என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் தலைப்பு லீக்காகி இருக்கிறது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 

    விக்ரம்

    இந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    யாசகன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் துரைவாணன் இன்று உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார்.
    யாசகன் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் துரைவாணன். இவருக்கு வயது 48. யாசகன் படத்தில் அங்காடி தெரு மகேஷ், நிரஞ்சனா அனுப் நடித்திருந்தார்கள். சசிகுமார், ஜெய் நடிப்பில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் இணை இயக்குனராகவும் இயக்குனர் துரைவாணன் பணியாற்றி இருக்கிறார்.

    இயக்குனர் துரைவாணன்

    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் துரைவாணன், இன்று மாலை 4.30 மணியளவில் மதுரையில் காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ள மாயன் படத்தின் போஸ்டரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டிருக்கிறார்.
    சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘மாயன்’. இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். 

    மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பாஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்ஜினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த பாடல் விரைவில் வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர். 

    மாயன் பட போஸ்டர்

    இப்படத்தை இந்தியாவின் ஃபாக்ஸ் அண்ட் கிரவ் ஸ்டூடியோஸ் நிறுவனமும் மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர். மோகன சுந்தரத்தின் ஜிவிகேஎம் எலிபண்ட் பிர்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. 
    நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வருகிற 29-ந்தேதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார்.
    இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும், தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (77) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    அவர் காய்ச்சலால் அவதிப்படுவதால், தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க இயலவில்லை, அதற்காக வருந்துகிறேன் என்று டுவிட்டரில் நேற்றுமுன்தினம் பதிவு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அமிதாப்பச்சன்

    உடல்நலக்குறைவு காரணமாக தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற கலைஞர்களுக்கு வருகிற 29-ந்தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்தளிக்கிறார். அப்போது, அமிதாப் பச்சனுக்கு இந்திய திரைப்படத் துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிப்பார்.

    இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.
    அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
    அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.


    குறிப்பாக கண்ணான கண்ணே என்ற பாடல் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
    தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிகிச்சி, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்த மிருதுளா உதவி இயக்குனரை திருமணம் செய்ய இருக்கிறார்.
    தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிகிச்சி, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்தவர் மிருதுளா. கேரளாவை சேர்ந்த இவர் ரெட் சில்லீஸ் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன. பகத் பாசிலுடன் மிருதுளா நடித்த அயாள் நிஜனல்ல என்ற படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.

    ஏய்சம்மா என்ன ஆண்குட்டி, 10.30 ஏ.எம்.லோக்கல் கால், சிகாமணி உள்ளிட்ட மேலும் சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ரக்தேஷ் என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மிருதுளாவுக்கும் கேரளாவை சேர்ந்த நிதின் மாலினி விஜய் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

    வருங்கால கணவருடன் மிருதுளா

    நிதின் மாலினி விஜய் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு பெற்றோர்களும் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து மிருதுளா-நிதின் மாலினி விஜய் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. இதில் நடிகை பாவனா நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். மேலும் மலையாள நடிகர் நடிகைகளும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
    கண் சிமிட்டல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், ஒருவரை காதலித்து பிரிந்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    ஒரே ஒரு கண் சிமிட்டல் வீடியோவால் பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

    இந்த வளர்ச்சியை எதிர்பார்த்தீர்களா?
    இல்லவே இல்லை. நான் ஒரே இரவில் பிரபலமானதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எப்படி அது நடந்தது என்றும் புரியவில்லை. அந்த 30 நொடி காட்சி வெளியானபோது நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்துவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை அந்த வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றதை நம்ப முடியவில்லை. சமூகவலைதளங்களில் என்னை பின் தொடர்ந்தவர்கள் ஒரே நாளில் லட்சக்கணக்கை தாண்டினார்கள். 

    இணையத்தில் கிண்டல்கள் அதிகரிக்கிறதே?
    அதற்கு முன்பு எனக்கு தோன்றியதை எல்லாம் பதிவிட்டு வந்தேன். ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் கவனமாக பதிவிடுகிறேன். இருந்தாலும் என்னை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து மீம் வெளியிடுகிறார்கள். நான் அதை கவனிப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. 

    பிரியா வாரியர்

    காதல் அனுபவம்?
    நான் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் வந்து காதலை சொன்னான். நானும் அவனை காதலித்தேன். அது ஒரு இன கவர்ச்சி என்பதை பின்னர் இருவருமே புரிந்து கொண்டோம். அதன்பிறகு இரண்டு பேரும் பேசி பிரிந்து விட்டோம். இப்போது படிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 

    பிடித்த நடிகர் யார்?
    தமிழில் எனக்கு பிடித்த நடிகர், விஜய் சேதுபதி. மலையாளத்தில், மோகன்லாலை பிடிக்கும். 
    தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

    இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க, ரஷ்யாவில் இருந்து மும்பை வந்துள்ள ஸ்ரேயா, 'எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது, எனது கணவர் வீட்டில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார்.

