொழிவு செய்கிறார். ஆயர் சிங்கராயன் மறையுரையாற்றுகிறார். ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கல்வெட்டை திறந்து வைக்கிறார். குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நுழைவு வாயிலை புனிதப்படுத்துகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மரியஅந்தோணிஜேம்ஸ் மற்றும் அருட்கன்னியர்கள், பங்கு பேரவையினர், பக்தசபைகள், இளைஞர் இயக்கத்தினர், அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர். 
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்றுக் கவனிப்போம். உணர்வோடு படிப்போம். சிந்திக்க முற்படுவோம்.
    நற்செய்தியாளர் புனித லூக்கா எழுதிய நற்செய்தியை உற்றுக் கவனிப்போம். உணர்வோடு படிப்போம். சிந்திக்க முற்படுவோம். இயேசு பெருமானின் போதனை மாண்பை ஏற்று நெறியுடன் வாழ்வோம்.

    ஓய்வு நாளன்று இயேசு பெருமான் தொழுகைக் கூடம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார். கடந்த பதினெட்டு வருடங்களாகத் தீய ஆவி பிடித்து, உடல் நலம் குறைந்த பெண் ஒருவரும் அங்கு இருந்து போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பெண் கொஞ்சம்கூட நிமிர முடியாதவாறு, ‘கூன்’ விழுந்த நிலையில் காணப்பட்டார்.

    இயேசு பெருமான், அவரை அருகே அழைத்து, “அம்மா! உம்முடைய நோயில் இருந்து, நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம்முடைய கைகளை அவருடைய தலையில் வைத்தார்.

    உடனே அந்தப் பெண்ணானவள் நிமிர்ந்து நோக்கினார். இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

    இயேசு பிரான், ஓய்வு நாளன்று குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர், மிகுந்த சினம் கொண்டு, மக்கள் கூட்டத்தினரை நோக்கினார். மக்களைப் பார்த்து, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உண்டே! அந்த நாட்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

    இயேசு பிரானோ, அந்தத் தொழுகைக் கூடத் தலைவரைப் பார்த்து, “வெளிவேடக்காரரே! நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம்முடைய மாட்டையோ, கழுதையையோ, தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக் கொண்டு போய் தண்ணீர் காட்டுவதில்லையோ?”

    “ஆபிரகாமின் மகளாகிய இவரை, பதினெட்டு வருடங்களாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டில் இருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?” என்று கேட்டார்.

    இயேசு இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கமடைந்தனர். திரண்டிருந்த மக்கள் கூட்டம், அவர் செய்த மாண்புக்குரிய பெரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நற்செய்தியில் இருந்து நாம் உணர வேண்டிய கருத்து என்ன?

    நல்ல செயல்களை எந்த நாளிலும் செய்யலாம். அதற்கு ஏது காலமும் நேரமும்?. பழைய சட்டங்களை வைத்துப் பேசுகிறார், தொழுகைக்கூடத் தலைவர். சாத்தானின் கட்டிலிருந்து பெறப்படும் விடுதலை பற்றிப் பேசி செயல்படுகிறார், இயேசு பிரான். இதுதான் வேறுபாடு. சாத்தானால் சிறைப்பட்ட ஒருவரை விடுதலையாக்கித், தன் அன்பை வெளிப்படுத்துகிறார் இயேசு பிரான்.

    எல்லோருடைய உள்ளங்களையும் அறிந்தவராக இருப்பவர் இயேசு பிரான் என்பதால், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், மக்களைப் பார்த்து அறிக்கை விட்ட தொழுகைக் கூடத்தலைவரை நோக்கி, ‘வெளி வேடக்காரரே!’ என்று அழைக்கின்றார். அவர் மட்டுமா வெளிவேடக்காரர்? இப்படியெல்லாம் பேசுகிறவர்கள் அனைவருமே, வெளி வேடக்காரர்கள்தான். இவ்வுலகில் எம்மறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எத்துறையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவராக இருந்தாலும், சிலரைத் தவிர, பெரும்பான்மை யினர் வெளிவேடக்காரர்களாகத்தான் இருக்கின்றனர். வெளிவேடக்காரத் தன்மையில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதையே இயேசு பெருமகனார் விரும்புகிறார்.

