search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா.. பாடகி சித்ரா பிறந்தநாள் இன்று
    X

    'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா..' பாடகி சித்ரா பிறந்தநாள் இன்று

    • பாடகி சித்ரா பல மொழி படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
    • முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

    சினிமா துறையில் பல பாடகர்கள் தங்களின் குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் பாடகி சின்னக்குயில் சித்ரா.

    சின்னக்குயில், மெலோடி குயின், நைட்டிங்கேல், வானம்பாடி, சங்கீத சரஸ்வதி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவர், இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார்.


    இவர் தனது இளம் வயதிலேயே பாடல்களை மனதில் வைத்து வசீகரிக்கும் குரலில் தத்ரூபமாக பாடினார். முதன் முதலாக தன்னுடைய 5-வது வயதில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.

    பாடகி சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பில் முதுகலை பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர்.


    பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதா கிருஷ்ணன் தனது படங்களிலும், தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார். அங்கு தான் அவரின் இசை பயணமும் ஆரம்பித்தது. 1980-ம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார் சித்ரா.

    மலையாளத்தில் பாசில் இயக்கிய படம் தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பாடிய சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரை தமிழில் அறிமுகம் செய்தார். ஆனால் 'நீ தானா அந்தக் குயில்' படத்தில் இடம் பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் ஆகும்.


    அதற்குள் 'பூவே பூச்சுடவா' படத்தில் 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. அதில் இடம் பெற்ற 'சின்னக்குயில்' என்ற வார்த்தையே சித்ராவின் அடையாளமாக மாறியது.

    1985-ம் ஆண்டில் இளையராஜா இசையில் 'கீதாஞ்சலி' திரைப்படத்தில் சித்ரா பாடிய 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக் குயில் இசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது' ஆகிய பாடல்கள் புகழ்பெற்றன. ஜானகி, பி.சுசீலா ஆகியோர் வரிசையில் சித்ரா தனக்கென தனியிடம் பிடித்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா இணை பாடிய பாடல்களை விட, மனோ-சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு குரல் பொருத்தம் இருவருக்குள்ளும் இருந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அவரை பாட வைக்காத இசையமைப்பாளர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இசை அமைப்பாளர்களின் பாடல்களிலும் சித்ரா பாடினார்.


    அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது என்றால் மிகையாகாது.

    இதேபோல் மலையாளத்தில் 2006-ம் ஆண்டு வெளியான வடக்கும்நாதன், நந்தனம், தேவராகம், ஞன் கந்தர்வன், சமயம் உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. தமிழில் அவர் பாடிய பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.


    தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில் இடம் பெற்ற "பாடறியேன் படிப்பறியேன்', 'நானொரு சிந்து' பாடல்களுக்கு சித்ராவுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. மேலும் 'மின்சார கனவு', 'ஆட்டோகிராப்' படங்களுக்கும் தேசிய விருது பெற்று இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சித்ரா உள்ளார். இதேபோல் மலையாளத்திலும் பல பாடல்கள் அவருக்கு விருதை வாங்கி தந்தன.

    அதேசமயம் பிலிம்பேர், மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி எண்ணற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள சித்ராவின் பங்களிப்பு, எப்படி குயிலின் குரல் எந்த காலக்கட்டத்திலும் சலிக்காதோ, அதே மாதிரி ரசிகர்களால் மறக்க முடியாது.

    Next Story
    ×