என் மலர்
சினிமா செய்திகள்
பாவெல் நவகீதன் இயக்கத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா, காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் வி1 படத்தின் விமர்சனம்.
அருண் காஸ்ட்ரோ நிக்டோபோபியா என்னும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இருளில் அவரால் இருக்க முடியாது. மனைவியை இழந்த சோகத்தில் போலீஸ் பணியில் இருந்து விலகி தடயவியல் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார். ஒரு பெண் கழுத்தில் குத்தப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை தவிக்கிறது.
புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியான அருணை திரும்ப அழைக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களின் உடல்மொழி, அசைவு என உளவியல் ரீதியாக நுன்னியமாக கவனிக்கும் அருணின் சந்தேக பார்வை பலர்மீது படர இறுதியில் உண்மையான குற்றவாளியை யார் என்பதை அருண் எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.

விசாரணை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ராம் அருண் காஸ்ட்ரோ கச்சிதமாக பொருந்துகிறார். உளவியல் ரீதியாக விசாரணை செய்யும்போது அவரது நடிப்பில் பக்குவம் தெரிகிறது. முதல் படத்திலேயே இயல்பாக நடித்து படத்தை சுவாரசியமாக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்ற பாத்திரங்களான காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். படம் தொடங்கியது முதல் முடிவது வரை ஒரு துப்பறியும் நாவலை படித்த அனுபவம் ஏற்படுகிறது. ஒரு சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். அது படத்தின் வேகத்துக்கு தடையாக அமைகின்றன. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் காலையில் துரத்த தொடங்கியது இரவு வரை நீடிப்பது மட்டும் லாஜிக் குறையாக தெரிகிறது.

டிஎஸ்.கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவில் குற்றங்களின் இருளும் விசாரணையின் வெளிச்சமும் நம்மை ஆட்கொள்கிறது. ரோனி ரெபெலின் பின்னணி இசை படத்துக்கு வேகம் கொடுக்கிறது. சிஎஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு விசாரணையை கண்முன் கொண்டு வருகிறது.
மொத்தத்தில் ‘வி1’ விறுவிறுப்பு.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, சுனைனா, கிராவ்மகா ஸ்ரீராம், லீலா சாம்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் சில்லுக்கருப்பட்டி படத்தின் விமர்சனம்.
4 வெவ்வேறு கதைகள். ஆனால் நான்கிலும் ஒரே மையப்பொருள் தான். ஆனால் வயதுக்கு தகுந்தாற்போல் அது மாறுபடுகிறது. அழகிய கவிதை போன்ற ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் ஹலிதா ஷமீம். அவருக்கு பாராட்டுகள்.
ராகுல் குப்பத்தை சேர்ந்த பையன். மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குவது அவனுக்கும் அவனது நண்பர்களுக்குமான பொழுதுபோக்கு. நீல நிற பை ஒன்றில் கிடைக்கும் பொருள்கள் அவனுக்குள் இருக்கும் மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன. தினமும் வரும் அந்த பையை பின் தொடர்கிறான். எதற்காக அதை பின் தொடர்கிறான்? அவனுடைய தேடல் முழுமை பெற்றதா? என்பது ப்ளுபேக் குறும்படம். பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி, காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன.

காக்கா கடி கதை: மணிகண்டன் - நிவேத்திதாவுடையது. மணியின் திருமணத்துக்கு நாள் குறித்து இருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு நோய் உண்டாகிறது. சின்ன பிரச்சினையாக தொடங்கும் அது கேன்சராக உருவெடுக்க திருமணம் நின்றுபோகிறது. சோகமே உருவாய் மாறும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேத்திதாவின் நட்பு ஆறுதலாக மாறுகிறது. அதுவே அம்மாவின் அரவணைப்பாக மாறுவது அழகான கவிதை. நிவேத்திதா - மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும் நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.

டர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும் லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம். தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.

ஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டுகொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார்? கனி எப்படி மாறினார்? என்பதே அம்முவின் கதை.
பால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.
அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின் ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது. பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன் ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம்.
சிறுகதைகள், கவிதைகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் ஆர்வத்தை ஏற்படுத்தும். நான்கு படங்களுமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர் மல்க, உணர வைக்கின்றன. பிரபலங்களை நம்பாமல் ஹலீதா தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை வழங்கி இருக்கிறார். அந்த எழுத்தை அப்படியே படமாக்கி நமக்கு ஒவ்வொரு குறும்படத்திலும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும்.
மொத்தத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ அருமை.
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார், தன்னுடைய மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார், ராதிகா, மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, ‘கதையும், எங்கள் கேரக்டரும் சரியாக அமைந்ததால், ஒரே படத்தில் மூவரும் இணைந்து நடிக்கிறோம்’ என்றார்.

