என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன், தற்போது எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
    அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு, தான் நடித்த படங்களில் கவர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

    நித்யா மேனன்

    படங்களில் கவர்ச்சிக்கு தடைபோட்டு விட்டு அட்டைப்படத்திற்கு அவர் கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் திரைப்படம் அமெரிக்காவில் பிரிமீயர் ஷோவாக திரையிடப்பட இருக்கிறது.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’.  இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது.

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரஜினி

    ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    தர்பார் திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    திரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார். 

    சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, " '96' படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் என தெரியாது. படம் வெற்றியடையும். அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன். 

    திரிஷா

    ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்று நிகழும். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு '96' படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது.

    காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன். எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது’ இவ்வாறு திரிஷா கூறினார்.
    சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகியோர் நடிப்பில் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பஞ்சராக்‌ஷரம்’ படத்தின் விமர்சனம்.
    சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகியோர் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஐந்து பேரும் ஒரு திருமண விழாவில் சந்தித்து நட்பாகிறார்கள். விழாவில் இருந்து ட்ரிப் செல்லும் இவர்களுக்கு பஞ்சராக்‌ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது. 

    இந்த புத்தகத்தை படிக்கும் இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை ஐந்து பேரும் எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

    நீர், காற்று, பூமி, தீ, வானம் ஆகிய இயற்கையின் கூறுகளை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வைரமுத்து. சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக மனதில் பதிகிறார். சனா அல்டாப் (நீர்) மனிதாபிமான பெண்ணாக கவனம் பெற்றிருக்கிறார்.

    பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். அதனால் நல்லதே நினைப்போம். என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். நல்லவர்களிடம் ஒரு கெட்டதும், கெட்டவர்களிடமும் ஒரு நல்லதும் இருக்கும் என்ற எதார்த்தத்தை சொல்லியிருப்பது சிறப்பு.

    பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்

    படத்திற்கு பெரிய பலம் சுந்தர மூர்த்தியின் இசை. இவரின் பின்னணி இசையோடு யுவாவின் ஒளிப்பதிவோடு படத்தை பார்க்கும் போது திரில்லிங்கான உணர்வு கொடுக்கிறது. 

    மொத்தத்தில் ‘பஞ்சராக்‌ஷரம்’ பார்க்கலாம்.
    தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் டாப்சி, எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். 

    முன்னணி நடிகையான இவர் அரசியல் கருத்து தெரிவிப்பதில் கவனமாக இருக்கிறார். குடியுரிமை சட்டம் பற்றியும், அதற்காக நடக்கும் போராட்டங்கள் பற்றியும் கேட்டபோது, ''எனக்கு அந்த அளவுக்கு, பொது அறிவு, அரசியல் அறிவு இல்லை. 

    டாப்சி

    ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன், அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாததால், எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஏதோ பெரிதாக ஒரு விஷயம் நடக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது,'' என்றார். 
    எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக அஜித் பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார்.
    நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. நேர்கொண்ட பார்வை படம் ரீமேக் கதை என்பதால், அடுத்த படமான வலிமையை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் எச்.வினோத். 

    தற்போது துவங்கியுள்ள ஷூட்டிங்கில் முதன்முதலில் ஒரு ஆக்ஷன் காட்சியை தான் படமாக்கி வருகிறார். அதில் ஸ்டைலான மீசையுடன் இருக்கும் அஜித்தின் புது தோற்றம் கசிந்துவிடகூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் மொபைலுக்கு அனுமதி இல்லை.

    அஜித்

    அஜித் 100 அடியில் குதிப்பது போல் ஒரு காட்சியை எடுத்துள்ளார்களாம். அஜித்தும் டூப் போடாமல் அந்த காட்சியில் நடித்து பிரம்மிக்க வைத்தாராம். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிய, சென்னையில் செட் அமைத்து விரைவில் எடுக்கவிருக்கிறார்கள்.
    100 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த அதர்வா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார்.
    அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அடுத்து இவர் மேலும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம், இது. ரவீந்த்ர மாதவா டைரக்டு செய்கிறார். 

    இவர் டைரக்டர்கள் சுசீந்திரன், பூபதி பாண்டியன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர். அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ படத்துக்கு வசனம் எழுதியவர். படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான ‘ஈட்டி’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்து இருந்தார். 

    அதர்வா

    படத்தை பற்றி டைரக்டர் ரவீந்த்ர மாதவா கூறியதாவது:- அதர்வா முரளி ஏற்கனவே ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தாலும், அந்த படத்தின் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், இது. அதிரடி சண்டை காட்சிகளுக்கு அதர்வா முரளி அழகாக பொருந்துகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேடிக்கொண்டிருக்கிறோம். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கோடை விடுமுறை விருந்தாக படம் திரைக்கு வரும்.’’
    கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள சத்யராஜ், அடுத்ததாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான குயின் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். 

