என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    “நான் யாரையும் தீமைக்குள்ளும், சோதனைக்குள்ளும் தள்ள மாட்டேன். என்னால் முடிந்த மட்டும் பிறரை அன்பு செய்வேன்” என்ற உறுதியோடு வாழ்வோம்.
    ஏழை மனிதன் கடவுளை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டான். கடவுளும் அவன் வேண்டுதலுக்கு செவிசாய்த்து காட்சியளித்தார். கடவுளிடம் தனக்கு ஒரு நீண்டநாள் சந்தேகம் இருப்பதாக சொன்னான். கடவுள் அவனிடம் சொல் என்றார். உயிரினங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழத்தானே நீர் படைத்தீர். ஏன் பலருக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை? என்றான். கடவுள் உடனே, மக்கள் என்னிடம் கேட்பதைத்தானே கொடுக்க முடியும். என்னோடு ஒருநாள் உடனிருந்து, மக்கள் வைக்கும் கோரிக்கைகளைக் கேட்டுப்பார் உனக்கு புரியும் என்றார்.

    மக்கள் வரிசையாக வந்தனர். முதலாமவர் வந்தார். என் வீட்டுக்கு உறவினர்களெல்லாம் வருகிறார்கள். நீர் பணம் கொடு என்று கேட்டார். இரண்டாமவர் வந்தார். நான் தேர்தலில் போட்டியிடுகிறேன், நீர் எனக்கு வெற்றி தந்து, பதவி தர வேண்டும் என்று கேட்டார். மூன்றாமவர் வந்தார். நான் வாழ்வதற்கு இந்த இல்லம் போதுமானதாக இல்லை. நீர் எனக்கு பெரிய மாளிகையைக் கொடு என்று கேட்டார். இப்படி இறைவன் தந்த நல்வாழ்வை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் செலவிட வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை. இன்றைய உலகம் ஆடம்பரங்கள் மட்டுமே உண்மையானது என்பதைத்தான் நமக்கு கற்பிக்கிறது. நாம் எவ்வாறு ஆசைக்கு அடிமையாகி சோதனைக்கு உட்படுகின்றோமோ, அதே போன்றே இறைமகன் இயேசுவும் சோதிக்கப்பட்டார்.

    இயேசு மூன்று விதமான சோதனைகளை எதிர்கொண்டார். ஒன்று கல்லை அப்பமாக்கு- இன்பம் வரும், இரண்டு கட்டிடத்தில் இருந்து குதி- புகழ் சேரும், மூன்று காலில் விழுந்து வணங்கு- பொருள் கிடைக்கும் என்பவை அந்த 3 சோதனைகளாகும். இந்த சோதனைகளையும் இறைவார்த்தையின் துணைகொண்டு இறைமகன் இயேசு வென்றார். அவரின் பதிலே இறைவார்த்தையாகத்தான் இருந்தது. ஆதலால் நமது வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற சோதனைகளை இறைவார்த்தை துணையால் வெல்வோம்.

    யாக்கோபு 1:2-ல் “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்” எனப்பார்க்கின்றோம். மேலும் யோக்கோபு 1:14-ல் “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கி தன்வயப்படுத்துகின்றது” எனப் பார்க்கிறோம். ஆகவே நாமும் கட்டுப்பாடு உடையவர்களாய், முறையாக ஆற்றல் உடையவர்களாய் இறையருள் பெறவேண்டும். ஆண்டவர் சொல்வது போன்று சோதனையை மன உறுதியுடன் தாங்கிக் கொள்வோம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சோதிக்கப்படுவது உறுதி. மன உறுதியோடும், கட்டுப்பாட்டோடும், நிதானமாகச் செயல்படும்போது சோதனையை வெல்ல முடியும்.

    சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, கடவுள் வாக்களித்த வெற்றி வாகையினை பரிசாய் பெற்றுக்கொள்ள முடியும். கடவுளின் திருமுன் நிற்க தகுதியுள்ளவர்களாக நாம் மாற முடியும். ஆனால் ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் எடுப்போம். “நான் யாரையும் தீமைக்குள்ளும், சோதனைக்குள்ளும் தள்ள மாட்டேன். என்னால் முடிந்த மட்டும் பிறரை அன்பு செய்வேன்” என்ற உறுதியோடு வாழ்வோம்.

    அருட்பணி. குருசு கார்மல், இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம்,

    கோட்டார், நாகர்கோவில். 
    இயேசு ஏன் இந்த பூமிக்கு வரவேண்டும்? ஏன் மனிதர்களை மீட்கும் எண்ணம் கொள்ள வேண்டும்? எனும் கேள்விகளை நமக்குள்ளேயே எழுப்புவோம். அப்போது இயேசுவை நாம் புரிந்து கொள்வோம்.
    ஒரு விதை மண்ணில் விழுந்து மடியும் போது ஒரு முளை புதிதாய் விழித்தெழுகிறது. ஒரு கூடு உடைந்து அழிந்து போகும் போது வண்ணத்துப் பூச்சி தன் ஈரச்சிறகினை மெல்ல உதறி பறக்கத் தொடங்குகிறது. மரணத்துக்குப் பின்னான பிறப்பு, புதிய உலகுக்கான சிறகடிப்பு. அழிவின் முடிவில் தொடங்கும் வாழ்வின் சுவடு.

    இயேசுவின் பிறப்பு, மனுக்குலத்தின் மரணத்திற்குப் பின்னான மீட்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான பிறப்பு. பாவத்தின் பிடியில் இருக்கும் மனுக் குலத்தை, தனது பலியின் மூலமாக மீட்புக்குள் வழிநடத்துவதே அவரது வருகையின் நோக்கம். அதற்கு இயேசுவை நம்புவதும், அவரது வழியில் நடப்பதும் அவசியம்.

    இயேசு ஒரு அன்பு சமுதாயத்தைக் கட்டமைக்க விரும்புகிறார். நாமோ அவருக்காய் ஒரு ரசிகர் மன்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இயேசு ஒரு மனித நேய குடும்பத்தை உருவாக்க விரும்புகிறார். நாமோ அவருடைய பெயரால் வன்முறைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக் கிறோம். அவர் உறவுகளால் கட்டப்பட்ட ஒரு அமைப்பை உருவாக்க விரும்புகிறார், நாமோ உரைகளால் கத்திக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

    எனில், நாம் செய்யவேண்டியது என்ன? வேர்களை நோக்கிய ஒரு பயணம். இயேசு ஏன் இந்த பூமிக்கு வரவேண்டும்? ஏன் மனிதர்களை மீட்கும் எண்ணம் கொள்ள வேண்டும்? எனும் கேள்விகளை நமக்குள்ளேயே எழுப்புவோம். அப்போது இயேசுவை நாம் புரிந்து கொள்வோம்.