மேலும், போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி, அந்த படம் பிரச்னையில் சிக்கி, ரிலீசாகும் வரை காத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு தந்தையாக என் மகளுக்கு நான் உதவி செய்து, பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது நான் அதை செய்யாமல் இருந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். இதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று வரலட்சுமி தனியாகப் போராடி ஜெயித்திருக்கிறார்’ என்று கூறினார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது இசைக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவரது இசையில் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இசைக்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விருதை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு வில்லியாக குஷ்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலரும் நடித்து வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்க, மீனா அவரது மனைவியாக ஒரு கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். தான் நடிக்கும் வேடம் குறித்து மீனாவே சொல்லிவிட்டார். இந்த நிலையில், குஷ்பு எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு நெகட்டிவ் ரோலில் அதாவது வில்லியாக நடிப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. அதாவது படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் நடித்தது போன்று ஒரு அதிரடி வில்லி வேடம் என்றும் சொல்லப்படுகிறது.
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிப்பில் உருவாகி இருக்கும் கால் டாக்ஸி திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில், தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.
இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகத காடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடிக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மூன்று முக்கிய படங்களுடன் அடுத்த ஆண்டை தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம். இதில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.
அதுபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஜெயில், சூரரைப்போற்று, தலைவி ஆகிய மூன்று படங்களுடன் என்னுடைய அடுத்த வருடம் தொடங்க இருப்பதாக ஜிவி.பிரகாஷ் அறிவித்து இருக்கிறார்.
மாறன் இயக்கிய பச்சை விளக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா என் கண்ணுக்கு அவர் கதாநாயகன், வாத்தியாராக தெரிகிறார் என்று கூறினார்.
டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'. புதுமுகங்கள் தீசா, தாரா, 'அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'வேதம் புதிது' தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன் மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ‘மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம். நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், டாக்டர் மாறன்.

பாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜூன், அவரது படங்களை பார்த்து தீவிர ரசிகன் ஆனேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 3 மொழிகளிலும் தனக்கு என்று தனி மார்க்கெட்டுடன் அர்ஜூன் வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ஹீரோ படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- நான் நடிக்க வந்த புதிதில் நடிக்க தெரியாமல் சிரமப்பட்டேன்.
மிக இளம் வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் இந்த சிரமம் ஏற்பட்டது. அதனாலேயே என்னவோ நடிப்பை விட ஆக்ஷன் அதிகம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தேன். பின்னர் சிவாஜி, நாகேஷ் படங்களை பார்த்து அவர்களிடம் இருந்துதான் நடிப்பை கற்றுக்கொண்டேன்.

ஒரே மாதிரியான படங்களில் நடித்ததால் ஒரு சமயம் மார்க்கெட்டை இழந்தேன். அதன் பிறகு தான் இயக்கம், தயாரிப்பு எனவும் கவனம் செலுத்த தொடங்கினேன். அதன் பின் என் கேரியரில் ஏற்றம் வந்தது. இப்போது சினிமாவை நேசித்து ரசித்து நடிக்கிறேன். நான் புருஸ்லீயின் படங்களை பார்த்து அவரது தீவிர ரசிகன் ஆனேன். அதன் பின்னர் தான் ஆக்ஷன் படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா, அவரை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. மாசிலாமணி, வம்சம், சமர், தெறி, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சுனைனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி உலாவுகிறதே, அது உண்மையா எனக் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சுனைனா, "அது உண்மையல்ல. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என தெரியவில்லை. எனது திருமணம் பலர் முன்னிலையில் தான் நடக்கும்", என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தாண்டு இவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலை அவர் சமீபத்தில் வெளியிட்டார். சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இது விளையாட்டு சம்பந்தப்பட்ட குடும்ப திரைப்படம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் ராஜபீமா திரைப்படத்தின் முன்னோட்டம்.
ஆரவ், ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ராஜபீமா”. சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஓவியா, யாஷிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: இத்திரைப்படம் அனைவரும் எதிர்பார்க்கும் அமசங்களை தாண்டி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் திருப்பங்கள் கொண்டதாக இருக்கும். இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக கமர்ஷியல் கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.






