என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக உள்ளது.
    விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது படங்களும் தயாராகி வருகின்றன.

    அந்த வரிசையில், ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர் ராஜ் தருண் நடித்த ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். 

    கர்ணம் மல்லேஸ்வரி

    மேலும் இப்படத்தை கோனா வெங்கட் தயாரிக்க உள்ளார். மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரோஜா படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள்.

    ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் சமூக விலகலை கடைபிடிக்கவும் அதிகமானோரை படப்பிடிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் அரசு விதிமுறைகள் வகுக்கும் என்று தெரிகிறது. குறைந்த எண்ணிக்கையில் நடிகர்களையும் பெப்சி தொழிலாளர்களையும் வைத்துக்கொண்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறப்படுகிறது. 

    மணிரத்னம்

    கொரோனா முழுமையாக ஒழிந்தபிறகே பட வேலைகள் தொடங்கும் கட்டாயம் உள்ளது. எனவே இடைபட்ட காலத்தில் அரவிந்தசாமியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரோஜா படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது.
    காக்காமுட்டை படத்தில் சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ்-ரமேஷ் ஆகிய இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    தனுஷ் தயாரிப்பில், கடந்த 2014-ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. குப்பத்து பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன்.

    இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்தார்கள்.  இவர்கள் இருவருக்கும் பாராட்டுகள் பல கிடைத்தது. இதைத்தொடர்ந்து நயன்தாராவின் அறம் படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

    விக்னேஷ், ரமேஷ்

    இவர்கள் இருவரின் தற்போதைய தோற்றம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தாடி மீசையுடன் ஆளே மாறிப்போய் உள்ளனர். பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டையா இப்படி ஆயிட்டாங்க என நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர். அவர்கள் இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
    நடிகர் அக்‌ஷய்குமார் 3 பேருக்காக ஒரு விமானத்தையே புக் செய்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், தனது தங்கை மற்றும் அவரது குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்ய, அந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் அக்‌ஷய்குமார் புக் செய்ததாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் அப்படி செய்ததாகவும் செய்திகள் வலம்வந்தன.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: "எனது தங்கை அவரது குழந்தைகளுடன் செல்ல நான் முழு விமானத்தையும் புக் செய்ததாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது. லாக்டவுன் போடப்பட்டதில் இருந்து அவர் எங்கும் பயணம் செய்யவில்லை. மேலும் அவருக்கு இருப்பது ஒரே ஒரு குழந்தை தான். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தனது சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து நடிகர் சோனுசூட் உதவியுள்ளார்.
    தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சோனு சூட், பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சமூகப் பணிகளில் இறங்கியுள்ள சோனுசூட், தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார். 

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கினார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உதவுவதற்காக தனி கால்சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    சோனுசூட், புலம்பெயர் தொழிலாளர்கள்

    அந்தவகையில், கேரள மாநிலம் கொச்சியில் சிக்கி தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவுமாறு கேட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசிய சோனு சூட், அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். அதன் விமான கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொண்டார். சோனுசூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
    சர்ச்சைக்குரிய காட்மேன் வெப் தொடரின் தயாரிப்பாளர்-இயக்குனர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ‘காட்மேன்’ என்ற பெயரில் இணையதள தொடர் ஒன்று ஜூன் 12-ந் தேதி முதல் வெளியிடப்பட உள்ளதாக தனியார் தொலைக்காட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தொடரின் டிரெய்லர் காட்சிகளும் வெளியானது. 

    அந்த காட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், எனவே ‘காட்மேன்’ இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசுவ இந்து பரி‌‌ஷத் (தமிழ்நாடு) உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

    காட்மேன் வெப் தொடர் போஸ்டர்

    இந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் கிரைம்’ போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். ‘காட்மேன்’ இணையதள தொடரின் தயாரிப்பாளர் இளங்கோவன், இயக்குனர் பாபு ஆகியோர் மீது 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
    அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை என்று நடிகர் மனோபாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    நகைச்சுவை நடிகர்களான வடிவேலு மற்றும் சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்றதால், இந்தக் கூட்டணி படங்களிலும் தற்போது இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார். 

     இதற்கு வடிவேலு, கடந்த மாதம் 19-ம் தேதி  சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்நிலையில் நடிகர் மனோபாலா கூறும்போது, "வடிவேலுவுக்கும் எனக்கும் 30 வருஷ நட்பு. அவர் என் மேல் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை. வடிவேலு என்னை மன்னிச்சிரு என்று கூறியுள்ளார்.
    பிகினி உடையில் நடிக்கச் சொல்லி படக்குழுவினருக்கு என்னை ஆறு மாதகாலமாக கேட்டனர் என்று நடிகை கிரண் கூறியிருக்கிறார்.
     'ஜெமினி' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் 'வில்லன்', பிரஷாந்துடன் 'வின்னர்', கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்', எஸ்ஜே சூர்யாவின் 'நியூ' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

    குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த 'வின்னர்' படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் பிகினி உடை அணிந்தது குறித்து வீடியோவுடன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் கிரண். 