    இயேசுவின் பிறப்பினால் நமக்குள் பிறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை.

    1. அன்பு

    ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள், சிந்தனைகள் எல்லாமே அன்பு எனும் அச்சாணியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய அன்பு நமக்குள் பிறக்க வேண்டும்.



    2. பணிவு

    கால்நடைகளுக்கான ஒரு மரத் தீவனத் தொட்டியில் பிறந்து, மரங்களோடு வாழும் ஒரு தச்சனாக வளர்ந்து, சிலுவை மரத்தின் உச்சியில் உயிரை விட்டு, பணிவை தனது வாழ்வால் விளக்கியவர் இயேசு. பசியோடும், சோர்வோடும் வாழ்ந்தாலும் பணிவோடும், துணிவோடும் வாழத் தவறவில்லை. கொலைக்களத்தில் துணிச்சலாய் பேசிய இயேசு, சீடர்களின் கால்களைக் கழுவும் அன்பினைக் கொண்டிருந்தார். தனது கால்களைப் பிறர் கழுவுவதில் அல்ல, பிறருடைய கால்களை தான் கழுவுவது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்த்தினார். அத்தகைய பணிவு நமக்குள் பிறக்க வேண்டும்.

    3. உண்மைத்தன்மை

    பாவிகளை அரவணைத்த இயேசு, புனிதர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டவர்களைப் புறக் கணித்தார். விபசாரியைக் கூட மன்னித்து அன்பால் அறிவுரை சொன்னவர், தலைவர்களை நோக்கி ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே...’ என கர்ஜித்தார். உண்மைத் தன்மையை இயேசு நேசித்தார். ‘நான் பாவி’ என வருபவர்களை எப்போதும் அவர் புறம்பே தள்ளவில்லை. ‘நான் சுத்தமானவன்’ எனும் கர்வத்தோடு வருபவர்களை நிராகரிக்கத் தயங்கவும் இல்லை. இயலாமைகளை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் உண்மைத்தன்மை நமக்குள் பிறக்க வேண்டும்.

    4. உறுதி

    லட்சியத்தில் உறுதியாய் இருப்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கை போதிக்கிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுவதே அவரது மனித வடிவின் நோக்கம். அந்த நிலையிலிருந்து இம்மியளவும் அவர் விலகவில்லை. மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார். தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.

    5. ஜெபம்

    இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. கர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம்! சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.

    சேவியர், சென்னை.
    ஜெபம் என்றும் இறை-மனித உறவு வழியாக ‘அருள்’ என்னும் திரவம் நாள்தோறும் நம்மில் சுரக்கட்டும்.
    “விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார்” (மத்தேயு 7:11) “ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர். என் மனதிற்கு வலிமை அளித்தீர்” (திருப்பாடல் 138:3) ஜெபத்தின் ஆற்றலைப்பற்றி இன்று நாம் தியானிக்கிறோம்.

    ‘ஜெபம்‘ என்பது இறைவனுடன் கூடிய உறவு. இந்த இறை-மனித உறவு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத மூலக்கூறு. நீரில் வாழும் பறவைகளை கவனித்து பாருங்கள். அப்பறவைகள் எவ்வளவு நேரம் நீந்தினாலும், நீரிலிருந்து எழும்பியதும் தம் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. நீண்ட நேரம் நீந்தினாலும் சோர்வுற்று நீரில் மூழ்கி சாகாமல் இருப்பதன் ரகசியம் தான் என்ன?

    நீரில் நீந்தும் இப்பறவைகள் ஒரு வகையான திரவத்தை சுரந்து, அதனை தம் அலகுகளால் தங்களது மேனி முழுவதும் பூசிக்கொள்கின்றன. அதுபோல ‘ஜெபம்‘ என்பது பிறவிக்கடலில் நீந்தும் நாம் அதில் மூழ்கி அழிந்து போகாமல், நீந்தி கடந்து விண்ணுலகை நோக்கி சிறகடித்து பறப்பதற்காக நமக்குள்ளே சுரக்கும் ‘இறையருள்’ என்னும் அற்புத திரவமாகும்.

    நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள், நீரை சுரப்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வளவு நிதர்சனம் ஜெபம் அருளை சுரப்பது என்று மருத்துவத்துறையில் நோபல் பரிசு பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் கேரல் கூறுகிறார். ஜெபம் என்றும் இறை-மனித உறவு வழியாக ‘அருள்’ என்னும் திரவம் நாள்தோறும் நம்மில் சுரக்கட்டும். அப்போது நாமும் நீர்ப்பறவைகள் போல் பிறவிக்கடலில் எவ்வளவு நேரம் நீந்தினாலும் சிறகடித்து பறந்து கொண்டே இருக்கலாம்.

    எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை உணரவும், அதேவேளையில், அவருடன் நாம் இருக்கிறோம் என்பதையும் உறுதி செய்யும் கருவியே ‘ஜெபம்‘ என்பதை உணர்ந்து இறை வேண்டலில் நிலைத்திருப்போம். (உரோமையர் 12:12)

    அருட்திரு பி.செல்வராஜ், பங்குத்தந்தை, மறவபட்டி.
    நற்செய்தியை படிக்கும் நாம், படித்ததோடு மட்டும் இருந்து விடாமல், நற்செய்தியின் பொருளை உணர வேண்டும். பின்னர் அது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
    அந்த காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர், இயேசு பிரானைப் பார்த்து, “போதகரே! சொத்தை என்னுடன் பங்கு போட்டுக் கொள்ளுமாறு, என்னுடைய சகோதரனுக்குச் சொல்லும்” என்று கூறினார்.

    உடனே இயேசு பிரான் கேட்டவரை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகத்தைப் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யாரெனக் கூற முடியுமா?” என்று கேட்டார். பிறகு அவர்களைப் பார்த்து, “எவ்வகையான பேராசைக்கும் இடம் கொடுக்காமல், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளை வைத்திருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்று கூறினார்.

    எப்பொழுதும் எளிமையான உவமைகளைச் சொல்லி, மக்களை நெறிப்படுத்திய இயேசு பிரான், இவ்விடத்திலும் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்.

