என் மலர்
சினிமா செய்திகள்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இரவு நேர பார்ட்டியில் பாடல் அமையும் என்பதை வீடியோவில் இடம்பெற்றுள்ள படங்கள் உறுதிபடுத்துகின்றன. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். வித்யா பாலன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருடன் மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை வசனத்தை 'படை வீரன்' பட இயக்குநர் தானா மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்துக்கு இசையமைக்க ‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். தொடர்ந்து அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள சித் ஸ்ரீராமுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளது.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது. https://t.co/4RAADdGYhn
— Seenu Ramasamy (@seenuramasamy) 9 July 2019
இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது" என பதிவிட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது.
சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இப்படம் வருகிற 26-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.
தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
'அடங்கமறு' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று இப்படம் திரைக்கு வருகிறது.
நடிகை இனியா விரைவில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.
சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார்.
இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறேன்’
இவ்வாறு அவர் கூறினார்.
சினிமா அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
களவாணி-2 படத்தில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக ஓவியா நடித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா?
சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.
அரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா?
இல்லவே இல்லை. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.

ஒரே மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டவேண்டும். 90 எம்.எல்., காஞ்சனா, களவாணி 2 இந்த 3 படங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா? அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறேன். மலையாள படம் ஒன்றும் தயாராகி விட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரும் உங்களை காப்பியடிக்க முயற்சிக்கிறார்களே?
நான் கலந்துகொண்டது பிக்பாஸ் முதல் பாகத்தில். அப்போது எந்த ஐடியாவும் இல்லாமல் சென்றேன். வெளியில் என்ன நடந்தது என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு என்ன தோன்றியதோ அதை செய்தேன். சுதந்திரமாக இருந்தேன்.
அதனால் மக்களுக்கு பிடித்து போனது. இப்போது அப்படி இல்லை. என்னை காப்பி அடிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பதிலாக இயல்பாக இருந்தாலே போதும். எனக்கு எதிரிகளோ நண்பர்களோ கிடையாது. எதிரி என்று யார் இருந்தாலும் உடனே நண்பராக்கி கொள்வேன்.
இரவு விருந்துக்கு சென்றிருந்த போது ஓட்டல் ஓனர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பேபி, ரஸ்தம் உள்பட பல இந்தி படங்களில் நாயகியாக நடித்தவர் இஷா குப்தா. தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இஷா குப்தா தனது தோழிகளுடன் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இரவு விருந்து சாப்பிட சென்றார். அவர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஓட்டல் உரிமையாளர் ரோகித் விக் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார்.
ரோகித்தின் செயலால் இஷா கோபம் அடைந்துள்ளார். இது குறித்து இஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் ஒருவர் என்னை தன் கண்களால் பலாத்காரம் செய்தார். ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு இரண்டு, மூன்று முறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து என்னுடைய 2 பாதுகாவலர்களும் என்னை சுற்றி நிற்க வேண்டியதாகி விட்டது.

ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவே இதற்கு சாட்சி. அந்த நபரின் பெயரை கண்டுபிடித்து கூறுங்கள். இவ்வாறு இஷா கோரிக்கை விடுத்தார். இஷாவை கண்களால் பலாத்காரம் செய்த நபரின் பெயர் ரோகித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து இஷா ரோகித்தின் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அவரை மீண்டும் விளாசி உள்ளார். ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொரில்லா' படத்தின் முன்னோட்டம்.
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.

ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே படத்தின் கதை.
இயக்குனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கரு.பழனியப்பன் இது இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 99வது பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற பதவிகளுக்கான தேர்தல் வரும் 14-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
பாரதிராஜா திடீர் என்று தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். அவர் நெருக்கடிக்கு ஆளானதால் தான் ராஜினாமா செய்தார் என்று தகவல் பரவியது. பின்னர் தேர்தல் 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆலோசிக்க இயக்குனர் சங்கத்தின் 100-வது சிறப்பு பொது குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தற்போதைய தலைவர் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, எஸ்பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். கரு.பழனியப்பன் பாரதிராஜா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசும்போது, ‘இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்’என்றார்.
மேலும் கரு.பழனியப்பன் பேசும்போது, இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என்று கேட்டதுடன் இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ரகளை ஆனதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்ந்து நடைபெற்றது.
விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வெண்ணிலா கபடி குழு 2' படத்தில் நிஜ கபடி வீரர்கள் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு கபடி போட்டியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் சுசீந்திரனின் மூலக்கதையில் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகி இருக்கிறது. சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொளி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ரூபமாக படமாக்கி உள்ளனர். வருகிற 12-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
நடிகை இனியாவின் வீடியோ இசை ஆல்பத்தை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ’யு1’ ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.
நடிப்பை போல் இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. தற்போது 'மியா' என்கிற வீடியோ இசை ஆல்பத்தை தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான ’டிவோ’ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ’யு1’ ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.

இதுபற்றி இனியா கூறும்போது, “ முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்” என அவர் கூறினார்.






