என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலிக்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி சவால்விட்டுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த  நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.

    இந்தச் சவால் தொடர்பாகத் சந்தீப் ரெட்டி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "ஒரு ஆணால் வீட்டு வேலைகளைச் சிறப்பாக செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்யவிடமாட்டார். தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN சவாலை ராஜமவுலி அவர்களும் செய்து ஒரு வீடியோ பதிவேற்றி பலரை ஊக்குவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்". இவ்வாறு சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார். 

    இந்த சவாலை ஏற்ற ராஜமவுலி விரைவில் வீடியோவை பதிவிடுவதாக கூறியுள்ளார்.
    ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர் பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

    அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன் மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது. 

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது சகோதரி ரங்கோலி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

    சமீபத்தில் மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். டுவிட்டருக்கும் புகார்கள் அனுப்பினர்.

    கங்கனா ரணாவத்

    இதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது. இதனால் ஆத்திரமான கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருப்பதாவது: எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார். 

    எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை. அவர் மீது பாராகானும், ரீமாவும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். இந்தியாவில் டுவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு நமது நாட்டுக்கு சொந்தமாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கனவே 3 அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது 4-வதாக புதிய அணி களமிறங்க உள்ளது.
    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். வருகிற 2 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஜூன் 21-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 

    இந்த தேர்தலில் டி.சிவா தலைமையில் ஒரு அணி, மறைந்த ராமநாராயணின் மகன் முரளி தலைமையில் ஒரு அணி, டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணி ஆகிய 3 அணிகள் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    தயாரிப்பாளர் சங்கம் லோகோ

    இந்த நிலையில், “குறைந்த முதலீட்டு பட அதிபர்கள் சார்பில் செந்தில் ஆனந்த், கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையில் 4-வது அணியாக போட்டியிட இருக்கிறோம்” என்று ஒரு புதிய அணி அறிவித்து இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள், மே 19-ந்தேதி. வாபஸ் பெற கடைசி நாள், மே 24-ந்தேதி ஆகும். 

    பட அதிபர்கள் தங்கள் அணிகளுக்கு இப்போதே ஆதரவு திரட்ட தொடங்கி விட்டார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஓட்டுப்போட தகுதி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,300 பேர். இவர்கள் ஓட்டுப்போட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
    அஜித் நடித்த என்னை அறிந்தால், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை இப்போதைக்கு பார்க்க வேண்டாம் என இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இருந்தபடியே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

    அந்த வகையில் ராமநாதபுரம் எஸ்.பி. டாக்டர் வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். 

    மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் படங்கள், புத்தகங்கள் படிக்க அறிவுறுத்திய அவர், தான் இயக்கிய என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஏனெனில் அந்த இரண்டு படங்களிலும் நாயகன் ஊர் ஊராக சுற்றுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், ஆகையால் அந்த இரு படங்களும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்காது என கூறியுள்ளார்.

    அதேபோல் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்குமாறு கூறினார். அப்படத்தில் சூர்யா உடற்பயிற்சி செய்வது போன்று நீங்களும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என கவுதம் மேனன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.   
    அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
    அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

    இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் நடக்கும் ஒர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.

    சவுந்தர்யா சர்மா

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா, மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம். 

    சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளார்.
    யஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கே.ஜி.எப். 2-ம் பாகத்தின் டீசர் வெளியாகுமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
    யஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடம் தவிர தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. படம் மொத்தம் ரூ.250 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இப்போது இதன் 2-ம் பாகம் இன்னும் அதிக பட்ஜெட்டில் , கேஜிஎப் சாப்வர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். 

    முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்ரோ‌ஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

    படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்துள்ளது. சுமார் 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, முடிந்துவிட்டது என்றும் போஸ்ட் புரொடக்‌‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக மொத்த திட்டங்களும் மாற்றப்பட உள்ளன. 

    இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதிக எதிர்பார்ப்பில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வந்தனர். இதுகுறித்து  தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இந்தப் படத்தின் டீசர் வெளியாகாது. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் டிரைலர் பிரமாண்டமாக வெளியாகும். அதனால் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார்.

    அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

    சிவகார்த்திகேயன்

    இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓ டி டி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிகுமார், மதுரை மாநகர போலீசாருடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
    மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மதுரை மாநகரில் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பொது மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மதுரை மாநகர போலீசாரும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒலிபெருக்கிகள், எல்.இ.டி. திரை பொருத்திய வாகனங்கள், ஆட்டோவில் பிரசாரம் ஆகியவை மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்பிணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நடிகரும், தன்னார்வலருமான சசிகுமார், தெப்பக்குளம் பகுதியில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சாலையில் நின்று இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்களிடம் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருங்கள், அனாவசியமாக வெளியே சுற்றாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். 

    மேலும் அவர் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பொதுமக்களுக்காக போலீசார் சிரமத்துடன் பணிபுரிகிறார்கள் என்பதையும் விளக்கினார். இதுகுறித்த வீடியோ காட்சிகளை நடிகர் சசிகுமார் தயார் செய்து மதுரை மாநகர போலீசாருக்கு வழங்கியுள்ளார். 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சி மதுரை மாநகர போலீஸ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகநூல் பயனாளிகள் அந்த வீடியோ காட்சியை பார்த்தனர்.
    கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
    பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

    கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும் வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.
    ஐ.டி. கம்பெனிகளுக்காக ஏப்ரல் 20-ந் தேதிக்கு மேல் ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
    கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஐ.டி. நிறுவனம் உள்ளிட்ட சில துறைகளுக்கான ஊரடங்கை நாளை (20-ந்தேதி) முதல் தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது: “கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு 25 ஆக இருந்தது. மறுநாள் மீண்டும் 56 ஆக உயர்ந்தது. 20-ந் தேதியில் இருந்து ஊரடங்கை நாம் தளர்த்தினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்த மேலும் 2 மாதங்கள் தேவைப்படும். மக்களே மே 3-ந்தேதி வரை சிரமத்துக்கு இடையிலும் ஊரடங்கை கடைப்பிடிக்க தயாராகி விட்டனர்.

    பார்த்திபன்

    ஆனால் இந்த ஊரடங்கை ஐ.டி. கம்பெனிகளுக்காக தளர்த்துவது சரியல்ல. அந்த நிறுவனங்கள் குறைந்த அளவு ஆட்களை வைத்து வேலை செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். அங்கு 50 பேர் வேலை செய்கிறார்களா? அல்லது 100 பேர் வேலை செய்கிறார்களா? என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தளர்த்தினால் கொரோனா தொற்று மேலும் அதிகமாகி, விளைவுகளை நம்மால் சந்திக்க முடியாது. பெரிய மருத்துவ வசதி உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளே சமாளிக்க முடியவில்லை.

    இதனால் 20-ந்தேதி தளர்த்துவது சரியாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை அமைச்சரிடம் தெரிவித்தேன். ஊரடங்கை கடுமையாக கடைப்பிடித்தால் 10 நாட்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம், தளர்த்துவது ஆபத்து என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
    முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பிரபல நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்- 7 போட்டியாளரும் ஆவார். தமிழில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்து இருந்தார். இந்தநிலையில் அஜாஸ் கான் முகநூலில் இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகர் அஜாஸ் கானை கைது செய்து உள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர போதை பொருள் வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ×