என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு வாய்ந்த 11 நாள் திருவிழா
    X

    கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு வாய்ந்த 11 நாள் திருவிழா

    கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு வாய்ந்த 11 நாள் திருவிழா வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் முதன்மையான பேராலயமாகவும், கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமாகும்.

    புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும். சில ஆண்டுகளில் 11 நாள் திருவிழா நடைபெறுவதும் உண்டு. இந்த திருவிழாவில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு வரலாற்று சிறப்புகளோடு முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதாவது புதுப்பொலிவூட்டப்பட்ட பேராலயத்தின் அர்ச்சிப்பு விழா, புனித சவேரியார் இந்திய வருகை 475-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    பேராலய பொலிவூட்டல் அர்ச்சிப்பு விழா சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையால் மந்திரித்து அர்ச்சிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும். திருப்பலி முடிந்தவுடன் அனைவருக்கும் அன்பின் உணவு விருந்து வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 11 நாள் பேராலய திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி கிலேரியஸ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 9-ம் நாள் திருவிழாவான வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ஓய்வுபெற்ற ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அன்று இரவு 10.30 மணிக்கும் தேர்ப்பவனி நடைபெறும். 11-ம் நாள் திருவிழாவான 4-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது.

    11-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் பேராலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்துவார்கள். மாதா தேர்களுக்கு பின்னால் கும்பிடுபோட்டு தரையில் விழுந்து வணங்குவார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டாறு வட்டார முதல்வர் அருட்பணி மைக்கிள் ஆஞ்சலுஸ், பேராலய பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை சகாய ஆனந்த் மற்றும் அருட்சகோதரிகள், பேராலய அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×