என் மலர்
சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாறை படமாக்க இயக்குனர்கள் மணிரத்னம், முருகதாஸ் இருவரும் போட்டிபோடுகிறார்கள்.
விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தை தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.
மேலும், கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
இதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முருகதாஸ் பேசியதாவது:- கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்தது. அவருடன் சமீபத்தில் 4 நாட்கள் உடன் இருந்தபோது அவரது வாழ்க்கையை முழுவதுமாக சொன்னார்.

தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.
முன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி முருகதாசிடம் கேட்டதற்கு இருவருமே எடுக்கலாம்’ என்றார்.
சரண் இயக்கத்தில் உதயா - வித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபல நடிகர் இணைந்திருக்கிறார்.
1988ல் மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘அக்னி நட்சத்திரம்’. இந்த தலைப்பில் தற்போது உதயா - விதார்த் நடிப்பில் வித்தியாசமான க்ரைம் திரில்லராக புதிய கதைகளத்துடன் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் தற்போது நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு ஒய் ஆர் பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மலையாள இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளுள் ஒருவர் மஞ்சுவாரியர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தார்.
அதில், “என் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், என்னை மிரட்டும் வகையிலும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்பி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர், நிருபர்களிடம் கூறும்போது, “போலீஸ் விசாரணையின்போது என் தரப்பு நியாயத்தை தெரிவித்து இருக்கிறேன். அவர்கள் அதை பதிவு செய்து உள்ளனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.
கடந்த ஆண்டில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய ‘ஒடியன்’ என்ற மலையாள படத்தில், நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து இருக்கிறார். மேலும் அவர் இயக்கிய பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரன் இயக்கத்தில் கதிர், ரோஷினி, ஏ.பி.ஸ்ரீதர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் நாயகன் கதிர். இவரை எப்படியாவது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் முயற்சி செய்கிறார். இந்நிலையில், 10 வருடத்திற்குப் பிறகு சென்னையில் நடைபெற இருக்கும் செவன்ஸ் என்னும் விதிகள் இல்லாமல் விளையாடும் கால்பந்தாட்டத்தில் விளையாட வேண்டும் என்று கதிர் ஆசைபடுகிறார்.
விதிகள் இல்லாததால் கை, கால்கள் இழக்க நேரிடும் என்று பயிற்சியாளர் கூறியும் கதிர் விளையாட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டியில் கதிர் அணி விளையாடி வரும் நிலையில், ஒரு பிரச்சனையில் லோக்கல் போலீஸ், சென்னையில் போட்டி நடத்த அனுமதி மறுக்கிறது.

இதனால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி சாத்தான் குளத்தில் நடத்த முடிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து சாத்தான் குளம் செல்லும் கதிர் மற்றும் நண்பர்களுக்கு மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.
இறுதியில் கதிர் மற்றும் நண்பர்களுக்கு ஏற்பட்ட மர்மமான சம்பவங்கள் என்ன? கால் பந்தாட்ட போட்டியில் கதிர் அணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், மைதானத்தில் விளையாடும் போதும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ரோஷினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. ஒரே கிக்கில் அனைவருடைய கவனத்தையும் தன் வசமாக்கி இருக்கிறார்.

தன்னுடைய பார்வையால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சென்டிமெண்ட்டால் கவர்ந்திருக்கிறார் லிஜிஸ். கெத்தாக வந்து செல்கிறார் கிஷோர்.
கால்பந்தாட்டத்தில் செவன்ஸ் என்னும் விளையாட்டை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன். ஆனால், திரைக்கதை விளையாட்டை விட்டு சற்று விலகி சென்று படத்தை உருவாக்கி இருக்கிறார். விளையாட்டு படங்களுக்கு உண்டான அதே பாணி இந்த படத்திலும் பயணிக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பிற்பாதியில் இவருடைய இசையுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் சூர்யாவும் பயமுறுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஜடா’ பார்க்கலாம்.
வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. தற்போது இப்படத்தில் நடிகை கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை கனிகா இதற்குமுன், அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்துள்ளார். தமிழில் சில படங்களிலும், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஓவியம் மூலம் உலகப் புகழ் பெற்ற ஏ.பி.ஸ்ரீதர் தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தின் மூலம் வில்லத்தனத்தில் முத்திரை பதித்திருக்கிறார்.
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.

இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், டிகங்கனா, ரெபா மோனிகா ஜான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ”தனுசு ராசி நேயர்களே” படத்தின் விமர்சனம்.
தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் உனது தந்தை இறக்கும் சூழல் ஏற்பட்டதாக ஹரிஷ் கல்யாணிடம் அவரது தாத்தா கூறுகிறார். இதனால் ஜாதகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. ஹரிஷ் கல்யாண் வளர்ந்த பிறகு, திருமணத்திற்கு பெண் தேடுகிறார்.
ஹரிஷ் கல்யாணுக்கு வேறு மொழி பேசும் கன்னி ராசி பெண் தான் பொறுத்தமாக இருக்கும் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறுகிறார். இதையடுத்து, கன்னி ராசி பெண்ணை தேடுகின்றனர். எதுவும் செட் ஆகாததால், யாரையாவது லவ் பண்ணியாவது கல்யாணம் பண்ணிக்கோ என இவரது தாயார் கூறுகிறார். இந்த சூழலில், ஹரிஷ் கல்யாணின் முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜான், தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

