என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பின்னணி பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, தன்னை பற்றி பரவி வரும் வதந்திகள் தொடர்பாக சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதில் அவர் காதலில் சிக்கிய ஒரு நபர் குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த நபர் ஒரு நடிகர் அல்லது அரசியல்வாதி என்று பரபரப்பாக சொல்லப்பட்டது. ஆனால் ஆண்ட்ரியா வாய்திறக்கவில்லை. ஆண்ட்ரியா தற்போது அளித்துள்ள பேட்டியில் உண்மை என்ன என்பதை விளக்கியுள்ளார். 

    அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் பேசிய நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் யாரும் இல்லை. கேமரா எதுவும் இருக்கவில்லை . அதனால் என் வாழ்க்கை குறித்து சில வி‌ஷயங்களை வெளிப்படையாக சொன்னேன். நான் நடிகை என்பதையே மறந்து விட்டேன். அது தவறு என பின்பு தான் எனக்கு உரைத்தது .

    புத்தகத்தில் உள்ள ஒரு கவிதையை நான் படித்தேன். அப்போது அது எதை பற்றியது என கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் குறித்தது என கூறினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காதல் அது. 10 வருடம் முன்பு தான் அந்த கவிதையை எழுதினேன்.

    ஆண்ட்ரியா

    ஆனால் அதன்பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் கிளம்பி விட்டது. இதை எல்லாம் பார்த்து எனக்கு கோபம் தான் வந்தது. ‘நடிகர் அரசியல்வாதி’ என்றெல்லாம் சொல்கிறார்கள். கட்டுக்கதை போல ஒரு வி‌ஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். அதற்கு எப்படி விளக்கம் அளிப்பது? அதனால் அமைதியாக இருந்துவிட்டேன்.

    இவ்வாறு ஆண்ட்ரியா கூறி இருக்கிறார்.

    விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றிய கேள்விக்கு ‘அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் விஜய் மிக சிறந்த மனிதர். எந்த பந்தாவும் ஈகோவும் இல்லாமல் பழகுபவர். அவருடன் நடிக்க தொடங்கிய பின்னர் அவர் ரசிகையாகவே மாறிவிட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.
    டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை ஐகோர்ட்டில், மயிலை எஸ்.குமார், டி.சிஹி மோல், வி.காளிதாஸ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படம், டி.வி. தொடர் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளோம். இந்த சங்கத்தின் தலைவராக ராதாரவி, பொருளாளராக ராஜகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த சங்கத்தில் ஏராளமான நிதிமுறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து சங்கத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும், நிர்வாகிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வருவது இல்லை. வரவுசெலவு கணக்கு புத்தகத்தை உறுப்பினர்கள் பார்வையிட சட்டப்படி எந்த தடையும் இல்லை. என்றாலும், அவற்றை பார்வையிட அனுமதிப்பது இல்லை. இதுவரை உறுப்பினர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ, திருமண உதவிகள் செய்தது குறித்த விவரம் கேட்டாலும் தருவது இல்லை.

    ஆண்டு சந்தாவாக உறுப்பினர்களிடம் ரூ.180 மற்றும் ரூ.200 வசூலித்தாலும், வெறும் ரூ.120 மட்டுமே வரவு வைக்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 500 நன்கொடையாக சங்கம் வசூலித்துள்ளது என்று ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்களில் ரூ.4 லட்சத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல ஏராளமான நிதிமுறை கேடுகள் நடந்துள்ளன.

    ஐகோர்ட்டு

    இதுகுறித்து கடந்த ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தொழில் சங்கங்களின் கூடுதல் பதிவாளருக்கு புகார் மனு அனுப்பினோம். இதுபோன்ற சூழ்நிலையில், கணக்குகளை சரி பார்த்து தகுந்த நடவடிக்கை எடுப்பது கூடுதல் பதிவாளரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். ஆனால், கூடுதல் பதிவாளர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் கூடுதல் அரசு பிளீடர் ஜெ.ரமேஷ், மனு தாரர் சார்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த ஐகோர்ட்டில் தீர்வு காண முடியாது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு சமர்பித்து அதனடிப்படையில் தான் தீர்வு காண முடியும். மனுதாரர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் கடந்த ஜூன் 11-ந்தேதி, நவம்பர் 18-ந்தேதி கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில், இருதரப்பினர்களும் தரும் ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலித்து சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
    வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் உருவாகும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கி திடீரென நிறுத்தப்பட்டது. சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறினர். வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். 

    இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதற்கான உறுதிமொழி பத்திரத்திலும் சிம்பு கையெழுத்திட்டு கொடுத்தார். இதையடுத்து மாநாடு பட வேலைகள் தொடங்கி உள்ளன. கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    கிச்சா சுதீப்

    இதேபோல் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த சுதீப்பிடம் வெங்கட் பிரபு கதை சொல்லியுள்ளார். கதை பிடித்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே, ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ஹீரோ கதை திருட்டு விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தெரிவித்துள்ளார்.
    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த ஹீரோ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதைக்கு உரிமை கோரி உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

    தனது கதையை திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 2 கதை சுருக்கங்களையும் ஆய்வு செய்த எழுத்தாளர் சங்கம் ஹீரோ கதை திருட்டுக்கதைதான் என்று உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து போஸ்கோ பிரபுவுக்கு பாக்யராஜ் எழுதிய கடிதம் வெளியானது. அதில் ஹீரோ கதை திருட்டுக் கதைதான் என்றும் படத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    சிவகார்த்திகேயன்

    இந்த குற்றச்சாட்டை ஹீரோ இயக்குனர் மித்ரன் மறுத்தார். அவர் கூறியதாவது:- “ஹீரோ படத்தின் கதையை பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் 3 எழுத்தாளர்களுடன் சேர்ந்து உருவாக்கினேன். இன்னொருவர் கதைக்கு உரிமை கோரியதும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் என்னை அழைத்து விசாரித்தது. அப்போது இரண்டு திரைக்கதைகளையும் படித்து முடிவு எடுக்கும்படி கூறினேன்.

    ஆனால் திரைக்கதையை படிக்காமலேயே ஹீரோ கதை திருட்டுக்கதை என்று பாக்யராஜ் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. எங்கள் படத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றால் சட்டரீதியாக சந்திப்போம்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அஜித் பட நடிகை புகார் தெரிவித்துள்ளது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். கல்லி பாய், தேவ் டி, ஏ ஜவானி ஹாய் திவானி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளவர் கல்கி கோச்சலின். இவர் தமிழில் அஜித்குமாரின் நேர் கொண்ட பார்வை படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். 

    இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். தற்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பர்க் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். கல்கி கோச்சலின் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். 

    கல்கி கோச்சலின்

    இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக பல வேதனைகளை சந்தித்து இருக்கிறேன். இந்தியில் தேவ் டி படம் வெளியானபோது என்னை விலைமாது என்று அழைத்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. ஹாலிவுட் படங்களிலும் இதே பிரச்சினையை சந்தித்தேன். என்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். 

    தனியாக வெளியே அழைத்து செல்லவும் முயற்சித்தார். அதற்கு நான் மறுத்து விட்டேன். இதனால் அவருடைய படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டார். நான் நடித்த ஏ ஜவானி ஹாய் திவானி படம் வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும் யாரும் வாய்ப்பு தரவில்லை.”

    இவ்வாறு கல்கி கோச்சலின் கூறினார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெற்றோர், ஆசிரியர் கண்டிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் எதிர்காலம் எவ்வாறு சிதையும் என்பதை மையமாக வைத்து ‘பிழை’ படம் உருவாகியிருக்கிறது. சென்னை சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த படம் வரும் 3 ந்தேதி வெளியாகிறது. ராஜவேல் கிருஷ்ணா இயக்க, ஆர்.தாமோதரன் தயாரித்திருக்கிறார். 

    சின்ன ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத், கோகுல், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ், இளன் நடித்திருக்கின்றனர். படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.தாமோதரன் கூறியதாவது:- பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி. 

    பிழை பட போஸ்டர்

    எனவே படம் சுவாரசியமாக எல்லோரும் ரசிக்கும் வகையில் இருக்கும். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த காலகட்டத்துக்கு இது மிகவும் அவசியமான படம் என்று பாராட்டியதுடன் எந்த கட்டும் இல்லாமல் யு சான்றிதழ் கொடுத்தார்கள். ரஜினி சாருக்கு ஒரு சின்ன கோரிக்கை. பொங்கலுக்கு வெளியிட இருக்கும் தர்பார் படத்தை 9-ந்தேதியே வெளியிட இருக்கிறார்கள். இதனால் முந்தைய வாரங்களில் ரிலீசாகும் சின்ன படங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே தர்பார் படத்தை பொங்கல் அல்லது போகி பண்டிகைக்கு வெளியிட்டால் எங்களை போன்ற சின்ன படங்களுக்கு உதவியாக இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.
    சமீப காலமாக அதிக படங்களில் நடித்து வருவது ஏன் என்பது குறித்து நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
    சரத்குமார் மீண்டும் அதிக படங்கள் கைவசம் வைத்து தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 

    சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு:- “அரசியல் பணிகளுக்கு இடையில் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அரசியலை நான் தொழிலாக செய்யவில்லை ஒரு பணியாகவே செய்கிறேன். சினிமாதான் எனது தொழில். மக்களுக்கு சேவை செய்யவும் கட்சி நடத்தவும் சினிமாவில் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அதனால்தான் சமீப காலமாக அதிக படங்களில் நடிக்கிறேன்.

