என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டீசர் நாளை (ஜூலை 28ம் தேதி) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.



    • நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2989 ஏடி' திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் அறிமுக விழா அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது.

    நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் லோலா விஎஃப்எக்ஸுடன் உருவாகி வருகிறது. இந்தியன் -2 திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து சிம்பு நடிக்கும் 48-வது படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.


    சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2989 ஏடி' படத்தின் அறிமுக விழாவிற்காக அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தனது நாற்பது வருட கால நண்பரும் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞருமான மைக் வெஸ்ட்மோரையும் சந்தித்து உரையாடினார்.


    இந்நிலையில், தற்போது கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஆஸ்கர் மியூசியத்தை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது. 


    • இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.


    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

    இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த 'வீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.




    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.


    'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தில் வடிவேலுவின் லைவ் டப்பிங் பணியின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • 'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    • பின்னர் கால்ஷீட் தருவதில் அமீஷா படேல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

    'தேசிமேஜிக்' படத்தில் நடிப்பதற்காக நடிகை அமீஷா படேலுக்கு ரூ.2.5 கோடி பேசப்பட்டு அதற்கான பணத்தை தயாரிப்பாளர் அஜய்குமார்சிங் வழங்கினார். ஆனால் நடிகை அமீஷா படேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் கால்ஷீட் தருவதில் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.


    இதைத்தொட்ந்து அஜய்குமார் சிங் தான் நடிப்பதற்காக கொடுத்த பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்க அமீஷா படேல் அதற்காக காசோலை வழங்கி உள்ளார். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் அஜய் குமார்சிங் மற்றும் மானேஜர் திங்குசிங் இருவரும் நடிகை அமீஷா படேல் மீது ராஞ்சி கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.


    இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்ற போது நடிகை அமீஷா படேல் தரப்பு வக்கீல் குறிப்பிட்ட நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாததால் கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக நடிகை அமீஷா படேலுக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சுக்லா ரூ.500 அபராதம் விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    • ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதையடுத்து காவாலா பாடலின் இந்தி வெர்ஷனான "தூ ஆ தில்பரா" பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'வெப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது.


    இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் 'வெப்' படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர்.


    இயக்குனர் ஹாரூண் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பலபேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப் என்று கூறினார்.


    மேலும், இயக்குனர் ஹாரூண் பேசும்போது, பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலதான் தயாரிப்பாளர்களும் கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.

    • பாடகி சித்ரா பல மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
    • முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

    சினிமா துறையில் பல பாடகர்கள் தங்களின் குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பாடகி சின்னக்குயில் சித்ரா.

    சின்னக்குயில், மெலோடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர், இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார்.


    இவர் தனது இளம் வயதிலேயே பாடல்களை மனதில் வைத்து வசீகரிக்கும் குரலில் தத்ரூபமாக பாடினார். முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

    பாடகி சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பில் முதுகலை பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர்.


    பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதா கிருஷ்ணன் தனது படங்களிலும், தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார். அங்கு தான் அவரின் இசை பயணமும் ஆரம்பித்தது. 1980-ம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார் சித்ரா.

    மலையாளத்தில் பாசில் இயக்கிய படம் தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பாடிய சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரை தமிழில் அறிமுகம் செய்தார். ஆனால் 'நீ தானா அந்தக் குயில்' படத்தில் இடம் பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் ஆகும்.


    அதற்குள் 'பூவே பூச்சுடவா' படத்தில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. அதில் இடம் பெற்ற 'சின்னக்குயில்' என்ற வார்த்தையே சித்ராவின் அடையாளமாக மாறியது.

    1985-ம் ஆண்டில் இளையராஜா இசையில் 'கீதாஞ்சலி' திரைப்படத்தில் சித்ரா பாடிய 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக் குயில் இசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது' ஆகிய பாடல்கள் புகழ்பெற்றன. ஜானகி, பி.சுசீலா ஆகியோர் வரிசையில் சித்ரா தனக்கென தனியிடம் பிடித்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா இணை பாடிய பாடல்களை விட, மனோ-சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு குரல் பொருத்தம் இருவருக்குள்ளும் இருந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அவரை பாட வைக்காத இசையமைப்பாளர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இசை அமைப்பாளர்களின் பாடல்களிலும் சித்ரா பாடினார்.


    அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது என்றால் மிகையாகாது.

    இதேபோல் மலையாளத்தில் 2006-ம் ஆண்டு வெளியான வடக்கும்நாதன், நந்தனம், தேவராகம், ஞன் கந்தர்வன், சமயம் உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. தமிழில் அவர் பாடிய பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.


    தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில் இடம் பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' பாடல்களுக்கு சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. மேலும் 'மின்சார கனவு', 'ஆட்டோகிராப்' படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சித்ரா உள்ளார். இதேபோல் மலையாளத்திலும் பல பாடல்கள் அவருக்கு விருதை வாங்கி தந்தன.

    அதேசமயம் பிலிம்பேர், மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி எண்ணற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள சித்ராவின் பங்களிப்பு, எப்படி குயிலின் குரல் எந்த காலக்கட்டத்திலும் சலிக்காதோ, அதே மாதிரி ரசிகர்களால் மறக்க முடியாது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தன் இசையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்திற்கு ஏ.ஆர்.இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் தான் மதம் மாறியது குறித்து பேசியுள்ளார். அதில், "என் அப்பா கடைசி காலத்தில் போராடிக் கொண்டிருந்த போது பல குருக்களை சந்தித்தோம். கடைசியாக சூஃபி ஆன்மிக குருவை சந்தித்தோம். அப்போது அவர் பத்து வருடங்களுக்கு பின் நீ மீண்டு வருவாய் என்று கூறினார்.


    பத்து வருடங்களுக்கு பின் ஒருநாள் ஸ்டூடியோவில் இருந்து உபகரணங்களை எடுத்து செல்லும் போது சுங்கவரித் துறை அதிகாரிகள் எங்களிடம் கடும் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த மதகுருவின் மாணவர் ஒருவர் எங்களுக்கு உதவினார். தொடர்ந்து நாங்கள் மீண்டும் அந்த சூஃபியை சந்திக்க சென்றோம். அவர் என்னுடைய ஸ்டூடியோவை ஆசீர்வதித்தார். பின்னர் வாழ்க்கையில் எல்லாம் மாற ஆரம்பித்தது.

    யாருமே நீங்கள் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எங்களிடம் சொல்லவில்லை. நாங்களாக தான் இந்த நம்பிக்கையை கடைபிடித்தோம். நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியபோது எந்தவித சமூகம் சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். குறிப்பாக தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்; அனைவரையும் அரவணைத்து 'வாழு வாழ விடு' என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது என நினைக்கிறேன்" என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை தமன்னா பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.


    இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது உலகின் 5-வது பெரிய வைரம் என்றும் 'சைரா நரசிம்மா ரெட்டி' திரைப்படத்தில் தமன்னாவின் நடிப்பை பார்த்து வியந்த நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா இதை நடிகை தமன்னாவிற்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் பரவி வந்தது. மேலும், இதன் மதிப்பு ரூ.2 கோடி என்றும் கூறப்பட்டது.


    தமன்னா பதிவு

    இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், "இது வெறும் 'பாட்டில் ஓபனர்'தான், வைரம் இல்லை" என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.


    இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாலா(26) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கியதில் 15அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் வருகிற ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.


    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.


    கிங் ஆஃப் கோதா போஸ்டர்

    இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் நாளை (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    ×