    “செல்வந்தராய் இருந்த ஒருவனுடைய நிலம், நன்றாக.. மிகுதியாக விளைந்தது. அவன் அந்த விளைச்சலைப் பார்த்து விட்டு, ‘நான் என்ன செய்வேன்? அதிகமாக விளைந்து விட்டதே! என்னுடைய விளை பொருட்களைச் சேர்த்து வைக்க இடம் இல்லையே!’ என்று எண்ணினான். உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

    “என் களஞ்சியங்கள் அனைத்தையும் இடித்து விட்டு, இன்னும் மிகப் பெரிதாகக் கட்டி விடுவேன். அங்கு கொண்டு போய், எனது தானியங்களையும் பொருட்களையும் சேர்த்து வைப்பேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    பின்பு நெஞ்சை நோக்கி, “என் நெஞ்சமே! உனக்குப் பல ஆண்டுகளுக்கு வேண்டிய, பல வகையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இனி நீ ஓய்வு எடுத்துக்கொள். நன்றாக உண்டு, குடித்து, மகிழ்ச்சியில் ஆடு. கும்மாளம் போடு எனச் சொல்வேன்” என்றான்.

    ஆனால் கடவுளோ அவனை நோக்கி, “அறிவு கெட்டவனே! இன்று இரவே உனது உயிரானது, உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்படிப் பிரிந்த பிறகு, நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாக இருக்கும்” என்று கேட்டார்.

    இதோடு இயேசு பெருமான் நிறுத்தி விட்டு, “கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய், தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே” என்றக் கருத்தை வெளிப்படுத்தினார்.

    இந்நற்செய்தியை, உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதரும், மிகவும் ஆழமாகப் படித்துத் தெளிவடைய வேண்டும்.



    போதகரிடம் அவன் முதலில் கேட்டது, அறியாமையின் வெளிப்பாடாகும். ஒருவர் சொத்தை, ஒருவருக்குப் பங்கிட்டுக் கொடுக்கவா, இயேசு பிரான் இவ்வுலகத்திற்கு வந்தார்? அவர் மக்களை நெறிப்படுத்த வந்தவர் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

    அறியாமை காரணமாக, நாமும் எவ்வளவோ பேச்சுகளை பேசி விடுகிறோம். எல்லோரையும் சாதாரணமாக எண்ணி விடுகிறோம்.

    முதலில் இயேசுபிரான், அவனிடம் சாதாரணமாகப் பேசுகிறார். “உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியது யார்?” என்ற வினாவைத் தொடுக்கிறார்.

    முதல் கேள்வியிலேயே அவன் சிந்தித்திருக்க வேண்டும். சிந்திக்காமல் இருந்ததால்தான், அவன் இப்படிச் சொல்லி விட்டான் என்பதை இயேசு அறிந்து கொண்டார். அதனால் தான் அடுத்து வினா தொடுக்காமல், ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.

    “எவ்விதமான பேராசைக்கும் இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்ற கருத்தை அங்கு பதிய வைக்கிறார். அப்பொழுதாவது அவன் உணர்ந்திருப்பானா? என்றால், ‘இல்லை’ என்றுதான் தோன்றுகிறது.

    காரணம், இவ்வுலகத்தைப் பற்றியும், இவ்வுலக சொத்துகளைப் பற்றியும் கவலைப்படுகின்ற ஒருவன், இப்படியெல்லாம் சிந்திக்க முடியாதல்லவா? இவற்றையெல்லாம் அறிந்தவர்தான் இயேசு பிரான். இருந்தாலும் வழக்கம்போல், அவருக்கே உரிய பாணியில், எளிமையாக ஓர் உவமையை எடுத் துரைக்கத் தொடங்குகிறார்.

    செல்வந்தன் ஒருவரிடம் இருந்து தொடங்குகிறார். செல்வம் பற்றிப் பேசுகிறார். களஞ்சியம் பற்றி விரித்துரைக்கிறார். செல்வந்தனுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

    அடேயப்பா! அவன் மனம் எப்படியெல்லாம் பேசுகிறது? ஏ! மனமே! நீ, நன்றாக ஓய்வு எடு. நன்றாக உண். நன்றாகக் குடி. குதூகலமாக ஆடு. என்றெல்லாம் எண்ணுவதைக் கவனிக்கிறார்.

    இறுதியில், கடவுள் சொல்லும் ஒரு வார்த்தையில் எண்ணங்கள் தவிடு பொடியாகிறது.

    ‘இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவைகள்’

    இது அவனுக்கு மட்டும் சொன்ன வார்த்தைகள் அல்ல என்பதைப் படிப்போர் உணர வேண்டும்.

    வாழ்க்கையில் வேண்டுமானால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு இருக்கலாம். யாராக இருந்தாலும் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டியவர்களே! எவருக்கும் இந்த உலகம் நிரந்தரமல்ல. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாமல், தமக்காகவே சேர்ப்பவர்கள்தான் இப்படிப்பட்டவர்கள் என்கிறார். ஆகவே செல்வம், கடவுள் செல்வமாக இருக்க வேண்டும்.

    ‘போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை’ என்பதை எல்லோருமே தான் சொல்கிறோம். அதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். ஆனால் நமது செயல் அதற்கு மாறாக இருக்கிறது. எனவே இத்தகைய நற்செய்திகளை ஆழ்ந்து படிப்போம். நெறியோடு வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம்.
    “எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்“(மத் 6:12). எனவே பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்.
    அன்பின் பண்புகளில் தலை சிறந்தது மன்னிப்பு ஆகும். ஏசு நோய்களை குணமாக்கினார். இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்தார். தவறு செய்து வருந்தியவர்களையும், குற்றம் செய்தவர்களையும் மன்னித்தார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றி ‘நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்‘ (யோவா. 8:11) என்று கூறி பாவங்களை மன்னித்தார்.

    பாவியானப் பெண் ஒருவர் நறுமண தைலத்தால் ஏசுவின் பாதங்களை கழுவிய போது அங்கிருந்த சமூகம் அவளை பாவியாக பார்த்தது. ஏசு மட்டும் அவளது மனித மாண்பை பார்த்து பாவத்தை மன்னித்து “உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இந்த பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும். இவரும் நினைவு கூறப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்் என்கிறார் (மத். 26:13).