    ஸ்ரேயா

    என் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிம்பிளானது. அதை மறைக்க தேவையில்லை. பல்வேறு நாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தாலும் மும்பைக்கு வந்துவிடுகிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. இந்தியாவை விட்டு விட எனக்கு விருப்பமில்லை. இப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துவருகிறேன். இந்தியில், நயா நயா லவ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இதில் அக்‌ஷய் கண்ணா, பிரியங்கா சர்மா நடிக்கின்றனர். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன்’ என்றார்.
    சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் கதை திருடப்பட்டது தான் என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்,
    இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் இயக்குநர் மித்ரன் தன் கதையை திருடி ‘ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. ‘ஹீரோ’ படம் கடந்த வாரம் வெளியான நிலையில், கதை திருட்டு நடந்தது உண்மைதான் என்று இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘இயக்குநர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் டீசர் மற்றும் விளம்பரங்களைப் பார்த்தேன். அந்த படத்தின் கதை, நம் எழுத்தாளர் சங்கத்தில் நான் 26.04.2017 அன்று பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான். எனவே, என் கதைக்கு உண்டான நியாயம் வழங்க வேண்டும்’ என்று கோரி 29.10.2019 தேதியில் ஒரு புகாரை நமது சங்கத்தில் கொடுத்தீர்கள். 

    அதன்படி, நான் கதை சுருக்கத்தை மட்டும் தங்களிடம் கேட்டு வாங்கி கொண்டு, டைரக்டர் மித்ரனிடம் ‘ஹீரோ’ படத்தின் கதை சுருக்கத்தையும் எழுதி தர சொல்லி, அதை வாங்கி ஒப்பிட்டு பார்த்தோம். தங்கள் கதையும், டைரக்டர் மித்ரனின் ஹீரோ கதையும் ஒன்றுதான் என எல்லோரும் கருத்து வேறுபாடு இன்றி ஒரே முடிவாக கூறினார்கள். எனது கருத்தும் அதே என்பதால் மித்ரனை நான் எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன்.

    சிவகார்த்திகேயன்

    கதை, திரைக்கதைகளை ஒப்பிட்டு பார்ப்பதில், உச்ச நீதிமன்றம் வகுத்த வழி காட்டுதலின்படி, இரண்டு கதைகளிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை இவ்வளவு ஒற்றுமைகள் இருப்பதாய் மொத்த உறுப்பினர்களும் கருதுகிறார்கள் என்ற விவரத்தை இயக்குநர் மித்ரனிடம் கூறினேன். ஆனால், அவர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒப்பிட்டு பார்த்த 18 செயற்குழு உறுப்பினர்களிடம் விவாதித்து, அவர்களின் விளக்கத்தை கூற வேண்டும் என்று கேட்டார்.

    அதன்படியே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இயக்குநர் மித்ரனின் கருத்தை யாரும் ஏற்க மறுத்து இரண்டு கதையும் ஒன்றுதான் என ஆணித்தரமாக கருத்து கூறினர். அதன்பின் அனைவரும் என்னிடம் ‘ஹீரோ’ படத்தில் போஸ்கோ பிரபுவான தங்களுக்கு கதைக் கான பெயரும், இழப்பீட்டு தொகையும் பெற்றுத்தர வலியுறுத்தினார்கள்.

    ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் இயக்குநர் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்ததோடு, நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா திருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து, எங்களுக்கு அதன் பிரதியை அனுப்பியிருந்தார்.

    இதனை சங்கத்துக்கான பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நமது சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிபடக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்து கூறுகிறோம்’. இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    ‘ஹீரோ’ படத்தின் கதைத் திருட்டு விவகாரம் உறுதியானது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டி.ஆர்.எல். இயக்கத்தில் அஸார், ஸ்ரீபிரியங்கா, பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் சாரல் படத்தின் முன்னோட்டம்.
    டி.ஆர்.எல். இயக்கத்தில் ரெயின்போ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் ‘சாரல்’. இதன் நாயகனாக டி.வி.தொகுப்பாளர் அஸார், நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்கள். கோபால கிருஷ்ணன் ‘சாரல்’ படத்தின் கதாநாயகி தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். நாயகன் அஸார் நண்பர்களாக காதல் சுகுமார், பவர்ஸ்டார் சீனிவாசன், கோவை பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்.

    வில்லனின் மூன்றாவது அடி ஆளாக இதில் பவர்ஸ்டார் நடிக்கிறார். இவர் முதல் அடி ஆளாக வரவேண்டும் என்று ஆர்வகோளாறால் ஏற்படும் சம்பவங்களே நகைச்சுவை கலகலப்பாக அமைந்திருக்கிறது. கோவை பாபு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அஸார், ஸ்ரீபிரியங்கா

    இஷான் தேவ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு நாராயணன் படத்தொகுப்பையும், தவசி ராஜ் ஸ்டண்ட் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
    ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பின் போது, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை சந்தித்துள்ளார்.
    தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் குஷ்பு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். பி.வி.சிந்து ரஜினியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    தபாங் 3 படத்தைவிட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டமே முக்கியம் என அப்படத்தின் நாயகி சோனாக்சி சின்கா தெரிவித்துள்ளார்.
    இந்தி முன்னணி நடிகர் சல்மான்கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘தபாங் 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 24.5 கோடி வசூல் செய்தது. எனினும் குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘தபாங் 3’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகி சோனாக்சி சின்கா கூறியதாவது:- ‘நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும், எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது’ என கூறியுள்ளார்.

    சோனாக்சி சின்கா

    மேலும் போராட்டம் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். அவர்களது உரிமை குரலை நீங்கள் பறிக்க முடியாது’ எனவும் கூறியுள்ளார். சோனாக்‌சி சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்காவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×