என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் அனுஷ்கா, அடுத்ததாக ஆக்ஷன் நாயகியாக களமிறங்க இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் அனுஷ்கா. 'பாகுபலி' படங்களுக்கு பிறகு அவர் நடித்த 'பாகமதி' படமும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது 'நிசப்தம்' படத்தில் நடித்து முடித்துள்ள அனுஷ்கா அடுத்து, கவுதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மூன்று படங்களில் இதுவும் ஒரு படம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா, ஆக்ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளாராம். பிரபல இந்தி திரைப்பட இயக்குனரான கோவிந்த் நிகலானி எழுதியுள்ள கதையைத்தான் கவுதம் மேனன் படமாக இயக்க உள்ளதாக சொல்கிறார்கள்.

கமல்ஹாசன், அர்ஜுன் நடித்து 1996ம் ஆண்டில் வெளிவந்த 'குருதிப்புனல்' படத்தின் ஒரிஜனல் படமான 'துரோக்கால்' மற்றும் தேசிய விருதுகளைப் பெற்ற படங்களை இயக்கியவர் கோவிந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதியுள்ள கதை தமிழில் படமாக உள்ளது.
மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறினார்கள். இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், ஆடை அலங்காரத்துக்கு 5 மணி நேரம் எடுத்துக்கொள்வதாக அவரது மனைவி கவுரி கான் தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமா தம்பதி ஷாருக்கான், கவுரி கான். இவர்கள் விழா மேடைகளில் ஒருவரையொருவர் செல்லமாக கேலி, கிண்டல் செய்து கொள்வார்கள். சமீபத்தில் ஒரு விழாவில் கவுரிகான் பேசியதாவது:- விழாக்களுக்கு கிளம்புவது என்றால் என்னைவிட என் கணவர்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வார். உண்மையாகவே சொல்கிறேன், நான் ஆடை அலங்காரம் செய்வதற்கு 5 நிமிடங்கள் போதும்.

ஆனால் அவருக்கு 5 மணி நேரம் தேவைப்படுகிறது. ஒரு பெரிய அறை முழுக்க அவருடைய வார்ட்ரோப்கள் தான் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். மனைவியின் கிண்டலால் வெட்கப்பட்ட ஷாருக்கான், ‘நான் விழாக்களுக்கு கறுப்பு நிற உடைகளை மட்டுமே அணிகிறேன். அதனால், அந்த உடைகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்’ என்று தன் தாமதத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக கூறியுள்ளார்.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- தேசிய விருது பெறுவது கனவு என்பதை தாண்டி இதை நான் அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு நடந்துள்ளது. ரொம்பவே சந்தோஷமாக உள்ளது. பலரும் தொலைபேசியில் எப்படி உணர்கிறீர்கள் என கேட்கிறார்கள். அதை எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும். இங்கு வந்து வாங்கும்போது தான் அதை உணரமுடியும். அப்பா, அம்மா முகத்தில் சந்தோஷத்தை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
நான் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். எனக்கு வரும் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன. ‘பெண்குயின்’, ரஜினி சார் படம், தெலுங்கில் 2 படங்கள் இருக்கிறது. அனைத்துமே வித்தியாசமாக அமைந்திருக்கிறது. அந்த படங்கள் வரும் போது, மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தெரியும். சாவித்திரி அம்மாவுடைய வாழ்க்கை வரலாறு என்பதால் அவரைப் பற்றி நிறைய படித்தேன். படங்கள் பார்த்தேன்.

அதை புரிந்து உள்வாங்கி பண்ணுவது ரொம்பவே சிரமம். இயக்குநர் நாகி ரொம்பவே உதவியாக இருந்தார். சாவித்திரி அம்மாவுடைய பெண் சாமுண்டீஸ்வரியிடம் நிறைய பேசினேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பின்னால், பெரிய மெனக்கெடல் இருக்கிறது. இன்னொருத்தருடைய கதாபாத்திரத்தில் நடிப்பதால், நமது மனதும் அதற்கு தகுந்தாற்போல் வலுவாக இருக்க வேண்டும்.
படம் முடிந்தவுடன், டப்பிங் பண்ணுவதற்கும் சிரமமாக இருந்தது. தெலுங்கில் தான் நடித்தேன் அந்த மொழி அவ்வளவாக தெரியாது. சாவித்திரி அம்மா மாதிரியே பேசுவதற்கு நிறைய நாள் டப்பிங் பண்ணினேன். இன்றைக்கு அந்த மெனக்கெடல் முடிந்து படம் வெளியாகி, வெற்றி பெற்று, தேசிய விருது வாங்கி இருக்கிறேன் என நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. பெயருக்கு முன்னால் ‘தேசிய விருது பெற்ற’ என்ற வார்த்தையைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு புறம் கூச்சமாகவும் இருக்கிறது”
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் ”மாயன்” படத்தின் முன்னோட்டம்.
சிவனையும், மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாயன். இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார். நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிந்துமாதவியும் நடித்துள்ளனர்.
சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். பிரபல நடிகர்களான ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தெறி தீனா, ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்ஜினி அகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை இந்தியாவின் ஃபாக்ஸ் அண்ட் கிரவ் ஸ்டூடியோஸ் நிறுவனமும் மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர். மோகன சுந்தரத்தின் ஜி.வி.கே.எம். எலிபண்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்குவது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பட விழாவில் பேசியுள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இந்திய ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை அவர் தான். தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’யில் நடித்து வருகிறார். கங்கனா நடித்துள்ள பங்கா திரைப்படம் அடுத்த மாதம், குடியரசு தினத் தன்று ரிலீசாகிறது. இதில் அவர் ஜெயா எனும் கதாபாத்திரத்தில் கபடி வீராங்கனையாக நடித்துள்ளார்.
பங்கா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கனா, சக நடிகைகள் டாப்சி, ஆலியா பட், சோனாக்ஷி சின்கா ஆகியோரை மறைமுகமாக தாக்கினார். “வெற்றிபெற்ற நடிகைகள் சிலர், ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின் சம்பளம் கேட்பது தவறானது என பேசியதாக நான் கேள்விபட்டேன். ஏனென்றால் ஹீரோக்கள் தான் படத்தின் வசூலுக்கு காரணம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