    ஏசுவின் மன்னிப்பு மனப்பான்மையும், பாவிகள் மேல் அவர் கொண்டுள்ள பரிவும், அன்பும், இரக்கமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. ஏனெனில் ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மை தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோருக்கு காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. (திபா103:8-11)

    ஏசு போதித்தவர் மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர். எனவே தான் அவர் உயிர்விடும்முன்பு சிலுவை என்ற மேடையிலிருந்து “தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை“ என்று கூறினார். (லூக். 23:34). ஏசு “பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் என் ரத்தம்“ என்று கூறி தனது குருதியை சிந்துகிறார்.

    இறைமகன் ஏசு நம்மை மன்னித்தது போல நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க சொல்கிறார். இதைத்தான் ஏசு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் “எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்“(மத் 6:12). எனவே பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்.

    அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி
    இயேசுவின் வழிநடந்து, ஆத்ம விடுதலை அடைந்து, நிரந்தர திருப்தியை அடைந்தவன், ஆத்மா சம்பந்தப்பட்டதையே போதிப்பான் என்று இயேசு கூறியிருக்கிறார் (யோவான் 3:6).
    கண்களுக்கு ஒருவனாக காணப்பட்டாலும், மனிதன் முப்பரிமாணங்களை உடையவனாக இருக்கிறான். ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்றையும் ஒருங்கிணைந்து பெற்றவனே மனிதன். மிருகங்களுக்கு ஆத்மா மட்டும் கிடையாது. மனிதன் தன்னுடைய முப்பரிமாணத்தில் கண்ணுக்குத் தெரியும் அம்சத்தையே போற்றிக் கொண்டாடுகிறான். அந்த வகையில் கண்களுக்குத் தெரியும் சரீரத்தை, அதாவது உடலைப் பேணுவதில் தான் ஆயுள் நாட்களைக் கழிக்கிறான்.

    அழகு, அந்தஸ்து, இவற்றை அடைய தேவைப்படும் செல்வம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறான். இவற்றைப் பெற்று, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் திருப்தி அடைகின்றனர். பலர் திருப்தி அடையாமலேயே கடந்து செல்கின்றனர். உடல் என்பது அழியாதது அல்ல என்ற உண்மையை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. அழியக்கூடியதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது, கோடையில் ஐஸ்கட்டியில் சிலை செய்து அதை அலங்கரிப்பது போன்றது.

    ‘எந்தக் காலத்திலும் அழியாத ஆத்துமான் என்ற வஸ்து தனக்குள் இருக்கிறது’ என்பதை உணர்ந்தாலும் அதை அழகுள்ளதாக்கும் வழிகளை மிகப் பெரும்பாலானோர் நாடுவதில்லை. ஆத்மாவை பலப்படுத்தும் ஆன்மிக மார்க்கத்தில் செல்வதாகக் கருதி, பலர் தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். புனிதப் பயணங்கள் உள்ளிட்ட உடல் ஒடுக்குதல்களால் ஆத்மா பலப்படாது. உடலை பலப்படுத்தி வாழச் செய்வதற்கென்று இருக்கும் உணவுகள் போல, ஆத்மாவுக்கென்று தனி உணவு உள்ளது.

    அந்த உணவைக் குறித்து இயேசு, ‘ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்’ என்றார் (யோவான் 6:35). சரீரத்துக்கான உணவு, நீர், உறவுகள் போன்றவை தற்காலிக திருப்தியை அளித்தாலும், மீண்டும் அவற்றை சரீரம் நாடுகிறது. தற்காலிக திருப்தியை மட்டுமே அளிக்கும் எந்த அம்சமும் ஆத்மாவுக்கு தொடர் புடையது அல்ல.

    ஆனால் இயேசு கூறிய போதனைப்படி, தீய வழியில் இருந்து மனம் மாற வேண்டும்; குற்றச்செயலுக்கான மன்னிப்பை சம்பந்தப்பட்டவரிடத்திலும் இறைவனிடத்திலும் பெற வேண்டும்; சரீரத்தை கெடுக்கும் பாவங்களை விலக்க வேண்டும்; உள்ளத்தில் இருந்து புறப்படும் பெருமை, பொறாமை, இச்சை போன்ற தீய குணங்களை அகற்ற வேண்டும்; பிறவிக் குணங்களான எரிச்சல், கோபம் போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளை நீக்க வேண்டும் என்ற முடிவை ஒருவன் முழுமனதோடு எடுத்தான் என்றால், அப்போதுதான் அவனது ஆத்மா விழிக் கிறது.

    விழிக்கும் அந்த ஆத்மாவை இறைவன் பலப் படுத்துகிறார். ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய மூன்றையும் கறைப்படுத்தக் கூடிய பாவங்கள் சூழ்ந்தாலும் அவற்றை செய்யாமல் இருக்கும் பலத்தை அவனுக்கு இறைவன் அளிக்கிறார். இந்த பாவங்களுக்குத் தப்பி வாழும் வாழ்க்கைதான் ஒருவனுடைய ஆத்மாவுக்கு நிரந்தர திருப்தி அளிப்பதாக அமைகிறது. அதாவது, இனி தனது ஆத்மாவை திருப்திப்படுத்த வேறு வழிபாடுகளுக்கு அவன் செல்லத் தேவையில்லை.

    கடல் பயணத்தில் இருப்பவர்களுக்கென்று தயாரிக்கப்படும் ஒருவகை உணவு, ஒருமுறை சாப்பிட்டாலே பல மாதங்கள் உடலுக்கு சக்தியை அளித்துக் கொண்டிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. அதுபோல இயேசு என்ற ஜீவ அப்பத்தை ஒருமுறை ஏற்று அவர் காட்டிய வழியில் நடக்கத் தொடங்கிய பிறகு, வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் ஆத்ம திருப்தியோடு அமைதி குலையாமல் இருக்கலாம். இன்னொரு உணவுக்கு அங்கும் இங்கும் அலைய வேண்டியதில்லை.



    ஆத்மாவில் இப்படிப்பட்ட திருப்தியை அடைந்தவர்கள், தங்களின் சரீர ரீதியான வாழ்க்கையைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். வறுமை, வியாதி போன்ற துன்பங்கள் அவனது நிம்மதியைக் குலைத்துவிடாது. இதுவே உண்மையான ஆன்மிக வழி. ஆன்மிக வழியில் இருப்பதாக தங்களைப் பற்றி நினைப்பவர்கள், இதுபோன்ற திருப்தியோடு புலம்பாமல் இருக்கிறோமா என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

    இந்தக் கருத்தை தன்னை தேடி வந்த மக்களுக்கு ஒரு உதாரணம் மூலமாக இயேசு விளக்குகிறார். ஒருமுறை அதிக எண்ணிக்கையில் இயேசுவை நோக்கி மக்கள் வந்தனர். அவர்களுக்கு போதனை வழங்கிய இயேசு, அப்பத்தையும், சமைத்த மீனையும் அற்புதமாக கொண்டு வந்து அவர் களுக்குக் கொடுத்தார். இந்த அற்புதத்தைக் கண்ட அவர்கள், இயேசுவை தங்கள் நாட்டை ஆளும் ராஜாவாக ஆக்கும் முயற்சியில் இறங்கினர் (யோவான் 6:14, 15).