    சரத்குமார்

    “சூர்யவம்சம் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு ராதிகாவுடன் வானம் கொட்டட்டும் படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அடுத்து ராதிகா, வரலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து ‘பிறந்தாள் பராசக்தி’ படத்தில் நடிக்க இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது. சினிமாவில் வரலட்சுமியின் வளர்ச்சியை பார்த்து ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன்.

    தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராகும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் நான் என்ன கதாபாத்திரத்தில் வருகிறேன் என்பதை மணிரத்னம்தான் சொல்ல வேண்டும். நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து உள்ளனர். நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.”

    இவ்வாறு சரத்குமார் கூறினார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், கபடி வீராங்கனையாக களமிறங்க இருக்கிறார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'தலைவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

    இந்த படத்துக்கு பாகுபலி, மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    பங்கா படத்தில் கங்கனா

    இந்நிலையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள ‘பங்கா’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் வாழ்க்கை கதைகளை படங்களாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதரின் வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராகிறது. இதில் செம்பை வைத்தியநாத பாகவதர் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

    இந்த படத்தை இசையமைப்பாளரும் இயக்குனருமான விஜித் நம்பியார் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே முந்திரி மோன்சன் என்ற படத்தை இயக்கி உள்ளார். செம்பை வைத்தியநாத பாகவதர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள செம்பை என்ற கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே இசை பயின்று 70 வருடங்கள் இசை துறையில் சாதனைகள் நிகழ்த்தினார். பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

    மோகன்லால்

    இவரது சீடர்தான் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வைத்திய நாத பாகவதர் பெயரில் இசை விழாக்கள் நடந்து வருகின்றன. இவர் 1974-ல் மரணம் அடைந்தார்.
    என் குடும்பத்தையும், நண்பர்களையும் தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று நடிகர் சித்தார்த் பா.ஜனதா தொண்டர்களை பற்றி கோபமாக கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் கதாநாயகனாக இருப்பவர் சித்தார்த். பா.ஜனதா அரசையும், மாநில அரசையும் டுவிட்டுகளால் விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

    சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இதை அடுத்து சித்தார்த் மீதும் வழக்கு பதியப்பட்டது. சித்தார்த் பா.ஜனதாவின் திட்டங்களையும், போக்கையும் தொடர்ந்து கண்டித்து விமர்சித்து வருவதால், பா.ஜனதா தொண்டர்கள் நடிகர் சித்தார்த் மீது கோபத்தில் இருந்து வந்தனர்.

    சித்தார்த்

    இந்தநிலையில் சித்தார்த் தனியார் ஓட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு படுமோசமாக கருத்துகளை பயன்படுத்தி சித்தார்த்தை பா.ஜனதா தொண்டர்கள் விமர்சித்துள்ளனர்.

    இதனால் கோபம் அடைந்த சித்தார்த் பிரதமர் மோடியை டேக் செய்து டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘பா.ஜனதா முட்டாள்கள், மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை குடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும்? என்று பாடம் நடத்துகிறார்கள். என் குடும்பத்தையும், நண்பர்களையும் தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ படத்தின் தலைப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

    இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 

    கோப்ரா

    இந்நிலையில், இப்படத்திற்கு ‘கோப்ரா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் டைட்டிலுக்கான வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    தமிழ், தெலுங்கில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று நடிகை மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    தமிழ் ரசிகர்களுக்கு ரஜினி அங்கிள் என்ற அந்த குரலை மறக்க முடியாது. அந்த குரலுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மீனா. பின்னர் கதாநாயகியாகவும் ரஜினி, விஜயகாந்த், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். 

    மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் நடிப்பதன் மூலம் மீண்டும் பிரவேசித்துள்ளார். இந்நிலையில் அவர் தான் தமிழில் நடிக்காதது ஏன் என்பது குறித்து கூறியுள்ளார். 

    மீனா

    இதில் அவர் மலையாள படங்களில் கதை அழுத்தமாக இருக்கும். நடிகர்களுக்காக கதையில் பெரியளவில் மாற்றம் அமையாது. யார் நடிக்கிறார்கள் என்பதை விட கதாபாத்திரம் தான் பிரதானம். இது போல மற்ற மொழிகளில் இல்லை. தமிழ், தெலுங்கிலும் மெல்ல இந்த மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இது இன்னும் அதிகமாகி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்துள்ளார்.
    ×