என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராகி விட்ட விஜய் தேவரகொண்டா நோட்டா படத்தை தொடர்ந்து தமிழில் டியர் காம்ரேட் படம் மூலம் களம் இறங்குகிறார். இந்த பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் அளித்த பேட்டி:

    தமிழ் படத்தில் நடிக்க நிறைய கதைகள் கேட்டேன். தமிழை முழுமையாக கற்றுக்கொள்ளாமல் நேரடியான தமிழ் படத்தில் எப்படி நடிப்பது? நோட்டா படத்தில் நடிக்கும்போதே அடுத்த நாள் படப்பிடிப்புக்கான வசனங்களை முதல் நாளே வாங்கி சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன்.

    விஜய் சேதுபதி

    ஆமாம். நீங்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டால் உங்களுக்கு மகிழ்ச்சியாக தானே இருக்கும். அப்படித்தான் இருக்கிறது. பணம், பின்புலம் எதுவுமே இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். இன்று எனது ரசிகர்களால் தான் அனைத்துமே கிடைத்துள்ளது. இப்போது அதற்கு எல்லாம் நேரமே இல்லை. சினிமாவில் நடிப்பதற்கே நேரம் போதவில்லை.

    தமிழில் மணிரத்னம், ‌ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த பின்னர் அவரது ரசிகனாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
    விமலுடன் தான் இணைந்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதாக இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது. 

    இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் சற்குணம் பேசியதாவது: “களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம்.. ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள். 

    களவாணி 2 படக்குழு

    எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா, விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை.” என கூறினார்.
    உள்ளூர் குறும்படங்கள் முதல் உலக குறும்படங்கள் வரை இலவசமாக பார்க்க வசதியாக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    சினிமாவுக்குள் நுழைவதற்கான அடையாளமாக குறும்படங்கள் பார்க்கப்படுகின்றன. குறும்படங்களை வெளியுலகத்துக்கு கொண்டு வர ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறும்பட குழுவினர் இந்த செயலியில் தங்கள் படங்களை பதிவேற்றலாம். தகுதி பெறும் படங்கள் செயலியில் வெளியாகும்.

    குறும்பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்

    அந்த படங்களில் சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. மார்ச் மாதம், முதல் திரையிடலும் சமீபத்தில் இரண்டாம் திரையிடலும் நடந்து இருக்கிறது. முதல் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சிறுத்தை சிவாவும் இரண்டாம் திரையிடலில் இயக்குனர்கள் அமீர், விஜய் மில்டன், மனோஜ் பாரதி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
    16 வயதினிலே, முதல் மரியாதை உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜாவின் பிறந்தநாள் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை உள்பட பல படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவை கிராமங்களுக்குள் எடுத்து சென்றவர்.

    இவரது பிறந்தநாள் இன்று என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காலை முதலே அவரை வாழ்த்தி பதிவிட்டு வந்தனர். சிலரோ ஆகஸ்டு 23-ந் தேதி தான் பாரதிராஜாவின் அசல் பிறந்தநாள் என்று பதிவிட்டனர்.

    பாரதிராஜா

    இதுகுறித்து பாரதிராஜா தரப்பில் கேட்டபோது, இன்று 16 வயதினிலே படம் சென்சார் சான்றிதழ் வாங்கிய நாள். இதையே பிறந்தநாளாக பல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனருக்கு ஆகஸ்டு 23 தான் உண்மையான பிறந்தநாள் என்று விளக்கம் அளித்தார்கள்.
    சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே 'ஓ பேபி'. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார்.

    ஒரு நாள் போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும் மந்திர சக்தி மூலம் 24 வயது இளம் பெண்ணாக மாறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரசியமாகவும் நகைச்சுவையுடனும் கூறும் படமே 'ஓ பேபி'. வயதான தோற்றத்தில் பழம்பெறும் நடிகை லட்சுமியும், இளமையான தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

    சமந்தா

    வரவேற்பை பெற்றுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ் என இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சீனாவிலும் 'ஓ பேபி' படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சமந்தாவின் நடிப்பிற்காகவும், இந்திய கதை சொல்லும் முறையை பார்ப்பதற்காகவும் சீன ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனாலேயே ஒரு சீன விநியோக நிறுவனம் 'ஓ பேபி' படத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது’ என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால், காதலன் தான் தன் வாழ்வின் உண்மை என கூறியுள்ளார்.
    ‘மைனா’ படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து இரு வரும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்தி வந்தனர். விஜய் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார். இந்நிலையில் அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் வரும் 19-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு நடிகை அமலா பால் பேட்டியளித்து வருகிறார்.