    அற்புதங்களைச் செய்வதன் மூலம் மக்களை தன்பக்கம் வரச் செய்து, ஆத்மாவுக்கு ஏற்ற போதனைகளை இயேசு வழங்கினாலும், மக்களோ அந்த போதனைகளுக்கு செவி சாய்க்காமல் சரீர ரீதியான கண்ணோட்டத்திலேயே அவரது அற்புதங்களையே நாடினர். அப்படிப்பட்ட மக்களை விட்டு இயேசு விலகிச் சென்றார்.

    இன்றும் அதுபோன்ற மக்கள் கூட்டம் உள்ளது. ஆத்மாவை குணப்படுத்தும் இயேசுவின் தன்மை, நோக்கம் பற்றி அறிந்தும், அவரை வியாதி, வறுமை போன்ற சரீர விடுதலைகளுக்காக மட்டும் தேடி வருகிறவர்களை விட்டு அவர் விலகுகிறார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.

    மீண்டும் அந்த மக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது இயேசு, ‘வயிற்றை நிரப்பி தற்காலிக திருப்தி அளிக்கும் உணவுக்காக என்னை தேடி வருகிறீர்கள். இது தின்ற பிறகு அழிந்துபோய்விடுகிறது. என்னிடத்தில் இருந்து அழியாத ஆன்மாவுக்கான உணவை பெற்றுக்கொள்ளுங்கள். என் போதனைகளை விசுவாசித்து அதன்படி நடப்பதுதான் என்றென்றும் அழியாத திருப்தி தரும் உணவாக உள்ளது’ என்று போதித்தார்.

    மோசே காலத்தில் மக்களின் பசிக்காக வானத்தில் இருந்து அதிசயமாக ‘மன்னா’ என்ற உணவு தரப்பட்டது. அது தூதர் களுக்கான உணவு. அதை உண்டவர்கள்கூட பின்னர் இயல்பாக இறந்துவிட்டனர். தூதர்கள் போல் சரீரத்துக்கு அழியாத தன்மையை அது கொடுக்கவில்லை. எனவே, ‘சரீர ரீதியான விஷயங்களை என்னிடம் தேடாதீர்கள். நான் சொல்வதெல்லாம் ஆவி, ஆத்மாவுக்கானது’ என்பதை வலியுறுத்தினார் (யோவான் 6: 26, 27, 49, 50, 51, 63).

    இன்றும் பலர் மூலம் விடுதலைக்கான அழைப்பு விடுக்கப் படுகிறது. அந்த விடுதலை எதற்கானது? சரீரத்துக்கானதா? ஆத்மாவுக்கானதா? என்பதை ஆராய வேண்டும். இயேசுவின் போதனைப்படி நடக்காதவன் சரீர தேவைகளைதான் முன்னிறுத்துவான். அதையே மற்றவர்களுக்கும் போதிப்பான்.

    ஆனால் இயேசுவின் வழிநடந்து, ஆத்ம விடுதலை அடைந்து, நிரந்தர திருப்தியை அடைந்தவன், ஆத்மா சம்பந்தப்பட்டதையே போதிப்பான் என்று இயேசு கூறியிருக்கிறார் (யோவான் 3:6).

    எனவே போதனை எதைப் பற்றியது என்பதை வைத்து போதகரை அடையாளம் காணுங்கள்.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயம் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை 6.30 மணியில் ஆலய வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் விழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாளையங்கோட்டை மறைமாவட்ட அதிபர் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆயர் இல்ல அருட்தந்தை ராபின் மறையுரை ஆற்றினார். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை காலையும், மாலையும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஒப்புரவு அருட்சாதனம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் திருஉருவ பவனி மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சவேரியர் ஆலய திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.
    நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமையில் நேற்று நடந்தது.
    குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுள் முக்கியமானதாகவும், கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாகவும் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 24-ந்தேதி கொடியேற்றப்பட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டில் புனித சவேரியார் பேராலய திருவிழா, சவேரியார் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதுபொலிவூட்டப்பட்ட பேராலய அர்ச்சிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவை கொண்டாட முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, கடந்த 18-ந்தேதி பொலிவூட்டப்பட்ட ஆலய அர்ச்சிப்பு விழா நடந்தது. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமைதாங்கி பொலிவூட்டப்பட்ட ஆலயத்தை அர்ச்சிப்பு செய்துவைத்தார்.

    இந்தநிலையில், ஆலய திருவிழா கொடியேற்றமானது நேற்று மாலை நடந்தது. விழாவையொட்டி, காலை 6.15 மணிக்கு ராஜாவூர் இறைமக்கள் கலந்துகொண்ட திருப்பலி நடந்தது. தொடர்ந்து, மாலையில் கோட்டாறு தெற்கு-வடக்கு ஊர் பங்கு இறைமக்கள் சார்பில், பேராலய அருட்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனைதொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. இதற்கு, கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் தலைமைதாங்கி கொடியை ஏற்றிவைத்தார். அவர் தலைமையில் நடந்த ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் கோட்டாறு வட்டார முதல்வர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்கு அருட்பணியாளர் கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த், பங்கு அருட்பணியளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனால் மின்னொளியில் ஜொலித்த ஆலய வளாகம் மக்களால் நிரம்பி வழிந்தது.

    விழா வருகிற 4-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில், காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடைபெறும்.

    9-ம் நாள் விழாவான வருகிற 2-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமயில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு 10.30-க்கு தேர்பவனியும் நடக்கிறது. 3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை நற்கருணை ஆசீர் வழங்கி மறையுரையாற்றுகிறார். 4-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முப்பெரும் விழாவாக இந்த ஆண்டில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் முக்கியமானதாகவும், கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயமாகும். இந்த பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 3 அல்லது 4-ந் தேதிகளில் நிறைவடையும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது.

    9-ம் நாள் திருவிழாவான வருகிற 2-ந் தேதி ஓய்வுபெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கும் தேர்ப்பவனி நடைபெறும்.