    இதேபோல் முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 

    சத்யராஜ்

    இந்த நிலையில் முதல் முறையாக சத்யராஜ், சீதா, சுகன்யா ஆகியோரும் புதிய வெப் தொடர் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இந்த தொடரை தாமிரா இயக்குகிறார். இவர் ஏற்கனவே பாலசந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டை சுழி, சமுத்திரக்கனி நடித்த ஆண்தேவதை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். காதல், நகைச்சுவை, குடும்ப கதையம்சத்தில் இந்த வெப் தொடர் தயாராகிறது. படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.
    மனோஜ் ராம் இயக்கத்தில் வித்தார்த், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் நட்சத்திரா படத்தின் முன்னோட்டம்.
    மனோஜ் ராம் இயக்கத்தில் வித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் நட்சத்திரா. நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்‌ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் ராகவன் இசையமைக்க, எம்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி குமரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியதாவது: மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் “நட்சத்திரா” படத்தைப் பற்றி படக்குழு கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த ஆச்சர்யங்களை ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். “நட்சத்திரா” படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும் என்றார்.
    சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு வரும் 28 -ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்க உள்ளார். வைரமுத்து மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- “9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப்போகிறாராம். நான் ஒன்றை இங்கே மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. ஆனால் வெளியில் சொன்ன எனக்கு வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வைரமுத்து, சின்மயி

    கவுரவ டாக்டர் பட்டம் என்பது வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக வழங்கப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம். உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் சிறந்த ரோல் மாடலை உதாரணமாக காட்டியிருக்கீங்க. வெல்டன் தனியார் பல்கலைக்கழகம்” என கடுமையாக பதிவிட்டுள்ளார். 

    “வைரமுத்து இந்த ஒரு வருடத்தில் அரசியல் மற்றும் கலைதுறை பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மீதான புகார் குறித்து எந்த விசாரணையும் இல்லை. நல்ல நாடு.. நல்ல மக்கள்” என்றும் கூறி உள்ளார்.
    எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி, ஜிஎம்.குமார், சுஜாதா, கோவிந்தமூர்த்தி, சாம்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் நான் அவளை சந்தித்தபோது படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்தோஷ் பிரதாப் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார். வீட்டில் அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு சென்னை வரும் சாந்தினி, உறவினர் வீட்டின் முகவரியை தொலைத்துவிட்டு தவித்துக்கொண்டு இருக்கிறார். சாந்தினியின் நிலையை பார்த்து பரிதாபப்படும் சந்தோஷ் அவரை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டுபோய் விடுகிறார். 

    ஆனால் ஊர் பஞ்சாயத்தில் சந்தோஷை தவறாக நினைத்து சாந்தினியை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். சாந்தினியுடன் ஒரு இரவு இருந்துவிட்டு சென்னைக்கு திரும்பி விடுகிறார். ஆனால் சாந்தினியின் நினைவு வாட்டுவதால் அவரை திரும்ப ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷின் வீட்டில் சாந்தினியை ஏற்றுக்கொண்டார்களா? சந்தோஷ் சினிமாவில் ஜெயித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

    நான் அவளை சந்தித்தபோது

    தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர். சந்தோஷும் சாந்தினியும் அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். சினிமாவில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டத்தை சந்தோஷ் திரையில் இயல்பாக பிரதிபலித்துள்ளார். முதலில் சாந்தினியை ஒதுக்கும் அவர் பின்னர் அவரது அன்பை புரிந்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். 

    நான் அவளை சந்தித்தபோது

    எதிர்பாராமல் கிடைத்த வாழ்க்கையாக இருந்தாலும் அது நம்மைவிட்டு போய்விடுமோ என்ற போராட்டத்தை சாந்தினி தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்தமூர்த்தி, சாந்தினியின் பெற்றோரான ஜிஎம்.குமார், சுஜாதா உள்ளிட்ட மற்ற அனைவருமே தங்கள் சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். 

    நான் அவளை சந்தித்தபோது

    இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் எளிய கதையை எடுத்து அதற்கு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கொடுத்து இருக்கிறார். படத்தின் இறுதியில் நிஜ நபர்களை கதாபாத்திரங்களுடன் பொருத்தி காண்பிப்பது சுவாரசியம். 

    ஹித்தேஷ் முருகவேலின் இசையும் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. 

    மொத்தத்தில் ’நான் அவளை சந்தித்தபோது’ உணர்வுப்பூர்வமானது.
    சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39). இவர் அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா. டி.வி. சீரியல் நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று காலை கோபிநாத் வேலை பார்த்த அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    கோபிநாத் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு டி.வி. சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமான ரேகாவை காதலித்து திருமணம் செய்து உள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரேகா தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

    கோபிநாத் கடந்த 6 மாதங்களாக ஜெ.ஜெ. நகரில் இயங்கி வரும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அப்போது அவருக்கு அதே நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கோபிநாத் கடன் பிரச்சனையிலும் சிக்கி இருந்தார்.

    இதனால் மனைவி ரேகாவிடம் வழக்கம் போல் தகராறு செய்து விட்டு அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது தற்கொலை முடிவுக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×