பெண்கள் நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என நீங்களே நினைக்காவிட்டால், யாராலும், எந்த படத்தாலும் உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற முடியாது. ஆணுக்கு நாம் சமம் என நினைக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என ஒவ்வொரு பெண்ணும் தனக்கு தானே சொல்லிக்கொள்ள வேண்டும்’ என அவர் கூறினார்.
சமீபத்தில் பேட்டி அளித்த டாப்சி, ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் சம்பளம் கேட்பது தவறு என கூறியிருந்தார். அதேபோன்ற கருத்தை, ஆலியா பட்டும், சோனாக்ஷி சின்காவும் கூறியிருந்தனர். அவர்களைத் தான் பெயர் குறிப்பிடாமல் கங்கனா சாடியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், சமீபத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தான் நழுவவிட்டதாக, பிரித்விராஜ் சமீபத்திய பட விழாவில் தெரிவித்தது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசிபர் படம் ரிலீசான சமயத்தில், ரஜினியிடமிருந்து அவரது படத்தை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்ததால் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததாக பிரித்விராஜ் கூறினார்.

தான் யாருக்கும் மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை என்றும், ரஜினி படத்தை இயக்க முடியாமல் போனதற்கான காரணத்தை விளக்கி அவருக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், அதனை அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டதாகவும் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா, திருமணத்தை ரத்து செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா, தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு கன்னட மொழியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி ரத்தாகி விட்டது.
இதுகுறித்து ராஷ்மிகா கூறியதாவது:- “கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எனக்கு வரப்போகிற கணவர் சினிமா துறையில் இல்லாதவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் ரக்ஷித் வித்தியாசமாக இருந்தார். அவர் மீது எனக்கிருந்த காதல் காரணமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

தொழில் ரீதியாக இருவரும் பெயர் வாங்க வேண்டும் என்றால் திருமணத்துக்கு 2 ஆண்டுகள் காத்து இருப்போம் என்று முடிவு செய்தோம். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தபிறகும் வாய்ப்புகள் அதிகம் வந்ததால் திருமணத்துக்கு என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. திருமணம் செய்தால் தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்துவதுபோல் ஆகி விடும். எனவே அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று திருமணத்தையே ரத்து செய்து விட்டேன்.” இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
ரூ.1 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகை ஷாலினி பாண்டே மீது அக்னி சிறகுகள் பட தயாரிப்பாளர் டி.சிவா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்க நவீன் இயக்கத்தில் தயாராகும் அக்னி சிறகுகள் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை டி.சிவா தயாரிக்கிறார்.
படத்தில் சில நாட்கள் நடித்து விட்டு திடீரென்று நடிக்க மறுத்து விட்டார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து டி.சிவா கூறியதாவது:- “அக்னி சிறகுகள் படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்தேன். முந்தைய படமான 100 சதவீதம் காதல் படத்துக்கு ரூ.10 லட்சம்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் அக்னி சிறகுகள் படத்தில் 100 நாட்கள் நடிக்க ரூ.35 லட்சம் சம்பளம் பேசி முன் பணமாக ரூ.15 லட்சம் கொடுத்தேன்.

27 நாட்கள் நடித்த பிறகு இந்தியில் ரன்பீர்கபூர் படத்தில் நடிக்க போய் விட்டார். இந்தி படத்தில் நடிப்பதுதான் எனது இலக்கு. இனி அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து ஷாலினி பாண்டே நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்.
ஷாலினி பாண்டேவால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
உச்சநட்சத்திரங்களின் திரைப்படம் தோல்வியை தழுவினால் அந்த நடிகர்களே நஷ்ட ஈடு தரவேண்டும் என தியேட்டர் அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* தமிழக அரசின் மாநில வரி 8%-ஐ வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மார்ச் 1 ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும்.
* பட தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குள் டிஜிட்டல் தளத்தில் (அமெசான், நெட் ப்ளிக்ஸ்) படத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்த தயாரிப்பாளர்களின் படத்தை திரையரங்குகளில் இனி வெளியிட மாட்டோம்.
* உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை அந்தந்த நடிகர்களே ஏற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்.
தியேட்டர் அதிபர்களின் இந்த திடீர் தீர்மானம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று முடிச்சு படத்தில் நடித்தபோது கறுப்பாக இருக்கிறேன் என்று ரஜினி வருத்தப்பட்டதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் ‘கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தை’ ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும் தொடங்கி உள்ளார்கள்.
அதற்கான தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:- இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்தில் விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர்.

அதே போல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது.
இவ்வாறு சிவகுமார் பேசினார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் தலைப்பு லீக்காகி இருக்கிறது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