    11-ம் நாள் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. தேர்ப்பவனியின்போது பக்தர்கள் தேவமாதா, புனித சவேரியார் தேர்களின் பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரமும், உருண்டு வேண்டுதலும் செய்வதும் வழக்கம்

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருவிழா இந்த ஆண்டில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணம் குறித்தும், புனித சவேரியாரின் மகிமைகள் குறித்தும் இங்கே விரிவாக காணலாம்.

    நற்செய்தி அறிவிப்பு பணிக்காக பல புனிதர்கள் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். அவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற சவேரியார் ஆவார். அவர், ‘கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல்’ என்றெல்லாம் புகழப்படுகிறார்.

    இத்தகைய பெருமைக்கு சொந்தக்காரரான புனித சவேரியார், 1506-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் பிறந்தார். தொடக்க கல்விக்கு பின்னர் அவர் 1525-ல் பாரீஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரியில் பயின்றார். அறிவாற்றல் மிகுந்தவராகத் திகழ்ந்தார்.

    இந்த நேரத்தில்தான் 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தார். இயேசுவின் அருள்மொழியான “ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், அவன் ஆன்மாவுக்கு கேடு விளைந்தால் அவனுக்கு என்ன பயன்? (மத்தேயு 12:26) என்ற விவிலிய வார்த்தைகள் இஞ்ஞாசியாரால், சவேரியாரிடம் அடிக்கடி கூறப்பட்டது. ஆனாலும் அவர் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இஞ்ஞாசியாரின் தளரா முயற்சி சவேரியாரை அவர் பக்கம் ஈர்த்தது.

    இதையடுத்து சவேரியார் மனம் மாறினார். 1537-ம் ஆண்டு குருவானார். 1539-ம் ஆண்டு இஞ்ஞாசியாரால் நடத்தப்பட்ட மாநாடுகளில் பங்கேற்று, இயேசு சபைக்கு அடித்தளமிட்டார். 1540-ல் லிஸ்பென் சென்று 9 மாதங்கள் இறைபணி செய்தார். 1542-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி கோவா வந்து சேர்ந்தார். பின்னர் நற்செய்தியை அறிவித்து, நோயாளிகளுக்கு பணிவிடை செய்து சிறையில் இருந்தவர்களை சந்தித்து ஏழைகளுடன் வாழ்ந்தார்.

    1542-ம் ஆண்டு இந்தியாவின் தெற்கு கடற்கரையோரப் பகுதிக்கு வந்தார். மணப்பாடு சென்று நற்செய்தி போதித்தார். அவ்வப்போது குமரி மாவட்டம் கோட்டாறுக்கும் வந்தார். பாண்டிய மன்னனுடனான போரில் திருவிதாங்கூர் மகாராஜா வென்றிட உதவினார். அதைத்தொடர்ந்து அவர் நற்செய்தி அறிவிக்க அனுமதியும், உதவியும் பெற்றார். கோட்டார் மையப்பகுதியில் இருந்து நற்செய்திப் பணிகள் பெருகின. 45 இடங்களில் கிறிஸ்தவ சபைகள் நிறுவப்பட்டன.



    இறுதியாக சீனாவுக்கு புறப்பட்ட போது சான்சியன் தீவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், 1552-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி இயேசுவின் திருப்பெயரை உச்சரித்தவாறு 46-ம் வயதில் உயிர்நீத்தார். இன்னும் அந்த புனிதரின் உடல் கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த புனிதரின் பணிகளில் கோட்டார் முக்கிய பங்கு வகிக்கிறது. புனித சவேரியார் தனது கரங்களால் கட்டி திருப்பலி நிறைவேற்றிய ஆலயம் இதற்கு முக்கிய சான்று. 1602-ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா, இத்தாலி நாட்டு அருட்பணியாளர் அந்திரேயாஸ் புச்சாரியோவிடம் கோட்டாறில் ஓர் ஆலயம் கட்டுதவதற்கு தேவையான இடத்தை தானமாக வழங்கினார்.

    1603-ம் ஆண்டில் அந்திரேயாஸ் புச்சாரியோ, புனித சவேரியார் வழிபாடு நடத்தி, ஜெபித்த இடத்தில் களிமண்ணாலும், மரத்தாலும் ஆன மூவொரு இறைவன் ஆலயம் ஒன்றைக் கட்டினார். சவேரியாரின் மீது கொண்ட பற்றினாலும், பக்தியாலும் இந்த ஆலயத்தை மக்கள் சவேரியார் ஆலயம் என்றே அழைத்தார்கள். 1605-ம் ஆண்டு மூவொரு இறைவன் ஆலயமானது சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1640-ல் கற்களாலான புதிய ஆலயம் கட்டியெழுப்பப் பட்டது. 1643-ல் புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார் ஆகியோரின் திருப்பண்டங்கள் கோட்டாறு ஆலயத்தில் வைக்கப்பட்டன.

    1752-ம் ஆண்டு முக்திபேறுபெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உடலின் எஞ்சிய பகுதிகள் ஆலய மணிகள் முழங்க பவனியாகக் கொண்டுவரப்பட்டு கோட்டார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1865-ம் ஆண்டு இந்த ஆலயம் மேற்கு, வடக்கு, தெற்குப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட சவேரியாரின் சொரூபம், கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

    கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ம் ஆண்டு கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது, கோட்டார் ஆலயம் மறைமாவட்டப் பேராலயமாக உயர்த்தப்பட்டது. 1955-ம் ஆண்டு ஆலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டு, புனித ஆரோபண அன்னை ஆலயம் பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. பேராலய வளாகத்தின் வடக்குப்பகுதியில் லூர்து அன்னை கெபியும் அழகுறக் கட்டப்பட்டது.

    சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கோபுரம் கட்டப்பட்டு, அதன்மேல் சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. புனிதரின் இந்திய வருகையின் 450-வது ஆண்டு நினைவாக 1992-ம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு பேராலய திருப்பீடம் புதுப்பிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட புனித லூர்து அன்னை கெபி அர்ச்சிக்கப்பட்டது.