    இப்படி அவர், தொழுகைக் கூடத் தலைவரை அழைத்து விட்டு, ஒரு வினாவைத் தொடுக்கிறார். இந்த வினா சாதாரணமானதல்ல. அவர்களை சார்ந்த வினாவாகவே இருக்கிறது.

    “நீங்கள் ஒவ்வொருவரும், ஓய்வு நாளில், தம்முடைய மாட்டையோ, கழுதையையோ தொழுவத்தில் இருந்து, அவிழ்த்துக் கொண்டு போய், தண்ணீர் காட்டுவதில்லையோ” என்று கேட்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் எப்படிப்பட்ட கடின உள்ளம் கொண்டவர்களாக இருந் திருக்க முடியும்? உளியைக் கொண்டு கற்களைச் செதுக்கி உருவம் சமைப்பதுபோல, கடின உள்ளங்களை, ‘சொல்’ எனும் உளியால் செதுக்கி, சிந்திக்கத் தூண்டுகிறார்.

    அவர்கள் வாழும் இடம், அவர்களோடு வாழும், மாடு, கழுதை போன்றவைகளை எடுத்துக் காட்டி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசி, அவர்களை நெறிப்படுத்துகிறார்.

    பதினெட்டு ஆண்டுகள் சாத்தானால் கட்டப்பட்டிருந்த அப்பெண்ணை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையோ? என்றொரு கேள்வியைத் தொடுக்கிறார்.

    தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக் கொண்டு போனதோ, ஐந்தறிவு உயிர். பதினெட்டு ஆண்டுகள் கட்டுக்குள் சாத்தான் வைத்திருந்தது, ஆறறிவு உயிர். இருந்தாலும் இயேசு பெருமானைப் பொறுத்தவரை, ஓரறிவு உயிர் முதல் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவைதான். நீங்கள் தண்ணீருக்காக அழைத்துச் செல்கிறீர்கள். நான் கண்ணீரைத் துடைக்கிறேன். இப்படியெல்லாம் பேசி கடின உள்ளங்களை மாற்றி சிந்திக்கத் தூண்டுகிறார்.

    உடனே வந்த எதிர் வினையை எண்ணிப் பார்ப்போம். அவரை எதிர்த்தவர்கள் அனைவரும் வெட்கம் அடைந்தனர். ஏனென்றால் போதகரின் கேள்வி, அவர்களின் மனதைச் சுண்டி இழுத்து விடுகிறது. கேள்வி இயல்பாகவும், அவர் களுக்குப் புரியும்படியும் இருக்கிறது. ஆகவே தங்கள் மூதாதையரின் எண்ணங்களுக்காக வெட்கப்படுகின்றனர். அங்கு திரண்டிருந்த கூட்டம், அவர் செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைகின்றது.

    சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால், எவரும் மதிப்பர்.

    ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

    உறவு கலவாமை வேண்டும்’ என்பது வள்ளலாரின் கூற்று.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேச அறியாதவராய், உண்மைக்கும் சமாதானத்துக்கும் சாட்சி பகர வந்தவராய், இவ்வுலகில் முப்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்தவர்தான் இயேசு பெருமகனார். மனிதர்கள் நெறியோடு வாழ்வதற்கு, அவர் விதைத்த விதைகளாம் நற்செய்தியில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

    வெறும் பழைய சட்டதிட்டங்கள் ஏற்புடையதல்ல; புதிய ஏற்பாட்டை உருவாக்க இவ்வுலகில் உதித்தவர்தான் இயேசு பிரான். அன்பு, சமாதானம், விடுதலை இவை மூன்றும், இயேசு பெருமகனார், நமக்களித்த அருட்கொடைகள் என்பதை, இந்நற்செய்தியைப் படிப்போர் உணர வேண்டும்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், நம் மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது? எப்படி வாழ்கிறோம்? என்பதையெல்லாம் சிந்தித்து செயல்பட, இந்நற்செய்தி உதவட்டும். வாழ்வோம்; நெறியோடு வாழ்வோம். 

    செம்பை சேவியர்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    விழாவின் முதல்நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெகிறது.
    இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். விழாநாட்களில் தினமும் மாலை ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது.

