என் மலர்
ஆன்மிகம்

கும்பகோணத்தில் புதுப்பிக்கப்பட்ட தூய அலங்கார அன்னை பேராலயத்தில் அருள்பொழிவு விழா
கும்பகோணத்தில், புதுப்பிக்கப்பட்ட தூய அலங்கார அன்னை பேராலயத்தில் அருள்பொழிவு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
1899-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி கும்பகோணம் மறை மாவட்டம் புதுச்சேரியில் இருந்து பிரிந்து புதிய மறை மாவட்டமாக உருவானது. கும்பகோணத்தில் 1840-ம் ஆண்டு கட்டப்பட்ட அலங்கார அன்னை பேராலயம் மறைமாவட்ட பேராலயமானது. 1931-ம் ஆண்டு ஆயர் பீட்டர்பிரான்சிஸ், மறைமாவட்டத்தின் முதல் இந்திய ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது முயற்சியால் பேராலயத்தின் கட்டுமான பணி முழுமையாக நிறைவு பெற்று 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி தூய அமலஉற்பவ அன்னை பெருவிழா நாளன்று ஆயர் பீட்டர் பிரான்சிஸ்சால் அருள்பொழிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 81 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூய அலங்கார அன்னை பேராலயம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பேராலயத்தின் அருள்பொழிவு விழா நேற்று நடந்தது. விழாவில் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கல்வெட்டை திறந்து வைத்தார். குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நுழைவு வாயிலை புனிதப் படுத்தினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. ஆயர் பி.ரெமிஜியுஸ் பேராலயத்தை அருள்பொழிவு செய்தார். ஆயர் சிங்கராயன் மறையுரையாற்றினார். திருப்பலியில் கும்பகோணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள், பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் எப்.அந்தோணிசாமி வரவேற்றார். புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கினார். கும்பகோணம் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பி.ரெமிஜியுஸ் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ், சேலம் மறைமாவட்ட ஆயர் எஸ்.சிங்கராயன், குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு ஏ.அமிர்தசாமி, குடந்தை மறைமாவட்ட பொருளாளர் எம்.பிலிப்சந்தியாகு, புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஸ்பராஜ், லால்குடி மறைவட்ட முதன்மை குரு தனராஜ், மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், ஜெயங்கொண்டம் மறைவட்ட முதன்மை குரு கோஸ்மால்ஆரோக்கியராஜ், பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கல சாமி, மறைமாவட்ட துறவியர் பேரவை தலைவர் அருட்சகோதரி எம்.விமலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மயிலாடுதுறை பாரதிமோகன் எம்.பி., கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ரவிபெர்னார்ட், முன்னாள் நகரசபை தலைவர்கள் ரத்னாசேகர், சு.ப.தமிழழகன், ராயாஸ் குழுமம் ராயா.ஆர்.கோவிந்தராஜன், நோபெல் குழுமம் லியாகத்அலி, முன்னாள் கவுன்சிலர் ஜான் மற்றும் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் அலங்கார அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை மற்றும் நூல் ஆசிரியர் மரியஅந்தோணிஜேம்ஸ் எழுதிய புத்தகத்தை பேராயர் அந்தோணிஆனந்தராயர் வெளியிட முதல் பிரதியை இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் ஸ்தனிஸ்லாஸ் பெற்றுக்கொண்டார். முடிவில் பங்குத்தந்தை தேவதாஸ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தேவதாஸ், உதவி பங்குத்தந்தை மரியஅந்தோணிஜேம்ஸ், பங்கு பேரவை செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், செல்வஆரோக்கியராஜ், லியோன் சேவியர், மரியகிரகோரி, என்ஜினீயர் வின்சென்ட், செல்வநாயகம், சார்லஸ், சாகுல்சாலமன், பங்கு பேரவையினர், அருட்கன்னியர்கள், பக்தசபைகள், இளைஞர் இயக்கத்தினர், அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Next Story