    இந்தநிலையில் சவேரியாரின் பேராலய விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 9-12-2016 அன்று தொடங்கியது. இந்தப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. எனவே இந்த ஆண்டு புனித சவேரியார் பேராலய திருவிழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதாவது புதுப்பொலிவூட்டப்பட்ட இந்த ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா (கடந்த 18-ந் தேதி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையால் அர்ச்சிப்பு செய்யப்பட்டது), பேராலய திருவிழா, சவேரியார் இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    புனித சவேரியாரின் பாதம் பதிந்த கோட்டார் பேராலயத்துக்கு வந்து செல்லும் ஏராளமானவர்கள் தங்கள் உடலில் உள்ள நோய்களில் இருந்து விடுதலை பெற்றுச் செல்வதாக நம்பிக்கை கொள்கிறார்கள். எனவேதான் இந்த ஆலயம் கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலயம் என மக்களால் அழைக்கப்படுகிறது.

    புனித சவேரியாருக்கு உலகில் எழுப்பப்பட்ட முதல் ஆலயம் இந்த ஆலயம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கோவாவுக்கு நிகராக சவேரியாரின் புகழ்பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தின் திருவிழா, அதாவது முப்பெரும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெறுகிறது.
    எந்த மனிதர்கள் தனது உள்ளம் என்ற மனக்கோவிலில் ஆன்மிக உயிரை செழுமையாக சேர்த்து வைத்தார்களோ அவர்களே இறப்புக்கு பின்பும் உயிர்ப்பார்கள்.
    கிறிஸ்தவர்கள் தவக்காலம் தொடங்கி விட்டது என்பதை அறிவார்கள். இயேசுவின் உயிர்ப்புக்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். தவக்காலம் உணர்த்தும் உண்மை செய்தி என்பது மனமாற்றம் ஆகும். நமது பேச்சில், செயலில், சிந்தனையில், பண்புகளில் மாற்றங்கள் மலர வேண்டிய காலமிது.

    மாங்காய் பச்சை நிறத்தில் இருக்கிறது. புளிப்பு சுவையுடன் இருக்கிறது. கடினத்தன்மையுடன் விளங்குகிறது. ஆனால் அது பழுத்து கனியாகும் போது மஞ்சள் நிறத்தினை அடைகிறது. கடினத்தன்மை மறைந்து இளகிய தன்மை அடைகிறது. புளிப்பு சுவை மறைந்து அனைவரும் விரும்பும் இனிப்புடன் கூடிய சுவையாக மாறுகிறது.

    மனிதர்களும் அவ்வாறே தவக்காலத்தில் கல்லான இதயத்தை மாற்றி கனிவுள்ள இதயத்தை பெறுகின்றனர். தங்களின் பண்புகளில் மாற்றம் அடைகின்றனர். இதுதான் நிறைவான மனமாற்றம். மாம்பழம் பழுத்தவுடன் மரத்திலிருந்து பறிக்கப்படுகிறது. அதனை உண்டபிறகு மாங்கொட்டையை குப்பையில் தூக்கி எரிந்து விடுகிறோம். அதுபோல மனிதர் வாழ்நாள் நிறைவு பெற்றவுடன் மரணத்தின் வழியாக உலக வாழ்வில் இருந்து துண்டிக்கப்படுகின்றனர். கல்லறையில் புதைக்கப்படுகின்றனர். புது வாழ்வுக்கு விதைக்கப்படுகின்றனர்.



    வாழ்வு முடிந்துவிட்டதென்று மாவிதை அழுவதில்லை. வருந்துவதில்லை. வாழும் போது விதைக்குள் பொதிந்து கடின ஓட்டிற்குள் தனது உயிர்சக்தியை கவனமாக வைத்திருந்து, மழை பெய்தவுடன் விதையிலிருந்து புதிய செடியாக முளைத்து பூமியை விட்டு வெளியே வருகிறது. அதாவது விதை மடியவில்லை. உயிர்த்து விட்டது.

    எந்த மனிதர்கள் தனது உள்ளம் என்ற மனக்கோவிலில் ஆன்மிக உயிரை செழுமையாக சேர்த்து வைத்தார்களோ அவர்களே இறப்புக்கு பின்பும் உயிர்ப்பார்கள். பிஞ்சான, பூச்சி அரித்த, முதிர்ச்சியடையாத விதைகள் முளைப்பதில்லை. அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகிறது. ஆனால் நல்ல விதைகள் மண்ணின் சத்தை உறிஞ்சி புதிய செடியாக முளைத்து மேலே வருகின்றன. எனவே, தீமைகள் நம்மை தின்று விடாமல் ஆன்மாவை காப்போம். அப்போது நாமும் உயிர்ப்போம்.

    இ.ஆனந்தன், வேதியர், கொசவபட்டி பங்கு.
    அன்பும், பரிவும், அயலவருக்கு உதவி செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர்தான், நிலையான வாழ்வை, உரிமை உடையதாக ஆக்கிக் கொள்ள முடியும்.
    திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசு பெருமகனாரைச் சோதிக்கும் பொருட்டு, ‘போதகரே! நிலையான வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்.

    அதற்கு இயேசு மறுமொழியாக, ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?’ என்று கேட்டார்.

    அதற்கு அந்த அறிஞர், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனதோடும், உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! உன் மீது நீ, அன்பு கூர்வது போல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று எழுதியுள்ளது’ என்றார்.

    அதற்கு இயேசு பிரான், ‘சரியாகச் சொன்னீர். அப்படியே செய்யும். அப்பொழுது வாழ்வீர்’ என்று கூறினார்.

    அறிஞர், தம்மை நேர்மையாளர் என்று காட்ட விரும்பினார். உடனே அடுத்த வினாவைத் தொடுக்கிறார்.

    ‘எனக்கு அடுத்து இருப்பவர் யார்?’ என்ற கேள்வியைக் கேட்கிறார்.

    இதைக் கேட்ட இயேசு பிரான், தமக்கே உரிய சிறப்போடு, உவமை ஒன்றைக் கூறுகிறார். (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், உவமைகள் வழியாக, அதிலும் எளிமையான உவமைகள் வழியாக, மக்களிடம் போதித்தவர் இயேசு பெருமகனார் ஆவார்.)

    இதோ அவர் கூறிய உவமை:

    “ஒருவர் எருசலேமில் இருந்து எரிகோ என்ற நகருக்குப் போனார். போகும்போது கள்வர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டார். அவருடைய ஆடைகளை, அவர்கள் உரிந்தனர். அவரை நையப் புடைத்தனர். குற்றுயிராக விட்டு விட்டு போய் விட்டனர். குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியே வந்தார். அவர், தாக்கப்பட்டவரைக் கண்டதும், மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும், அவ்விடத்திற்கு வந்து, அவரைக் கண்டார். அவரும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

    ஆனால், அவ்வழியாகப் பயணம் செய்த சமாரியர் ஒருவர், அவர் மீது பரிவு கொண்டார். அவரை அணுகினார். அவரது காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டினார். தாம் பயணம் மேற்கொண்ட விலங்கின் மீது அவரை ஏற்றினார். ஒரு சாவடிக்குக் கொண்டு சென்று, அவரைக் கவனித்துக் கொண்டார்.