    விழாவில் 16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலியை மேல ராமன்புதூர் பங்குதந்தை அருட்பணியாளர் ஆனந்த் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. இதில் கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கமும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் கிளாசின், ஜெனிஸ், இளங்கோ, பங்குபேரவை துணைத் தலைவர் லியோன், செயலாளர் பிரபா, துணை செயலாளர் கசின்ராய், பொருளாளர் மரியஜான், மற்றும் பங்குமக்கள், பங்குபேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 11-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, புனித சவேரியார் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா, புதுபொலிவூட்டப்பட்ட ஆலய அர்ச்சிப்பு விழா, பேராலய திருவிழா ஆகிய முப்பெரும் விழாவையொட்டி 11 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கடந்த நவம்பர் 24-ந்தேதி புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடந்தது. ஒவ்வொரு நாள் விழாவையும், ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினர்.

    விழாவில் 3 நாட்கள் தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 9-ம் நாள் மற்றும் 10-ம் நாள் திருவிழா அன்று இரவில் தேர்ப்பவனி நடந்தது. 11-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று பகலில் தேர்ப்பவனி நடந்தது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்தினார். இதில், கோட்டார் வட்டார முதல்வர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு அருட்பணியாளர் சகாயஆனந்த் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து அருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடந்தது. பின்னர் பகல் 11.30 மணி அளவில் தேர்ப்பவனி தொடங்கியது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில், மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. அப்போது, பக்தர்கள் உப்பு, நல்லமிளகு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், பல பக்தர்கள் தேருக்கு பின்னால் தரையில் படுத்து எழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்தனர்.

    தேர்ப்பவனியின் போது, அந்தந்த தெருக்களில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர். மாலையில், தேர்கள் சவேரியார் பேராலயத்துக்கு வந்தடைந்தது. பின்னர், தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    11-ம் நாள் விழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம்-குடும்பமாக புனித சவேரியார் ஆலயத்துக்கு வந்தனர். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வருகிற 8-ந்தேதி கொடியிறக்கம் நடைபெறுகிறது.
    சமயபுரம் அருகே புறத்தாக்குடியில் உள்ள தூய சவேரியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    சமயபுரம் அருகே புறத்தாக்குடியில் உள்ள தூய சவேரியார் ஆலயம், 1680-ம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். பிரஞ்ச் ராணுவ தளபதியின் மனைவி மரிஹினியாள் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலயம், தொடர்ந்து வீரமாமுனிவரின் கண்காணிப்பில் இருந்தது. இத்தகைய பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வருடந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய சவேரியார், மாதா சொரூபம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. இதில் தூய சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் தேரில் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வாண வேடிக்கைகள் மற்றும் மேள தாளங்கள் முழங்க தேர் வீதியில் வலம் வந்தது. தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சூசையப்பர் சென்றார்.

    இதில் புறத்தாக்குடி, இருங்களூர், கொணலை, மகிழம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியதாஸ் தலைமையில் பேராசிரியர் அல்போன்ஸ்ராஜா மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
    கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.

    எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    தங்கமுலாம் பூசப்பட்ட பீடப்பகுதி

    கி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

    கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.

    திருவிழா தேர்ப்பவனியில் 4 தேர்கள்

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இதில் 10-வது நாள் திருவிழா அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 8-ம் நாள் திருவிழா அன்றும், 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா அன்றும் தேர்ப்பவனி நடைபெறும்.

    8-ம் நாள் திருவிழா அன்று காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர் ஆகிய 3 தேர்கள் மட்டும் செல்லும். 9-ம் நாள் திருவிழா மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர், தூய மாதா தேர் ஆகிய 4 தேர்கள் இடம்பெறும். இந்த தேர்ப்பவனியின்போது பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தும், தரையில் உருண்டு வேண்டுதல் செய்து நேர்ச்சை நிறைவேற்றுவது இத்திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
    புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய கப்பல் சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடந்து வந்தது.

    நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஜீவாநகர் பங்குதந்தை சகேஷ் அடிகளார் தலைமையில் மாலையில் ஆராதனை நடந்தது. பின்னர் புனித சவேரியார் சொரூபம் அலங்கரிக்கப்பட்ட கப்பல் சப்பரத்தில் வைத்து பவனி நடந்தது.

    நேற்று காலையில், அடைக்கலாபுரம் பங்குதந்தை ஜோசப் இசிதோர் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
    அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கப்பல் சப்பரத்தில் புனித சவேரியார் சொரூபம் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி சென்று, பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    ×