    அதில், ''பிகினி உடையில் நான் முதலும் கடைசியுமாக நடித்த காட்சி. என்னை 2 பீஸ் உடையில் நடிப்பதற்காக 6 மாதமாக என்னிடம் கேட்டனர். ஆனால் அந்த உடை அணிவது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. படப்பிடிப்பின் போது உடல் எடை பிரச்சனையாக இருந்தது. ஆனால் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்று குறிப்பிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருக்கும் தனஞ்செயனின் தாயார் ஜகதம்மாள் இன்று காலமானார்.
    தயாரிப்பாளர், எழுத்தாளர், விநியோகஸ்தர் என பன்முகத் திறமை கொண்டவர் தனஞ்செயன். இவர் பாஃப்டா என்ற பிலிம் இஸ்டியூட்டையும் நடத்தி வருகிறார். தற்போது இவர் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகும் கபடதாரி படத்தைத் தயாரித்து வருகிறார்.

    இந்நிலையில் தனஞ்செயன் சமூகவலைதளத்தில் தனது தாயார் இன்று காலை மரணமடைந்ததாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்த பதிவில், எனக்கு எல்லாமுமாக இன்று வரை இருந்த என் அன்பு அன்னை ஜகதம்மாள், இன்று காலை அமைதியாக என்னை விட்டு பிரிந்தார். அவரின் ஆசிகள் என்றுமே என்னுடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்” என பதிவிட்டுள்ளார்.
    இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காட்மேன் வெப்சீரிஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
    ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்சீரிஸ் காட்மேன். இதை விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ஜீ5 தளத்தில் ஜூன் 12-ம் தேதி வெளியாக இருக்கும் இத்தொடரின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் பிராமண சமூகத்திற்கு எதிரானதாகவும், பாலுணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான காட்சிகள் நீக்கப்பட்டு புதிய டீசரும் வெளியிடப்பட்டது.

    இருப்பினும் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், தயாரிப்பாளர் இளங்கோவன் மற்றும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மீது 6 பிரிவுகளின் கீழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஜூன் 3-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என பதிவிட்டுள்ளது.
    தமிழில் தற்போது பிரபலமாகி வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெண்ணியவாதியாக மாற்றிய சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.
    ‘யூ டர்ன்’ என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘காற்று வெளியிடை’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘மாறா’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்


    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் ஷ்ரத்தா, பொது முடக்கம் காரணமாகத் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

    ஷ்ரத்தா தனது பதிவில், ‘எனக்கு 14 வயது இருக்கும்போது குடும்பத்தினருடன் ஒரு பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது எதிர்பாராமல் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அம்மா அங்கு என்னுடன் வரவில்லை. அதனால் அருகில் இருக்கும் என் உறவினரிடம் அது குறித்து கூறினேன்.

    எனது கையில் சானிட்டரி பேட் எதுவும் இல்லை என்பதால் மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் இருந்த வேறொரு பெண் நான் பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, “பரவாயில்லை குழந்தை, கடவுள் உன்னை மன்னித்து விடுவார்” என்று கூறினார்.

    மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறினார். அந்த நாள் எனது 14 வயதில் நான் பெண்ணியவாதியாக மாறிவிட்டதுடன் மற்றும் கடவுள் நம்பிக்கையும் இழந்து விட்டேன்” என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
    சினிமா டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.
    தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது.

    முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என "தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்" வேண்டுகோள் விடுத்துள்ளன.

    தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது. இவற்றில் தனி திரையரங்குகள் 700, இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்ட மால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது.

    தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு எனஅனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    தனிதிரையரங்குகளுக்கானGSTவரியை 5%சதவிகிதமாககுறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்குதற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு (no input tax credit) முறையை அமுல்படுத்த
    வேண்டுகிறோம்.

    இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது ₹100க்கு விற்பனை செய்யப்படும்
    (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை84 ரூபாய் 5% GSTயுடன் சேர்த்து குறையும்.
    இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்

    மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம்.

    தேசிய ஊரடங்கு காலத்திற்கு முன்பாக தனி திரையரங்குகளுக்கு அதிக பட்சமாக 15% பார்வையாளர்கள்  அளவில்தான் வருகை இருந்தது. மேற்கூறிய கோரிக்கைகளை
    மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும் இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள். இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.

    தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகைதர வேண்டுகிறோம்.

    மேலும் தற்பொழுது முழு முடக்ககாலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம். தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகைதர வேண்டுகிறோம்.

    தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர  வேண்டுகிறோம்.
    ×