என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்துள்ளார்.
    சூர்யாவும் ஜோதிகாவும் நேரலையில் பேட்டி அளித்தனர். அப்போது “’36 வயதினிலே’ படத்துக்கு என்ன சம்பளம் தந்தீர்கள் என்பது பற்றி அப்போது கூறியிருந்தீர்கள், அது இப்போது மாறியிருக்கிறதா? ’பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்று சூர்யா -ஜோதிகா தம்பதியிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சூர்யா, “2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பணச் சுழற்சி செய்வோம்“ என்று பதிலளித்தார். உடனே ஜோதிகா, “இல்லை இல்லை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றங்கள் தான்.

    ஜோதிகா, சூர்யா


    தமிழ்நாட்டில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் இருக்காது. எனது ஒரு ட்ரெய்லர், டீசர் வந்தால் ஜோதிகா ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

    இறுதியாக சூர்யா, “ஆனால் ஜோதிகாவின் வங்கிக் கணக்குக்கு நன்றி. அதை வைத்து 2டி நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்“ என்று குறிப்பிட்டார்.
    பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன என்று எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை. சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சை உருவானது.

    அந்தப் பதிவுக்கு சமந்தாவின் ரசிகர்கள் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள். இதனிடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார் சமந்தா. அதில் ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமந்தா பதில் கூறியிருப்பதாவது:-

    சமந்தா


    உங்களின் துரதிர்ஷ்டம். நீங்கள் எனக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறீர்கள் என்பதை உணரவில்லை. பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன. அவமானங்கள் என்னைச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே நன்றி”. இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
    பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக 'தேசிய தலைவர்' என்ற பெயரில் உருவாக இருக்கிறது.
    பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என பல வெற்றி படங்களை தந்தவர்.

    தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

    தேசிய தலைவர்


    ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர்கள் எழுதிய "முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது.

    முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.

    நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு  விரைவில் தொடங்கயுள்ளது.
    மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி-சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    “கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு படம் இனிமேல் வருமா? என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருக்கிறார். இப்படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    பிருத்விராஜ், பிஜு மேனன்

    அதன்படி இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி-தனுஷ் நடிப்பதாக சொல்லப்பட்டது, பின்னர் சசிகுமார்-ஆர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது அந்த படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சகோதரர்களான இவர்கள் இருவரும் ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் உறுதியானால், அவர்கள் இணைந்து நடிக்கும் முதல் முழுநீள படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    கே.ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் தயாராகும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன் என 4 பேர் நாயகர்கள். சஞ்சிதா ஷெட்டியுடன், அறிமுகங்கள் ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா என 4 பேர் நாயகிகள். இவர்களுடன் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை கே.ஜானகி ராமன் இயக்கி உள்ளார். தரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    தேவதாஸ் பிரதர்ஸ் படக்குழு

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர்கள் சம்பந்தப்படுகிறார். அது தெரிந்த பிறகு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பது கதை. அவர்கள் யார் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது திரைக்கதையின் போக்காக இருக்கும் என கூறியுள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின், திருணம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலி மிஹீகாவை சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. 

    இந்நிலையில், ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளதாக அவரின் தந்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனவால் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராணாவின் திருமணம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். 

    ராணா, மிஹீகா பஜாஜ்

    மேலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள ராணா, கோலிவுட், பாலிவுட், டோலிவுட் உள்பட பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இயக்குனர் அட்லீ பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 ஆண்டு இடைவேளைக்கு பின் 'அந்தகாரம்' என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ. விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

    அந்தகாரம் பட போஸ்டர்

    இந்நிலையில் இப்படம் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் ஓடிடி-யில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இம்மாதம் 19-ந் தேதி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் அடுத்ததாக ரஜினி பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்திவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. இதுதவிர விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார்.

    கார்த்திக் சுப்பராஜ்

    இந்நிலையில், விக்ரமின் அடுத்தபடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியவர். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். 

    இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    வடிவேலுவின் கடிதம்

    அந்த கடிதத்தில், "நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

    அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    நபர் ஒருவர் வெட்டுக்கிளியை சாப்பிடும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை, அவரை கடுமையாக சாடியுள்ளார்.
    சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது. உகான் சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் விற்கப்படுகின்றன. இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது.

    சீனாவில் வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர். இதனை நடிகை ஸ்ரத்தா தாஸ் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று பதிவிட்டு கண்டித்தார்.

    இந்த நிலையில் தற்போது வெட்டுக்கிளிகளை சந்தையில் குவியலாக போட்டு விற்பது, அவற்றை பலர் வாங்கி செல்வது. சிலர் வெட்டிக்கிளிகளை உயிரோடு சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனை தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே. சிபிராஜுடன் லீ ஆகிய படங்களில் நிலா என்ற பெயரில் நடித்துள்ள இந்தி நடிகை மீரா சோப்ரா விமர்சித்துள்ளார். 

    அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘’வெட்டுக்கிளிகளை உணவுக்காக விற்பனை செய்கின்ற வீடியோவை பார்த்தேன். இது உண்மைதானா. உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை சாப்பிடுகிறார்களா. கொரோனாவில் இருந்து அவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா. அதிர்ச்சியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
    ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘அவள் அப்படித்தான்‘ படத்தின் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘அவள் அப்படித்தான்.‘ இதில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். ரஜினிகாந்த் விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் அவரது அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக ஸ்ரீப்ரியாவும், கமல்ஹாசன் ஆவணப்பட இயக்குனராகவும் நடித்து இருந்தனர்.

    வாழ்க்கையில் விரக்தியாக இருக்கும் ஸ்ரீப்ரியா மீது கமல்ஹாசனுக்கு மலரும் காதலும் அது நிறைவேறியதா என்பதும் கதை. படத்தில் இடம் பெற்ற உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. ஸ்ரீப்ரியாவும் விருது பெற்றார். அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்யப்போவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்து உள்ளார். இவர் அதர்வா, சமந்தா ஜோடியாக நடித்த பாணா காத்தாடி படத்தை இயக்கியவர்.

    பத்ரி வெங்கடேஷ்

    தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். பத்ரி வெங்கடேஷ் கூறும்போது, “அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் துல்கர்சல்மான், ஸ்ரீப்ரியா வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோரையும் நடிக்க வைக்க விருப்பம் உள்ளது. கதையின் ஜீவன் கெடாமல் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து திரைக்கதை உருவாக்கி உள்ளேன், இளையராஜா இசையமைத்தால் படத்துக்கு பெரிய பலமாக அமையும்” என்றார்.
    கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 

    இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. தியேட்டர்களில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. 

    மணிரத்னம்

    கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையுலகம் மீண்டும் செயல்பட தொடங்கியதும் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும். திரைப்பட துறை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் விதமாக நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். அரசு உதவியும் சினிமா துறைக்கு தேவைப்படுகிறது.

    நான் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டு உள்ளது. படத்துக்காக பிரமாண்ட போர்க்கள காட்சிகள் மற்றும் அதிகமான கூட்டத்தினர் பங்கேற்கும் காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது. இந்த காட்சிகளை எப்படி படம்பிடிக்க போகிறேன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த பணிகளை செய்து படத்தை முடிப்பேன்”

    இவ்வாறு மணிரத்னம் கூறினார்.
    ×