    ஒரு பேட்டியில் அமலா பால் தனது தற்போதைய காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 

    ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம். 

    அமலாபால்

    தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார். எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும். 

    ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான். அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான் என்று தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

    ஆனால் தனது காதலர் யார்? எப்போது திருமணம் என்பது குறித்தெல்லாம் அமலா பால் எதுவும் கூறவில்லை. இதுவரை தனது காதல் குறித்தோ, தனது காதலர் குறித்தோ வாய்திறக்காத அமலா பால் தனது முன்னாள் கணவரான இயக்குநர் விஜய்க்கு திருமணமானதும் தனது காதலர் குறித்த தகவலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார்.
    சென்னை:

    தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர்  ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும்  அழைக்கப்படுகிறார்.

    1990ம் ஆண்டின் தொடக்கத்தில் துணைநடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

    சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

    விவேக்கின் சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். அங்கையா பாண்டியன் - மணியம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். விவேக்கின் தாயார் மணியம்மாள்(86), சென்னையில் வசித்து வந்தார். இவர் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

    ஏ1 பட டீசரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது. 

    அதில் ‘லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி’, ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி’ ‘மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,’ காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன் என்றும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற 27-ந்தேதி திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.

    ஏ1 பட டீசரில் இடம்பெற்ற சர்ச்சை காட்சி

    இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பிரபல நடிகை ஒருவர் பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தனியாக சிக்கிக்கொள்ளும் ஹீரோயின்களை செல்பி எடுக்கிறேன் என்று ரசிகர்கள் முற்றுகையிட்டு குறும்பு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தற்போது ஒரு நடிகை பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் நடந்திருக்கிறது. 

    மும்பையில் ஷாப்பிங் செய்ய மால் ஒன்றுக்கு சென்ற ரகுல் பிரீத் சிங், ஷாப்பிங்கை முடித்துவிட்டு காரில் ஏற வந்தார். அப்போது அங்கு நின்ற சில பிச்சைக்காரர்கள் கூட்டமாக ரகுலை முற்றுகையிட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

    பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த ரகுல் பிரீத் சிங்

    இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுல் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அவர்களிடம் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்த ரகுலின் தர்மசங்கடமான நிலையை பார்த்தவர்கள் வேகமாக ஓடிவந்து அவரை பிச்சைக்காரர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவுகிறது.
    ’என்.ஜி.கே.’ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    சூர்யா, மோகன்லால்

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'காப்பான்' படத்தின் சிங்கிள் டிராக் 'சிறுக்கி' பாடல் சமீபத்தில் ரிலீசாகி ஹிட் ஆனது. இதனையடுத்து இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 
    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 21-ந் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றுபோனது. கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கூறப்பட்டது. 

    தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பிலிருந்து பின்வாங்குவதாகவும் ஷங்கர் வேறு தயாரிப்பாளர்களை அணுகிவருவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். 

    காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்த படத்தில் காஜல் அகர்வால் நடிப்பது ஏற்கனவே உறுதியான நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேசும், பிரியா பவானி சங்கரும் இணைந்து நடிக்க உள்ளனர். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவரும் இருவரும் கமலுடன் இணைந்து முதல்முறையாக நடிக்க உள்ளனர்.
    சில நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70). இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வின் த லைன்ஸ், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்ட சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான் ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். 

    சார்லஸ் லெவின் கடந்த 8–ந் தேதி திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். சார்லஸ் லெவினின் மகன் தந்தையை காணவில்லை என்று போலீசிலும் புகார் அளித்தார். போலீசாரும் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். ஆனாலும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    சார்லஸ் லெவின்

    இந்த நிலையில் சார்லஸ் லெவினின் கார் ஒரேகானில் உள்ள செல்மா என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திறந்து பார்த்தபோது காருக்குள் அவரது நாய் இறந்து கிடந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதையும் கண்டு பிடித்தனர். 

    உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அது சார்லஸ் லெவின் உடல் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடக்கிறது. சார்லஸ் லெவின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    ×