என் மலர்
சினிமா செய்திகள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் என்ற இணையதள தொடருக்கு தடை இல்லை என்று ஐகோர்டு உத்தரவு விட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதுபோல குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இந்திய தேர்தல் ஆணையம், ‘மனுதாரரின் மனுவைப் பொறுத்தவரை, தொடரை பார்த்து, அது கற்பனை கதையா? உண்மை சம்பவமா? என்பது உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்’ என்று வாதிடப்பட்டது.

இந்த தொடரை இயக்கிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ‘நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், அவரது வாழ்க்கை வரலாற்று கதை கொண்ட திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால். குயின் தொடரை பொருத்தவரை கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவத்தை தழுவிய கற்பனை கதை என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், குயின் இணையதள தொடரினால், உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். குயின் தொடருக்கு தடை இல்லை’ என்று உத்தரவிட்டனர்.
நடிகர் பிருத்விராஜ் தன்னுடைய ரசிகர்களிடம் பேசும்போது, அதிகம் பேசாதவர் என்றாலும் ஈர்க்கக்கூடிய ஆளுமை அந்த நடிகரிடம் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மலையாள நடிகர் பிருத்விராஜ் தமிழில் மொழி, கனா கண்டேன், பாரிஜாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தன் ரசிகர்களை சந்தித்து, அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் விஜய் குறித்து பிரித்விராஜிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிருத்விராஜ் அளித்துள்ள பதில் தான் தற்போதைய டுவிட்டர் டிரெண்டாக இருக்கிறது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். விஜய் குறித்து பிருத்விராஜ் கூறியதாவது: 'நான் பல முறை விஜய் சாரை பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்தியாவின் மிக பெரிய நடிகர் அவர். அதாவது தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரிய நடிகர். அவர் படங்கள் அந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன. அவருடைய சினிமா வெளிவரும்போது தமிழ் சினிமா வியாபாரமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா வியாபாரத்தின் ஒரு முக்கியமான கண்ணி, விஜய் சார். ஒரு பெரிய நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் கடந்த சில ஆண்டுகளாக அவரின் வளர்ச்சி என்னைக் கவரக்கூடிய விஷயமாக இருக்கிறது. தன்னுடைய இடம் என்ன, என்பதைத் தெளிவாக அறிந்து தன் சினிமாக்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வதில் மிகத் திறமையானவர் அவர். அதிகம் பேசாதவர் என்றாலும் ஈர்க்கக்கூடிய ஆளுமை அவர். அமிதாப் பச்சன் யார் என்று தெரியாதவர் இருக்கும் ஒரு சபையில் அமிதாப் பச்சன் வந்தாலும் நாம் எழுந்து நிற்கக்கூடும். அது விஜய்க்கு உண்டு''. இவ்வாறு பிருத்விராஜ் பேசியுள்ளார்.
தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை சாப்பிட விடாமல் பட்டினி போட்டதாக பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீடூ இயக்கம் வந்த பிறகு நடிகைகள் நடிகர்கள் மீது புகார் கூறுவது அதிகரித்து வருகிறது. நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரை தொடர்ந்து இந்தி நடிகை நேகா துப்யா, ஹீரோ ஒருவர் தன்னை பட்டினி போட்டதாக வித்தியாசமான புகார் கூறியிருக்கிறார்.
தமிழில் அஜீத் நடித்த வில்லன் படத்தை தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். இதில் கதாநாயகனாக ராஜசேகரும் கதாநாயகியாக நேகாவும் நடித்தார்கள். மேலும் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த பரம் வீர் சக்ரா, தருண் நடித்த நின்ன இஷ்டப்படன்னு மற்றும் இந்தி படங்களிலும் நேகா நடித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:- தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தேன். மதிய உணவு வேளை வந்ததால் பசியாக இருந்தேன். சாப்பாடு எடுத்துவரும்படி கூறியபோது, இன்னும் ஹீரோ சாப்பிடவில்லை. அவர் சாப்பிட்டு முடித்தபிறகு நீங்கள் சாப்பிடுங்கள் என்றனர்.
வேறு ஒருவரிடம் கேட்ட போது அங்கிருந்த எல்லோருமே அதே பதிலை சொன்னார்கள். ஹீரோ சாப்பிட்டு முடிக்கும் வரை என்னை சாப்பிடவே விட வில்லை. அதுவரை பட்டினியாக இருந்தேன்.
இவ்வாறு அவர் புகார் கூறியுள்ளார்.
படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ள நடிகர், நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறாராம்.
நடன டைரக்டர் இந்தி பட உலகில் இரண்டாவது ரவுண்டு வரவேண்டும் என்று ஆவலுடன் மறுபிரவேசம் செய்து இருக்கிறாராம். அவர் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த இந்தி படத்தில், அவருடைய மனம் கவர்ந்த நடிகைதான் நாயகி.
படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கி பழகுவதை பார்த்து, ‘த’ நடிகை முகம் சுளித்தாராம். நடன டைரக்டர், இந்தி நடிகையுடன் நெருக்கமாக இருப்பது, ‘த’ நடிகைக்கு பிடிக்கவில்லையாம்!
செ.ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி, சிவ நிஷாந்த், அய்ரா, திவ்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் முன்னோட்டம்.
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. செ.ஹரி உத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக அய்ரா, திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய் கிரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, வித்யாசாகர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படம் குறித்து இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. ஒரு தரமான கமர்ஷியல் படமா இத உருவாக்கியிருக்கோம் என கூறினார்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் காக்கா முட்டை ரமேஷ், சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிழை’ படத்தின் விமர்சனம்.
சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர்.
குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்க்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் மனம் உடையும் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் தங்கள் மகன்களை அடித்து விடுகின்றனர். இதனால் கோபித்துக்கொண்டு மூன்று சிறுவர்களும் சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். அங்கு எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டார்களா? மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காக்கா முட்டை ரமேஷ், நஷத், கோகுல், தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். மாணவர்களாக வரும் 3 சிறுவர்களின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. மூன்று தந்தைகளையும் அவர்களின் மகன்களையும் பற்றிய கதை. சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தை கதாபாத்திரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதை நகரத்துக்கு நகர்ந்த பிறகு வேகம் எடுக்கிறது. படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு பாடமாகவும் கதை நகர்ந்து இருக்கிறது. கல்வியின் மகத்துவத்தை சமூக அக்கறையோடு அழுத்தமான திரைக்கதையில் உயிரோட்டமாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
பைசல் இசையில் பாடல்கள் மனதில் நிற்கிறது. பாக்கியின் ஒளிப்பதிவு காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.
மொத்தத்தில் ‘பிழை’ நல்ல புரிதலை உண்டாக்கும்.
வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தொட்டு விடும் தூரம்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் விவேக்ராஜ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தாயார் சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.
நாயகியை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஜாலியாக காதலித்து வரும் சூழலில், நாயகி கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது. பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர், பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா? காதலியை சந்தித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார். நாயகனுக்கும், நாயகிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
நாயகனின் தாயராக நடித்துள்ள சீதா, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.

இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம் அருமை.

நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், ராம் குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதல் பயணம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியிட்டது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த போஸ்டரில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார். புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தகவல் பரவியதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அது வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்போஸ்டரில் விஜய், விஜய் சேதுபதி இடம்பெற்றிருப்பர் என்றும், அதனை விஜய் சேதுபதியின் பிறந்த தினமான ஜனவரி 16-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர். தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி, சதீஷ் ஆகியோர் காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இந்தாண்டு ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.
தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த வெற்றிபெற்ற திரைப்படம் அசுரன். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரும் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர்.

அதன்படி ஸ்ரேயா, அனுஷ்கா பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் நடிக்க மறுத்தனர். இதனால், தற்போது பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதேபோல் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அது இரண்டுமே தனக்கு சமம்தான் என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் 2 படங்களும் கன்னடத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- “வெற்றி எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும். அதற்காக வெற்றி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் தோல்வி அடைந்த படங்களை ஒரு மாதிரியும் என்னால் பார்க்க முடியாது. எனக்கு இரண்டுமே சமம்தான். வெற்றி அடைந்த படங்களால் இன்னும் சில பட வாய்ப்புகள் புதிதாக வரலாம். இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

ஆனால் எனது பார்வையில் பணமும் இன்னொரு படவாய்ப்பும் கிடைப்பது முக்கியம் இல்லை. அந்த படத்துக்காக நாம் எவ்வளவு உழைத்தோம். அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். சரியான பலன் வரவில்லை என்றால் நமது உழைப்பு வீணாகி விட்டதே என்ற வருத்தம் இருக்கும்.
ஆனாலும் அதில் கற்றுகொண்ட விஷயங்களை நினைவுபடுத்தி மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். சம்பளத்தில் நடிகர்-நடிகைகளுக்கு வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பலன்கள் கதாநாயகர்கள் மீது எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துகிறதோ அதே அளவு கதாநாயகிகள் மீதும் ஏற்படுத்தும். சில நேரங்களில் கதாநாயகர்களை மட்டுமே பாதிக்கும்படியும் இருக்கும்.
இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு மிகவும் பிரபலமான இயக்குனர் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது ‘பட்டாஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்திலும் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் தொடர்ந்து நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் D44 படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






