என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி அடுத்ததாக முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
    கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் 'தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி' சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் யோகிபாபு, ராமர் ஆகியோரும் நடிக்கின்றனர். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

    இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ்

    அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா - பிளையர்ஸ் மற்றும் ஷெரிப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.
    டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
    ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

    கொரில்லா படக்குழு

    இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தில் குரங்கு ஒன்று நடித்துள்ளது. படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக சதீஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
    அனுஷ்கா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் பிரபல நடிகை நடிக்க ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    அட்டகாசம் செய்யும் பேயை அடக்கும் அம்மன் கதையான அருந்ததி படத்தில் அருந்ததி வேடம் ஏற்று அசரவைத்தவர் அனுஷ்கா. அதன்பிறகு பாகுபலி, பாகமதி படங்களில் மீண்டும் அசத்தினார்.

    இந்நிலையில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. அவர் நடித்த அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய பட தரப்பு முடிவு செய்து பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேசி வருகின்றனர்.

    இவர் தமிழில் ஏஞ்சல் படத்தில் நடிப்பதுடன் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் பாடல் காட்சியில் நடிக்கிறார். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் பாயல் நடிக்கிறார் என்று தகவல்கள் பரவிவரும் நிலையில் அதற்கு அனுஷ்கா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாயல் ராஜ்புத்

    அனுஷ்கா நடித்த அருந்ததி பாத்திரத்தில் வேறு நடிகையை யோசித்துக்கூட பார்க்க முடிய வில்லை. ஆர்.எக்ஸ்.100 படத்தில் நடித்து பிரபலமான பாயல் ராஜ்புத் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அருந்ததி 2ம் பாகம் எடுத்தால் அதில் அனுஷ்காவையே நடிக்க வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். 
    விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் திருமண செய்திகளால் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    சினிமாவுக்கு சின்ன இடைவெளிவிட்டு இருந்த சுருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி ஜோடியாக ’லாபம்’ படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது என்னை பாதிப்பது இல்லை. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு அது பெரிதாக தெரியவில்லை. 

    சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் சுருதிக்கு திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். அப்பொழுது எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. 

    சுருதிஹாசன்

    எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை. ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். பாலிவுட்டில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான சௌந்தரராஜா, அடுத்ததாக 'விசாரம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
    சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா.

    எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர். 

    சௌந்தரராஜா

    இவர் அடுத்ததாக 'விசாரம்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. 

    மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்திலும், விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
    பாரதிராஜா ராஜினாமா செய்ததையடுத்து இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு வரும் 21-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இயக்குனர்கள் சங்கத்தின் 99-வது பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இயக்குனர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். 

    இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஜூலை 14-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 21-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பாரதிராஜா திடீரென தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

    பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சங்கத்துக்குள் எதிர்ப்புகள் எழுந்தன. இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்டோர் இதை விமர்சித்திருந்தனர். இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் சங்க பொதுக்குழுவுக்கு பெரும்பாலும் வராதவர் பாரதிராஜா என விமர்சித்தார்.

    பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன், அமீர்

    அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒதுங்கி இருக்க போவதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. 

    இயக்குனர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 4 முனை போட்டி நிலவுவதால் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கிவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. "நாநா" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பாரதிராஜாநடிக்கின்றனர்.

    நாநா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

    பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்த சந்தீப் கிஷன், தன் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்ததால் பயந்து வெளிநாட்டுக்கு ஓடியதாக கூறியுள்ளார்.
    தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடிக்கிறார்.  

    சந்தீப் கிஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள கண்ணாடி திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.  இது குறித்த அவர்  கூறியதாவது: “சினிமாதான் எனக்கு மூச்சு. தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஆசைப்பட்டேன். தெலுங்கில் ரகுல்பிரீத் சிங்குடன் நடித்த வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் வெற்றி பெற்றது. அந்த படத்துக்குப்பின் பெரிய நடிகர்கள் பட்டியலில் இடம்பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. 2 வருடங்களாக நடிக்கவில்லை.

