என் மலர்
ஆன்மிகம்

பிறரிடம் குற்றம் காணாதீர்கள்
கஷ்டம் மிகுந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டுமென்று இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவ்வாறு கூறுகிறார்.
வாழ்க்கை வட்டமா? செவ்வகமா? என்று தெரியவில்லை. ஆனால் அது கஷ்டம் என்று மட்டும் தெரிகிறது. இதுபோன்ற கஷ்டம் மிகுந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டுமென்று இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவ்வாறு கூறுகிறார். “பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடாதீர்கள்” (லூக்கா 6:37) பிறர் மீது குற்றம் கண்டுபிடிக்கவோ, பிறரை தீர்ப்பிடவோ பெரிய ஞானம் தேவையில்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை அறிவே போதுமானது.
ஆண்டுதோறும் தவக்காலத்தில் ஆன்மிக, தெய்வீக வாழ்வு வாழ வேண்டும் என இயேசு கூறுகிறார். பணம், பட்டம், ஆடம்பரம், தற்பெருமை என வாழ்ந்து வரும் இன்றைய சூழலில் இத்தகைய ஆன்மிக வாழ்வு சிறப்பானது, அற்புதமானது. அந்த வாழ்வு ஒருவரை ஒருவர் சகோதர, சகோதரியாக வாழ வைக்கிறது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் தங்கினாலும் காலையில் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசை நோக்கி பறந்து செல்கிறது. மனிதர்களும் அதுபோல தான். காலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கி அவரவர் பணிக்காக செல்கிறோம். பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடாதீர்கள் என்னும் நற்செய்தி வாசகத்தை ஒவ்வொருவரும், அவரவர் உள்ளத்தில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது. ஒரு சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை அகற்றுகிறது. பெரிய மலை, சிறிய உளியால் உடைக்கப்படுகிறது. அதுபோன்று உங்களது உள்ளத்தில் நிலைநிறுத்திக்கொள்ளும் இயேசுவின் இந்த சிறிய வாசகம் பல ஆயிரம் மக்களை மன்னிக்கும். அதனால் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும்.
யானையிடமிருந்து ஆயிரம் அடி தூரமும், குதிரையிடமிருந்து நூறு அடி தூரமும், கொம்பு உள்ள மிருகத்திடமிருந்து பத்து அடி தூரமும் விலகியிருங்கள். உங்களிடமிருந்து மற்றவர்கள் விலகியிருக்க வேண்டுமா? அல்லது பயமில்லாமல் அருகில் வரவேண்டுமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
அருட்திரு. ஆர்.மரியலூயிஸ், குடும்பநல வாழ்வு பணிக்குழு, திண்டுக்கல்.
Next Story