அவ்வாறு செல்லும் போது முன்னாள் காதலியின் தோழி டிகங்கனா மீது காதல் வயப்படுகிறார் ஹரிஷ் கல்யாண். இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஹரிஷ் கல்யாண், காதலியின் ராசி என்ன என்பதை தெரிந்துகொள்ள முனைப்பு காட்டுகிறார். ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட நாயகி அதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இவ்வாறு வெவ்வேறு கொள்கைகளுடன் இருக்கும் இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹரிஷ் கல்யாண் லவ்வர் பாயாக படம் முழுவதும் இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். அழகு பதுமையுடன் இருக்கும் நாயகி டிகங்கனா, காதல், கவர்ச்சி ஆட்டம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மற்றொரு ஹீரோயினான ரெபா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

யோகிபாபு அவ்வப்போது வந்து கதையை மட்டும் சொல்லி செல்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை. மேலும் பிரியாணி பிரியராக முனீஸ்காந்த், ஜோதிடராக வரும் பாண்டியராஜன், மயில்சாமி ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் காமெடி ஒர்க்அவுட் ஆகாதது மைனஸ்.
புதுவிதமான கதைகளத்தை கையில் எடுத்துள்ள இயக்குனர் சஞ்சய் பாரதி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் இளமை துள்ளளோடு இருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் ‘தனுசு ராசி நேயர்களே’ காதல் கலாட்டா.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், கதை தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘நான் அணிகிற உடைகள் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கு காரணம் பேஷன் டிசைனில் எனக்கிருந்த ஆர்வம்தான். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் பலனும் ஆனந்தமும் கிடைக்கும். வேலையை மகிழ்ச்சியோடு செய்தாலே வெற்றி அடைந்த மாதிரிதான்.
ஒவ்வொருவரும் விருப்பமான தொழிலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எனக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களை விரும்பி செய்கிறேன். அதுமாதிரி வேடங்களை எதிர்பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கி விட்டேன். நிலையான இடமும் கிடைத்து இருக்கிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறப்பாக நடித்து கொடுப்பார் என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள். கதை என்ன எனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உள்பட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்கிறேன்.
சினிமா எல்லோரும் சேர்ந்து செய்கிற உழைப்பினால் வந்தால்தான் வெற்றியடையும். எல்லோரும் ஒரே எண்ணத்தோடு இணைந்து வேலை செய்தால்தான் ஜெயிக்க முடியும். வணிக படங்களிலும் நடிக்க ஆர்வம் உள்ளது.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.
விஜய்யின் 65-வது படத்தை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நடிகை நித்யா மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.

என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் விமர்சனம்.
மகாபலிபுரம் பீச்சில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைய, போலீசார் இதை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைக்கிறார்கள். அங்கிருந்து திருடப்பட்டு சென்னையில் நாயகன் தினேஷ் வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு வருகிறது.
குண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். அதை பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேஷ், தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிய வருகிறது.
இறுதியில் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார்? போலீசிடம் குண்டு கிடைத்ததா? சமூக நல மாணவர்களுக்கு கிடைத்ததா? குண்டு வெடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தினேஷ், இந்த படத்தையும் சரியாக தேர்வு செய்திருக்கிறார். இரும்பு கடையில் வேலை பார்க்கும் லாரி டிரைவராக மனதில் நிற்கிறார் தினேஷ். இரும்பு கடையில் வேலை பார்ப்பவர்களின் வலிகளை சொல்லும் போதும், தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தின் போதும், காதலிக்காக ஏங்கும் போதும், நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக குண்டு என்று தெரிந்தவுடன் அதை என்ன செய்வது என்று பதறும் போது கைத்தட்டல் பெறுகிறார்.
கிராமத்து பெண்ணாக கவர்ந்திருக்கிறார் ஆனந்தி. காதலனுக்காக வீட்டை பகைத்துக் கொண்டு, கட்டினால் அவரைத்தான் கட்டுவேன் என்று வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் மாஸ் காண்பித்திருக்கிறார். பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார் முனிஷ்காந்த். இவரின் வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம். நிருபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் ரித்விகா.

இரும்பு கடை முதலாளியாக வரும் மாரிமுத்து, தரகர் ஜான் விஜய், தினேஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், திருடனாக ஜானி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலீசாக நடித்திருக்கும் லிங்கேஷ் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
ஒரு குண்டை வைத்து, காதல், சென்டிமெண்ட், ஜாதி, அரசியல், காமெடி ஆகியவற்றை தடவி பிரம்மாண்டமாக வெடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். குண்டுகள் பற்றி சொன்ன விதம் அருமை.

டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணியில் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் பின்னணி இசையின் மூலம் பார்ப்பவர்களை பயப்பட வைக்கிறது. ஒளிப்பதிவில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் கிஷோர்.
மொத்தத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ சிறந்த படைப்பு.
அஜித் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது.
அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.
மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார். அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. படத்தில் 5 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த படம், இது.

24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் டைரக்டு செய்திருந்தார். அவரே `மைனர் மாப்பிள்ளை' படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.