    சந்தீப் கிஷன்

    படங்கள் தோல்வியால் வாய்ப்புகள் வரவில்லை. தோல்விக்கு நான்தான் காரணம் என்று பழிசுமத்தினர். மனதில் எவ்வளவோ வலிகள் ஏற்பட்டன. ஆனாலும் அவற்றை கடந்து சென்றேன். இதுவரை 14 படங்களுக்கு சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்து இருக்கிறேன். அந்த படங்களின் கதைகள் பிடித்ததால் பணம் வாங்காமல் நடித்தேன்.

    படம் வெற்றி பெற்றதும் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அவற்றில் பாதிக்கு மேல் படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் அவர்கள் பணம் தரவில்லை. வெற்றி பெற்ற படங்களுக்கும் சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டனர். படங்கள் தோல்வி அடைந்ததும் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்டேன். திரும்பி வந்ததும் மீண்டும் பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க ஆரம்பித்துள்ளேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
    கே.பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாடலாசிரியர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
    கே. பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய கே.பி. 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது: ‘ஒரு இசை அமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணி யாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசை அமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .

    அந்த ஏழு ஆண்டு களில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை. அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர். பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. 

    கே.பி. 90 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்

    மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட். திலீப்தான் ஏ ஆர் ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா, மீட்டெடுத்தவர் பாலச்சந்தர். புன்னகை மன்னன் படத்தில், என்ன சத்தம் இந்த நேரம், பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு, என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில்நுட்ப மேதை அவர். 

    பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும்’’

    இவ்வாறு அவர் பேசினார்.
    ரஜினிகாந்த் சினிமாவை பற்றி அறியாமல் உச்சத்துக்கு வந்தவர் என சுகாசினி தெரிவித்துள்ளார்.
    மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் வசந்த், நடிகர்கள் பார்த்திபன், ரகுமான், நடிகை சுகாசினி, இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்பட பலர் கல்ந்துகொண்டனர்.

    இந்த விழாவில் சுகாசினி பேசுகையில், “கமல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடந்தது. அப்போது ரஜினி அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் இருந்து கலாகேந்த்ராவின் காரில் தான் வருவார். படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே சிகரெட் பிடித்தபடி நிற்பார். 

    ரஜினி

    யாரிடமும் அதிகம் பேசமாட்டார். கொஞ்சம் பயப்படுவார். உதவி இயக்குனர் மேலே பார் என்றால் கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இப்படி சினிமா பற்றி தெரியாமல் வந்த ரஜினி தான் மாபெரும் உச்சத்துக்கு சென்றார். இப்படி சினிமா தெரியாதவர்களுக்கு பள்ளியாகவும் கல்லூரி யாகவும் விளங்கியவர் பாலச்சந்தர். அவர் திரைக் கலைஞர்களுக்கு எல்லாவித நவரசங்களையும் கொடுத்தவர்’.

    இவ்வாறு சுகாசினி பேசினார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடனான காதல் சர்ச்சை குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
    மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

    இவரும் பும்ராவும் காதலர்களாக வலம் வருவதாக கூறப்படும் நிலையில், டுவிட்டரில் இருவரும் ஒருவர் பதிவுக்கு மற்றவர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பும்ரா தனது நண்பர் என அனுபமா கூறியுள்ளார்.

    அனுபமா பரமேஸ்வரன், பும்ரா

    இதுகுறித்து பேசியுள்ள அனுபமா, ’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். காதலர்கள் அல்ல’ என்று தெரிவித்துள்ளார். பும்ரா நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்படுவது இதுமுதன்முறை அல்ல. தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம் வரும் ராசி கண்ணாவும் அவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அப்போது ராசி கண்ணா, “அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை கடந்து வேறெதுவும் தெரியாது” என்று தெரிவித்திருந்தார்.
    தீரஜ், பிரதாயினி, துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் முன்னோட்டம்.
    ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.

    தீரஜ், துஷாரா

    ’போதை ஏறி புத்தி மாறி' திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட, சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் திரைப்படம். ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
    ×