என் மலர்
சினிமா செய்திகள்
- 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.
- இப்படம் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் இன்று (ஜூன் 28) திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் டோனி 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை, ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.
- நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
- இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் அவருடன் மோகன்லால், தமன்னா, சிபிராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'ஜெயிலர்' பட பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது.

இதைத்தொடர்ந்து மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' படத்திலும் ரஜினி நடித்திருந்தார். அதன் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சில நாட்களில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினி இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பயணத்தை தவிர்த்து வந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு வெளியான காலா, 2.0 ஆகிய படப்பிடிப்புக்கு பின்பு இமயமலை சென்ற ரஜினி கடந்த 2 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை.

தற்போது மீண்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இமயமலை செல்கிறார். அங்கு 1 வாரம் தங்கியிருந்து பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். அதற்கு முன்பு 'ஜெயிலர்' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
- நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷாலிடம் நயன்தாரா பட புரொமோஷன்களில் கலந்து கொள்ளாதது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "நயன்தாரா எந்த பட புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார், அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகனும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு இஷ்டமில்லை என சொல்லுபோது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வந்தால் நல்லாயிருக்கும் படத்தின் புரோமோஷன்களில் நடிகர்கள் பங்கேற்பது தப்பே இல்லை" என்று பேசினார்.
- நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
- இவர் நடித்த பல படங்கள் தோல்வியையும் சந்தித்தது.
தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சீவியுடன் நடித்த 'ஆச்சார்யா' படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் சரிவை சந்தித்து வருவதால் அவரை முன்னணி கதாநாயகர்கள் ஓரம் கட்டுகிறார்கள் என்றும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றை அவரது குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நடிகர் விஷால் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
- இவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான் என்று கூறினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் நேற்று (27-07-2023) இந்திய குடியரசு தலைவரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷாலிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அரசியல் என்பது சமூக சேவை, வியாபாரம் கிடையாது. நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வருவது புதுசு கிடையாது. அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும் போது, நடிகர்கள் அரசியல்வாதிகளாவது தப்பு கிடையாது. எல்லா அரசியல்வாதிகளும் சாதி, மதம், எல்லாமே பார்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது மேற்கொண்டு நல்லது பண்ணலாம் என்கிற எண்ணத்தில் தான்.

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளம், போதைப்பொருள், மது ஆகியவற்றிற்கு மாணவர்கள் அடிமையாகிவிட்டார்கள். இதை தவிர்த்து ஆரோக்கியமான வழியில் அவர்களது வாழ்க்கையை கொண்டு சேர்த்தார்கள் என்றால் அவர்கள் மூலம் ஒரு பத்து பேர் பயன்படுவார்கள்.
போதைப்பொருள் பயன்பாடு என்பது கொரோனாவிற்கு பின்னிருந்து அதிகரித்துள்ளது. அதை தடுப்பதற்கான வழிகளில் இறங்கியுள்ளோம். போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஏற்படும் சிறிய சந்தோஷத்திற்காக மக்கள் பலியாகின்றனர். ஒரு நல்ல விஷயத்திற்காக சமூக வலைதளத்தை பயன்படுத்துவது நல்லது" என்று கூறினார்.
- தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், டீசர் வெளியான 45 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
- தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இதனை தனுஷ் இயக்கி நடிப்பதாகவும் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 51வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 'ப்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியது வைரலானது.
- இதற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும் நடிகருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை சமுத்திரக்கனி 'ப்ரோ' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசும் போது, தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புது விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் கூறி இருந்தார்.
பவன் கல்யாணின் இந்த பேச்சு வைரலான நிலையில், அதற்கு பதிலளித்து நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.

இப்போ நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றக்கூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள். தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக்க ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருக்கின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்" என கூறி உள்ளார்.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 28-ஆம் தேதி) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை குழு அளித்த சான்று குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்று அளித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
- இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் நாளை (ஜூன் 28) வெளியாகவுள்ளது.
இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் நாளை (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'கலாட்டாக்காரன்' பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
- யுவன் சங்கர் ராஜா தற்போது தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
- இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பல இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது..
புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே இயக்குனர் எம்.ஆர்.மாதவன் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.