    மறுநாள் இரண்டு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்தார். பின் சாவடிப் பொறுப்பாளரைப் பார்த்து, ‘இவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும். இதற்கு மேல் செலவானால், நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார். கள்வரின் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு பெருமகனார் கேட்டார்.

    அதற்கு, திருச்சட்ட அறிஞர், ‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’ என்றார். உடனே இயேசு பெருமான், அவரைப் பார்த்து, ‘நீரும் போய் அப்படியே செய்யும்’ என்று கூறினார்.

    புனித லூக்காவின் இந்நற்செய்தியை ஒருகணம் சிந்தித்து ஆராய்வோம்.



    மனித நேயத்தின் வெளிப்பாடு, இந்த நற்செய்தியில் எடுத்துரைக்கப்படுகிறது. ‘அயலான்’ என்பவன் யார்? இவ்விடத்தில் நாம் என்ன உணர்கிறோம்?

    ‘யாருக்கு உதவிக்கரம் தேவைப்படுகிறதோ, அவரே நமது அயலான்’ என்று, இந்த இடத்தில் நல்ல சமாரியனின் உவமை வழியாக இயேசு பெருமான் நமக்கு உணர்த்துகிறார்.

    அயலானை வெறுத்து விட்டு, ஆண்டவரை அன்பு செய்வதாகக் கூறுபவர்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாசகத்தில், ‘நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற வினாவைத் தொடுக்கிறார், திருச்சட்ட அறிஞர். அதற்கு அவரின் விடை, விடையாக வருவதற்கு முன், மீண்டும் வினாவாக வருகிறது. ‘திருச்சட்ட நூலில் என்ன எழுதி இருக்கிறது? என்ன வாசிக்கிறீர்?’ என்று கேட்டதும், அவர் திருச்சட்டத்தில் உள்ளதை அப்படியே கூறுகிறார்.

    முதலில் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக என்று சொல்லி விட்டு, அடுத்து வரும் வாசகத்தை நினைவில் ஏந்துவோம்.

    ‘உன் மீது, நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!’ என்று வருகிறது.

    எல்லோரும் அவரவரை வெறுப்பதில்லை. அவரவரும், அவரவர்கள் மீது அன்பு கொள்வது, இயல்பாக இருக்கக் கூடியது. அதைப்போல, அடுத்தவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.

    ‘தன்னைப்போல், பிறரையும் நேசி’ என்பதுதான், இயேசு பெருமானின் வாழ்க்கைத் தத்துவம்.

    இவ்விடத்தில் அயலான் யார்? என்ற வினாவுக்கு, ஓர் உவமையை, வெகு அழகாக எடுத்துக் கூறி, கேட்பவரிடமே, விடையைத் தேடுகிறார். தேடுகிறார் என்று சொல்வதை விட, தேட வைக்கிறார் என்பதுதான் சரியானது.

    அன்பு ஒன்றுதான், மனிதர்களை இணைக்கும். கருணை உள்ளம் மட்டும்தான், மனித குலத்தை நெறிப்படுத்தி வாழ வைக்கும்.

    இவ்விடத்தில், குரு ஒருவர் மேற்கொள்ளும் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? குற்றுயிராய்க் கிடப்பவரைப் பற்றிக் கவலை கொள்ளாத பயணமாக இருக்கிறது. லேவியர் ஒருவரின் பயணம் எப்படிப்பட்டதாக உள்ளது? குருவைப் போலவே கவலை கொள்ளாமல், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பயணமாக இருக்கிறது. சமாரியர் ஒருவரின் பயணம் எப்படி இருக்கிறது? அன்பைக் காட்டும் பயணமாக, பிறருக்கு, அதிலும் முக்கியமாக துன்பப்படும் ஒருவருக்கு, முற்றிலும் உதவிடும் செயல்பாட்டின் பயணமாக இருக்கிறது.

    இயேசு பெருமானின் அடிப்படைக் கருத்தே, மனித நேயம்தான் என்பதை நாம் உணர வேண்டும். இதில் இனம், ஊர், என்பதெல்லாம் தேவையற்ற ஒன்றாகி விடுகிறது.

    உதவி தேவைப்படும் ஒருவனுக்கு, உதவிக்கரம் நீட்டாமல், ஆண்டவரை அன்பு செய்கிறேன் என்று கூறுபவர்கள் பொய்யர்கள் என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

    அன்பும், பரிவும், அயலவருக்கு உதவி செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர்தான், நிலையான வாழ்வை, உரிமை உடையதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

    ‘உன் மீது அன்பு கூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்ற வாசகத்தை எண்ணி ஒவ்வொருவரும் வாழ்வார்களேயானால், மனித குலம் மாண்புடன் வாழும்; பகை ஒழியும். நிறை வாழ்வும், நிலைத்த வாழ்வும் நம்மைச் சேரும்.
    கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு வாய்ந்த 11 நாள் திருவிழா வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் முதன்மையான பேராலயமாகவும், கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமாகும்.

    புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும். சில ஆண்டுகளில் 11 நாள் திருவிழா நடைபெறுவதும் உண்டு. இந்த திருவிழாவில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு வரலாற்று சிறப்புகளோடு முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதாவது புதுப்பொலிவூட்டப்பட்ட பேராலயத்தின் அர்ச்சிப்பு விழா, புனித சவேரியார் இந்திய வருகை 475-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    பேராலய பொலிவூட்டல் அர்ச்சிப்பு விழா சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையால் மந்திரித்து அர்ச்சிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். திருப்பலி முடிந்தவுடன் அனைவருக்கும் அன்பின் உணவு விருந்து வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 11 நாள் பேராலய திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 9-ம் நாள் திருவிழாவான வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ஓய்வுபெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கும் தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது.

    11-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் பேராலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்துவார்கள். மாதா தேர்களுக்கு பின்னால் கும்பிடுபோட்டு தரையில் விழுந்து வணங்குவார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டாறு வட்டார முதல்வர் அருட்பணி மைக்கிள் ஆஞ்சலுஸ், பேராலய பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை சகாய ஆனந்த் மற்றும் அருட்சகோதரிகள், பேராலய அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    ×